Published:Updated:

"எம்ஜிஆரிடம் பிடித்தது, கலைஞரிடம் பிடிக்காதது, விஜயகாந்த்திடம் பிடிக்கும்?!"- பார்த்திபன் தொடர் - 15

பார்த்திபன்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 15.

"எம்ஜிஆரிடம் பிடித்தது, கலைஞரிடம் பிடிக்காதது, விஜயகாந்த்திடம் பிடிக்கும்?!"- பார்த்திபன் தொடர் - 15

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 15.

Published:Updated:
பார்த்திபன்

''சிறந்த வசனகர்த்தாவான நீங்கள் ரசித்த, ரசிக்கும் வசனகர்த்தா யார்?''

மெய்யப்பன், மதுரை

''சிறந்த வசனம் எப்படியிருக்கணும்கிறதுக்கு என்ன அளவுகோல்னு எனக்குத் தெரியாது. ஆனால் உலகம் முழுக்க, எந்த இடத்தில் போட்டாலும் ஒரே நேரத்துல கதைட்டுற வசனம் நல்ல வசனம்னு நான் நினைச்சுக்குறேன். எல்லோரோட மனசையும் தொடுற வசனம்தான் சிறந்த வசனம். 'பராசக்தி' படத்துல நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சார் தூங்கிட்டிருப்பார். அப்ப போலீஸ்காரர் வந்து அவரை அடிச்சி எழுப்பிட்டு 'என்னடா முழிக்கிற?'ன்னு கேட்பார். அதுக்கு சிவாஜி சார் 'தூங்கிட்டிருக்குறவனை எழுப்பி ஏன்டா முழுக்கிறேன்னு கேட்டா என்ன சொல்றது'ன்னு சொல்வார். அந்த வசனம் அபாரமா இருக்கும். வசனத்துல இருக்குற ஹியூமர் அவ்ளோ நல்லா இருக்கும்.

பாக்யராஜ் சார்கிட்ட இருக்கும்போது இந்த இடத்துல அவர் என்ன டயலாக் சொல்லாப்போறார்னு அவ்ளோ ஆர்வமா இருக்கும். 'ஒரு கை ஓசை'ன்னு ஒரு படம்... கிளைமேக்ஸ்ல ஒரு கார்டு போடுவார். அதாவது அவர் ஊமையா இருக்கும்போது ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவார். ஆனா, அவருக்கு சரியாகும்போது அந்தப் பொண்ணு அது புருஷனோட போயிடும். க்ளைமாக்ஸ்ல 'இவன் ஊமையா இருக்கும்போது பேசணும்னு ஆசைப்பட்டான். இப்ப ஊமையாவே இருக்கணும்னு ஆசைப்படுறான்'னு திருக்குறள் மாதிரி அந்தப் படத்தோட கதையை ரெண்டே வரில கார்டு போட்டு முடிச்சிருப்பார். அதேபோல 'ஆரண்ய காண்டம்' படத்துல அவரை அவ்ளோ பிடிக்குமான்னு கேட்கும்போது, 'அப்படியில்ல, ஆனா, அவர் என் அப்பா!'னு ஒரு டயலாக். என்னை ரொம்ப யோசிக்கவெச்ச வசனம்.

கே.பாலசந்தரோட படங்களில் நிறைய வசனங்கள் இருக்கும். 'தப்புத்தாளங்கள்'னு ஒரு படம். அதுல ஒரு புரோக்கர் வேலை பார்க்குறவர், ஒரு பெண்ணை லாட்ஜ் ரூம்ல கொண்டுபோய்விட்டு வெளியிலவந்து பணத்தை எண்ணிட்டு இருப்பார். கேமரா அப்படியே டில்ட் அப் ஆகும். அங்க ஒரு ஹோர்டிங் இருக்கும். 'Have you paid your income tax'-னு அதுல இருக்கும். நான் கைதட்டி அடங்குறதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு. வசனம் எழுதுறதுன்றதைவிடவும், அந்த வசனத்தை அந்த இடத்துல சரியா பொருத்துறதை கே.பி சார் கிட்ட ரொம்ப ரசிச்சிருக்கேன்.''

