Published:Updated:

`இறந்தவரின் மாலையை புதுமணத் தம்பதிக்குப் போடுவதுபோல் உள்ளது!’- பார்த்திபன் வேதனை

``மிகப்பெரிய படங்களுக்கே திரையரங்குகளில் 50 சதவீத கூட்டம் இருப்பதில்லை"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`தமிழ் சினிமாவின் சிறந்த படம்’ என்று பலரும் `ஒத்த செருப்பு’ படம் குறித்து தங்கள் பாராட்டை வெளிப்படுத்தியுள்ளனர். `ஒரே நபர் திரை முழுவதும் எப்படி நிரம்பியிருக்கமுடியும்.. மற்ற எந்த கதாபாத்திரமும் திரையில் இல்லை’ என்பது தமிழ் சினிமாவுக்கு புதிது. இத்தகைய முயற்சியை நடிகர் பார்த்திபன் நிகழ்த்திக் காட்டியுள்ளார். பாராட்டுகள் ஒருபுறம் குவிந்தாலும், மற்றொரு புறம், திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், போதுமான காட்சிகள் ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஒத்த செருப்பு படம் குறித்து சென்னையில் படத்தின் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``படம் 20ஆம் தேதிக்கு முன்னர் வெளியானதால் தான் ஆஸ்கருக்கு அனுப்பமுடியும். அதனால் தான் காப்பான் படம் வெளியான போதும் வெளியிட்டேன். பின்னர் நம்ம வீட்டு பிள்ளை படம் வெளியானது.

parthipan
parthipan
``இது ஒரு கலைஞன் கொன்று அவன் பிணத்தின் மீதுள்ள மாலையை புது மண தம்பதிக்கு அணிவிப்பது போல் உள்ளது"

`ஒத்த செருப்பு’ படத்துக்கு இப்போதுதான் கூட்டம் வரத்தொடங்கியுள்ளது. புதிய படம் வருவதால் திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்படுவதுடன், படத்தை எடுத்துவிடுகின்றனர். ஒரே ஒரு காட்சி மட்டும் திரையிடப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது ஒரு கலைஞனை கொன்று அவன் பிணத்தின் மீதுள்ள மாலையை புதுமண தம்பதிக்கு அணிவிப்பது போல் உள்ளது. மிகப்பெரிய படங்களுக்கே திரையரங்குகளில் 50 சதவீத கூட்டம் இருப்பதில்லை. இது தான் என் கடைசிபடமாக இருந்தால் என்ன மாதிரியான முயற்சிகளை மேற்கொள்வேனோ அப்படியான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறேன்.

ஒத்த செருப்பு : சினிமா விமர்சனம்

இரண்டு கோடி ரூபாய்க்கு விளம்பரம் செய்துள்ளேன். பெரிய படங்களுடன் என் படம் வரும்போது, அதைவிட அதிகமாக விளம்பரம் செய்யவேண்டியுள்ளது. பெரிய படங்களுக்கான ஓப்பனிங் ஒத்தசெருப்புக்கு முதல் முன்று நாள் இல்லை. ஒத்த செருப்பு படம் இளைஞர்களால் கவரப்பட்டு, இன்று காலை ஹவுஸ் ஃபுல். அப்படியான ஒரு படத்தை, இன்றைக்கு ஒரு பெரிய படம் வருவதால், 4 காட்சிகளை ஒரு காட்சியாக மாற்றுவதும். அதை நீக்குவதும் வருந்ததக்க விஷயம். அதனால, திரையரங்கு உரிமையாளர்களிடம், `வருமானத்தை கடந்து, காட்சிகளை அதிகரிக்கவேண்டும்’ என கோரிக்கை விடுக்கிறேன். மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்” என்று தெரிவித்தார்.

parthipan
parthipan

இதையடுத்து பேசிய நடிகர் ராதாரவி, ``ஒத்த செருப்பு படம் மிக அருமையான படம். திரையரங்கு முழுவதும் கைதட்டல். அவ்வளவு ரம்மியமான படம். ஒரு இடத்தில் அழ வைத்துவிட்டார் பார்த்திபன். படத்தை பார்த்து விட்டு `நீ விருது வாங்க வேண்டும்’ பார்த்திபனுக்கு குறுந்தகவல் அனுப்பினேன். இப்படி தான் பிசாசு என்ற படம் ஹவுஸ் புல்லாக ஓடியது. மறுநாளே எடுத்து விட்டார்கள். நடிகனுக்கு என்ன இருக்கிறது சம்பளம் வாங்கினேன் போய்விட்ட்டேன். தயவு செய்து ஏ.சி தியேட்டரில் ஓட விடுங்கள். திரையுலகம் உள்ளவரை பார்த்திபன் பேசப்படுவார். தயவு செய்து காலில் விழுந்து கேட்கிறேன். குடும்பத்தை வாழ விடுங்கள், ஏதோ இணையத்தில் வெளியிட்டார்கள் என கூறுகிறார்கள். அவர்கள் யார் என்று தெரியவில்லை தெரிந்தால் அவர்கள் காலிலும் கூட விழுவேன் இது நல்ல படம். இது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் பேசவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு