Published:Updated:

நாடாளுமன்ற - சட்டமன்ற தேர்தலை காட்டிலும் அதிக வாக்குகள் பதிவாகியிருப்பது மகிழ்ச்சி! - நாசர்

நாசர்
நாசர்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் பாண்டவர் அணியும் சுவாமி சங்கரதாஸ் அணியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இறுதி வரை இழுபறியாகவே இருந்து வந்த நடிகர் சங்கத் தேர்தல் ஏற்கெனவே திட்டமிட்டப்படி ( ஜூன் 23 ) இன்று நடைபெற்றது. பாண்டவர் அணி சார்பில் நாசர், விஷால், கார்த்தி உள்ளோட்டோர் போட்டியிட்டனர். அவர்களை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக பாக்யராஜ், ஐசரி கணேஷ் உள்ளிட்டோர் போட்டியிட்டனர். காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 85 சதவிகித வாக்குகள் பதிவாகியிருக்கிறது.

சுவாமி சங்கரதாஸ் அணி
சுவாமி சங்கரதாஸ் அணி

தேர்தல் நிறைவடைந்து செய்தியாளர்களை சந்தித்த சுவாமி சங்கரதாஸ் அணியினர், இந்த தேர்தல் குறித்து சுவாமி சங்கர தாஸ் அணி சார்பாக, பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த் மற்றும் பலர் பத்திரிகையாளரிடம் பேசும் போது, ‘இந்தத் தேர்தல் அதிக குளறுபடிகளுக்கிடையேதான் நடந்திருக்கிறது. கடைசி நேரத்தில் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்றியதில் இருந்து, தபால் ஓட்டுகளுக்கான வாக்குச்சீட்டு சரியான நேரத்திற்குள் சென்றடையாதது, நடிகர் மோகனின் ஓட்டை வேறு யாரோ பதிவிட்டது, பிரவின் காந்துக்கு தபால் ஓட்டு இருந்தும் வாக்குசாவடிக்கு வந்து வாக்களிக்க முயன்றது என பல சம்பவங்கள் தப்பாகவே நடந்துள்ளது. தபால் ஓட்டுகள் எல்லாம் சரியாக சென்று சேர்ந்திருந்தால், அது எங்கள் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்திருக்கும். நீதிபதி பத்மநாபன் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டுள்ளார்" என்றனர்.

பிறகு பேசிய பாண்டவர் அணியினர், "தேர்தல் சட்டரீதியாக எந்த குழறுபடியும் இல்லாமல் நடைபெற்று முடிந்திருக்கிறது. மிக குறுகிய காலத்திக்குள் உறுப்பினர்கள் அனைவருக்கும் தேர்தல் நடக்கும் செய்தியை எப்படி தெரிவிப்பது, எல்லோரும் வருவார்களா என்ற பயம் இருந்தது.

ஆனால், சட்டரீதியாக இன்று தேர்தல் நடக்க வேண்டும் என்ற முடிவு வந்த காரணத்தால் தேர்தலை அறிவித்துவிட்டோம். 85 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை காட்டிலும் அதிக சதவிகித வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. ஆகையால், இந்தத் தேர்தலை சங்கத்தின் மிக வெற்றிகரமான தேர்தலாகத்தான் பார்க்கிறேன். நீதிபதி பத்மநாபன், காவல்துறை, பத்திரிகையாளர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு