`பயணம்' பிரச்னை முதல், `காப்பான்' கதைத் திருட்டு வழக்கு வரை... பட்டுக்கோட்டை பிரபாகர் ஷேரிங்ஸ்

புதின எழுத்தாளராக இருப்பதற்கும், திரைக்கதை ஆசிரியராக இருப்பதற்கும் இடையில் அங்கீகாரமும் வெவ்வேறு பரிமாணங்களில் மாறுகின்றன.
தமிழில் பல்ப் ஃபிக்ஷன் வகை இலக்கியம், குற்றப் பின்னணி நாவல்கள், திரைக்கதை அமைப்பு என எழுத்துலகில் பரவலாக அறியப்படும் எழுத்தாளர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை பிரபாகர். சினிமாவில் அதிகமாகி வரும் கதைத் திருட்டு குற்றச்சாட்டுகள், புதின உலகத்துக்கும் திரையுலகத்துக்கும் இடையேயான வேறுபாடுகள் எனப் பலவற்றைக் பகிர்ந்துகொள்கிறார், பட்டுக்கோட்டை பிரபாகர்.

"எழுத்தாளர்களுக்கான வாசகர் வட்டம் ரொம்ப சுருங்கிப்போயிடுச்சு. முன்னமாதிரியெல்லாம் இல்ல!" எனக் கவலை நிறைந்த குரலில் பேசத் தொடங்கினார், பிரபாகர். 'கண்டேன் காதலை', 'இமைக்கா நொடிகள்', 'காக்கிச் சட்டை', 'காப்பான்' என இதுவரை 25 படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருந்தாலும், இவரது அடையாளம் க்ரைம் நாவல்கள்தாம்.
"சினிமா எழுத்தையும், நாவல் எழுத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. நாவல் ஒரு எழுத்தாளரோட கற்பனை மட்டும்தான். அந்த மொத்தக் கற்பனைக்கும் அவன் மட்டும்தான் உரிமையாளர். ஆனா, சினிமா பல கிராஃப்ட் சேர்ந்த ஒரு கூட்டு முயற்சி. நான் ஒரு கதை எழுதும்போது, பேருந்து வர்ற காட்சியை எழுதுறேன்னா, அதைப் படிக்கிற வாசகர் அவரது வாழ்க்கையில் பார்த்த ஒரு பேருந்தை மனசுல வெச்சுட்டுப் படிப்பார். சினிமா அப்படியில்லை. அந்த இயக்குநர் தன் மனசுல இருக்கிற பேருந்தைத்தான் திரையில் காட்டுவார்.

அந்தப் பேருந்து வர்ற காட்சியை நாவல் எழுதும்போது நான்கைந்து பக்கத்துக்கு வர்ணிக்கலாம். அந்த ரோடு, அங்கே கடை வெச்சிருக்கிற ஒரு கிழவி, அந்தப் பக்கம் மேஞ்சுக்கிட்டிருக்கிற ஆடு மாடுன்னு மொத்தக் காட்சியையும் விவரிக்க எத்தனை பக்கம் வேணும்னாலும் எடுத்துக்கிட்டு, வாசகர்களுக்குக் காட்சிப்படுத்திவிட முடியும். ஆனா, சினிமாவுல அதை சில நொடிக் காட்சியாகக் காட்டணும்." என்றவர்,
"புதின எழுத்தாளராக இருப்பதற்கும், திரைக்கதை ஆசிரியராக இருப்பதற்கும் இடையில் அங்கீகாரமும் வெவ்வேறு பரிமாணங்களில் மாறுகின்றன" என்கிறார்.
"25 ஆண்டுகளுக்கு முன்னாடி எனக்கும் ராஜேஷ்குமாருக்கும் மயிலாப்பூர் மியூசிக் அகாடமியில் ஒரு பாராட்டு விழா நடத்தினாங்க. அப்போ, நாங்க அந்த அகாடமிக்குள் நுழையும்போது, ஒரு பெரிய நடிகருக்கு எவ்வளவு கூட்டம் வருமோ அப்படியொரு கூட்டம். பத்துப் பதினஞ்சு பவுன்சர்கள் எங்களை உள்ளே கூட்டிக்கிட்டு போனாங்க. அப்படி ஒரு வாசகர் வட்டம் எங்களுக்கு இருந்தது. தவிர, கல்யாண வீடு மாதிரியான மக்கள் கூடுற இடங்களுக்குப் போகும்போதும் பலபேர் வந்து என் கதைகளைப் பற்றிப் பேசுவாங்க. இப்போ வாசகர் வட்டம் என்பதே ஒரு சின்னக் குழுவாகிடுச்சு. தனியா செயல்படுது. பொதுவெளிக்கும் வர்றதில்லை. நமக்கான புகழும் அதுக்குள்ளேயே அடங்கிடுச்சு." என்கிறார்.

