Published:Updated:

பண்ணைப்புரத்தில் பாவலர் சகோதரர்கள்! #AppExclusive

Pavalar Brothers' first visit to Pannaipuram

“பாவலர் குடும்பத்துக்கே ஒரு கலைவெறி கொஞ்சநஞ்மில்ல.. பாவலரின் இசைப்பயணமும், இசையில் சாதித்த தருணமும் இதோ உங்களுக்காக...

பண்ணைப்புரத்தில் பாவலர் சகோதரர்கள்! #AppExclusive

“பாவலர் குடும்பத்துக்கே ஒரு கலைவெறி கொஞ்சநஞ்மில்ல.. பாவலரின் இசைப்பயணமும், இசையில் சாதித்த தருணமும் இதோ உங்களுக்காக...

Published:Updated:
Pavalar Brothers' first visit to Pannaipuram

றத்தாழ 20 வருடங்களுக்கு முன் ஒரு வைராக்கியத்தோடு ஊரைவிட்டுக் கிளம்பியபின், தாங்கள் பிறந்த மண் பண்ணைப்புரம் கிராமத்தையும், கிராம மக்களையும் சந்திக்கத் தன் இசைப் பரிவாரங்களுடன் (இலவசமாய் இசை நிகழ்ச்சி நடத்த) இளையராஜா சகோதரர்கள் வருகிறார்கள் என்பது, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஒரு சென்டிமென்ட்டலான விஷயமாக இருந்தது.

மதுரைக்கு அருகில், உத்தம பாளையத்திலிருந்து தேவாரம் போகிற பாதையில் ஒரு மலைச்சரிவில், பச்சைக் கம்பளம் விரித்து நடுவில் உட்கார்ந்திருப்பது போலிருக்கும் பண்ணைப்புரம் கிராமத்தில்... சரியாக முப்பது வருஷங்களுக்கு முன்பே ஒரு விவசாயக் குடும்பத்தின் தலைமகனுக்கு ‘இசைவெறி' பிடித்தது! கறுப்பாய், ஒடிசலான தேகம். மிகச் சாதாரண உருவம்.

அந்தக் கிராமத்துக் குயில் ஒரு தலைமுறை ஆவேசத்தோடு தெம்மாங்குப் பாடல்களை உயிர்ப்பித்தும் உருவாக்கியும் பாடத் துவங்கியபோது அந்தப் பிரதேசமே பிரமித்துப் போயிருக்கிறது. காரணம், 'சும்மா' இல்லை!

Pavalar Brothers' first visit to Pannaipuram
Pavalar Brothers' first visit to Pannaipuram

அந்தப் பாடல்களின் ஒவ்வொரு வரியிலும், கசந்து போன வாழ்க்கையின் சோகமும் சுகமும் ஈரம் உலராமல் இருந்திருக்கிறது! அதுவரைக்கும் ‘டேனியல் மகன் வரதராஜன்' என்று அறிமுகமாகியிருந்த அந்தப் பாடகர் சுற்றுப் பட்டிகளிலெல்லாம் 'பாட்டுக்கார வரதராஜன்' என்றும், 'பாவலர் அண்ணே' என்றும் பிரியமாய் அழைக்கப்பட்டார். இது போதாதா ஒரு கலைஞனுக்கு? விவசாய வேலைகளில் மனம் ஒட்டாமல் தன்னிச்சையாய்ப் பாடிக் கொண்டு திரிந்த வரதராஜனுக்கு, முதல் இடி - தந்தை காலமானார். தனக்குப் பின்னால் கமலம், பாஸ்கர், பத்மாவதி, ராஜய்யா, அமர்சிங் என்றிருந்த தங்கைகளையும், தம்பிகளையும், பெற்ற அன்னையையும் அணைத்துக் காக்க வேண்டிய குடும்பப் பொறுப்பு தலையில் விழுந்தது. இந்த நெருக்கடியில் தவித்த பாவலரின் வாழ்க்கையில் முதல் திருப்பு முனை, 1958-ம் வருஷம் நடந்த தேவிகுளம் இடைத்தேர்தல்! பாவலரின் குடும்ப நண்பரான மாயாண்டி பாரதி பரவசத்துடன் சொன்னார்: “தேவிகுளம் இடைத்தேர்தல், இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு சர்க்காரைக் காப்பாத்த வேண்டி இழுபறியான நெலமையில நடந்திச்சு. அப்ப நான் 'ஜனசக்தி' பத்திரிகை உதவி ஆசிரியர். தமிழ்நாட்ல இருந்து வி.பி. சிந்தன் தலைமையில் தேவிகுளம் போய்த் தேர்தல் வேலை பார்த்தோம்.

