Published:Updated:

`என்னை மதிக்கல .. ஆட்டத்தையே நிப்பாட்டிட்டேன்!' - `பரியன்’ அப்பா தங்கராஜ்

தங்கராஜ்

``உங்களுக்கு ஒண்ணு தெரியுமா நான் நடிச்ச படமே நான் எங்க ஊர் தியேட்டர்ல பார்க்கல. 200 ரூபாய் டிக்கெட்னு சொன்னாங்க.’’

`என்னை மதிக்கல .. ஆட்டத்தையே நிப்பாட்டிட்டேன்!' - `பரியன்’ அப்பா தங்கராஜ்

``உங்களுக்கு ஒண்ணு தெரியுமா நான் நடிச்ச படமே நான் எங்க ஊர் தியேட்டர்ல பார்க்கல. 200 ரூபாய் டிக்கெட்னு சொன்னாங்க.’’

Published:Updated:
தங்கராஜ்

பரியேறும் பெருமாள் வெளியாகி ஒரு வருடம் ஆகிறது. அண்மையில் அதற்கான கொண்டாட்டத்தையும் அப்படக் குழு முன்னெடுத்தது. படக்குழு கொண்டாடியதை விட இருமடங்காக புளியங்குளம் மக்கள் கொண்டாடினார்கள். உண்மையில் நாம் அனைவருமே கொண்டாட வேண்டிய படம் அது. #OneYearOfPariyerumPerumal என்னும் ஹேஷ் டேக் மூலம் சமூக வலைதளங்களில் படம் பற்றிய ரைட் அப்-கள் குவிகின்றன. இந்தத் திரைப்படத்தில் திருப்புமுனை காட்சி என்றால் அது பரியனின் அப்பா அறிமுகக் காட்சிதான். அந்தக் காட்சியின்போது உடைந்து அழுதுவிட்டதாக சினிமா ரசிகர்கள் பலர் பகிர்ந்திருந்தனர். பரியனின் அப்பாவாக நடித்து நம் மனதை நெகிழவைத்தவர் திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை, `தங்கராஜ்’. படம் வெளியாகி ஓராண்டான நிலையில், `பரியேறும் பெருமாள்’ என்னும் படைப்பு, தங்கராஜின் வாழ்க்கையை எப்படி மாற்றியிருக்கிறது என்று அவரிடமே கேட்டோம்..

தங்கராஜ்
தங்கராஜ்

``நான் என் 14 வயசுல இருந்து திருவிழாவுல பெண் வேஷம் கட்டி ஆடிட்டு இருந்தேன். முதலில் இருந்த வரவேற்பு பின்னாளில் கிடைக்கல. யாருமே என் ஆட்டத்தை மதிக்கல. அதனால ஆட்டத்தை விட்டுட்டேன். கடந்த 12 வருஷமா பாளையங்கோட்டை மார்கெட்ல வெள்ளரிக்காய் வியாபாரம் பார்த்துட்டு இருக்கேன். என் சொந்தக்கார தம்பி ஒருத்தர் படத்துல நடிக்கிறீங்களா.. ஹீரோவுக்கு அப்பா வேஷம் போடணும்னு சொன்னார். நானும் சரின்னு சொன்னேன். ஒரு நாள் இரவு, வெள்ளரித்தோட்டத்துல நானும் என் நாயும் காவலுக்குப் படுத்திருக்கும்போது சிலர் வந்து நடிச்சு காமிக்கச் சொன்னாங்க. அவங்க சொன்னத பண்ணேன். நீங்கதான் என் படத்துல நடிக்கணும்னு சொல்லிட்டாங்க. அதன் பிறகு போய்ட்டு நடிச்சேன்.

தியேட்டர்ல பார்த்தப்போ படம் ரொம்ப பிடிச்சிருந்தது. எல்லா காட்சியும் பிடிச்சிருந்தது. ஆனா நான் அவமானப் பட்டு ஓடி வர காட்சிய மட்டும் பார்க்க முடியாம தலையைக் கவுந்துகிட்டேன். படம் வெளிய வந்ததும் வெற்றிவிழாவுக்குச் சென்னைக்குக் கூப்பிட்டாங்க. அப்புறம் மணியாச்சி பக்கத்து கிராமத்துல இருந்து ஒரு நாளு என்னைத் தேடி வீட்டுக்கே வந்துட்டாங்க. உங்கள பார்க்க எங்க ஊர் மக்கள் ஆவல இருக்காங்கன்னு சொன்னாங்க. என்னைய கையோடு கூட்டிட்டுப் போக்ட்டாங்க. அங்க எனக்கு சால்வைலாம் போர்த்தி மரியாதை கொடுத்தாங்க. என் வாழ்க்கைல மறக்க முடியாத விஷயம்தான். அங்க போய்ட்டு வந்து அதன்பிறகு என் அன்றாட வேலையைப் பார்க்க ஆரம்பிச்சிட்டேன்.

மழை வந்து விவசாயம் நடந்தா வயலுக்குப் போவேன். இல்லாட்டி வெள்ளரிக்காய், முருங்கைக்காய் வாங்கி மார்கெட்ல விற்பேன். அதுதான் என் தொழில். தினமும் 300 ரூபாய் வரை கிடைக்கும். என் மனைவி, என் மகள் இருக்காங்க. எங்களுக்கு இதுபோதுமானதா இருக்கு. அப்புறம் இன்னொரு பட வாய்ப்பு வந்துச்சு. ஹீரோவுக்கு அப்பாவ நடிக்கணும், டயலாக்லாம் வேற அப்படின்னு சொன்னாங்க. `என் நம்பர் யார் கொடுத்தாங்கன்'னு ஆச்சர்யத்துடன் கேட்டேன். `நீங்க பரியேறும் பெருமாள் படத்துல நல்லா நடிச்சிருக்கீங்க. அந்த இயக்குநர்தான் உங்க நம்பர் கொடுத்தார்'னு சொன்னாங்க. உங்க பேர் என்னன்னு கேட்டேன் பா வண்ணன்-ன்னு சொன்னார். நெய்வேலில ஷூட்டிங் நடந்துச்சு. படம் பேரு ``ஹலோ நான் பிஸியா இருக்கேன்".

தங்கராஜ்
தங்கராஜ்

ஒரு வருஷம் ஆனத கொண்டாடணும்னு புளியங்குளத்துல இருந்து வந்து கூப்பிட்டாங்க; போனேன். கேக்லாம் வெட்டி கொண்டாடினாங்க. இன்னமும் நான் படத்துல நடிச்சேன்னு என்னாலயே நம்ப முடியல. எனக்கு சினிமாவுல செந்தில் , கவுண்டமணி, மனோரமா பிடிக்கும். பெருசா படம்லாம் பார்க்க மாட்டேன். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா நான் நடிச்ச படமே நான் எங்க ஊர் தியேட்டர்ல பார்க்கல. 200 டிக்கெட்னு சொன்னாங்க. டிக்கெட் ஃபுல்லா இருந்துச்சு. கிடைக்கவேயில்ல. வெற்றிவிழாவுக்கு சென்னை வந்தப்போதான் படத்தையே பார்த்தேன்.

பரியேறும் பெருமாள் படம் நடிச்சு வருஷம் ஒண்ணாச்சு. இன்னமும் தினமும் நிறைய பேர் என்னைப் பார்த்த செல்ஃபி எடுத்துக்குறாங்க. கொஞ்சம் முன்னாடிகூட என் பொண்ணு மாதிரி நாலு பொண்ணுங்க தூரத்துல இருந்து பார்த்து சிரிச்சிட்டு, பக்கத்துல வந்து தாத்தா நீங்க படத்துல நடிச்சவர் தானே-ன்னு கேட்டாங்க. செல்ஃபி எடுத்துக்கிட்டாங்க. எல்லாரும் படம் நல்லாருந்தது-ன்னு சொல்றாங்க. இரண்டு நாள் முன்னாடி குலசேகரப்பட்டினத்துக்கு வேஷம் கட்டி மாலை போட்டு போனேன். போய்ட்டு வரும்போது கூட 500 பேருக்கு மேல போட்டோ புடிச்சிட்டாங்க. நல்லா நடிச்சிருக்கேன்னு சொன்னாங்க.

ஒரு ஆண்டு கொண்டாட்டம்
ஒரு ஆண்டு கொண்டாட்டம்

இந்தப் படத்தால என் வாழ்க்கைல நல்ல பேரு, மதிப்பு கெடச்சது. அதுவே போதும். காசு பணத்தை விட இதுதான் பெருசு. மாரி செல்வராஜ் ஒரு இளமனுஷனா இருந்து எப்படிதான் இவ்வளவு நல்ல படத்த எடுத்தாருன்னு தெரியல. நான் கும்பிட்ற கடவுள்தான் அவருக்கு உணர்த்தி என்னை தேடி வரவெச்சி இருக்கு. எனக்கு தெய்வம்தான் அவரு’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.