Published:Updated:

"அஜித்தின் அந்தக் கண்கள்... `நீ வருவாய் என'வில் நடித்த, `நேர்கொண்ட பார்வை'யில் பார்த்த..." - பார்த்திபன் தொடர் - 3

பார்த்திபன்

இயக்குநர், நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் எழுதும் ஆண்line பெண்line Thought காம் தொடரின் மூன்றாவது பகுதி.

"அஜித்தின் அந்தக் கண்கள்... `நீ வருவாய் என'வில் நடித்த, `நேர்கொண்ட பார்வை'யில் பார்த்த..." - பார்த்திபன் தொடர் - 3

இயக்குநர், நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் எழுதும் ஆண்line பெண்line Thought காம் தொடரின் மூன்றாவது பகுதி.

Published:Updated:
பார்த்திபன்

மற்ற நடிகர்களிடம் இல்லாத மாறுபட்ட ஒரு சிந்தனை அல்லது பேச்சுத் திறமை அல்லது கவிதை மொழி உங்களிடம் உள்ளது. எந்த வயசுல இப்படி மாறுனீங்க?

தினேஷ்குமார், முதுகுளத்தூர்

''நீங்க கேக்குறது உண்மையிலேயே நீங்க எப்ப வயசுக்கு வந்தீங்கன்னு கேக்குற மாதிரியிருக்கு. ஒரு பெண் கருவாகி, உருவாகி பருவத்தை அடைஞ்சதுக்கு மேல அவளுடைய பார்வையும், உலகமுமே பெரிசா விரிவடையுமாம். எனக்குக்கூட எந்த ஏஜ்னு ஞாபகம் இல்லை. சினிமால ஹீரோவாகிடலாம்னு எப்படி முடிவெடுத்தேன், எப்படி நம்பினேன்னு தெரியல. ஆனா, அந்த நம்பிக்கையை வெச்சிக்கிட்டு நான் போராடும்போது சுவத்துல அடிச்ச பந்து மாதிரி திரும்பத் திரும்ப வந்துட்டே இருந்தேன். தோல்வியை என்னால தாங்கவே முடியல. வருத்ததோட உச்சத்துக்குப் போறேன். இந்த நேரத்துலதான் நான் பாக்யராஜ் சார்கிட்ட போய் சேர்றேன். பாக்யராஜ் சார் உலக மகா புத்திசாலி. அவர்கிட்ட போகும்போது நான் இன்னும் யோசிக்கணும், நம்மகிட்ட இருக்குறது பத்தாதுன்னு புரிஞ்சது. உதாரணத்துக்கு ஒரு காட்சியைச் சொல்லி, 'இது சுமாரான காட்சி... இதுக்கு இன்னும் பெட்டரா யோசி'ன்னு சொல்லுவார். அந்தமாதிரி நிறைய பிராக்டீஸ் அவரோட. பாரதிராஜா சார்கிட்ட இருந்து அவர் வந்தாலும், பாக்யராஜ் சாரோட படங்கள் வேற ஒரு தளத்துல இருக்கும். அந்தமாதிரி நானும் பாக்யராஜ் சார்கிட்ட வொர்க் பண்ணாலும், அவரை மிஞ்சணும், அவரோட புத்திசாலித்தனத்தை மிஞ்சணும், அவரோட நகைச்சுவையை மிஞ்சணும்னு ஒரு போட்டி. ஆனா, என்னுடைய போட்டியாளர் மிகப்பெரிய திறமையாளர். அதனால அவரை கிராஸ் பண்ணணும்னா நிறைய பயிற்சி எடுக்கணும். நிறையவே பயிற்சி எடுத்தேன். அப்போதில் இருந்து எனக்கு இப்போது வரைக்கும் சினிமாவைத்தவிர வேறு சிந்தனைகள் இல்லை.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நடிகர் வடிவேலுவுக்கும் உங்களுக்கும் எதாவது சண்டையா , ஏன் அவரை நீங்கள் சமீபத்தில் இயக்கிய படங்களில் நடிக்க வைக்கவில்லை ?

மு.ஸ்ரீராம், மயிலாடுதுறை

Parthiban
Parthiban

''வடிவேலுவோட சண்டேவும் இல்லை... மண்டேவும் இல்லை... வடிவேலுவோட மண்டையும், என்னோட மண்டையும் சேரும்போது சிறப்பான காட்சிகள்தான் வந்திருக்கு. அந்த காம்பினேஷன் ரொம்ப ரேர். அதாவது ஒரு ஹீரோவும், காமெடியனும் சேர்ந்து பண்றது. வழக்கமா லாரல் & ஹார்டி, கவுண்டமணி - செந்தில்னு ரெண்டு பேருமே நகைச்சுவை நடிகர்களாத்தான் இருப்பாங்க. அந்த காம்பினேஷன் என்னதான் நான் ஸ்கிரிப்ட்டுக்குள்ள மண்டையைப் போட்டு உருட்டினாலும், அவர் தன்னோட நடிப்பால பிரமாதப்படுத்திடுவார். அந்த காம்பினேஷன்தான் நானும் எதிர்பார்த்துட்டு இருக்கேன். என்ன காரணமோ தெரியல அது தள்ளித் தள்ளிப் போகுது. லாக்டெளன் முடிஞ்சதுக்குப் பிறகு அமைஞ்சதுன்னா நல்லாயிருக்கும். மக்கள் இந்த காம்பினேஷன்ல எப்ப படம் வந்தாலும் ரசிப்பாங்க. அந்த நம்பிக்கையிருக்கு. நம்பிக்கைதான் வாழ்க்கை.''

அஜித் அவர்களுடனான உங்கள் நட்பு, அவருக்கு ஏதும் கதைகள் வைத்திருக்கிறீர்களா?

க.ரஞ்சித்குமார், மதுரை

அஜித்
அஜித்

''ஜித்து போன்ற கதைகள், கெத்து போன்ற கதைகள் எல்லாம் யோசிக்கும்போது நண்பர் அஜித் ஞாபகம் வரும். பவர்ஃபுல் ஆக்டர் அவர். அவரை சமீபத்துல எங்கயும் விழாக்கள்ல பார்க்கல. அவர் விழாக்களுக்கும் வரதில்லை. ஆனால், அவர் பேரை நேரு ஸ்டேடியத்துல சொல்லும்போது விசில் சத்தமும், கிளாப்ஸும் அடங்க நிமிஷங்கள் ஆகும். நடிகரை மீறி பெரிய ஸ்டாரா மாறிடுறது மிகச்சில பேருக்கு மட்டுமே நடக்குற விஷயம். பெரிய ஸ்டார் வேல்யூ. அது நண்பர் அஜித்துக்கு இருக்குறதுல சந்தோஷம். அவரை நேர்ல பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.

'நீ வருவாய் என' ஷூட் டைம்ல நாங்க நேர்ல சந்திச்சிக்கவே இல்ல. ஒரே ஒருநாள் போட்டோஷுட்டாக மட்டும்தான் சந்திச்சோம். கைகுலுக்குறது, ரோஜாப்பூ கொடுத்துக்குறதுனு அந்த நாள் போச்சு. அவரோட படம் பண்ண நல்ல ஸ்கிரிப்ட் அமையும். அதுக்கான வாய்ப்பும் அமையும். மிஸ்டர் சூர்யா, மிஸ்டர் விஜய், மிஸ்டர் அஜித்னு எல்லோருக்கும் கதை வெச்சிருக்கீங்களான்னு கேட்கும்போது கதை இல்லைன்னு என்னால சொல்லமுடியாது. ஏன்னா, கதைகள் நிறைய இருக்கு. நடிகர்களைப் பொறுத்து அது சரியா பொருந்துதான்னு வொர்க் பண்ணணும். 'நேர்கொண்ட பார்வை'ல நண்பர் அஜித்தோட பர்ஃபாமென்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. வசனங்களைவிடவும் அவரோட கூர்மையான கண்கள் ரொம்ப பவர்ஃபுல்லா இருந்தது. ஒருவார்த்தைக்கும், இன்னொருவார்த்தைக்கும் இடையில எடுத்துக்கிட்ட டைமிங், ஆழ்ந்து கவனிக்கிறதுன்னு ஆக்‌ஷன் ஹீரோவையெல்லாம் மீறி ஒரு பர்ஃபாமரா ரொம்பவே ரசிச்சேன். வாய்ப்புகள் அமையும். நம்பிக்கையுடன் இருக்கிறேன்.''

சினிமா விமர்சனங்களுக்கு விகடன் மார்க் போடுவதை நீங்க எப்படிப் பார்க்குறீங்க... உங்க படங்களுக்கு நீங்க நினைச்ச மார்க்கும், விகடன் மார்க்கும் மேட்ச் ஆயிருக்கா?

ஆஷா, பெங்களூரு

Parthiban
Parthiban

''சின்ன வயசுல படங்கள் பார்க்கும்போது, குறிப்பா பாலசந்தர் சார் படங்கள் பார்க்கும்போது இடைவெளில போட்டோகார்ட்ஸ் பார்க்க ஓடுவோம். தியேட்டர்ல 8, 10 போட்டோகார்ட்ஸ் ஒட்டி வெச்சிருப்பாங்க. அதுல இருக்கிற போட்டோஸ்ல 5 போட்டோ ஏற்கனவே வந்துட்டு இருக்கும். மீதி இருக்குறா போட்டோஸை வெச்சு, அந்தப்படம் இப்படித்தான் இருக்கும்னு ஒரு கதையை நானா முடிவு பண்ணுவேன். அதை என்னால தவிர்க்கவேமுடியாது. அதேமாதிரிதான் விமர்சனங்களும். இப்ப மாதிரி உடனடி விமர்சனங்கள் அப்ப கிடையாது. அதனால, அப்ப நம்ம படத்துக்கு அடுத்த வாரம் விகடன் விமர்சனம் என்ன, மார்க் என்னனு பார்க்குறதை தவிர்க்கவே முடியாததா இருந்தது. அப்படி வளர்ந்துட்டோம்.

நாமளும் '16 வயதினிலே' படம் மாதிரி மார்க் வாங்கணும், படம் பண்ணணும்னு நினைச்சேன். 'புதிய பாதை'க்கு நல்ல மார்க், சிவப்புக் கம்பள வரவேற்புலாம் போட்டிருந்தாங்க. இன்னொரு கேள்வில உங்கள் படங்கள்ல உங்களுக்குக் கிடைக்கிறது மன திருப்தியா, மக்களோட பாராட்டான்னு கேட்டிருந்தாங்க. நிச்சயம் மக்களோட மனதிருப்திதான். அதேமாதிரி விகடனோட மார்க்கும் ஒரு கிரீடம். அதை அப்படியே நாங்க ரவுண்டு கட்டி எடுத்து விளம்பரத்துல போடுவோம். 'ஒத்த செருப்பு' படத்துக்கு 51 மார்க்தான் கிடைச்சதும் ரொம்ப கஷ்டமா இருந்தது. 'புதிய பாதை'யைவிட அடுத்த லெவல் படம்தானே 'ஒத்த செருப்பு'. அப்ப இந்தப் படத்துக்கு அதை விட அதிகமா மார்க் இருக்கணும், 60 மார்க்கை கிராஸ் பண்ணிடுவேன்னு நினைச்சிட்டு இருந்தேன். இல்லைன்னா மார்க்கே போடமா, மார்க்கை மீறின படம்னு இந்தப்படத்தை விகடன் பாராட்டும்னு எதிர்பார்த்துட்டு இருந்தேன். பரவாயில்ல... அடுத்தவருஷம் அதிக மார்க் வாங்குவேன். இந்த வருஷம் பரீட்சையே இல்லாம ஆல் பாஸ் ஆகுற மாதிரி இல்லாம, எக்ஸாம் வெச்சு அதுல நிறைய மார்க் வாங்குவேன்ற நம்பிக்கை இருக்கு.''

கதையைச் சுடுற இயக்குநர்கள் எல்லாம் வருடத்திற்கு இரண்டு படத்தை சுட்டுத் தள்ள, எந்தக் கதையையும் சுடாத நீங்கள் ஏன் வருடத்துக்கு இரண்டு படங்களை சுடச் சுட இயக்கவில்லை?

மு.ஸ்ரீராம், மயிலாடுதுறை

இந்தக் கேள்வியே எனக்குப்பெரிய விருது. இத்தனை வருஷ உழைப்புக்கான சரியான அங்கீகாரம் இந்தக் கேள்வி. ஏற்கெனவே ரெடியா இருக்குற மாவுல தோசை சுடுறதைவிட, அரிசி ஊறவெச்சு, அதுக்குத் தகுந்த மாதிரி உளுத்தம் பருப்பை ஊறவெச்சு, கொஞ்சம் வெந்தயத்தை ஊறவெச்ச, அதை ஆப்பத்துக்கா, தோசைக்கா, இட்லிக்கான தெரிஞ்சு, விடிய விடிய ஊறி, மறுநாள் காலைல தோசை சுடுற, அந்த சந்தோஷமே வேற. அப்படித்தான் என்னோட ஸ்கிரிப்ட் எல்லாமே. என்னடா ஒரு கதை பண்ண இவ்ளோ நாளாகுதேன்னு ரொம்ப கஷ்டமா இருக்கும். என்டோட முதல் படம் லட்சுமி மூவி மேர்க்கர்ஸுக்குப் பண்றதா இருந்தது. தெலுங்குல இருக்குற பெரிய டைரக்டர்ஸ்லாம் வெச்சு அவங்க படம் பண்ணுவாங்க. நான் அவங்ககிட்ட படம் பண்ணப்போய், தினமும் காலைல இருந்து நைட் வரைக்கும் உட்காருவேன். ஒரு கதையும் வரவே வராது. மண்டையைப்போட்டு உடைச்சுக்குவோம். ஆனா, அப்ப அந்த நிறுவனத்துக்குப் படம் பண்ணிட்டு இருந்த ஒரு டைரக்டர் வருவார். தினமும் அரை மணிநேரம்தான். ஒரு படம் ஓடும். இதைத்தான் நாளைக்கு எடுக்கப்போறோம்னு சொல்லிட்டுப் போய்டுவார். வந்தார்னா அரை மணிநேரத்துல போய்டுவார். கொஞ்ச நாள் கழிச்சு அந்த கம்பெனில இருந்து விரட்டப்பட்டேன். அவ்ளோ வேகமா என்னால சுடமுடியலை. என்னோட வேகத்துக்கு ரெண்டு இல்ல, மூணு படம்கூட படம் பண்ணமுடியும். ஸ்பாட்ல அவ்ளோ எனர்ஜி இருக்கும்.

பாரதிராஜா போன வாரம் தேனில இருந்து போன் பண்ணி 'எப்படியிருக்க'ன்னு கேட்டார். அப்படியே கண் கலங்கிடுச்சு. 'ஒத்தசெருப்பு' மாதிரி ஒரு படம் உனக்கு க்ரீடம்யான்னு சொன்னார். ஹாலிவுட்ல இந்தப் படத்தைப் பண்ண கேட்டுடிருக்காகன்னு நான் சொன்னதும், 'நீ போகணும்யா, ஹாலிவுட்ல ரஹ்மான் போன மாதிரி, நீயும் போகணும்'னு சொன்னார். அவர் பாராட்ட பாராட்ட கண் கலங்க ஆரம்பிச்சிடுச்சு. நிறைய ஸ்கிரிப்ட் இருக்கு. தயாரிப்பாளர் மட்டும்தான் பிரச்னை. மிகப்பெரிய ரசனையோட, மினிமம் லாபம்னு பேசப்படும்போது ரெண்டு படங்கள் பண்ணலாம். ரசனையான தயாரிப்பாளர்கள் இருக்குறதுனாலதான் என்னமாதிரியான இயக்குநர்கள் வந்திருக்காங்க. நம்பிக்கையோட இருப்போம்.''