'இமைக்கா நொடிகள்' படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு, ஒருமுறை தன் முகநூல் பதிவில் திரைத்துறையில் எழுத்தாளர்களுக்கு இருக்கும் அங்கீகாரம் குறித்துப் பேசியிருந்தார் இவர். 'இமைக்கா நொடிகள்' படத்தின் டைட்டிலில் 'வசனம் - பட்டுக்கோட்டை பிரபாகர்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். 'என்னதான் எழுத்தாளர்கள் திரைக்கதை வடிவமைப்பில் பெரும்பங்கு வகித்தாலும், அவர்களுக்கான கிரெடிட்ஸ் வசனத்துக்கு மட்டுமே தரப்படுகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "இது இன்று நேற்று நடப்பதல்ல. சுஜாதா, பாலகுமாரன் திரைப்படங்களுக்காக எழுதிக்கொண்டிருந்த காலத்திலிருந்தே இந்தப் பழக்கமும் இருக்கு. திரைக்கதை விவாதங்களில் நாங்க பெரும்பங்கு வகிக்கிறோம். அதேபோல, வசனம் எழுதும்போதும் சில டிரேட் மார்க் வசனங்களை ஏற்கெனவே இயக்குநர் முடிவு செய்துவைத்திருப்பார். அதைத்தான் எழுதுவோம். இரண்டிலும் இருவரின் பங்கும் இருக்கும்.
ஆனால், டைட்டிலில் மட்டும் வசனத்துக்கு எங்கள் பெயரும், திரைக்கதைக்கு இயக்குநர் பெயரையும் பயன்படுத்தும் வழக்கம் வந்திடுச்சு. ஏன் எங்க பெயரைப் போடலைன்னு கேட்டா, 'அதுதானே பழக்கம்'ன்னு சொல்லிடுவாங்க. இதெல்லாம் சுஜாதாவும், பாலகுமாரனும் கேட்டிருக்கணும். அவங்க அமைதியா இருந்துட்டாங்க." என்பவர், 'இப்பெல்லாம் முன்கூட்டியே அதைச் சொல்லிடுறேன்' என அடுத்த விஷயத்திற்கு வந்தார்.

"தவிர, இப்போ அந்த நிலை கொஞ்சம் மாறியிருக்கு. கே.வி.ஆனந்த் மாதிரி சில இயக்குநர்கள் எழுத்தாளர்களுக்கான மரியாதையைக் கொடுத்திடுறாங்க. அடிப்படையில கே.வி.ஆனந்த் ஒரு பத்திரிகையாளர். அதனால, ஒரு எழுத்தாளரின் முக்கியத்துவம் என்னன்னு அவருக்குத் தெரியும். அவரோட முதல் படத்துல இருந்தே எழுத்தாளர்கள் சுபாவுக்கு டைட்டிலில் அவர் தந்த மரியாதையா இருக்கட்டும், இப்போ 'காப்பான்'ல எனக்குத் தர்ற அங்கீகாரமா இருக்கட்டும்... எல்லாமே 'இப்படித்தான் எல்லோரும் இருக்கணும்'னு சொல்ற அளவுக்கு இருக்கு." என்றார்.
`பயணம்' படம் வெளியானபோது, "என்னுடைய 'இது இந்தியப்படை' நாவலைப் போன்றே படத்தின் கதையும், காட்சியமைப்புகளும் இருக்கிறது" என இயக்குநர் ராதாமோகன் மீது, அதிருப்தி தெரிவித்திருந்தார் பிரபாகர்.
இப்போது, 'காப்பான்' கதை தன்னுடையது என வேறொரு உதவி இயக்குநர் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளையும் அவரிடம் மேற்கோள்காட்டினோம். அதற்குப் பதிலளித்த அவர்,
``வழக்கு தொடுத்தவர் 'காப்பான்' படத்தின் முன்னோட்டத்தில் விவசாயத்தைப் பற்றிப் பேசுனதைப் பார்த்துட்டு, அதேமாதிரி அவர் எழுதியிருந்த கதையை எடுத்துக்கிட்டு நீதிமன்றத்துக்குப் போயிட்டார். பிறகு, நீதிமன்றத்துல ரெண்டு கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லைன்னு தீர்ப்பு வந்தது.
"ஆனா, 'பயணம்' படம் வெளியான பிறகு அந்தப் படத்தைப் பார்த்துட்டு சிலர் எனக்கு போன் பண்ணி, என் நாவல் மாதிரி இருக்குன்னு சொன்னங்க. அதுக்குப் பிறகுதான் நான் அந்தப் படத்தைப் பார்த்துட்டு, படத்துக்கும் என் நாவலுக்கு 60% தொடர்பு இருந்ததால, இயக்குநர் ராதாமோகனைத் தொடர்புகொண்டு பேசினேன். என் நாவலை அவருக்குக் கொடுத்து படிக்கச் சொல்லிட்டு, 'இதை முதல்ல படிங்க. அதுக்குப் பிறகு பேசிக்கலாம்'ன்னு சொன்னேன். அவரும் படிச்சுட்டு, 'ஆமா, ரெண்டு கதையும் ஒரேமாதிரிதான் இருக்கு'ன்னு சொன்னார்.
அதுமட்டுமல்லாம, 'ரெண்டுபேரும் ஒரே மாதிரி கற்பனை பண்ணிட்டோம்'னு ஒப்புக்கிட்டார். நான் அவர்கிட்ட இருந்து எதையும் எதிர்பார்க்கல. 'பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, என்கிட்ட சொன்னதை மக்களுக்கும் சொல்லுங்க'ன்னு சொன்னேன். 'சரி'ன்னு சொன்னவர், அதுக்கான நடவடிக்கை எதையும் எடுக்கல. அதனாலதான் நான் பொதுவெளியில் அந்தத் தகவலைச் சொன்னேன்." என முடித்தார்.