Published:Updated:

``தோனிக்கும் அஜித்துக்கும் ஈகோ அதிகம்... ஏனென்றால்?!'' - பார்த்திபன் தொடர் - 14

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 14.

Published:Updated:

``தோனிக்கும் அஜித்துக்கும் ஈகோ அதிகம்... ஏனென்றால்?!'' - பார்த்திபன் தொடர் - 14

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 14.

பார்த்திபன்

''உங்க வீடியோ பேட்டிகள் பார்த்தேன். பின்னால் விநாயகர் சிலை இருந்தது. ஆனால், நீங்க ஒரு முற்போக்குச் சிந்தனை உள்ள ஆள்... இது ரெண்டுக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கா? முற்போக்குச் சிந்தனை எனும் பெயரில் இறை வழிபாட்டை விமர்சனம் செய்வது சரியா?"

மனோஜ்குமார், மன்னெல்லூர், கும்மிடிப்பூண்டி

''கும்மிடிப்பூண்டில இருந்து சிக்கனைப்போட்டு கிச்சடி பண்ணுன மாதிரி மிக்ஸ்டா ஒரு கேள்வி. நேத்துகூட மிஸ்டர் சமுத்திரக்கனி எனக்கு போன் பண்ணி கடவுள் பத்திப் பேசிட்டிருந்தார். அப்ப நான் விநாயகரோட எனக்குள்ள தொடர்பு ரொம்ப ஜாஸ்தின்னு சொல்லிட்டிருந்தேன். அதுக்கு காரணம் பாக்யராஜ் சார் முதல்முறையா 'இதைப் போய் ஷூட் பண்ணிட்டு வா'ன்னு சொன்னது ஒரு விநாயகர் சதுர்த்தி அன்னைக்குத்தான். அம்மா தீவிர கடவுள் பக்தை. திங்கள் முருகன், வியாழன் சாய்பாபா, ராகவேந்திரர், வெள்ளிக்கிழமை அம்மன், சனிக்கிழமை பெருமாள்னு சாமி கும்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. அம்மா பிள்ளைன்றதால அம்மா சொல்றதைத்தான் செஞ்சிட்டு இருப்போம். விநாயகருக்கு சிலை வைக்க வீட்ல எல்லாத்தையும் நான்தான் ரெடி பண்ணுவேன். அம்மா எதன்மேல் நம்பிக்கை வைக்கிறாங்களோ, அதன்மீதுதான் நாம நம்பிக்கை வைப்போம். அந்த மாதிரி எனக்கு விநாயகர் ரொம்பவே ஸ்பெஷல். விநாயகர் சதுர்த்தி அன்னைக்குத்தான் ஹவுஸ்ஃபுல்னு போர்டு அடிச்சேன். என் நண்பர் தரணியின் மனைவிக்கு பிரசவத்துக்கு முன்னாடி ரொம்ப வலி இருக்குன்னு சொல்லியிருந்தாங்க. மாங்காட்டு கோயில்ல இருந்து பிரசாதம் எடுத்துட்டுப்போய்க் கொடுத்தேன். அதுக்குப்பிறகு வலியே இல்லைன்னு சொன்னாங்க.

அவங்க குழந்தை பிறந்தப்போகூட விநாயகரை வரைஞ்சு ஃப்ரேம் பண்ணித்தான் கிஃப்ட்டா கொடுத்தேன். தங்கம், வெள்ளி கிஃப்ட்டையெல்லாம் பீரோக்குள்ள வெச்சிட்டோம். உங்களோட கிஃப்ட்டைத்தான் ஹால்லயே வெச்சோம்னு சொன்னாங்க. அப்போதில் இருந்தே விநாயகர் என்கூட வந்துட்டே இருக்கார். எந்தவித சக்தியும் இல்லாதப்போ, எந்த விதமான வாய்ப்பும் இல்லாதப்போ எதையாவது நாம் நம்புவோம். தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில், காளிகாம்பாள் கோயில் இப்படித் தேடித்தேடிப்போய் பீடத்தை நானே முட்டி முட்டி வேண்டுதல்களால் உடைச்சிருப்பேன். சினிமால நடிக்கணும்னு ஆசை, வாய்ப்பு கிடைக்கல, யாரையும் தெரியல, என்ன பண்ணுறதுனு புரியலைன்னு எனக்கு நானே பேசிட்டு கோயிலுக்குப் போக ஆரம்பிச்சேன்.

