அத்தியாயம் 1
Published:Updated:

பகல் நிலவு! - விகடன் விமர்சனம்

பகல் நிலவு! - விகடன் விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
பகல் நிலவு! - விகடன் விமர்சனம்

தமிழில் இயக்குநர் மணிரத்னத்தின் முதல் படம்... முரளி பற்றிய அந்த பன்ச்..!

கிரிஜா கல்யாணசுந்தரம், ஈரோடு.இந்தப் படத்தின் கதையைப் பொறுத்த  வரை 'பழைய கள்; புதிய மொந்தை...'  சரிதானே? எம்.எஸ்.எம். ஸ்ரீதேவி, திருவண்ணாமலை.கதை புதுமையானதல்ல. ஆனால் படம் பார்ப்பதற்கு அலுப்பைத் தரவில்லை என்பது குறித்து தங்கள் கருத்து என்ன?

அந்தக் கிராமத்துப் பெரியவர் சத்யராஜ் பசுத்தோல் போர்த்திய புலி. ஆஷாடபூதி. ஆரம்பத்தில் கதாநாயகன் முரளிக்குக் கெட்ட புத்தியோடு இவர் உதவ, அதையறியாத முரளி உடனே சரணாகதி!  ஊருக்குப் புதுசாய் வரும் போலீஸ் ஆபீசர் சரத்பாபு மனைவியை இழந்தவர். இவர் தங்கை ரேவதி... முரளியுடன் இவருக்கு முதலில் ஊடல்.

அதைத் தொடர்வது காதல்! இலக்கணம் மீறாத சினிமா இலக்கியத்தின் பிரகாரம் இது முடிவது கூடலில்!இது ஒரு பக்கம். சத்யராஜ்-சரத்பாபு சட்டச் சிக்கல் நிறைந்த மோதல் மறுபக்கம். நடு வழியில் தன் காதலியின் அண்ணன் சரத்பாபு கொலை செய்யப்பட்டுவிட, சத்யராஜூக்கு எதிராக `ரிவோல்ட்' ஆகிறார் முரளி.

பெரியவரின் அக்கிரமங்களும் அட்டுழியங்களும் பொறுக்க மாட்டாமல் ஊர் ஜனம் மொத்தமும் முரளியின் தலைமையில் ஒன்றுதிரண்டு பெரியவரின் வீடு நோக்கிப் படையெடுத்து வர, முதலில் வாரிசுகளைச் சுட்டுத் தள்ளி விட்டு பின்னால் தன்னையும் தீர்த்துக் கட்டிக் கொள்கிறார் பெரியவர் சத்யராஜ்.இவற்றுக்கு நடுவில் டான்ஸ் டீச்சர் ராதிகாவின் கிளைக் கதை.ஆக, பழைய கள்தான்.

ஆனால் ஆக்ஷன் நிறைந்த இந்தப் படத்தை ஆர்ட்டிஸ்டிக்காக எடுக்க முயற்சித்து, அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளார் டைரக்டர் மணிரத்னம். அதாவது மாறுதலான மொந்தை!கூடிய வரையில் திரைக்கதையில் அனாவசியங்களையெல்லாம் தவிர்த்து, அவசியமானதை மட்டும் அழகாகத் தொகுத்துக்கொடுத்திருக்கிறார்.

சண்டைகள் உட்பட எந்தக் காட்சியையுமே திகட்டும் அளவுக்கு நீட்டாமல், எந்தப் பாத்திரத்தையுமே தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை வசனம் பேச வைக்காமல்... எல்லாமே `நறுக்'!வழக்கமாக கொடுமைகளுக்கெல்லாம் வில்லன்தான் காரணம் என்பதை இலைமறை காயாக அமைப்பார்கள்.

இந்த  வழக்கத்திலிருந்து விலகி, பெரியவரின்  ஆசியுடனே அனைத்து அக்கிரமங்களும்  நடந்து கொண்டிருக்கின்றன என்று எல்லோருக்கும் தெரியும்படி திரைக்கதை  அமைத்திருப்பது புதுசு.குறை என்று பார்த்தால் க்ளைமாக்ஸ் மட்டுமே. சத்யராஜின் முடிவு `டிராமா'வில் ஒரு வெயிட் இல்லாமல் டி.வி., ரேடியோ டிராமா மாதிரி பொசுக்கென்று முடிந்துவிடுகிறது.

