Published:Updated:

மரபைக் கலைத்து மறுமலர்ச்சி ஏற்படுத்திய மல்டிஸ்டாரர்... `பாலைவனச் சோலை’யும் அதன் முன், பின் கதைகளும்!

பாலைவனச் சோலை

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘பாலைவனச் சோலை’.

Published:Updated:

மரபைக் கலைத்து மறுமலர்ச்சி ஏற்படுத்திய மல்டிஸ்டாரர்... `பாலைவனச் சோலை’யும் அதன் முன், பின் கதைகளும்!

80ஸ் & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – ‘பாலைவனச் சோலை’.

பாலைவனச் சோலை
தமிழ் சினிமாவில் எண்பதுகளின் காலகட்டத்தை ‘மறுமலர்ச்சியின் காலம்’ எனலாம். பல புதிய அலை சினிமாக்கள் அப்போது அறிமுகமாகின. அந்த வரிசையில் ஒரு முக்கியமான திரைப்படம் இது.

பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற அனுபவமுள்ள இயக்குநர்கள் ஒருபுறம் பிரத்யேகமான தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள் என்றால் திரைப்படக் கல்லூரியில் படித்த மாணவர்கள் இன்னொரு புறம் புதிய அலையை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள்.

இந்த வரிசையில் ராபர்ட்- ராஜசேகரன் என்கிற இரட்டை இயக்குநர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். ‘கிருஷ்ணன் –பஞ்சு’ என்று ஏற்கெனவே ஒரு ஜோடி முந்தைய காலகட்டத்தில் கலக்கிக்கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு இவர்கள்தான். இயக்குநர்கள் என்பதைத் தாண்டி இந்த இருவருமே ஒளிப்பதிவாளர்கள் என்பது வேறுபாடான அம்சம்.

பாலைவனச் சோலை
பாலைவனச் சோலை

‘பாலைவனச் சோலை’ திரைப்படத்தை பல விதங்களில் ஒரு முன்னோடி திரைப்படம் எனலாம். “சார்.. நம்ம கதைல ஒரு பொண்ணு நாலு பசங்க இருக்காங்க” என்று பிற்பாடு பல இளம் இயக்குநர்கள் தங்களின் திரைக்கதை விவாதங்களைச் செய்வதற்கு விதை போட்ட திரைப்படம் இது. இந்தப் பாணியில் பிற்பாடு நிகழ்ந்த புகழ்பெற்ற உதாரணம் என்று விக்ரமனின் ‘புது வசந்தம்’ திரைப்படத்தைச் சொல்லலாம்.

பொதுவாக அதுவரையான தமிழ் சினிமாக்களில் ஹீரோ.. ஹீரோயின், வில்லன், டூயட், சண்டை என்று ஓரே விதமான வடிவமைப்பு இருக்கும். இப்போதும் தொடர்கிறது. அப்படியான நெடுங்கால மரபைக் கலைத்துப் போட்ட முக்கியமான திரைப்படங்களில் ஒன்று ‘பாலைவனச் சோலை’.

ஆம். இதில் ஹீரோ.. ஹீரோயின் என்று எவரும் இல்லை. நான்கைந்து இளைஞர்கள், ஒரு பெண் என்று இதில் வருபவர்கள் அனைவரையும் பாத்திரங்களாக மட்டுமே நம்மால் உணர முடியும். இந்தப் படத்தில் பிரத்யேகமாக வில்லன் என்று எவருமில்லை. சமூகச்சூழல்தான் வில்லன். வறுமை, வேலையின்மை போன்ற அரசியல் விஷயங்கள்தான் வில்லன்களாக இருக்கும்.

"இதோ வர்றாரே.. இவர்தாங்க.. நம்ம ஹீரோ.."
என்று பாத்திரங்களை வாய்ஸ் ஓவரில் இயக்குநரே அறிமுகப்படுத்துவதை சமீபத்திய திரைப்படங்களில் நாம் நிறைய பார்த்திருப்போம். அப்படியொரு உத்தியை அறிமுகப்படுத்தின திரைப்படமாக இதைச் சொல்ல முடியும்.