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''தமிழ் சினிமாவில் பெரும்பான்மையான இயக்குநர்கள் புதிய முயற்சிகளை தங்கள் சொந்தத் தயாரிப்பில் தயாரிக்காத பொழுது நீங்கள் மட்டும் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் செலவு செய்வது எந்த விதத்தில் நியாயம் சார்?''

ரா. தனுஷ்குமார், தென்னமரக்குடி

பார்த்திபன்
பார்த்திபன்

''என்னோட முதல் ரெண்டு படம் 'புதிய பாதை', 'பொண்டாட்டி தேவை' இது ரெண்டும்தான் விவேக் சித்ரா, திரு.சுந்தரம் அவர்களுக்காக நான் இயக்கிய படங்கள். ரெண்டாவது படம் இயக்கும்போதே இனி நாமளே தயாரிச்சி, இயக்கணும்னு முடிவுபண்ணிட்டேன். ஏன்னா, அது ஒரு சுதந்திரம். நாம நினைச்சபடி படத்தை எடுக்கமுடியும்னு நம்பினேன். அதுக்கு இன்ஸ்பிரேஷன் ராஜ்கபூர் போன்ற, மக்கள் திலகம் எம்ஜிஆர் போன்ற மாமேதைகள். 'அடிமைப்பெண்', 'உலகம் சுற்றும் வாலிபன்'னு எம்ஜிஆர் பிச்சர்ஸ்ல வந்த படங்கள் எல்லாமே பிரமாண்டமா இருக்கும். அவர் நடிக்கிற படங்களைவிட அதிகமான பொருட்செலவில் அவர் தயாரித்த படங்கள் இருக்கும். அதேமாதிரிதான் நாமளே தயாரிப்பாளரா இருக்கிறது ஒரு சுதந்திரம். அப்புறம் நான் எடுக்கும் படங்களில் நஷ்டம் வரலாம். அதை ஏன் ஒரு தயாரிப்பாளர் சுமக்கவேண்டும்.

'சுகமான சுமைகள்' பண்ணும்போது பூஜைபோட்டாலே பணம் வந்துடும். அப்ப எனக்கு அந்த மார்க்கெட் இருந்தது. ஆனா, அந்தப் படம் படுதோல்வி. கிட்டத்தட்ட 75 லட்சம் ரூபாய் நஷ்டம். அப்ப என்னை நிலைநிறுத்திக்க 'உள்ளே வெளியே'ன்னு ஒரு படம் பண்ணினேன். அப்புறம் 'ஹவுஸ்ஃபுல்', 'குடைக்குள் மழை'ன்னு நான் பண்ணுன படங்கள் நஷ்டம்தான். ஆனால், அந்தப் படங்களை இப்பவும் பெருமையாப் பேசுறோம். ஆனா, அதை வேற ஒருத்தர் தயாரிச்சி, நஷ்டமாகி அவர் நொந்து நூல் ஆகியிருக்கும்போது நான் பாராட்டுகள் வாங்கிட்டு இருந்தேன்னா அது நல்லாருக்காது.

நானே தயாரிப்பாளர், இயக்குநரா இருக்கிறதாலதான் என்னோட எதிர்பார்ப்பை என்னோட தோல்விப்படங்கள் மூலமே அதிகப்படுத்திக்கிட்டேன். என்னோட வாழ்க்கை மிக எளிமையானது. 4 காசு கிடைச்சா 3 காசை திரும்ப படம் எடுக்கப்போடுறதுலதான் எனக்கு ஆர்வம். ரிஸ்க்கா இருந்தா அந்த ரிஸ்க்கை நானே எடுக்கலாம்னு நினைப்பேன். இப்ப என்னுடைய மிக மிக நெருங்கிய நண்பர்களெல்லாம் சேர்ந்து என்னை வெச்சுப் படம் எடுக்குறாங்க. சில படங்கள் லாபம் வரும், சில படங்களில் நஷ்டம் வரும். அதை எங்களுக்குள் பிரிச்சுக்கிறோம். இப்ப என் நண்பர்கள் இருக்கிறதால அந்தப் பொருளாதார சுமை கொஞ்சம் குறையும். உங்க கேள்வியில் இருக்கிற ஆதங்கத்துக்கு நன்றி. பொருளாதாரத்தில் நஷ்டம் இல்லாத கமர்ஷியல் ரீதியான படங்கள் தொடர்ந்து பண்ணப்போறேன். 2021-ல இருந்து என்னுடைய படங்கள் வரிசையா வரும். வரவேண்டும்.''