 ஒரு நா இருபத்தெட்டு வயசுப் பையன் ஒருத்தன் நாலு முள வேட்டி கட்டி வந்தான். 'நல்லா பாட்டு படிப்பேன்.... நானே கட்டுன பாட்டு’ன்னான். ‘எங்கே, பாடு கேக்கலாம்'னு சொன்னதும், சட்டுனு பாடினான் பாருங்க! எல்லாரும் அப்படியே அசந்து போயிட்டோம். துணைக்குத் தாளம், தப்ளாக்கட்டை ஒண்ணும் இல்லை. வெறும் குரல்தான். மகுடி ஊதின மாதிரி குரல். என் வாழ்க்கையில இன்னிக்கும் அப்படி ஒரு குரலைக் கேட்டதில்லை. பிரசாரத்துக்கு வரதராஜன் எங்கூட அழைச்சுக்கிட்டு ஜீப்பிலே போனேன். மலைப் பகுதியில் ஒரு உயரமான எடத்தில நின்னு பாடுவான்... ஒரு மைல் சுத்தளவுக்கு அவன் குரல் கேக்கும். பாடற சத்தம் கேட்டதும் ஆணு பொண்ணுக அத்தனையும் எங்கன இருந்தாலும் ஓடி வந்து பெரிய கூட்டம் கூடிரும்.... அவன் பாடின பிறகு நாங்க பேசுவோம்... பாவலரை 'எங்க ஊருக்கு வா, ஒங்க ஊருக்கு வா'ன்னு போட்டி போட்டுக் கூட்டிட்டுப் போவாங்க. “தேவிகுளம் எலெக்ஷன்ல நாங்க ஆதரிச்ச ரோசம்மா புன்னூஸ் ஜெயிச்சுட்டாங்க, எல்லாக் கலைஞர்களுக்கும் இருக்கும் குடும்பக் கஷ்டம் வரதராஜனுக்கு அதிகமாகவே இருந்தது.

'எனக்கு எதுனாச்சும் பண்ணுங்கண்ணே’னு கேட்டான். 'நீ தனியா இருக்கியேடா, ஒரு குழுவா இருந்துச்சுன்னா இன்னும் நல்லாருக்கும்டா'ன்னு நான் சொன்னேன்... 'என் தம்பிகள் இருக்காங்க... நான் பழக்கிப்பிடுவேன்'னான். அதே மாதிரி ஒரு குழு அமைச்சுப்பிட்டான்.

Pavalar Brothers' first visit to Pannaipuram
Pavalar Brothers' first visit to Pannaipuram

“பாஸ்கர்னு பெரிய தம்பி தபேலா வாசிப்பான். ராஜப்பா (இளையராஜா) பெண் குரலில் ரொம்ப நல்லாப் பாடுவான். கொஞ்ச நாள்ல ராஜப்பாவுக்கு ஆண் குரல் வந்திருச்சு.

அப்புறம் பொம்பளே குரலுக்கு என்னாடா பண்ணறதுன்னு யோசிச்சப்பு வரதராஜன், அமர்சிங்கை (கங்கை அமரன்) கொண்டு வந்தான். அமர்சிங்கும் பொம்பளை குரலில் சக்கைப்போடு போட்டான்' தூரத்தில கேக்கறவங்கல்லாம் ஒரு பொம்பளைதான் பாடுதுன்னு நெனைச்சு வந்து ஏமாந்து போவாங்க. அவ்வளவு நல்லா பாடுவானுக. “இந்த அண்ணன் தம்பிங்க போகாத ஊரு கிடையாது. ஒத்தையடிப் பாதையில எல்லாம் ஆர்மோனியப் பெட்டிய தூக்கிட்டுப் போயி பாட்டுப் பாடுவாங்க... “பாவலர் குடும்பத்துக்கே ஒரு கலைவெறி உண்டு.