பார்த்திபன்
பார்த்திபன்

எனக்கு எது அமைதியோ, நிம்மதியோ அதை நான் செய்றேன். சர்ச்சுக்குப் போவேன், மவுன்ட்ரோட்ல இருக்கிற மசூதிக்குப் போவேன். சமீபத்துல ட்விட்டர்ல ஆழ்வார்கள் பற்றிய என்னோட பதிவு சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கு. சத்தியமா சொல்றேன், கடவுள் மனம் புண்படுற மாதிரி வேணா பேசினாலும் பேசுவேனே தவிர, மனிதர்கள் மனம் புண்பட நான் பேசவே பேசமாட்டேன். 40,000 பாடல்களை எஸ்பிபி பாடியிருக்கார்னு சொல்லும்போது, ஆழ்வார்களை கம்பேர் பண்ணிச் சொன்னேன். அதை எஸ்பிபியைப் பெருமைப்படுத்துறதுக்காகச் சொன்னேன். அதுக்காக ஆழ்வார்களைக் குறைச்சுச் சொல்றதா அர்த்தம் கிடையாது. 'உனக்கு என்ன ஆழ்வார்கள் பத்தித் தெரியும்'னு நிறைய பேர் கமென்ட் பண்ணாங்க. இனிமேல் இந்த மாதிரி பதிவுகளைக் குறைச்சிக்கணும்னு நினைச்சிக்கிட்டேன். ஆழ்வார்களை தெய்விகமா நினைக்கிறவங்களை நான் சீண்டுற மாதிரி பதிவு பண்ணிட்டேனோன்றதுல எனக்கு வருத்தம்தான். என்னை மீறிய சக்திமேல எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. இன்னைக்கும் கோயிலுக்குப் போவேன். அதேசமயம் எது சரி, தப்புன்னு பிரசாரம் பண்றதில்லை. ஒரு கட்டத்துல சரியெல்லாம் தப்பாகுது, தப்பெல்லாம் சரியாகுது. ஆழ் சிந்தனைக்குப் பேரும் கடவுள்னு நினைக்கிறேன். கடவுள் கடந்து உள்ளே செல்!''

''நீங்க எவ்வளவோ படம் பண்ணியிருப்பீங்க... அதுல எந்தப் படம் இது போதும், தமிழ் சினிமால பார்த்திபன்னா இது யாருன்னு சொல்லும். அப்படி நீங்க யோசிச்ச படம் என்ன, எதுக்காக?''

