Published:Updated:

'' 'மாஸ்டர்' டீசரில் மச்சான் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்க 'வேள்பாரி'?!'' - பார்த்திபன் - 23

பார்த்திபன் - விஜய்சேதுபதி

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 23.

Published:Updated:

'' 'மாஸ்டர்' டீசரில் மச்சான் விஜய் சேதுபதி, வெற்றிமாறன் இயக்க 'வேள்பாரி'?!'' - பார்த்திபன் - 23

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் பகுதி 23.

பார்த்திபன் - விஜய்சேதுபதி

''மதுரை பாராளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள் எழுதி விகடனில் வெளிவந்த உலகப்புகழ் பெற்ற நாவலான 'வேள்பாரி'யில் நான் வேள்பாரியாக கற்பனை செய்தது உங்களைத்தான். கபிலராக திரு. நாசர் அவர்களையும், தேக்கனாக திரு. சத்யராஜ் அவர்களையும் இயக்குநராக திரு. வெற்றிமாறன் அவர்களையும் கற்பனை செய்துளேன்... எனது கனவு மெய்ப்படுமா?''

எஸ். டிம்ப்பிள் கணேஷ் சுப்ரமணியம், மதுரை

'' 'வேள்பாரி' நாவல் வர்றதுக்கு முன்னாடியே அதோட போஸ்டர்ஸ்லாம் பார்த்துட்டு அந்த கேரக்டர்ல நான் நடிச்சா எப்படியிருக்கும்னு கற்பனை பண்ணியிருக்கேன். நடிகர்கள் எப்பவுமே இப்படித்தான். நீங்க அந்த கேரெக்டர்ல யாரை வேணா கற்பனை பண்ணலாம். ஆனால், நடிகர்கள் அந்த கேரெக்டர்ல அவங்களை மட்டுமே வெச்சுதான் கற்பனை பண்ணுவாங்க. இப்படித்தான் எல்லா படங்களுக்குமே நான் நடிச்சா எப்படியிருக்கும்னு யோசிச்சுப் பார்ப்பேன். 'சீவலப்பேரி பாண்டி'கூட நான் நடித்திருக்க வேண்டிய படம். சில காரணங்களால் நடக்காமல் போயிடுச்சு.

'பார்த்திபன் காதல்'னு ஒரு படம். நான் கதை எழுதி சுஜாதா அவர்கள் வசனம் எழுதிய படம். இது என்னுடைய இரண்டாவது படமாகவோ, மூன்றாவது படமாகவோ எடுக்கலாம் என இருந்தோம். ஒரு ராஜாவுக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையே நடக்கிற கதை. கிட்டத்தட்ட 'மகதீரா' மாதிரியான ஒரு படம். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. ஆனால், உங்கள் கற்பனை சாத்தியமானதுதான். வெற்றிமாறன் இயக்குனராக, நீங்கள் சொல்பவர்கள் எல்லாம் மற்ற கேரக்டர்களில் நடிக்க எல்லாமே சாத்தியமானதுதான். ஆனால், நாம் யோசிக்காமல் விடும் ஒரு விஷயம் தயாரிப்பாளர்.

கற்பனை பண்ண முடியாத அளவுக்கு ஒரு தயாரிப்பாளர் இருந்தாத்தான் ரசனையோடு இதை படமாக்க முடியும். அது என்னைக்காவது நடக்கும். எல்லா கனவும் பலிக்கும். எல்லா விஷயங்களும் நடக்கும். அது கற்பனையுடைய வீச்சைப் பொருத்ததுதான். அந்த வீச்சைப் பொருத்துதான் அது எவ்வளவு சீக்கிரம் நிறைவேறும் என்பது தெரியும். கற்பனை பெரிதாக பெரிதாக நம்முடைய உழைப்பு இன்னும் பெரிதாக இருக்க வேண்டும். இப்ப என்னுடைய 'இரவின் நிழல்' படம் கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு ஒரு கதை அமைப்பைக்கொண்ட படம். அதை யாரிடம் சொன்னாலும் எப்படிப்பண்ணப்போறீங்க என பிரமிப்போட கேட்கிறார்கள். இந்த கற்பனையும் 2021-ல் நிஜமாகும். அதேப்போல் உங்கள் கற்பனையும் ஒருநாள் நிஜமாகும்.''

விஜய் - விஜய்சேதுபதி
விஜய் - விஜய்சேதுபதி

''உங்களின் ஜூனியர் விஜய்சேதுபதி... சரியா/தவறா?''

ஆதிரை வேணுகோபால், சென்னை

''விகடன் பாரம்பரியம் மிக்கது. ஜூனியர் விகடன் பரபரப்புக்குண்டானது. இந்த கேள்விக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என நினைக்கிறீர்களா?