''கலைஞர் மு.கருணாநிதிக்கும் உங்களுக்கும் இடையேயான பிடித்த, பிடிக்காத, நல்ல நகைச்சுவையான சம்பவங்கள் பற்றிச் சொல்ல முடியுமா?''

விஜயன், ஆயில்பட்டி

பார்த்திபன், கருணாநிதி
பார்த்திபன், கருணாநிதி

''அரசியல்ல அவரோட பங்கு எவ்ளோ முக்கியமானதுன்னு எல்லோருமே சொல்லுவாங்க. எதிர்க்கட்சிகளில் இருக்குறவங்ககூட அவரோட சொல்வளத்தையும் எழுத்தாற்றலையும் சமயோசிஜதத்தையும் பாராட்டுவாங்க. அப்படிப்பட்ட கலைஞர் என்னோட பட விழாவில் கலந்துக்குறார், என்னைப் பாராட்டுறார் என்பதெல்லாம் எப்போதும் மறக்கமுடியாதது. 'புதிய பாதை' படத்தோட வெள்ளிவிழாவில் கலைஞர் அவர்கள் கலந்துக்கிட்டார். அந்த விழாவில் நான் பேசும்போது, 'அம்மி குத்துற மாதிரிதான் நான் 'புதிய பாதை' படம் எடுத்திருக்கேன். அம்மி குத்துறவங்களில் சில பேர் அதுல புள்ளி புள்ளியா வெச்சிட்டுப் போயிடுவாங்க. சிலர் தாமரைப்பூ வரைவாங்க. அதுபோல நான் ஒரு அம்மி குத்துற கலைஞன்தான். அதில் ஒரு சின்ன வேலைப்பாடு மட்டும் பண்ணியிருக்கேன். அம்மி குத்துற கலைஞனுக்கு சிலைகளை வடிக்கிற கலைஞர் பரிசு கொடுக்கிறார்'னு கலைஞர் அவர்களைப் பாராட்டிப் பேசினேன். அப்ப கலைஞர், 'தம்பி பார்த்திபன் தன்னை அம்மிகுத்துற கலைஞர்னு சொன்னார். அம்மிதான் சமையலுக்குப் பயன்படும். சிலைகள் எதற்கும் பயன்படாது'ன்னு சொன்னார்.

என்னை அவர் பாராட்டிப்பேசணும்னு அவசியமே இல்ல. அதுவும் தன்னைத் தாழ்த்திக்கிட்டுப் பேசவேண்டியதேயில்லை. ஆனால் தன்னைத் தாழ்த்தி இன்னொருத்தரைப் புகழ்ந்து பாராட்டிப்பேசினார். அந்தக் குணத்தை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். எனக்குத் திருமணம் முடிஞ்சதும் என்னுடைய மனைவி இனி படங்களில் நடிக்கிறதில்லைன்னு முடிவெடுத்திருந்தாங்க. அப்ப, அவங்க நடிக்கிறதா ஏற்கெனவே ஒத்துக்கிட்டிருந்த படங்களுக்கெல்லாம் நாள்கள் கொடுத்து முடிச்சுக்கொடுத்தோம். 'ஆடிவெள்ளி' படம்லாம் அப்பதான் முடிஞ்சது. ஆனால், கலைஞர் அவர்கள் சம்பந்தப்பட்ட படம் மட்டும் முடியல. சொர்ணம் இயக்கத்துல முரளி நடிச்ச படம் அது. நாங்க கொடுத்த நாள்களுக்குள்ள அவங்க படம் எடுத்து முடிக்கல. அப்ப என் மனைவி நிறைமாத கர்ப்பிணியா இருக்காங்க.