வனிதா, மதுரை

''போதும்கிற மனசு வந்திருக்கான்னு ஒரு கேள்வி. சத்தியமா இன்னும் வரல. ஆனா முதல் படத்தப்போ, இதுவே போதும், ரிலீஸானாப் போதும்னெல்லாம் தோணுச்சு. கனவுகள் நீண்டது, மாறுதலுக்கு உட்பட்டது. இப்ப 'இரவின் நிழல்'னு ஒரு படம், என் அபிமான ஒளிப்பதிவாளர் மிஸ்டர் ரவிவர்மன் ஒளிப்பதிவு பண்றார். அவர்கிட்ட கதை சொல்லி முடிச்ச மறுநாள் எனக்கு போன் பண்ணி, இது உங்களோட பெஸ்ட்டா இருக்கப்போகுதுன்னு சொன்னார். 'ஒத்த செருப்பு' பார்த்துட்டு இளையராஜா சார் 'இதுக்கு மேல என்னய்யா பண்ணிடுவ'ன்னு கேட்டார். 'ஒத்த செருப்பு' படத்தைப் பார்த்த மிஸ்டர் ரவிவர்மன், இந்தக் கதையைக் கேட்டுட்டு, இதுதான் பெஸ்ட்டா இருக்கப்போகுதுன்னு சொல்றார். அப்படி நான் முயற்சி பண்ணிட்டே இருக்கேன். ரவிவர்மனுக்கு திறமைமேல உள்ள நம்பிக்கை, அவரோட உழைப்பு ரொம்பப் பிடிக்கும். 'பொன்னியின் செல்வன்' படம் அவர்தான் பண்ணிட்டிருக்கார். அவர் பார்க்காத, கேட்காத பாலிவுட், ஹாலிவுட் கதைகள் இருக்காது. அவர்கிட்டயே 'இரவின் நிழல்' மாதிரி ஒன் ஷாட் ஃபிலிம் பார்த்திருக்கீங்களான்னு கேட்டேன். இந்த ஜானர்லயே படம் பார்த்ததில்லைன்னு சொன்னார். 'இரவின் நிழல்' ஒரு சேலஞ்சிங்கான படம்னு தெரியுது. குறைந்த பட்ஜெட்டுக்குள்ள இந்த மாதிரி விஷயத்தை யோசிக்கமுடியும், யோச்சிருக்கேன். இந்தப் படம் நிச்சயமா மதுரைல ரிலீஸாகும். பார்த்துட்டு சொல்லுங்க. இது பெஸ்ட்னு நீங்க சொன்னவுடனே இன்னொரு பெஸ்ட்டுக்கு நான் ட்ரை பண்றேன்.''

''உங்கள் மகள்கள், மகன் இப்போது என்ன செய்கிறார்கள்... கொஞ்சம் குடும்பத்தைப் பற்றியும் அப்டேட் கொடுங்களேன்?''

ராதா, மரக்காணம்

மகள்கள் மற்றும் மகனுடன் பார்த்திபன்
மகள்கள் மற்றும் மகனுடன் பார்த்திபன்

''இந்தச் சமூகம், உலகமே என் குடும்பம்னு பார்க்குறது என்னோட ஒரு பார்வை. இப்போதைக்கு ரேஷன்கார்டு இல்லாத என் குடும்பத்தில் இருக்கிற என் உறுப்பினர்கள் முதல் மகள் அபிநயா. என்னுடைய பெரிய செல்லம். அவங்களுக்குத் திருமணமாகி கணவரோடு இருக்காங்க. இரண்டாவது மகள் கீர்த்தனா. அவங்களுக்கும் திருமணமாகிடுச்சு. மாப்பிள்ளை பேர் அக்‌ஷய். இந்தியாவின் சிறந்த எடிட்டரான ஶ்ரீகர் பிரசாத் அவர்களின் மகன். அவர் ஒரு படம் ஏற்கெனவே இந்தில இயக்கியிருக்கார். அடுத்து தமிழில் படம் பண்ணுறதுக்கான முயற்சிகள் நடந்துட்டிருக்கு. மகள் கீர்த்தனா, மணிரத்னம் சார்கிட்ட உதவி இயக்குநரா வொர்க் பண்ணிட்டு இப்போ இயக்குநராக, ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டிருக்காங்க. என் மகன் ராக்கி பார்த்திபன். அவர் ஏ.எல் விஜய்கிட்ட உதவி இயக்குநரா வொர்க் பண்ணார். மிஸ்டர் ஏகாகிட்ட ஒளிப்பதிவு கத்துக்கிட்டார். அவரும் இயக்குநருக்கான முயற்சியில் இருக்கார்.