ஆனந்த விகடன் பல வருடங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட பெரிய பத்திரிகை. ஆனால், ஜூனியர் விகடன் வந்ததுமே பரபரப்பு பற்றிக்கொண்டது. அதன் பக்கங்கள், பத்திரிகையின் சைஸ் இது எல்லாமே மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது.

ஆனால், அது விகடனோ, ஜூனியர் விகடனோ, சீனியரோ, ஜூனியரோ உள்ளடக்கம் என்ன என்பது தான் முக்கியம். இந்த இரண்டு பத்திரிகைகளுமே இப்போது வரை வாசகர்களால் அதிகம் வாசிக்கப்படுகிற, நேசிக்கப்படுகிற பத்திரிகைகள்.

பார்த்திபன் - விஜய்சேதுபதி இதை நிறைய பேர் சொல்லியிருக்காங்க. ஏன் அவரே கூட சொல்வார். 'சார், இதே ரூட்டுதான்... அப்படியே போய்டலாம்' என்பார். இது ரொம்ப சந்தோஷமான ஒரு விஷயம். ஏன்னா, நாம போன ரூட்டுல பல வருடங்கள் கழித்து வேற ஒரு ரூபத்துல இன்னொருத்தர் வரும்போது மக்களால் அது நேசிக்கப்படுது. அது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.

இப்ப 'மாஸ்டர்' டீசர் பாருங்க. மச்சான் வர்றாரு வந்து அப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்குறாரு... செமையா இருக்கு! விஜய் வர சீன் எல்லாமே பரபரப்பா இருக்கு. அதேமாதிரி விஜய்சேதுபதி வரும்போதும் நல்லா இருக்கு. அந்த மாதிரி பார்த்திபனும் நல்லா இருக்கு, விஜய் சேதுபதியும் நல்லா இருக்கு, விஜய்யும் நல்லா இருக்கு. இது எல்லாமே நம்ம ரசிகர்கள் எப்படி ரசிக்கிறாங்கன்றதைப் பொருத்ததுதான்.

ஒரு இண்டஸ்ட்ரிக்குள்ள இந்த மாதிரி நிறைய திறமைசாலிகள் வரணும். ஒரு பார்த்திபனோடு அது அடங்கிடவும் கூடாது, முடங்கிடவும் கூடாது. விஜய் சேதுபதியோடு முடிந்துவிடவும் கூடாது. அது தொடர்ந்துட்டே இருக்கணும், இருக்கும். இன்னும் நிறையப்பேர் வந்துட்டே இருப்பாங்க. பாகவதர் வந்ததுக்குப்பிறகு எம்ஜிஆர் வந்தார். அந்தமாதிரி ஒவ்வொரு காலகட்டத்துக்குள்ளயும் ஒவ்வொரு நடிகர்கள் வருவாங்க. அவங்க வரும்போது ஒரு பரபரப்பை உண்டாக்குவாங்க.

நானும் விஜய் சேதுபதியும் சேர்ந்து இப்ப 'துக்ளக் தர்பார்'னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கோம். நாங்க செட்ல பார்த்தீங்கன்னா காதலர்கள் மாதிரிதான் இருப்போம். அவருக்கு நல்லி எலும்பு ரொம்ப பிடிக்கும். நான் வாங்கிட்டுவந்து அவர் சாப்பிடும்போது கொடுப்பேன். அதேப்போல் அவர் பாயா வாங்கிட்டுவந்து எனக்குக் கொடுப்பார். அந்த மாதிரி எங்களுக்குள்ள ஒரு காதல், கெமிஸ்ட்ரி எல்லாமே இருக்கு. அந்த காலத்து நடிகர்களுக்குள்ள பெரிய பொறாமை இருந்தது, ஒருத்தர் வரும்போது அவரை வளரவிடாமல் இன்னொருத்தர் தடுத்தார்னுலாம் சொல்லுவாங்க. ஆனால், அந்தமாதிரி இப்ப எந்த விஷயங்களும் இல்ல. இப்ப இருக்கற யங்ஸ்டர்ஸ், நான் உள்பட யாருக்குமே அந்த மாதிரியான எண்ணங்கள் கிடையாது. அதனால, விஜய் சேதுபதி இன்னும் நிறைய சாதிக்கணும்கிற ஆசை எனக்கு இருக்கு.''

''பார்த்திபன், சத்யராஜ், கவுண்டமணி, வடிவேலு காம்பினேஷனில் ஒரு படம் உருவானால்... இதை இயக்குனர் பார்த்திபன் சாத்தியமாக்குவாரா?''

