Published:Updated:

`பட்டாஸ்' டிரெய்லரில் சொல்லப்படும் `அடிமுறை'க்குப் பின்னாலிருக்கும் வரலாறு இதுதான்!

பட்டாஸ்
பட்டாஸ்

தனுஷின் இரட்டைவேடம், கூல் லுக், விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் என எக்கச்சக்க எதிர்பார்ப்பைத் தூண்டிவரும் இப்படத்தில் டிரெய்லர் இன்று (7/1/2020) வெளியானது. அதில் `அடிமுறை' எனும் தற்காப்புக் கலை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் `பட்டாஸ்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது. `புதுப்பேட்டை'க்குப் பிறகு தனுஷ்-சிநேகா இணைந்து நடித்திருக்கிறார்கள். தனுஷின் இரட்டைவேடம், கூல் லுக், விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் என எக்கச்சக்க எதிர்பார்ப்பைத் தூண்டிவரும் இப்படத்தின் டிரெய்லர் இன்று (7/1/2020) வெளியானது. அதில் `அடிமுறை' எனும் தற்காப்புக் கலை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பட்டாஸ்
பட்டாஸ்

கடந்த வருடத்தின் முக்கியமான படமாக `அசுரன்' அமைந்தது. அதைத் தொடர்ந்து பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு கௌதம் இயக்கிய `எனை நோக்கி பாயும் தோட்டா'வும் வெளியானது. வெற்றிமாறனின் `வடசென்னை', `அசுரன்' ஆகிய இரு படங்களையும் பேக் டு பேக் பார்த்ததாலோ என்னவோ, தனுஷை ஒரு வித இறுக்கத்திலே பார்த்துப் பழகிவிட்டோம். திடீரென `பட்டாஸ்' படத்தில் துறு துறு தனுஷைப் பார்க்கவும், சற்று வித்தியாசமாகவே இருந்தது. அப்பா - மகன் கெட்அப் தனுஷுக்குக் கை வந்த கலை. அந்த முதிர்வுக்கேற்ப நடிப்பை அசுரனிலே பார்த்துவிட்டோம். தமிழ் சினிமாவில் சில பல `எக்ஸ்பரிமென்டல்' படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் தனுஷ், தற்போது கமர்ஷியலைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல கமர்ஷியல் படங்களைப் பார்த்தாகிவிட்டதால் `இதைத்தான் நான் ஏற்கெனவே பார்த்துட்டேனே, வேறெதாவது புதுசா பண்ணு' என்கிற மனநிலையில்தான் ரசிகர்கள், கமர்ஷியல் படங்களைப் பார்த்து வருகிறார்கள். இப்படி ஏதாவது புதிதாகத் தேடும் மனநிலையில் ரசிகர்களும், அதை வித்தியாசமாகக் கொடுக்க நினைக்கும் மனநிலையில்தான் இயக்குநர்களும் கமர்ஷியல் சினிமாக்களை அணுகி வருகிறார்கள். இந்நிலையில் `பட்டாஸ்' படத்தில் 'அடிமுறை' எனும் தமிழர்களின் தற்காப்புக் கலை பற்றிப் பேசிப்பட்டிருக்கிறது. இதேபோல்தான் `ஏழாம் அறிவு' படத்தில் போதி தர்மனைப் பற்றிப் பேசியிருந்தார்கள். ரசிகர்களையும் அப்படம் வெகுவாகக் கவர்ந்தது.

`நமக்கு எது நல்லதுங்கறது நம்ம மண்ணுக்குதான் தெரியும்!' பொங்கலுக்கு வரும் தனுஷின் 'பட்டாஸ்' டிரெய்லர்

தமிழர்களைப் படத்தோடு இணைப்பது இதுபோன்ற தொன்மையான தமிழின் பெருமைகள்தாம். இதற்குப் பிறகுதான் 'அடிமுறை' என்பது தமிழர்களின் தற்காப்புக் கலைகளுள் ஒன்று என்றே பலருக்குத் தெரிந்திருக்கும். ஆகையால், கோவையைச் சேர்ந்த அந்தக் கலையின் வல்லுநர்களில் ஒருவரான கோபிகிருஷ்ணா என்பவரை அழைத்துப் பேசினோம்.

"தமிழர்கள் காப்பாற்றத் தவறிய ஒரு கலைதான் அடிமுறை. சிவபெருமானிடமிருந்து பார்வதி கற்றுக்கொண்டார்; அவரிடமிருந்து முருகன், அகத்தியர், போகர், சித்தர்கள் வழியாகத் தமிழர்களிடம் வந்து சேர்ந்ததுதான் இந்தக் கலை என்று நம்பப்படுகிறது. இத்தாலிய பாரம்பர்யமான க்ளாடியஸ் (Gladious), குங்ஃபூ, கராத்தே, கேரளாவில் சொல்லித்தரப்படும் களரி உள்ளிட்ட வர்மக் கலைகள் எல்லாமே இந்த 'அடிமுறை' கலையிலிருந்து வந்ததுதான். பண்டைய காலத்தில் சிறுவர்கள் முதல் போர் புரியும் வீரர்கள் வரை இந்தக் கலையைக் கற்று வைத்திருப்பார்கள். புத்த மதத்தைப் பரப்புவதற்காகத்தான் போதிதருமர் இங்கிருந்து சீன தேசத்துக்குப் பயணித்தார். அந்த சமயத்தில்தான் அவர் இந்தக் கலையை அங்கு உள்ளவர்களுக்குக் கற்பித்தார்.

பட்டாஸ்
பட்டாஸ்

இந்தக் கலை குறித்த பல ஓலைச்சுவடிகள் அழிந்துவிட்டன. சில ஓலைச்சுவடிகள் சீனாவிலும் கேரளாவிலும் இன்னும் இருக்கின்றன. தற்போது இதன் ஆசிரியர்களாக இருக்கும் சிலரே இதை முழுதாகக் கற்றுக்கொள்ளவில்லை. இந்தக் கலையில் சண்டை மட்டுமல்லாமல் தியான முறை, புவியியல் நீரோட்டம் பார்ப்பது, விண்வெளியைப் பற்றித் தெரிந்துகொள்வது எனப் பல வித்தைகள் சொல்லித்தரப்படும். பரதம், சிலம்பம் போன்ற கலைகளுக்கு அரசாங்கம் உதவி செய்கிறார்கள். போட்டியும் நடத்தப்படுகிறது. ஆனால், அடிமுறைக்கு அப்படி ஏதும் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. இளைஞர்கள்தான் முன் வந்து இந்தக் கலையை விரிவுபடுத்த வேண்டும். கடலோரப் பகுதிகளான மார்த்தாண்டம், கன்னியாகுமரி, கேரளா போன்ற இடங்களில் மாணவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். ஊர் முழுக்க இதைக் கொண்டு சேர்ப்பது இளைஞர்களின் கையில்தான் உள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு