Published:Updated:

``கவுண்டமணி ஒன்லி 5 ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவார்... ஏன்னா?'' - பார்த்திபன் - 9

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 9.

Published:Updated:

``கவுண்டமணி ஒன்லி 5 ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவார்... ஏன்னா?'' - பார்த்திபன் - 9

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 9.

பார்த்திபன்

''வணக்கம் சார், 'வி ஆர் நாட் டாடா பிர்லா' படத்தில் கவுண்டமணி சார் உங்களுடன் இணைந்து காமெடியில் கலக்கியிருப்பார். சீனியர் நடிகரான அவர் குதிரையேற்றம் எல்லாம் செய்து உங்களுக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார். அதற்கு பிறகு உங்கள் கூட்டணியை மிகவும் எதிர்பார்த்தோம். கவுண்டமணி சாருடன் பணியாற்றிய அனுபவம் பற்றி கூறுங்கள் சார்?''

ப.நாட்டாமங்கலம், ஜீவகன் மகேந்திரன்

கவுண்டமணி
கவுண்டமணி

''கவுண்டமணி ரொம்ப ரேரான ஒரு ஆக்டர். அவர் ஆக்டர்ங்கிறதைவிட அவரோட ஆட்டிட்யூட் ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும். ஒரு ஹாலிவுட் நடிகர் மாதிரிதான் அவரோட பிஹேவியர் இருக்கும். ஷார்ப்பா ஷூட்டுக்கு வருவார். 7 மணிக்கு ஷூட்னா 7 மணிக்கு இருப்பார். அவருக்குனு ஒரு ஸ்டைல் ஆஃப் டயலாக் டெலிவரி இருக்கும். அவர் கொடுக்கிற கவுன்ட்டர்ஸ்லாம் வேற லெவல்ல இருக்கும். 'டாடா பிர்லா' படம் பண்ணும்போது அவரை ரொம்ப கூர்ந்து கவனிப்பேன். ரொம்ப ஸ்டைலிஷான லைஃபை லீட் பண்ற ஒருத்தர் அவர். சிலர் நிறைய சம்பாதிப்பாங்க. ஆனா, எப்படி வாழ்றதுன்னு தெரியாது. மிஸ்டர் கவுண்டமணி அப்படியில்ல. ரொம்ப ரசிச்சு வாழ்வார்.

உதாரணத்துக்கு ஊட்டில ஷூட்டிங்னா அங்க 5 ஸ்டார் ஹோட்டல் இருந்ததுன்னா அங்கதான் தங்குவார். 7 ஸ்டார் ஹோட்டல் இருந்தா அதுலதான் தங்குவார். ரொம்ப காஸ்ட்லியான விஷயங்களை அனுபவிக்கணும்னு நினைப்பார். ஷூட்டிங் முடிஞ்சப்பிறகு ஒரு கிங் மாதிரி இருப்பார். ரொம்ப மரியாதையாப் பேசுவார். அப்புறம் முக்கியமான விஷயம் அவர் ஆங்கிலப்படங்கள்தான் பார்ப்பார். ஆர்.ஏ.புரத்துல ஒருநாள் வாக்கிங் போயிட்டு இருக்கும்போது, அவரும் பக்கத்துல வாக்கிங் போயிட்டிருந்தார். அப்ப ரெண்டுபேரும் ஒரு ரெஸ்ட்டாரன்ட்டுக்குப் போய் காபி சாப்டுட்டே பேசினோம். அப்ப அவர்கிட்ட 'சார் நான் ஆங்கிலப்படம் மாதிரி 'ஒத்த செருப்பு'ன்னு படம் எடுத்திருக்கேன்'னு சொன்னேன். ஆனா, அவர் 'ஒத்த செருப்பு' படத்தை பார்த்திருப்பாரான்னு தெரியல. என்னைக்காவது ஆங்கிலப்படம் எடுத்தா அவர் பார்ப்பார்னு நினைக்கிறேன். 'ஒத்த செருப்பு' படத்தை ஹாலிவுட்ல தயாரிக்க 2 நிறுவனங்கள் என்கூடப் பேசிட்டு இருக்காங்க. அந்தப் பேச்சுவார்த்தையே எனக்கு சந்தோஷமா இருக்கு. ஆங்கிலப்படத்தையும் இயக்குவேன்ற நம்பிக்கை இருக்கு. அந்தப் படத்தை மிஸ்டர் கவுண்டமணிக்குப் போட்டுக்காட்டுவேன்னு நினைக்கிறேன்.''