இதன் தொடக்க காட்சிகளில் அந்த இளைஞர்களின் குணாதிசயங்கள் சுருக்கமாகவும் நகைச்சுவையாகவும் நமக்கு ‘வாய்ஸ் ஓவரின்’ வழியாக அறிமுகப்படுத்தப்பட்டு விடும்.

ராபர்ட் ஆசீர்வாதம்
ராபர்ட் ஆசீர்வாதம்

ராபர்ட் ஆசீர்வாதம் மற்றும் ராஜசேகர் என்கிற இந்த இரட்டை இயக்குநர்களின் பின்னணியைச் சற்று சொல்லியாக வேண்டும். இருவருமே வடசென்னையைச் சேர்ந்தவர்கள். ராஜசேகரின் குடும்பத் தொழிலே புகைப்படம் என்பதால் அதன் நீட்சியாக வீடியோ கேமரா மீது அவருக்கு ஆர்வம் பிறந்தது.

ராபர்ட்டும் புகைப்படக்கலையில் வல்லுநர். திரைப்படக்கல்லூரியில் ஆசிரியராக இருந்தவர். பி.சி. ஸ்ரீராம் உள்ளிட்டு தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவில் புகழ்பெற்று விளங்கிய பலரும் இவரின் மாணவர்களாக இருந்தவர்கள்தான்.

ராபர்ட் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவரையும் இணைத்தது தரமணியில் உள்ள திரைப்படக்கல்லூரிதான். பேருந்துப் பயணத்தில் தங்களின் சினிமாக் கனவுகளைப் பற்றிப் பேசிப் பேசி மிக இறுக்கமான நண்பர்களாக மாறினார்கள். ஜெயபாரதி இயக்கிய ‘குடிசை’ திரைப்படத்தில்தான் இவர்களின் முதல் பங்களிப்பு தொடங்கியது. ‘கிரவுட் ஃபண்டிங்’ முறையில் உருவான முன்னோடி தமிழ் சினிமாக்களில் ஒன்று ‘குடிசை’. இதில் ஒளிப்பதிவு என்பதைத் தாண்டி தயாரிப்பு உள்ளிட்ட பல விஷயங்களிலும் இவர்களின் உழைப்பு இருந்தது.

பிறகு இவர்கள் ‘ஒரு தலை ராகம்’ திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர்களாகப் பங்காற்றினர்கள். அதன் இயக்கம் டி.ராஜேந்தர் என்றாலும் கதை மற்றும் திரைக்கதையில் ராபர்ட்-ராஜசேகரின் பங்களிப்பு இருந்தது. ‘சினிமா என்பது கூட்டு முயற்சி’ என்பதனால் தனி மனிதருக்குக் கிடைக்கும் புகழை நாங்கள் அதிகம் கவனத்தில் கொள்வதில்லை’ என்பது இவர்களின் கொள்கை.

பாலைவனச் சோலையில் ஐந்து இளைஞர்கள் குட்டிச் சுவரில் அரட்டையடித்துக்கொண்டிருப்பதைப் போன்ற காட்சிகள், அதற்கு முன்பே ‘ஒரு தலை ராகத்திலும்’ வந்திருப்பதைக் காணலாம்.

ராபர்ட்-ராஜசேகர் என்கிற இயக்குநர் ஜோடி முதன் முறையாக இயக்கிய திரைப்படம் ‘பாலைவனச் சோலை’. பிறகு ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’, ‘பறவைகள் பலவிதம்’, ‘மனசுக்குள் மத்தாப்பூ’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கினார்கள். ஒரே நாளில் நிகழ்வது போன்ற திரைக்கதையைக் கொண்ட ‘கல்யாண காலம்’ போன்ற பரிசோதனை முயற்சிகள் பரவலான கவனத்திற்கு உள்ளாகாமல் போயின.

ராஜசேகர்
ராஜசேகர்
இந்த ஜோடியில் ராஜசேகரை நாம் நன்கு அறிவோம். ‘நிழல்கள்’ திரைப்படத்தில் நடித்தவர். ‘இதுவொரு பொன்மாலைப் பொழுது’ பாடலில் தோன்றியவர் என்றால் சட்டென்று நினைவிற்கு வந்து விடும். வேறு சில திரைப்படங்களிலும் நடித்த இவர், ஒரு பெரிய இடைவேளைக்குப் பின்பு ‘சரவணன் மீனாட்சி’ உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்தார்.

