சினிமா
Published:Updated:

பரமபதம் விளையாட்டு - சினிமா விமர்சனம்

த்ரிஷா
பிரீமியம் ஸ்டோரி
News
த்ரிஷா

நாயகியை பிரதானப்படுத்தும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் திர்ஷா இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றே தோன்றுகிறது.

ஏணி, பாம்பு என எந்தவித சுவாரசியமும் இல்லாமல் தாயக்கட்டையை மட்டுமே கடைசிவரை உருட்டிக்கொண்டிருந்தால் அதுதான் இந்த ‘பரமபதம் விளையாட்டு.’

தனியார் மருத்துவமனையின் பிரதான மருத்துவர் திர்ஷா (இப்படித்தான் டைட்டிலில் போடுகிறார்கள்). நேர்மையான எதிர்க்கட்சித் தலைவர் வேல ராமமூர்த்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட, அவர் மருத்து வமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவருக்கு திர்ஷா தலைமையில் சிகிச்சை யளிக்கப்படுகிறது. இதற்கிடையே கட்சிக்காரர்கள் கொடுக்கும் குடைச்சல்கள். நோயுற்றிருப்பவரைச் சுற்றி நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் ஆகியவற்றை எப்படி அறுத்தெறிந்து திர்ஷா வெளியே வருகிறார் என்பதுதான் கதை.

நாயகியை பிரதானப்படுத்தும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் திர்ஷா இன்னும் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்றே தோன்றுகிறது. இந்தப் படத்திலும் மோசமான திரைக்கதையால் அவரின் திறமை வீணடிக்கப்பட்டிருப்பதுதான் சோகம். திர்ஷாவின் குழந்தையாக வரும் மானஸ்வி தன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். படத்தின் எஞ்சிய எமோஷன் களும் இந்த அம்மா - மகளால் மட்டுமே எடுபடுகின்றன. வேல ராமமூர்த்தி, ஏ.எல் அழகப்பன், நந்தா போன்றவர்களும் மிகச்சுமாரான நடிப்பையே வழங்கியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் வித்தியாச வில்லன் என நினைத்துக்கொண்டு நடித்தே நம்மைச் சோதிக்கிறார் ரிச்சர்ட். இரண்டாம் பாதியில் வரும் விஜய் வர்மா, ‘நானும் சளைத்தவனில்லை’ என அவர் பங்கிற்கும் சோதிக்கிறார்.

பரமபதம் விளையாட்டு - சினிமா விமர்சனம்

ஜேடியின் ஒளிப்பதிவும் சரி, அம்ரிஷின் இசையும் சரி அரசியல் பரபரப்பிற்கு எந்தவகையிலும் உதவவில்லை. தேவையே இல்லாமல் முன்பின்னாக நகரும் காட்சியமைப்பு களில் எடிட்டர் பிரதீப் ராகவ் கொஞ்சம் சிரத்தை எடுத்து உழைத்திருக்கலாம்.

படத்தின் முதல்பாதி மட்டுமே ஓரளவிற்கு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. எதிர்க்கட்சித் தலைவரைச் சுற்றி இவ்வளவு மர்மங்கள் நடக்கும்போது ஆளுங்கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா என்ன? இதுதான் நேரம் என அதில் அரசியல் செய்யாமல் இருப்பார்களா? மருந்துக்கும்கூட இதில் ஆளுங்கட்சியோ போலீஸோ சம்பந்தப்படாமல் திர்ஷாவைச் சுற்றி மட்டுமே கதை நகர்வது மிகப்பெரிய லாஜிக் இடறல்.

தீக்குளித்து உடல் முழுக்க எரிந்தவர் அடுத்த சில நாள்களிலேயே வீல்சேரில் வந்து வசனம் பேசுவது, படத்தில் வரும் ஒரே ஒரு போலீஸ்காரரும் கார் டிக்கியில் கடத்தப்படு பவரைப் பார்த்துவிட்டு, ‘தலைக்கு வச்சுக்க தலகாணி ஏதும் வேணுமா?’ என்கிற ரீதியில் அசமந்தமாய் நிற்பது என, படத்தின் காட்சி களெல்லாம் ஏதோ பேரலல் உலகத்தில் நடப்பதுபோலவே இருக்கின்றன.

ஒரே ஒரு சுவாரசிய ஒன்லைனைப் பிடித்து விட்டால் படம்பண்ணிவிடலாம் என, திரைக் கதைக்கு மெனக்கெடாத மேலும் ஒரு படம் இந்த ‘பரமபதம் விளையாட்டு.’