Published:Updated:

பட்டத்து அரசன்: ஒரு கிராமத்தையே எதிர்த்து ஆடுகளத்தில் இறங்கும் கபடி குடும்பம் - வென்றதா?

பட்டத்து அரசன்

அவர் கபடி ஆடுகிறேன் என்று முயற்சி செய்யும்போதெல்லாம் 'ஐயா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கங்க' என்று சொல்லத்தோன்றுகிறது. உணர்வுமயமான காட்சிகளிலும் அவரது வழக்கமான நடிப்பு இல்லை.

பட்டத்து அரசன்: ஒரு கிராமத்தையே எதிர்த்து ஆடுகளத்தில் இறங்கும் கபடி குடும்பம் - வென்றதா?

அவர் கபடி ஆடுகிறேன் என்று முயற்சி செய்யும்போதெல்லாம் 'ஐயா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கங்க' என்று சொல்லத்தோன்றுகிறது. உணர்வுமயமான காட்சிகளிலும் அவரது வழக்கமான நடிப்பு இல்லை.

Published:Updated:
பட்டத்து அரசன்
தஞ்சை மாவட்டம் காளையார்கோவில் கிராமத்தில், கபடி விளையாட்டிலும் அதைப் பயிற்று விப்பதிலும் ஜாம்பவானாக பேரும் புகழோடும் விளங்குகிறார் வெத்தலை விவசாயியான 'பொத்தாரி' ராஜ்கிரண். அவருக்கும் அவரின் கூட்டுக் குடும்பத்திற்கு ஏற்படும் ஒரு அவப்பெயரால், அக்குடும்பத்தில் ஒரு மரணம் ஏற்படுகிறது. பொத்தாரியின் பேரன் சின்னதுரை அதர்வா, எப்படி அந்த அவப்பெயரை துடைத்து, அம்மரணத்திற்கு பின்னால் உள்ள சதியை வெளியே கொண்டுவந்தான் என்பதை குடும்ப பாசத்தையும் ஆக்‌ஷனையும் கலந்து சொல்ல முயன்றிருக்கிறது 'பட்டத்து அரசன்'.

ஒரு கிராமத்தில் இரண்டு பெரிய தலைக்கட்டுகள், அவர்களில் ஒரு குடும்பத்தினர் நல்லவர்கள். இன்னொரு குடும்பத்தினர் கெட்டவர்கள். நல்லவரான பொத்தாரிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பிள்ளைகள் இரண்டாம் மனைவியையும் அவருக்கு பிறந்த பிள்ளையையும் ஒதுக்கிவைக்கிறது என்ற பழகிப் போன பழைய கதைக் களத்தை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் சற்குணம், திரைக்கதையிலும் கதாபாத்திர குணாதிசயங்களிலும் அதே பழைய பாணியையே கையாண்டிருக்கிறார். படம் தொடங்கிய ஐந்து நிமிடங்களிலேயே, இறுதிக்காட்சி வரையிலான மொத்த திரைக்கதையையும் ஃப்ளாஷ்பேக் மற்றும் திருப்பங்களுடன் சேர்த்தே நம்மால் யூகித்துவிட முடிகிறது. இதனால், தொடக்கத்திலேயே படத்தின் மீதான நம்பிக்கை தகர்கிறது.

பட்டத்து அரசன்
பட்டத்து அரசன்

முதல் பாதியில், பொத்தாரி, அவரின் கூட்டுக் குடும்பம், அதற்குள் வந்த சண்டை, கிராமம், கிராமங்களுக்கு இடையேயான கபடி போட்டி, பொத்தாரிக்கும் கபடிக்கும் இடையேயான உறவு எனப் படிப்படியாக விரியும் திரைக்கதைக்கு, சின்னதுரையாக வரும் அதர்வாவின் கதாபாத்திரம் எந்த உதவியும் செய்யவில்லை. அவருக்கும் அஷிகா ரங்கநாத்திற்கும் இடையேயான காதல் காட்சிகளும் வசனங்களும் அலுப்பூட்டி சலிப்பூட்டுகின்றன.

இரண்டாம் பாதியில், திரைக்கதை வேகமாக ஓடினாலும், அவை செயற்கைத்தனமாகவும் உணர்ச்சியற்றுமே இருக்கிறது. கூட்டுக் குடும்பத்திற்குள் நடக்கும் குடும்ப சண்டை விவகாரத்தில், பெண் கதாபாத்திரங்களை எங்குமே பயன்படுத்தவே இல்லை. நான்கு பெண் கதாபாத்திரங்களும் பட்டும்படாமலேயே 'தேமே' என ஒவ்வொரு காட்சியிலும் பயணிக்கிறார்கள். ராஜ்கிரண், ராதிகா, ஜெயப்பிரகாஷ் என்று நன்றாக நடிக்கும் நடிகர்கள் இருந்தாலும் 'இந்தக் கதைக்கு என்னத்த நடிச்சு,என்னத்த பண்ண?' என்ற ரீதியிலேயே வந்து வந்து போகிறார்கள். காமெடிக்கு பால சரவணன், சிங்கம்புலி என இருவர் இருந்தும் 'அதெல்லாம் எங்க வேலை இல்லை பாஸ்' என்ற மோடிலேயே இருக்கிறார்கள். அதிலும் இருவரும் வருவதும் தெரியவில்லை; போவதும் தெரியவில்லை. ஊரிலேயே அதர்வாவுக்கு இருக்கும் ஒரே ஒரு நண்பன் பால சரவணன். அதர்வா குடும்பமே சவால் விட்டு, கஷ்டப்பட்டு, நஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, அசிங்கப்பட்டு கிடக்கும் காட்சிகள் பால சரவணனை ஆளையே காணோம்.