‘மனசுக்குள் மத்தாப்பூ’ திரைப்படப் படப்பிடிப்பின் போது இயக்குநர் ராஜசேகருக்கும் அதில் நாயகியாக நடித்த சரண்யாவிற்கும் ஏற்பட்ட காதலானது திருமணத்தில் சென்று முடிந்தாலும் அந்த மணவாழ்க்கை சில மாதங்கள் மட்டுமே நீடித்தது. பிறகு தாரா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராஜசேகர்.

இந்த இயக்குநர் ஜோடி சில காரணங்களால் பிறகு பிரிந்தது. ராபர்ட்டின் ஆட்சேபத்தை மீறி ராஜசேகர் செய்த காதல் திருமணமே இவர்களின் பிரிவிற்கு பிரதான காரணம் என்கிறார்கள்.

ராஜசேகருடன் ஏற்பட்ட பிரிவிற்குப் பிறகு கேயார் இயக்கிய படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த ராபர்ட், பிறகு தொலைக்காட்சித் தொடரையும் மத்திய, மாநில அரசு தொடர்பான ஆவணப்படங்களையும் இயக்கினார்.

இந்த இருவருமே தற்போது உயிருடன் இல்லை என்பது சோகமான விஷயம். சமீபத்தில்தான் மறைந்து போனார்கள். இதில் ராபர்ட் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய உறவினர்களின் வீட்டில் இருந்தார்.

ராபர்ட் – ராஜசேகர் என்கிற இந்த இயக்குநர் ஜோடியானது, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று பலரின் அறிமுகத்திற்குக் காரணமாக இருந்தார்கள்.

அறிமுகங்கள்!
நடிகர் ராம்கி, தியாகு, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் திருமுருகன், விக்ரமாதித்தன் போன்றவர்கள் இவர்களின் மாணாக்கர்களாக இருந்தவர்கள். இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரும் இவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவரே.
பாலைவனச் சோலை
பாலைவனச் சோலை

இப்போது பாலைவனச் சோலை திரைப்படத்தைப் பற்றிப் பார்ப்போம்.

வெவ்வேறு தேடல்கள் இருந்தாலும் அதற்கான லட்சிய வேகமும் பொறுப்பும் இல்லாமல் சுற்றும் ஐந்து இளைஞர்களின் வாழ்வில் குறுக்கிடுறாள் ஓர் இளம் பெண். தன்னுடைய மரணத்தின் மூலம் அவர்களின் பொறுப்பை உணர்த்துகிறாள். அவ்வளவுதான் இதன் கதை.

இத்தனை மெல்லிய கதையை வைத்துக்கொண்டு தங்களின் இயல்பான திரைக்கதை மற்றும் காட்சிக்கோவைகளின் மூலம் இயக்குநர்கள் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

சாலையோரக் குட்டிச்சுவரில் பேசிய படியே பொழுதைக் கழிக்கும் ஐந்து இளைஞர்களை சுவாரஸ்யமாக அறிமுகப்படுத்துவதுடன் இந்தத் திரைப்படம் ஆரம்பிக்கிறது. ஸ்ட்ரீட் பாய்ஸ் என்னும் பாத்திரங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் இதுதான்.

சமூகக் கோபம் கொண்ட இளைஞன் (சந்திரசேகர்), நூறாவது இன்டர்வியூவைக் கொண்டாடியபடியே வேலை தேடும் ஆசாமி (ஜனகராஜ்), பணக்காரனாக இருந்தாலும் பாசத்திற்கு ஏங்குபவன் (ராஜீவ்), சினிமா ஹீரோ கனவுடன் ஊரிலிருந்து வந்திருப்பவன் (தியாகு), தங்கைக்குத் திருமணம் செய்து பார்க்கும் லட்சியத்துடன் இருப்பவன் (கைலாஷ் நாத்) என்று ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையான குணாதிசயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவர்கள் வழக்கமாக அமர்ந்து பேசும் குட்டிச்சுவரின் எதிர் வீட்டில் புதிதாகக் குடிவருகிறாள் ஓர் இளம் பெண். (சுஹாசினி). அந்த வயதுக்கேயுரிய எண்ணத்துடன் ஆளாளுக்கு இவளை மானசீகக் காதலியாகப் பார்க்கிறார்கள்.

அதுவரையான தமிழ் சினிமாவில் இளைஞர்களால் கிண்டலடிக்கப்படும் பெண்கள் நாணிக் கோணிக் கொண்டு செல்வார்கள். அல்லது கோபத்துடன் தங்களின் தோழிகளிடம் புகார் சொல்வார்கள். அல்லது கேவி அழுவார்கள். ஆனால் இந்த இளைஞர்களுள் ஒருவன் சொல்லும் ஆபாசமான கிண்டலை மிக முதிர்ச்சியாகவும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் எதிர்கொள்ளும் நாயகியை இந்தப் படத்தில் காண்பதற்கு மிக சந்தோஷமாக இருந்தது. மிக சுவாரஸ்யமான காட்சி அது.

பாலைவனச் சோலை
பாலைவனச் சோலை

ஆனால் விரோத மனப்பான்மையுடன் அந்த இளைஞர்களை முறைத்துக் கொள்ளாமல் புரிதல் உணர்வுடன் அவர்களுடன் சுஹாசினி நட்பை வளர்த்துக் கொள்ளும் காட்சி மிக அருமையானது.

ஒரு பெண், ஐந்து இளைஞர்களுடன் ஒரு கண்ணியமான நட்பைப் பேண முடியும் என்பதை அழுத்தமாகச் சொன்ன முன்னோடி திரைப்படம் ‘பாலைவனச் சோலை’.

முன்னரே குறிப்பிட்டபடி இந்தத் திரைப்படத்தில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் என்று எவரும் கிடையாது. என்றாலும் சந்திரசேகருக்கு ஹீரோ மாதிரியான மெல்லிய முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். இவருக்கும் சுஹாசினிக்கும் இடையில் இருக்கும் சொல்லப்படாத காதலும் அதிலிருக்கும் கண்ணியமும் மெளனமும் சோகமும் ரசிக்கத்தக்க வகையில் காட்சிகளாக விரியும்.

சுருட்டை முடி, களையான முகம் என்று சந்திரசேகர் ரசிக்கத்தக்க வகையில் இருப்பார். அழகான பல்வரிசையுடன் இவர் சிரிக்கும் போது அவர் முகம் முழுவதுமே சிரிக்கும் வகையில் இருக்கும். மூக்கைச் சுருக்கி, தலையைச் சற்று உயர்த்தியபடி சுஹாசினி சிரிப்பது அவரின் பிரபலமான மேனரிசம். ஒப்பனை எதுவுமில்லாமல் மிக இயல்பான தோற்றத்தில் வந்திருப்பார் சுஹாசினி.

ஜனகராஜ்!
பிற்காலத்தில் பிரபல நகைச்சுவை நடிகராக மிளிர்ந்த ஜனகராஜின் ஆரம்பகட்ட அப்பாவிக் குறும்புகளை இதில் பார்க்கலாம்.

இயல்பான நகைச்சுவையை வெளிப்படுத்தும் அதே சமயத்தில் வேலை கிடைக்காத சோகத்தையும் மிக மென்மையாக வெளிப்படுத்தி விடுவார். துள்ளலிசைப் பாடல்களுக்கு இவர் வளைந்து வளைந்து ஆடும் நடனம் சிரிப்பை ஏற்படுத்தி விடும்.

தங்கைக்குத் திருமணம் செய்து வைக்க பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு பொறுப்புள்ள அண்ணனின் பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருப்பார் கைலாஷ். பூ விற்கும் பெண்மணி (எஸ்.என்.பார்வதி) இவரை தன் ‘ஆளாக’ கிண்டலடிப்பதும் பெரியவர்கள் இல்லாத வீட்டில், பெண் பார்க்கும் படலத்தின் போது நெருங்கிய உறவினராக பூக்கார அம்மணி வந்து உதவுவதும் மிக இயல்பான காட்சிகள். ஒரு கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பம் தொடர்பான சித்திரம் இதில் மிக யதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சினிமா நடிகராக முயலும் தியாகு ‘அந்த மான் இந்த மானுக்குத்தான் சொந்தம்’ என்கிற வசனத்தை வெவ்வேறு பிரபல நடிகர்களின் குரல் மற்றும் உடல்மொழியில் ‘மிமிக்ரி’ செய்வது சுவாரஸ்யமான காட்சி. இது அந்தக் காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களிடையே பிரபலமான வசனமாக ஆகியது. கல்லூரி விழாக்களிலும் இந்த மிமிக்ரி பின்பற்றப்பட்டது.