''நீங்க ஏன் ஒரு பேய் படம் எடுக்கக்கூடாது. படங்களில் நீங்கள் அதிகமாக புதுமையை புகுத்தியவர். இப்போது பேய் படங்கள் டிரெண்டாக உள்ளது. அதனால் நீங்கள் வித்தியாசமாக ஒரு பேய் படம் எடுக்க வேண்டும்.''

- பிரதாப், உசிலம்பட்டி

''பேய் படம் பண்ணணும்னு எனக்கு முதல்ல ஆர்வமா இல்லாமல் இருந்துச்சு. ஆனா, 'காஞ்சனா' பார்க்கும்போது அவ்ளோ சிரிப்பா இருக்கும். பேய் வெச்சு இவ்ளோ காமெடி பண்ண முடியுமான்னு தோணும். அது மிஸ்டர் லாரன்ஸுக்கு மட்டுமே உள்ள திறமை. 'காஞ்சனா - 24, 25'-க்கெல்லாம் கதை ரெடி பண்ணிவெச்சிருப்பார்னு நினைக்கிறேன். பேயை வெச்சிக்கிட்டு பேயாட்டம் ஆடுறவர் மிஸ்டர் லாரன்ஸ். நானும் ஒரு பேய் கதையை ரெடி பண்ணி வெச்சிருக்கேன். அந்தப் படத்தோட பேர் 'கீழே மேலே'. 'காஞ்சுரிங்' முதல் 'காஞ்சனா' வரை பேயை வெச்சிக்கிட்டு என்னலாம் பண்ணியிருக்கோமோ அதுக்கு எதிர்பதமா பண்றதுதான் கான்செப்ட். 'துக்ளக் தர்பார்'ல எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசரா இருக்கிற மிஸ்டர் அருண் என்கிட்ட ஒரு பேய்படம் பண்ணலாம்னு சொன்னார். 'பேயிங் கெஸ்ட்'னு ஒரு டைட்டில்ல ஒரு கதை சொன்னேன். நல்லாயிருக்குன்னு சொன்னார். ஆனா, ஏதோ காரணத்தால அதைப் பண்ண முடியல. யாராவது பே பண்ண ரெடியா இருந்தாங்கன்னா நிச்சயம் பேய் படம் எடுப்பேன்.''

''சார், நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றால் அதில் 'ஒத்த செருப்பு' டாப் 3-யில் வந்துவிடும். இந்தப் படத்துல உங்க நடிப்பு மிகைப்படுத்த முடியாத ஒன்று. அதுல கமல் சார் நடிக்க வெச்சிருந்தா உலக அளவுல வசூல் ரீதியாவும், விமர்சன ரீதியாவும் பேசப்படக்கூடிய ஒன்றா இருந்திருக்கும்னு நீங்க நினைச்சீங்களா? அதே மாதிரி 'ஒத்த செருப்பு -2' வந்தா அதுல நீங்களும் கமல் சாரும் நடிக்க வாய்ப்பிருந்தா சொல்லுங்க?(சினிமாவின் முன்னோடி)''