பகல் நிலவு! - விகடன் விமர்சனம்
பகல் நிலவு! - விகடன் விமர்சனம்

ஆ. பாலாஜிகுமார், நீடாமங்கலம்.

டைரக்டர் மணிரத்னம் நம்பிக்கையூட்டுகிறாரா? மனோபாரதி, பாண்டிச்சேரி.'பா' டைரக்டர்களின் வரிசையில் இந்த 'ம' டைரக்டரும் இடம் பிடிப்பாரா?

முதல் படம் இது. இடம் பிடிப்பார்  என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது. ஆனால், வரப்போகும் இரண்டாவது படம்தான்  இதை உறுதிப்படுத்த வேண்டும்!

எம். சிவகாமிநாதன், விருதுநகர்.

வித்தியாசமான வில்லனாக சத்யராஜின் நடிப்புப் பற்றி..? ஜி. திருஞானம், சுவாமிமலை.சத்யராஜின் காரெக்டர் ஒரு பெருந்தலைவரை இமிடேட் செய்வது போலில்லையா?

சிவகாமிநாதனுக்குப் பதில்: சூபர்ப்!அயோக்கியத்தனங்களின் மொத்த உருவம் இந்தப் படத்தில் வரும் பெரியவர். உருவத்தில் பெருந்தலைவரை நினைவுபடுத்துவது போல் (ஹேர் ஸ்டைல், மீசை, நீள அரைக்கைச் சட்டை, கணுக்கால் தெரிய வேட்டி, மேல் துண்டு இப்படி...) இந்தப் பாத்திரத்தை அமைத்திருப்பது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

எஸ். மாதவன், சென்னை-34. முரளி,

ரேவதி, ராதிகா நடிப்பு பற்றி...?என். செல்வராஜ், கரூர்-1.படத்தில் நடித்துள்ளவர்களை நடிப்பில் வரிசைப்படுத்துங்கள் பார்க்கலாம்?

சரத்பாபு - பாசமிக்க அண்ணனாகவும் கடமைமிக்க போலீஸ் அதிகாரியாகவும் இவர் பெறுவது சபாஷ்!

முரளி - 'பூவிலங்கு'க்குப் பிறகு வந்த சில படங்களைப் பார்த்தபோது, இவர் சீக்கிரமாகவே பெங்களூருக்குத் திரும்பி விடுவாரோ என்று பயந்தோம். 'பகல் நிலவு' அந்தப் பயத்தைப் போக்கியிருக்கிறது! சத்யராஜின் அடியாளாக சரத்பாபுவுடன் ஒண்டிக்கு ஒண்டி மோதும் இடங் களிலும், ரெண்டு தபா மீன் கடையாண்டே ஆளுங்களை புரட்டியெடுக்கும் போதும் கில்லாடிக் கணக்கு!

ரேவதி - வழக்கம்போல்!

ராதிகா - அழுத்தமான பாத்திரம் இவருக்கு. மேக்கப்புக்கு 'எனிமி'யாகச் செயல்பட்டிருக்கும் டைரக்டரின் பிடிவாதம் இவரைப் பெருமளவு  பாதித்திருக்கிறது!

பகல் நிலவு! - விகடன் விமர்சனம்
பகல் நிலவு! - விகடன் விமர்சனம்

என். அசோக்குமார், கோயம்புத்தூர்.

அசோக்குமாரும், பாலுமகேந்திராவும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபுக்கு ஒதுங்கி வழி விடவேண்டும் என்கிறேன். தங்கள் கருத்து...?

ச. வள்ளிநாயகம், சென்னை-1

விம்பிள்டனை இணைத்துச் சற்று புதுமையுடன் பதில் ப்ளீஸ்...நல்ல கதையா இருக்கே! விம்பிள்டனில் ஒரு முறை பெக்கர் ஜெயித்துவிட்டார் என்பதற்காக மெக்கன்ரோவும், கானர்ஸும், கர்ரனும் ஒரேடியாக ஒதுங்கி அவருக்கு வழிவிடவேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?!

சற்று பெரும்பான்மையான வாசகர்களுக்குப் பிடித்த ஓர் அம்சம்: சத்யராஜின் நடிப்பு.

பிடிக்காத ஓர் அம்சம்: க்ளைமாக்ஸ்.

- விகடன் விமரிசனக் குழு

(21.07.1985 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)