நடிகர் ராஜீவ்
நடிகர் ராஜீவ்

நடிகர் ராஜீவ் வசீகரமான தோற்றத்திற்குச் சொந்தக்காரர். உண்மையிலேயே நடனம் கற்றிருப்பார் போல. இந்தப் படத்தில் சற்றே வில்லத்தனத்தின் சாயலைக் கொண்டிருந்தாலும் பாசத்திற்காக ஏங்கி தந்தையிடம் விவாதம் செய்யும் காட்சியிலும் நண்பனுக்கு உதவ முடியாமல் அழுகிற சூழலிலும் நெகிழ வைத்திருப்பார்.

பாலைவனச் சோலை உருவான விதமே மிக சுவாரஸ்யமானது. இளம் கலைஞர்களை மட்டுமல்லாமல் சிறிய தயாரிப்பாளர்களையும் ஊக்குவிப்பதில் ராபர்ட்- ராஜசேகர் ஜோடி மிகவும் ஆர்வம் கொண்டிருந்தது. ‘ஒரு தலை ராகம்’ திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப் பின்னால் இந்த இயக்குநர்களை நாடி பல பெரிய தயாரிப்பாளர்கள் வந்தாலும், ராஜசேகர் நாடிச் சென்றது என்னமோ வடிவேல் என்கிற சிறிய தயாரிப்பாளரைத்தான்.

‘இதை நம்மால் தயாரிக்க முடியுமா?’ என்கிற அச்சத்துடன் ராஜசேகரின் பிடியிலிருந்து நழுவி நழுவிச் சென்றார் அந்தத் தயாரிப்பாளர். பிறகு ராஜசேகரின் வற்புறுத்தலுக்குப் பிறகு ஒரு சிறிய தொகையை அட்வான்ஸாக வைத்து இந்தத் திரைப்படம் தொடங்கப்பட்டது.

ஆம். பின்னர் மகத்தான வெற்றி பெற்ற இந்தத் திரைப்படத்தின் ஆரம்ப முதலீடு வெறும் ரூ.2500/- மட்டுமே. பிறகு தயாரிப்பாளரான வடிவேல், நடிகர் சாருஹாசனை அணுக அவரின் உதவியோடு படம் தொடர்ந்தது. தயாரிப்பாளர் படப்பிடிப்பைக் காண ஒருநாளும் வந்ததில்லை. அது தொடர்வதற்கான பணத்தைத் தேடி அலைவதிலேயே அவரது நேரம் செலவானது.
“பெரிய தயாரிப்பாளர்கள் என்றால் அவர்கள் இழுக்கின்ற இழுப்பிற்கெல்லாம் நாம் செல்ல வேண்டியிருக்கும். படைப்புச் சுதந்திரம் இருக்காது!”
என்பது ராஜசேகரின் எண்ணம்.

எம்.எஸ்.வி., இளையராஜா போன்ற மகத்தான இசையமைப்பாளர்களின் காலகட்டத்தில் இயங்கினாலும் சங்கர்-கணேஷ் என்கிற இரட்டை இசையமைப்பாளர்களின் பல பாடல்கள் அற்புதமாக அமைந்திருக்கும். ‘பாலைவனச் சோலை’யில் இவர்கள் இசையைமத்த அனைத்துப் பாடல்களும் அப்போது ‘ஹிட்’ ஆகி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன. அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளவர் வைரமுத்து.

மலேசியா வாசுதேவன் பாடிய 'ஆளானாலும் ஆளு' மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அட்டகாசமாகப் பாடியுள்ள ‘பெளர்ணமி நேரம்’ ஆகிய இரண்டு பாடல்களும் துள்ளலிசையைக் கொண்டவை. எஸ்.பி.பி பாடிய இன்னொரு பாடலான ‘எங்கள் கதை’ என்கிற பாடலும் அற்புதமான இசையமைப்பைக்கொண்டிருக்கும்.

