ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்காக, பேச்சாளர், கல்வியாளர், எழுத்தாளர் என பலமுகங்கள் கொண்ட பேராசிரியை பர்வீன் சுல்தானா, பல்துறை ஆளுமைகளைச் சந்தித்து உரையாடி வருகிறார். 'கதைப்போமா with பர்வீன் சுல்தானா' என்ற பெயரிலான அந்த நிகழ்வில் இயக்குநர், நடிகர் பார்த்திபனைச் சந்தித்து அண்மையில் உரையாடினார்.
இசை, வாசிப்பு, பொன்னியின் செல்வன், பாக்யராஜ், கவிதை, நாவல், இளையராஜா, ஏஆர்.ரஹ்மான், ஒத்த செருப்பு, இரவின் நிழல் என பல தளங்களிலும் கடந்தோடியது அந்த உரையாடல். நீண்ட அந்த உரையாடலில் இருந்து சில துளிகள்!

"இளையராஜா இசை காற்றைப்போல... இசையால் நிறைந்திருக்கக்கூடிய உலகம் அவரோடது. ரஹ்மான் நயாகரா மாதிரி பிரவாகம்... இரண்டு பேரிடமும் ஒரே நேரத்தில் வேலை செய்கிறீர்கள். இரண்டு பேர் பற்றியும் சொல்லுங்கள்?"
"ஒப்பிடுவதே தவறு. ஒத்த செருப்பில் தமிழில் நான் நடித்திருக்கிறேன். இந்தியில் அபிஷேக் நடிக்கிறார். எங்கள் இருவரையும்கூட ஒப்பிடக்கூடாது. ஆனால் பொதுவாகச் சொல்லவேண்டுமென்றால் ராஜா சாரும் சரி, ரஹ்மான் சாரும் சரி இரண்டு பேருமே இசையை ஒரு தவம் போலதான் செய்கிறார்கள். ராஜா சார், காலை 7 டூ 1-க்குள்ள ஒரு பாடல், மதியம் 2 டூ 9ல ஒரு பாடல் முடிச்சிருவார். இவ்வளவு வேகமா உலகத்துல எந்த இசையமைப்பாளரும் இசையமைக்க முடியாது. அந்த வேகத்துல வந்த எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட். ரஹ்மான் சார், ஒரு பாடலை எடுத்துட்டா அதுக்குள்ளயே ஆறுமாசம் லேயர் பை லேயரா வேலை செய்வார். நான் கதை சொல்லிட்டு வந்துட்டேன். ஒருநாள் ஒரு சித்தர் பாடலை அனுப்பி அதை சோர்ஸ் பண்ணிக் கொடுங்கன்னு கேக்குறார். இதெல்லாம் தவம் செய்கிறவர்களால்தான் செய்யமுடியுமே ஒழிய இசை செய்பவர்களால் செய்ய முடியாது. ரஹ்மான் சாரை நான் அஞ்சாறு படத்துக்கு அணுகியிருக்கேன். ஆனா அவர் ஒத்துக்கலே. இரவின் நிழலைப் பத்தி சொன்னவுடனே ஒத்துக்கிட்டார். இதுல கனம் இருக்குன்னு அவர் நினைச்சார்."
"வடிவேலு-பார்த்திபன் காம்பினேஷனை நாங்கள்லாம் ரொம்பவே ரசிச்சோம். இப்போ ஒரு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிக்க வந்திருக்கார்... அவரைப்பத்தி சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துக்கோங்களேன்?"
"ஒரு நூறு வருஷத்துல சிறந்த நடிகன் வடிவேலு. நான் சொல்றதுல மிகையில்லை. நான் என்னோட கருப்பண்ணசாமி படத்துக்காக வெறும் 90 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்காக முதன்முதல்ல அவரை புக் பண்ணினேன். அவருடைய வளர்ச்சியை சந்தோஷமா பாத்துக்கிட்டிருக்கேன். அவரோட சேர்ந்து செஞ்ச நகைச்சுவைக் காட்சிகள் எல்லாத்துக்குமே வசனங்கள் நான்தான் எழுதினேன். 'கையை காலா நினைக்கிறேன்', 'குண்டக்க மண்டக்க', 'நல்ல மீன்கள் விற்கப்படும்...' இதெல்லாம்... இதேமாதிரி காமெடி வேற நடிகர்களோட சேர்ந்து அவர் செஞ்சிருந்தாலும் எங்க காமெடி மட்டும் தனிச்சுத் தெரியும். அவர் திரும்பவும் நடிக்க வர்றார்ங்கிறது உண்மையிலேயே சந்தோஷமா இருக்கு.