கலைஞர் என்னைக் கூப்பிட்டு 'அந்தப் படத்தைக் கொஞ்சம் முடிச்சிக்கொடுங்க'ன்னு பேசினார். நான் 'இல்லைங்க... நாங்க டைம் கொடுத்துட்டோம். அவங்க அந்த டைம்குள்ள எடுத்து முடிக்கல. நாங்க டேட் கொடுக்காம இல்லை. இப்ப அவங்களும் கர்பபமா இருக்காங்க'ன்னு சொன்னேன். 'சரி... குழந்தை பிறந்தபிறகு முடிச்சுக்கொடுங்க'ன்னு சொன்னார். 'இல்லைங்க... அவங்க இனி நடிக்கிறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்காங்க. மன்னிக்கணும்'ன்னு சொல்றேன். அவர் அப்ப முதலமைச்சர். அவர் என்கிட்ட கேட்குறார். அவர்கூட திரும்ப திரும்ப பேசுறேன். என் மனசுக்குள்ள ஏதோ ஸ்ட்ராங்கா நினைச்சிக்கிட்டு அப்படிப் பேசுறது தப்பில்லைன்னு பேசுறேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு. அவ்ளோ ஸ்ட்ராங்காலாம் பேசியிருக்கணுமான்னு இப்ப தோணுது. அவர் ரொம்பப் பெருந்தன்மையா 'சரி நீங்க பாருங்க'ன்னு அனுப்பிவிட்டுட்டார். 'ஹவுஸ்ஃபுல்' படம் அவர் பார்க்குறதுக்காக ஸ்க்ரீன் பண்ணிட்டு உட்கார்ந்து பார்த்துட்டிருக்கோம். அதுல ஒரு அமைச்சருக்குக் காது கேக்காது. படம் பார்த்து முடிஞ்சதும் 'இது ஆற்காடு வீராசாமியைத்தானே மனசுல வெச்சுட்டுப் பண்ணுன'ன்னு என்கிட்ட கலைஞர் கேக்குறார். 'இல்லைங்க... அப்படி ஒரு விஷயமே எனக்குத் தெரியாது. இந்தப் படத்துல நடிச்சவருக்கு அப்படி இருந்தது. அதை உண்மையிலேயே படத்துலயும் வெச்சேன்'னு சொன்னேன். 'சும்மா பொய்யெல்லாம் சொல்லக்கூடாது... அதெல்லாம் தெரிஞ்சுதான் பண்ணியிருக்க'ன்னு சொன்னார்.

அந்தப் படத்தை அவருக்குப் போட்டு காண்பிச்சு வரிவிலக்கு வாங்குறதுதான் என்னோட பிளான். ஆனா, என்னடா இப்படி ஆகிடுச்சே, எப்படி வரிவிலக்கு கிடைக்கும்னு நினைச்சேன். அடுத்தநாள் காலைல 8 மணிக்கு கலைஞர் வீட்டுக்கு வரசொல்லியிருந்தாங்க. காலையில் போறேன். அங்க வரிவிலக்குக் கடிதம் கலைஞர் கையெழுத்து போட்டு ரெடியா இருந்தது. அவர் ஒரு விஷயத்தை விமர்சனம் பண்ணுறார். ஆனா, அந்த விமர்சனத்துனால யாருக்கும் எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதுன்னு நினைக்கிறார்னு கலைஞர் அவர்களை நினைச்சு வியந்தேன். அப்புறம் ஒருமுறை அவரைப் பார்க்க அவர் வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்கும்போது சண்முகநாதன் அவர்கள் ஒரு பேப்பர் கொண்டுவந்து 'இப்ப காலையில் கலைஞர் ஒரு கவிதை எழுதியிருக்கார். உங்ககிட்ட கொடுத்துப் படிக்கச் சொன்னார்'னு கொடுத்தார். எனக்கு செம சந்தோஷம். என்னது, கலைஞர் எழுதின கவிதையை முதல் ஆளா, நான் படிக்கிறதான்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். படிச்சதும் அவர்கிட்ட போய் எனக்குப் பிடிச்ச விஷயங்களைச் சொன்னேன். 'அப்படியா நல்லாருக்கா'ன்னு சந்தோஷப்பட்டு சிரிக்கிறார். ஒரு கலைஞனுக்குப் பாராட்டுன்றது கடைசிவரைக்கும் தேவையான விஷயம்னு அப்பதான் புரிஞ்சிக்கிட்டேன்.