தக்‌ஷினா, திருவாரூர்

''நீங்க சொல்ற காம்பினேஷன்ல ஒரு படம் வந்தா மேட்னி ஷோ-லிருந்து நைட் ஷோ வரைக்கும் மக்கள் இடைவிடாமல் சிரிச்சிக்கிட்டேதான் இருப்பாங்க. அப்படி செம காமெடி, கமர்ஷியல் படமாதான் அது இருக்கும். ஆனா, இதுல இருக்க எல்லா காம்பினேஷனும் சாத்தியம். ஒருத்தரைத் தவிர. அவர் இந்த காம்பினேஷனுக்குள்ள வரணும்னு திருவாரூர் தக்‌ஷணமூர்த்திக்கிட்டதான் வேண்டணும். அவர் நினைச்சதான் வடிவேலுவை இந்த காம்பினேஷனுக்குள்ள கொண்டுவரமுடியும். ஆனா, நாளைக்கே சூழல் மாறலாம். மாறினா நல்லாதான் இருக்கும். பார்க்கலாம் 2021-ல என்னவேணா நடக்கலாம்.''

Parthiban
Parthiban

''ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தேன். அருகில் இருந்த இருவர் பேசும் போது 'பார்த்திபன் ஒரு கறுப்புக் கமல்' என்றனர். உங்கள் பேச்சை வைத்து அப்படி சொல்கிறார்கள் என்று புரிந்துகொண்டேன். உங்கள் வித்தியாசமான பேச்சு ரசிக்கவும் வைக்கிறது, சில நேரங்களில் புரியாமலும் போகிறது. இதைப்பற்றி எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா?''

கோ.ராஜசேகர், தர்மபுரி

''தம்பி ராமையா சார் அடிக்கடி இந்த மாதிரி 'கறுப்பு கமல்'னு சொல்லுவார். இப்ப நிறைய பேரு அப்படி சொல்றாங்கன்னு கேட்கும்போதே பெரிய சாதனை பண்ண மாதிரி தோணுது. 'கறுப்பு கமல்'ங்கிற பெயர் எப்படி சாத்தியாச்சுன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்கும். கமல் சார் என்னுடைய பெரிய ஆதர்சம். ஒரு கனவு காதலன். அவருடைய எல்லா ஆக்டிவிட்டீஸையும் நான் கவனிப்பேன். அவரின் கவிதைகளில் இருக்கும் லாவகம். கவிதையா பெண்களைப்பார்க்குறதுல இருக்கிற லாவகம்னு எல்லாத்தையும் ரசிப்பேன். இதெல்லாமே நான் அண்ணாந்து பார்த்துட்டு இருக்க ஒரு விஷயம். சில பேர் உங்கள் எழுத்தில் சுஜாதா தெரிகிறார் என்று சொன்னால் எவ்வளவு சந்தோஷப்படுவோமோ அதுபோலத்தான் 'கறுப்பு கமல்' என்று சொல்லும்போது எனக்கு பயங்கர சந்தோஷமாக இருக்கும்.

அதேநேரம் கமல் சார் பேசுறது புரியலைன்னு சொல்லும்போது எனக்கு கொஞ்சம் நகைப்பாதான் இருக்கும். மூணே முக்கால் வயசு பொண்ணுகிட்டபோய் காதல் பத்தி சொன்னா அந்தப் பொண்ணுக்கு எதுவும் புரியாது. அதே பதிமூணே முக்கால் வயசு பொண்ணுக்கிட்ட சொன்னா ஓரளவுக்கு கொஞ்சம் புரியும். இதுல மூணே முக்காலா இல்ல பதிமூணே முக்காலான்னு நீங்கதான் முடிவு பண்ணணும். ல.ச.ரா-வோட எழுத்துக்களைக்கூட ஆரம்பத்துல புரியலைன்னு சொன்னாங்க. புதுமைப்பித்தனுக்கும் அதையேதான் சொன்னாங்க. ஆனா, இதெல்லாமே போகப்போக புரிய ஆரம்பிச்சது. நமக்குப் புரியலைன்றதுக்காக அவங்க எழுதினதுல அர்த்தம் இல்லைன்னு கிடையாது. நான் படிக்கிற பக்கத்துல 10 வார்த்தைகளுக்கு மேல எனக்குத் புரியாத விஷயம் இருந்ததுன்னா அந்த புத்தகம் எனக்கு ரொம்ப பிடிக்கும். புரியலைன்னா நாம அந்த இடத்தை இன்னும் அடையலைன்னுதான் அர்த்தம். அதை அடைவதற்கான வழி இன்னும் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இப்ப நான் சொல்றது கூட உங்களுக்குப் புரியலைல்ல!''