- பாலாஜி, பச்சினம்பட்டி கிராமம், தர்மபுரி

பார்த்திபன்
பார்த்திபன்

''என்னுடைய சினிமாவின் முன்னோடி கமல் சார். அவரை நடிக்கவெச்சு ஒரு படம் டைரக்ட் பண்ணணும், இல்லைன்னா அவரோட நடிக்கணும்னு ஆசையா இருக்கும். ரெண்டு பேரும் சேர்ந்து சென்னை மொழில ஜாலியா, பேசி, கலாய்ச்சு, கலாட்டா பண்ணி ஒரு படம் பண்ணக்கூடிய வாய்ப்பு கிடைக்காதான்னு ஒரு ஏக்கம் எனக்குள்ள இருக்கு. என்னமோ தெரியல, அப்படி ஒண்ணு நிறைவேறவேயில்லை. சீக்கிரம் நிறைவேறலாம். 'ஒத்த செருப்பு' படத்துல அவரை நடிக்கவெக்கணும்னு நினைக்கவேயில்லை. நிச்சயம் அவர் நடிச்சிருந்தா வசூல் ரீதியா, பண ரீதியா பெரிய வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால், நானும் பெருசாகணும்ல!

ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ் அவர்கள்கிட்ட ஒருமுறை பேசிட்டு இருக்கும்போது '40 வருஷத்துக்கு முன்னாடியே கமல் ஒரு சோலோ படம் பண்ணணும்னு வந்து சொன்னார். அப்ப நான்தான் அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டேன்'னு சொன்னார். 'பேசும் படம்' மாதிரியான படங்கள் எல்லாம் பண்ணவர் சோலோ படத்தை பண்ணாம எனக்காக வழிவிட்டார்னுதான் சொல்லணும். அவர் செஞ்சிருக்க வேண்டியதைத்தான் நான் செஞ்சிருக்கேன். ஒரு ஒலிம்பிக் டார்ச்சை தூக்கிட்டுப் போற மாதிரிதான். அவர் சுமந்துவந்த நிறைய விஷயங்களை அதன் வழியில நானும் ஒரு டார்ச் தூக்கிட்டுப்போற மாதிரியான முயற்சிதான். 'ஒத்த செருப்பு 2' அவர் பண்ணுவாரா, ரெட்ட செருப்புன்னு பண்ணுவாரான்னு நான் யோசிக்கல. ஆனா, ரெண்டு பேரும் சேர்ந்து செம லோக்கலா, இறங்கி நடக்கணும்னு ஆசை இருக்கு. அந்தப் படத்தை இயக்குற வாய்ப்பு கிடைச்சாலும் சரி, நடிக்கிற வாய்ப்பு கிடைச்சாலும் சரி, அதுல எனக்கு மகிழ்ச்சிதான்.''

''தோழரே... 'புதிய பாதை'யிலிருந்து உங்களுடன் நான் பயணித்து வருவதற்கான காரணம் உங்களின் புதினச் சிந்தனைகள். நீங்கள் சாதி-மதப் பகைமானங்களை சமரசமின்றி சாடும், சாதி-மத வெறியர்களின் மனங்களை உலுக்கக்கூடிய, நவீன உலக வாழ்வியல் அணுகுமுறைகளை உள்ளடக்கியப் படங்களைத் தரலாமே?''

- ப.அழகப்பன், கடலூர்

பார்த்திபன், சீதா
பார்த்திபன், சீதா

''சாதி, மத, வர்க்கம் சார்ந்த பிரச்னைகளை ஒவ்வொரு இயக்குநருமே தங்கள் படங்கள்ல ஒருமுறையாவது தொட்டிருப்பாங்க. என்னோட முதல் படத்தில இருந்து என்னை அறியாமலேயே அனிச்சை செயலா அதைச் செஞ்சிட்டுத்தான் இருக்கேன். 'புதிய பாதை' படத்துல கதாநாயகி இறந்துபோன பிறகு சுடுகாட்டுல ஒரு பையன் பறையை வெச்சிட்டு என் பக்கத்துல நிப்பான். அந்தக் காட்சியை லோ ஆங்கிள் ஷாட்ல வெச்சிருப்பேன். இந்தக் காட்சியைப் பற்றி சமீபத்தில் இயக்குநரும் என் நண்பருமான பா.இரஞ்சித் பேசினார். 'அந்த ஒரு ஷாட்லயே அவ்ளோ விஷயங்கள் சொல்லியிருக்கீங்க'ன்னு சொன்னார்.

நான் சொல்ல முற்படுறதும், எனக்குத் தெரிஞ்ச அளவுல நான் சொல்றதும் என்னவா போய் சேர்ந்திருக்குன்னு ரொம்ப நாள் கழிச்சுதான் எனக்கே தெரிஞ்சது. 'படத்துல நிறைய அரசியல் பேசியிருக்கீங்க'ன்னு இரஞ்சித் அவர்கள் சொன்னார். 'இவன்' படத்துலயும் அரசியல் பேசியிருக்கேன். 'ஒத்த செருப்பு'லகூட காந்தியோட ரூபாய் நோட்டு, அது இல்லாதவன் வாழ்க்கைல என்னவாலாம் ப்ளே பண்ணுது, அவனோட அவமானத்தைக்கூட சொல்ல முடியாத அளவுக்கு அவனை எப்படி ஒரு கொலைகாரனா மாத்துதுன்னு சொல்லியிருப்பேன். மகாத்மா காந்தியோட போட்டோ உடைக்கிற காட்சியையும் சென்சார் பார்த்து ஏத்துக்குற மாதிரிதான் படத்துல பண்ணியிருப்பேன். இந்தப் படத்தை ஆங்கிலத்துல பண்றதுக்கான பேச்சுவார்த்தைகள் நடக்குதுன்னு சொல்லியிருந்தேன்லையா, அப்ப அங்க இருக்கிறவர் ஒருத்தர் 'இந்தப் படத்துல இன்னும் கொஞ்சம் மேலே போய் உலக அரசியல் பேசுனா நல்லாயிருக்கும்'னு சொன்னார். அவரே 'பிளாக் போப்'னு டைட்டிலும் சொன்னார். அந்த டைட்டிலுக்குப் பின்னாடியே பெரிய அரசியல் இருக்கு. நீங்கள் சொன்ன விஷயங்களை எல்லாம் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் நிச்சயம் செய்வேன்.''

''மரணம் குறித்த உங்களின் மதிப்பீடு என்ன?''

- அல்போன்ஸ், ஜெயங்கொண்டம்

'' 'மரணம்... சம்பந்தப்பட்டவரைத் தவிர சகலருக்கும் தெரிகிறது.' நான் எழுதியதுதான். ஒருவன் வாழ்க்கையில் நடக்கும் கல்யாணம், விபத்து, டிகிரி பாஸ் பண்றது, வேலைக்குப்போறதுன்னு எல்லாமே அவனுக்குத் தெரியும். ஆனா, மரணம் மட்டும் தெரியாது. மரணம் ஒருவகையில் விடுதலை. செலிபிரேஷனா கொண்டாட வேண்டியதுன்னு சொல்றாங்க. எங்க அப்பாவோட மரணத்துக்கு அப்புறம் அவர் எங்கேயோ இருக்கார், எனக்கு ஆசி வழங்கிட்டு இருக்கார்னுதான் நான் நினைக்கிறேன். நானும் இல்லாதபோது நான் மிகவும் நேசிக்கிற என்னுடைய குழந்தைகளுக்கு வழித்துணையாவே இருக்கணும்னு நினைக்கிறேன். இந்த நேரத்துல மரணத்தைப் பற்றி யோசிக்கிறதைவிடவும் வாழ்க்கையை ஆரோக்கியமா வாழ என்னலாம் செய்யணும்னு யோசிக்கணும். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. மனசுக்குள்ள நீங்க சந்தோஷமா இருந்தீங்கன்னா மரணம் நிச்சயம் தள்ளிவைக்கப்படும்.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.