இவங்களுக்குப் போட்டியா நானும் சேர்ந்து ஒரு படம் பண்ண முயற்சி பண்ணிட்டிருக்கேன். குடும்பமா எல்லோரும் சந்திச்சிக்கிட்டோம்னா என்னோட கதையைத்தான் சொல்லுவேன். எப்போ இந்தக் கதையைப் படமா பண்ணுவீங்கன்னு கேப்பாங்க. எப்ப பண்ணுவேன்னு தெரியாது. ஆனா, இந்தமாதிரி யோசனை வந்ததுன்னு சொல்லுவேன். இந்தக் கதைகளை யங்ஸ்டர்ஸ் ரசிக்கிறாங்களான்னு உரசிப்பார்க்குற கல்லா என் குழந்தைகள் இருக்காங்க. ரொம்ப மகிழ்ச்சியான குடும்பம். விரைவில் அவங்களும் டைரக்டர்ஸ் ஆகணும். அவங்க படங்களுக்குப் போட்டியா என் படமும் வரணும். அது ஒரு பெரிய சந்தோஷம். எல்லோரும் சந்தோஷமா இயங்கிட்டிருக்கோம்.

'' 'பொன்மகள் வந்தாள்' படம்தான் ஓடிடி-யில் வெளியான பெரிய ஸ்டார்காஸ்ட் படம். அதில் நீங்களும் நடித்திருந்தீர்கள். இப்போது பெரிய ஸ்டார் படமே ஓடிடி டைரக்ட் ரிலீஸுக்கு வருகிறது. சூர்யாவின் இந்த முடிவை ஒரு சீனியர் இயக்குநராக, நடிகராக நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?''

போரிஸ், பாண்டிச்சேரி

Ponmagal Vandhal
Ponmagal Vandhal

'' 'பொன்மகள் வந்தாள்' ஓடிடி-யில் வந்தது சரியா, சூரரைப்போற்றலாமா ஓடிடி ... அல்லது சூர்யாவை சூரர் என்று போற்றலாமான்னு நிறைய கேள்விகள். ரொம்ப நாளாவே புரொடியூசர்ஸ் கவுன்சிலோட விதிமுறைகள், விநியோகஸ்தர் சங்க விதிமுறைகள், எக்ஸிபிட்டர் அசோசியேஷனோட பிரச்னைகள் அதையெல்லாம் மீறி நான் பார்க்குறது ஒரு கலைஞனோட சுதந்திரம். அது பறிபோகக்கூடாது. சூர்யா ஒரு படம் எடுத்திருக்கார். அதை ஓடிடியா - தியேட்டரா எதில் ரிலீஸ் பண்ணுறதுன்றது அவரோட விருப்பம். ஓடிடி-க்குக் கொடுத்த அதே நேரத்தில் 5 கோடி ரூபாயை லாபத்திலிருந்து பகிர்ந்து கொடுக்கிறார். சில பேர் மறைக்குறதுக்காக இதைப் பண்ணுறார்னு சொல்றாங்க. அப்படிச் செய்யவேண்டிய அவசியமே கிடையாது. 5 கோடி ரூபாய் சாதாரணப் பணமே கிடையாது. முதல் 1.5 கோடி கொடுத்துட்டார். அடுத்தடுத்து முறையா போய்ச் சேருதான்னு பார்த்துக் கொடுக்கிறார். அவங்க குடும்பமே அப்படித்தான்.

மிஸஸ் ஜோதிகா அவங்க சொந்தப்பணத்துல இருந்து 25 லட்சம் கொடுத்திருக்காங்க. 'நான் பண்ணுற முதல் நல்ல காரியம். அதுவும் என் பணத்தில் இருந்து எடுத்துப்பண்ணுறேன்'னு என்கிட்ட அவ்ளோ சந்தோஷமா சொன்னாங்க. குடும்பமே சந்தோஷமா நல்ல விஷயங்கள் பண்ணிட்டிருக்காங்க. சினிமா மூலம் சம்பாதிக்கிறதுல ஒரு பகுதியை திரும்ப சமூகத்துக்குக் கொடுக்குறாங்க. அவரால நிறைய பேர் வீட்ல அடுப்பு எரிய நல்ல விஷயங்கள் செய்யமுடியாது. அதேசமயம் ஓடிடி போன்ற தளங்கள் சின்னப்படங்களுக்கான வாய்ப்பைக் கொடுக்கணும். ஓடிடி நல்ல கன்டென்ட்டுக்கு இம்பார்ட்டன்ஸ் கொடுக்கணும்கிறது என்னோட வேண்டுதல். பிரச்னைகளிலிருந்து மீண்டு, மீண்டும் திரையரங்குகளுக்கு மக்கள் எல்லோரும் வருவாங்கன்ற நம்பிக்கை எனக்கிருக்கு.''

சமீபத்தில் ஓய்வுபெற்ற கேப்டன் கூல் தோனியும் உங்களைப் போலவே வித்தியாசமானவர், சாமர்த்தியமானவர் (என் பார்வையில்) அவரிடமிருந்து உங்களுக்குப் பிடித்த விஷயம் & கற்றுக்கொண்ட விஷயம் என்ன?''

கோ.ராஜசேகர், தர்மபுரி

&

''ஆழ்மனதில் தோன்றிய ஒரு கேள்வி: பார்த்திபன் egoist ஆக என் கண்களுக்கு சமீப காலமாகத் தெரிகிறார். ஏன் அப்படித் தெரிகிறார் என்ற கேள்விக்கு பதில் மட்டும் எனக்குத் தெரியவில்லை... உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும். மேலும், வேறு யாராவது இதற்கு முன், கடந்த 30 வருடத்தில் இக்கருத்தைச் சொல்லியிருக்காங்களா சார்?''

சரண், விழுப்புரம்

பார்த்திபன், கருணாநிதி
பார்த்திபன், கருணாநிதி

''மிஸ்டர் தோனி, உலகமே வியக்குற ஒரு மனிதர். எனக்கு கிரிக்கெட் பற்றி ஸ்பெல்லிங்தான் தெரியும். சேப்பாக்கம் பக்கத்துலதான் வீடு. இருந்தாலும், கிரவுண்டுக்கெல்லாம் போனது கிடையாது. எப்பயாவது கிரிக்கெட் பார்க்கும்போது மிஸ்டர் தோனி களத்துக்குள்ள இறங்கிப்போறதைப் பார்ப்பேன். ரெண்டு பக்கமும் கடல் அலைகள் மாதிரியான ஆரவாரத்துக்கு நடுவுல அமைதியா நடந்துபோயிட்டிருப்பார். மேட்சோட கடைசில 6 பால்ல 20 ரன், 24 ரன்னு அடிக்கவேண்டியிருக்கும். அவர் குறிவெச்சி அடிச்சார்னா அது எல்லையைத்தொடும். ஒவ்வொரு முறையும் சவாலை முறியடிக்கிறார். அவர் மேல நமக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திடறார். கடைசி ஓவர்ல இத்தனை ரன் இவர் எடுத்துடுவார்ன்னு நம்மளை நம்ப வைக்கிறதும், அதை சாதிக்கிறதையும் ஒவ்வொரு தடவையும் செஞ்சிட்டே இருக்கார்.

அப்புறம் ரொம்ப தைரியமான முடிவுகள். அது ரொம்பப் பெரிய விஷயம். மிஸ்டர் அஜித்கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயம் என்னன்னா அவரோட தைரியம். ஒரு மேடையில கலைஞர் இருக்கும்போது, எங்களை வற்புறத்துறாங்க, கலைஞர்களோட வேலை இது இல்லைன்னு அவ்ளோ அழகா சொல்றார். ரஜினி சார் எழுந்து நின்னு கைதட்றார். கலைஞருக்கு என்ன ரியாக்ட் பண்ணுறதுன்னே தெரியல. ரொம்ப போல்டான முடிவு. அதே மாதிரி ரசிகர் மன்றங்களைக் கலைச்சிட்டேன்றார். ஒரே ஒரு ரசிகர் மன்றத்தைக் கூட்டுறதுக்கே தலைகீழ நின்னு தண்ணி குடிக்கவேண்டியதா இருக்கும். ஆனா, அவர் பண்றார். அப்படி அவர் முடிவெடுக்கிறார்னா அதுக்கு மேல அவர் உழைக்கப்போறார்னு அர்த்தம். அதேமாதிரி தோனி எடுத்த முடிவுகள் எல்லாமே அவர் ஆட்டம் போல அதிரடியான முடிவுகள். இதெல்லாம் பண்ணணும்னா தன்மேல அவங்களுக்கு இருக்கிற நம்பிக்கை முக்கியமான விஷயம்.