பட்டத்து அரசன்
பட்டத்து அரசன்
ராஜ்கிரணின் முதுமை அப்பட்டமாகத் தெரிகிறது. அவர் கபடி ஆடுகிறேன் என்று முயற்சி செய்யும்போதெல்லாம் 'ஐயா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கங்க' என்று சொல்லத்தோன்றுகிறது. உணர்வுமயமான காட்சிகளிலும் அவரது வழக்கமான நடிப்பு இல்லை. இரண்டாம் பாதியில், பொத்தாரியின் கூட்டுக் குடும்பமே ஓர் அணியாகச் சேர்ந்து, கிராமத்திற்கு எதிராகக் களத்தில் இறங்கி விளையாட பயிற்சி எடுக்கிறது. நகைச்சுவையும் குடும்பப் பாசத்தையும் சேர்த்து காட்சியாக்கப்பட்டிருக்க வேண்டிய இந்தப் பகுதியை, நம்பகத்தன்மையே இல்லாத காட்சிகளால் நிறைத்திருக்கிறார்.

இயக்குநர் சற்குணத்தின் படங்களில் வரும் கிராமங்கள் வெகுளியாகவும் எதார்த்தமாகவும் இருப்பது, படத்தோடு ஒன்றுவதற்கு உதவியாக இருக்கும். ஆனால், பட்டத்து அரசனில் வரும் கிராமத்து மக்கள் எந்நேரமும் செயற்கைத்தனத்துடனும் ஆக்‌ரோஷத்துடனுமே இருக்கிறார்கள். கபடியில் கிராமத்திற்கு பெயர் வாங்கிக் கொடுத்ததற்காக பொத்தாரிக்கு சிலை வைத்து கொண்டாடும் கிராமம், அவர்மீது வில்லன் தரப்பு வைக்கும் குற்றச்சாட்டுகளை நம்பி ஊரைவிட்டே ஒதுக்கிவைக்கும் காட்சியில் கொஞ்சம்கூட அழுத்தமில்லை. இதன் விளைவாக வரும் மொத்த இரண்டாம் பாதியே பார்வையாளர்களிடம் இருந்து விலகியே நிற்கிறது.

லாஜிக் மீறல்களும் கேள்விகளும் கொட்டிக் கிடக்கிறது. கபடி அணியில் 70 வயது முதியவர் தொடங்கி, 13 வயது சிறுவன் வரை ஒரே அணியில் விளையாட எப்படி அனுமதிக்கிறார்கள்? அவர்களுடன் ஒரு பெண்ணும் சேர்ந்து எப்படி விளையாடுகிறார்? ஊரே வியந்து கொண்டாடும் கபடி வீரர் ராஜ்கிரண் குடும்பத்தில் ஒரே ஒருவரைத் தவிர யாருக்குமே கபடி விளையாடத் தெரியாமல் போவது எப்படி? கபடி போட்டியில் பெயர்ப்பெற்ற ஒரு கபடி அணியை இவர்கள் எப்படி அரைகுறை பயிற்சியுடன் வெல்கிறார்கள்? மகனின் தற்கொலைக்குப் பின்னால் உள்ள சூழ்ச்சியைப் பற்றி கவலைப்படாமல், எப்படி ஒரு குடும்பம் கபடி விளையாடிக்கொண்டிருக்கிறது? என்று அடிஷனல் பேப்பர் வாங்கும் அளவுக்கு ஆயிரம் கேள்விகள்.

பட்டத்து அரசன்
பட்டத்து அரசன்

லோகநாதன் சீனிவாசனின் ஒளிப்பதிவு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஜிப்ரானின் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையிலும் சொதப்பல். படத்தொகுப்பு பல இடங்களில் தாவித்தாவி ஓடுகிறது. திரைக்கதையிலேயே பிரச்னைகள் இருப்பது, படத்தொகுப்பை இன்னும் மோசமாக்குகிறது.

அம்மன் சிலையில் உள்ள தாலியை எடுத்து ஹீரோயின் கழுத்தில் ஹீரோ கட்டும் காட்சியைப் பார்க்கும்போது நாம தப்பா 30 வருஷத்துக்கு முன்னால் எடுக்கப்பட்ட படம் ஓடும் தியேட்டருக்கு வந்துவிட்டோமா என்ற உணர்வு வருகிறது.

பழகிப் போன ஒரு கிராமத்து கதையை எடுத்துக்கொண்டு, புதுமையே இல்லாத காட்சிகளால் ஒரு அயர்ச்சியான படத்தை உருவாக்கியிருக்கிறது 'பட்டத்து அரசன்' படக்குழு.