வடிவேலு கிராமத்துல பார்த்த ஒவ்வொரு கேரக்டரையும் அப்படியே புடிச்சு வச்சிருப்பார். வடிவேலு காமெடியிலயே நான் ரசிக்கிறது, டீக்கடையில இன்னொருத்தனுக்குப் போட்டியா அவரை உக்கார வச்சு ஒருத்தர் விழவைப்பார். விழுந்தவுடனே வடிவேலு பார்க்கிற பார்வையை இப்போ நினைச்சாலும் சிரிப்பு வரும்.
வெறும் ஒரு வார்த்தையை வச்சுக்கிட்டு ஷூட்டிங் போயிருக்கோம். வடிவேலு வர்றார்... ஒரு வார்த்தை கையில இருக்கு.... அன்னைக்கு ஒரு காமெடி காட்சி ரெடியாயிடும். ஒருநாள் எனக்கு ஒரு போன் வந்தது. 'ஹலோ யார் பேசுறது'ன்னு கேட்டேன். பக்கத்துல உக்காந்திருந்த கீர்த்தனா 'நீதானே பேசுறே'ன்னு சொன்னுச்சு. 'அட நல்லாயிருக்கே'ன்னு அந்த வார்த்தையை வச்சு நானும் வடிவேலுவும் ஒரு காமெடி பண்ணினோம். மௌன விரதம்ங்கிற வார்த்தையை வச்சு ஒரு காமெடி பண்ணினோம். இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருக்கு. திரும்பவும் வடிவேலு மனசு வச்சா இணையலாம்."
கதைப்போமா with பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியில் பார்த்திபனுடனான உரையாடலின் முதல் பகுதியைக் காண கீழே இருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்
"நீங்க கிரியேட்டிவான ஒரு இயக்குநர். பெரிய நடிகர்கள் உங்ககிட்ட வந்து படம் பண்ணியிருக்கனும்.. ஆனா அது நடக்கலேங்கிற வருத்தம் இருக்கா?"
"நான் வருத்தப்பட்டதில்லை. புதியபாதை வந்தபிறகு நான் பெரிய நடிகனாயிட்டேன். பத்துப்படத்தை நான் வேண்டாம்னு சொல்ற நிலையில இருக்கேன். ரஜினி சாரும் நானும் அடிக்கடி சந்திச்சு விடிய விடியப் பேசுவோம். ரஜினி சார் கதை சொல்வார்... நீங்க டைரக்ட் பண்ணுங்கன்னு சொல்வார். எனக்கு நான் ஒரு கதை சொல்லி ரஜினி சாரை நடிக்க வைக்கனுங்கிறது ஆசை. ஆனா, ரஜினி சார் கால்ஷீட் கிடைக்கலேங்கிற வருத்தம் எனக்கு இருந்ததில்லை. ஆனா... இவ்வளவு வருஷம் கழிச்சு இப்போ யோசிக்கிறேன். பெரிய நடிகர்களோட படம் பண்ணியிருந்தா அது வேற லெவல்லதான் இருந்திருக்கும். நான் சின்ன வட்டத்துக்குள்ளேயே இருந்துட்டேனோன்னு தோணும். என் பட்ஜெட், என் பிசினஸ்ன்னு இருந்திருக்கேன். விஜயோட படம் பண்ணனும்ன்னு ஆசையிருக்கு. நடக்கும்."

"இப்போ நடிக்கிற நடிகர்கள்ல உங்களை ரொம்பவே ஈர்க்கிற நடிகர்கள் யார்?"
"இந்தக் கேள்விக்கு யோசிக்காம பதில் சொல்லனும்மா சூர்யா. ஜெய்பீம் பார்த்து வியந்தேன். ஜெய்பீம் படம் ஒரு பர்ட்சார்த்த முயற்சி. இது ஓடாமக்கூடப் போகலாம். ஆனா, இப்படியொரு படத்தை நாம எடுக்கனும் நடிக்கனும்ன்னு நினைச்ச தைரியம்தான் உண்மையான ஹிரோயிசம். தனுஷும் பிரமாதமான நடிகர். இப்போ நிறைய பேர் நல்லா நடிக்கிறாங்க..."
இதுபோல பர்வீன் சுல்தானாவிடம் பார்த்திபன் மனம் திறந்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளும் வீடியோவைக் காண கீழேயிருக்கும் லிங்கை கிளிக் செய்யுங்க!