ஆனா, அவர்மேல ஒரே ஒரு வருத்தம்தான். தமிழ்தான் அவரோட பெரிய அடையாளம். ஆனா, சிலோன் பிரச்னை அப்ப, தமிழர்களுக்காக அவர் குரல் கொடுக்கவேண்டிய நேரத்துல ஆட்சியையே கலைச்சிட்டு தமிழர்கள் பின்னாடி நின்னிருக்கவேண்டாமான்னு தோணும். அப்படி அவர் பண்ணியிருந்தார்னா உலகத்தமிழர்கள் அத்தனை பேரும் அவரை இந்த மாதிரி 100 மடங்கு கொண்டாடியிருப்பாங்க. எனக்கு அதுதான் வருத்தம். அவர் ஏன் அப்படிச் செய்யலைன்னு தெரியல. ஒரு பெரிய கிரீடத்தைத் தவறவிட்டுட்டாரோன்னு தோணுது. குடும்பத்துக்காக அவர் அப்படி பண்ணாமவிட்டுட்டாரோன்னு நினைப்பேன். அந்த விஷயம் மட்டும்தான் அவரிடம் எனக்குப் பிடிக்காதது.''

''வணக்கம் பார்த்திபன் சார்... 'வித்தகன்' டைட்டிலை விஜயகாந்த் சார் படத்துக்குக் கேட்டு, நீங்கள் கொடுக்கவில்லை. அதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா? விஜயகாந்த் சாரை கடைசியா எப்போ சந்திச்சீங்க?''

அருள் பிரகாசம், கோபிசெட்டிபாளையம்

பார்த்திபன்
பார்த்திபன்

'' விஜயகாந்த் சார்... என்னுடைய மரியாதைக்குரிய கலைஞர். அவரைப்பல நேரத்துல பார்த்து ரசிச்சிருக்கேன். உதவி இயக்குநரா இருக்கும்போது அவர்கிட்ட கதை சொல்ல சான்ஸ் கிடைக்குமான்னு அலைஞ்சிருக்கேன். அப்ப தாணு சார் விஜயகாந்த் சாரை வெச்சு படங்கள் பண்ணிட்டிருந்தார். அவர் மூலமா ட்ரை பண்ணினேன். அவர்கிட்டபோய் 'புதிய பாதை', அப்புறம் வேறொரு கதைலாம் சொன்னேன். ஆனா, அது அமையல. என்னோட முதல் படம் தாடண்டர் நகர்ல, ஷூட்டிங்கைத் தொடங்கிவைக்க விஜயகாந்த் சார் வந்தார். காலைல ஆறரை, ஏழு மணிக்கெல்லாம் ஷூட்டிங் ஆரம்பம். அவ்ளோ சீக்கிரம் வருவாரான்னு நினைச்சேன். அப்பல்லாம் இரண்டு மூணு ஷிப்ட்லாம் அவர் வொர்க் பண்ணிட்டு நைட்டு ரொம்ப லேட்டாதான் வீட்டுக்குப்போவார். ஆனா, டான்னு காலைல கரெக்ட் டைமுக்கு வந்துட்டார்.

அப்புறம் அவரோட 'தாலாட்டு பாடவா' படத்துல நான் ஹீரோவா நடிச்சது ரொம்ப சந்தோஷமான விஷயம். விஜயகாந்த் சார் ஒரு வெள்ளந்தியான மனிதர். மனசுக்குள்ள தோன்றதை வெளில ஸ்ட்ராங்கா பேசக்கூடியவர். கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு அழகான விளக்கை அவர்கிட்ட கொண்டுபோய் கொடுத்து, அவர் மடிகிட்ட உட்கார்ந்து பேசிட்டுவந்தேன். என்னை அடையாளம் தெரிஞ்சி பேசினார். ஷங்கர்னு அவருக்கு ட்ரீட் பண்ணுற டாக்டர்கிட்ட நானும் அடிக்கடி பேசி, விஜயகாந்த் சார் உடல்நிலையைப் பற்றித் தெரிஞ்சுக்குவேன். அரசியல்ல ரொம்பக் குறுகிய காலத்துல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினவர். அவரோட ஆரோக்கியத்துனால இப்ப சிறு தடங்கல். ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். மக்கள் திலகம் எம்ஜிஆர்-க்குப் பிறகு நிறைய பேருக்கு சாப்பாடு போட்டிருக்கார். நிறைய பேருக்கு உதவி பண்ணியிருக்கார். அது எல்லாமே அவரோட ஆரோக்கியத்தை மீட்டு மறுபடியும் கொண்டுவரும்கிறது என்னோட நம்பிக்கை. விரைவில் அவரை நலமுடன் காண நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.