இன்னொரு கேள்வியில் நண்பர் சரண், 'உங்களைப்பார்த்தா ஈகோயிஸ்டா தெரியுது, 30 வருஷத்துல யாராவது இப்படி உங்ககிட்ட கேட்டிருக்காங்களா'ன்னு சொல்லியிருக்கார். எந்தப் பதத்துல நீங்க ஈகோயிஸ்ட்னு சொல்றீங்கன்னு எனக்குத் தெரியல. இப்ப இது என்னால சாதிக்கமுடியும்னு நினைக்கிறது ஒரு ஈகோ. இப்ப மிஸ்டர் தோனி பற்றிப் பேசும்போது கடைசி ஓவர்ல தன்னால தேவைப்பட்ட ரன்ஸை அடிச்சிட முடியும்ன்றது ஈகோவா, அஜித் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறது ஈகோவா? அவங்க மேல கெளரவம் மிகுந்த ஒரு கர்வம் இருக்கணும். அப்பதான் அதைச் செய்யமுடியும்.

கலைஞர்கூட நாம்னு சொன்னாதான் உதடுகள் ஒட்டும், நான்னு சொல்லக்கூடாது. நாம் தான் பவர்னு சொல்லியிருந்தார். அவரை ஒருமுறை நேரில் சந்திக்கும்போது 'ஏன் நான்னு நினைக்கக்கூடாதுன்னு சொல்றீங்க. நீங்க சட்டசபைக்குப் போறீங்கன்னா அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து இப்படிப் பேசப்போறோம், கூட்டமா போய் கோரஸ் மாதிரி பேசப்போறோம்னு நினைப்பீங்களா, இல்லை, நான் அப்படிப் பேசப்போறேன்னு நினைப்பீங்களா'ன்னு கேட்டேன். 'ஏன் அப்படி'ன்னு கேட்டார். 'நான்ற விஷயம்தான் உங்களை இவ்ளோ தூரம் கொண்டுவந்திருக்கு. மு.கருணாநிதியாகிய நான்னுதானே பதவியேற்குறீங்க. நான்றது இருக்கணும். அதுக்கு நிறைய விதமா உழைக்கணும்ன்றது சரிதானே'ன்னு சொன்னேன். 'நீங்க சொல்றது சரிதான். மத்தவங்களுக்கு சொல்லிக்கொடுக்கும்போது நான்னு சொல்லக்கூடாது. ஒற்றுமையைத்தான் சொல்லிக்கொடுக்கணும்'னு சொன்னார்.

கலைஞரின் வெற்றிகள் எல்லாமே அவரை முன்னிலையில் வெச்சு அடைஞ்ச வெற்றிகள்தான். மிஸ்டர் தோனியும் அப்படித்தான். ஜெயிக்கிறது வேணா டீமா ஜெயிக்கலாம், ஆனா அந்தக் குறிப்பிட்ட பாலை அடிக்க அந்த 'நான்' வேண்டும். 'ஒத்த செருப்பு' பற்றி நான் பேசுறது உங்களுக்கு ஈகோவா தெரியுதான்னு தெரியல. 'புதிய பாதை'ன்னு ஒரு படம் பண்ணிட முடியும், நடிச்சிடமுடியும்னு நினைக்கிறதே எவ்ளோ பெரிய ஈகோ. 'ஒத்த செருப்பு' படம் பார்த்துட்டு 'இது ஈகோவோட உச்சம், ஆனா இதுல நீங்க ஜெயிச்சிட்டீங்க'ன்னு ஒருத்தர் சொன்னார். எனக்கு வாய்ப்புகளோ, புற உதவிகளோ இல்லாதபோது என்னை நிலைநிறுத்தப் போராடுற போராட்டத்துக்குப் பெயர்தான் ஈகோ என்றால் எனக்கும் ஈகோ இருக்கிறது.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.