பாலைவனச் சோலை
பாலைவனச் சோலை

ஆனால் இந்தத் திரைப்படத்தின் மிகப் புகழ்பெற்ற பாடல் என்றால் அது வாணி ஜெயராம் மிகச் சிறப்பாகப் பாடியுள்ள ‘மேகமே..மேகமே’தான். நாயகனின் மீதுள்ள காதலும் அது நிறைவேறாமல் போகப் போகும் உருக்கமும் நிராசையும் இந்தப் பாடலில் நிரம்பி வழியும். தன்னுடைய மரணச் செய்தியை பாடலின் ஊடாகவே நாயகி மறைமுகமாகத் தெரிவித்து விடுவார்.

ஆனால் ‘மேகமே’ பாடலின் இசையமைப்பு, பிரபல கஜல் பாடகர் ஜக்ஜித் சிங் பாடிய ‘தும் நஹி.. கம் நஹி’ என்பதின் அப்பட்டமான நகல். காப்பிதான் என்றாலும் அதன் ஆன்மா கெடாதவாறு தமிழிற்கு அற்புதமாக மாற்றியிருப்பார்கள்.

இந்தத் திரைப்படத்தின் வசனம் பிரசன்னகுமார். இவரை நடிகர் தியாகுதான் திரைத்துறைக்கு அழைத்து வந்தார். ராஜசேகரின் நெருங்கிய நண்பராக மாறிய இவர், பிறகு நடிகர் விவேக்கின் நகைச்சுவைக் காட்சிகள் உட்பட பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

பிரசன்னகுமாரின் நகைச்சுவையுணர்வு அவரின் வசனங்களின் வழியாக படம் முழுவதும் நிரம்பியிருக்கும். சில நகைச்சுவை அந்தக் காலப் பத்திரிகைகளில் வருவது போன்று அசட்டுத்தனமான ஜோக்குகளாகவும் இருந்தது.

எண்பதுகளின் காலகட்டம் என்பது வேலையில்லாத் திண்டாட்டம் இருந்த காலமாக இருந்தது. எனவே இது சார்ந்த சமூகக் கோபங்களும் கசப்பு நகைச்சுவைகளும் படங்களில் நிரம்பியிருந்தன. சில காட்சிகளில் தமிழின் முன்னணி நடிகர்கள் மறைமுகமாக கிண்டலடிக்கப்பட்டிருந்தார்கள். அப்போதைய வெகுசன திரைப்படப் போக்கின் மீது இயக்குநர்கள் கொண்டிருந்த அதிருப்தியே இவ்வாறு கிண்டலாக வெளிப்பட்டது என்று எடுத்துக்கொள்ளலாம்.

பாலைவனச் சோலை
பாலைவனச் சோலை

இந்தத் திரைப்படத்தின் இயக்குநர்களே ஒளிப்பதிவாளர்கள் என்பதால் அந்த டிபார்ட்மென்ட்டையும் அவர்களே கவனித்துக் கொண்டார்கள். நுங்கம்பாக்கம் ரயில் பாதை அருகிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. நடிகர்களின் முகபாவங்கள் தெளிவாகத் தெரியும் படி அழகியலுடன் கூடிய அண்மைக் கோணங்கள் (close up shots) பெரும்பாலான காட்சிகளில் பயன்படுத்தப்பட்டது. குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்றாலும் சுவாரஸ்யத்திற்குத் துளி கூட குறைவில்லாமல் இயக்கியிருந்தார்கள்.

இந்தத் திரைப்படம் 2009-ல் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் அசலில் இருந்த சுவாரஸ்யமும் புதுமையும் நகலில் காணாமல் போய்விட்டது.

எண்பதுகளின் காலகட்டத்தில் வெளியாகியிருந்தாலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒரு முன்னோடி திரைப்படமான ‘பாலைவனச் சோலை’, இன்று பார்த்தாலும் சுவாரஸ்யம் தரக்கூடிய ஒரு படைப்பு என்பதில் சந்தேகமில்லை.

இந்தத் தொடரில் அடுத்து எந்த 80ஸ், 90ஸ் படத்தைப் பற்றி அலசலாம்? கீழே கமென்ட் செய்யவும்.