அவுங்க அப்பா டேனியல், 'அரிச்சந்திரா’ நாடகம் போட்டு அதில அரிச்சந்திரனா நடிப்பாரு. பாவலரோட அம்மா சின்னத்தாயி அம்மாளும் கட்சி நாடகத்தில எல்லாம் நடிச்சிருக்கு. “கச்சேரி வருமானமா எவ்வளவு வந்தாலும் அதை அப்படியே அங்கங்க இருக்கும் தோழர்களுக்குப் பகுத்து கொடுத்துட்டு வெறுங்கையோடதான் வரதராஜன் வீட்டுக்குப் போவான். ரொம்ப இளகின சுபாவம். சின்ன சுடு சொல்கூடத் தாங்கமாட்டான். பூ மாதிரி! கோவம் வந்தாலும் அவன் முன்னாடி யாரும் நிக்க முடியாது. பழகினா உசிருக்குசிரா இருப்பான். கபடமே இல்லாத ஆளு...” என்ற மாயாண்டி பாரதி, பாவலரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான இரண்டாவது திருப்பத்தையும் விவரித்தார்:

Pavalar Brothers' first visit to Pannaipuram
Pavalar Brothers' first visit to Pannaipuram

“முந்தி (1960) திருச்சியில் ஒரு கலெக்டர் இருந்தார். அவர் ஏழை மக்களைக் கொடுமைப்படுத்தினார். அவரை எதிர்த்து நடந்த ஒரு கண்டனக் கூட்டத்துக்குப் பாவலரும் வந்திருந்தாரு.

பண்ணைப்புரத்துக்குத் திரும்பிய கையோடு சும்மா இருக்காம, மனசு கொதிச்சு நேரா அந்த கலெக்டருக்கே 'உன்னைத் தீர்த்துக் கட்டிப்பிடுவோம்’னு ஒரு லெட்டர்லே ரத்தக் கையெழுத்துப் போட்டு போஸ்ட் பண்ணிப்பிட்டான். போஸ்டாபீஸ் முத்திரையைப் பார்த்து நாட்டாமைக்காரர் மூலமா. இதை எழுதினது வரதராஜன்தான்னு கண்டுபிடிச்சு, கலெக்டரைக் கொல்ல சதி பண்ணினதாக கேஸ் போட்டுப்பிட்டாங்க. இதோட தொடர்ச்சியா வரதராஜன் படாதபாடு பட்டுப்பிட்டான். "கட்சி அவரை சஸ்பெண்டு பண்ணுவதுன்னு முடிவெடுத்தது. கச்சேரி எல்லாம் நின்னு போச்சு. பொழப்பு போச்சு. ஒரு பக்கம் அரஸ்ட் வாரண்ட், இன்னொரு பக்கம் கட்சி சஸ்பெண்ட்.

இப்படிப் பல நெருக்கடிகள்லே அந்த அருமையான கலைஞன் தொலைஞ்சு போயிட்டான். “அப்புறம் தம்பிகள் தனித் தனியா செறகு மொளைச்சுப் பறந்து, தங்கள் சொந்த உழைப்பாலும் திறமையாலும் இன்னைக்கு சக்கரவர்த்திகளாகி சொந்த மண்ணுக்கு வருதுக. அதுக என்னைக்கிருந்தாலும் எங்க புள்ளைகள்தான். கஷ்டப் படற மக்களோட பிரதிநிதிகள். எங்க வூட்டுல ஓடியாடித் திரிஞ்ச புள்ளைகளை தூரத்தில நின்னாவது நான் பார்த்துட்டு வரணும்..” என்று உணர்ச்சிவசப்பட்டார் மாயாண்டி பாரதி. அன்று (15.12.85) பண்ணப்புரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நேராக இளையராஜாவின் வீட்டுக்கே சென்றதும் வாசலில் அந்தக் கலைஞர்களின் தாய் சின்னத்தாயி அம்மாள், வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். மெல்லப் பேச்சுக் கொடுத்ததும்...

Pavalar Brothers' first visit to Pannaipuram
Pavalar Brothers' first visit to Pannaipuram

"என் வீட்டுக்காரரு செத்தப்போ, எல்லாம் சின்னச் சின்னப் புள்ளைங்க. மூத்த மகன் வரதராசன்தான் செங்கொடி கட்சில சேந்து ஊரு ஊரா அலைஞ்சு பாட்டுப் படிச்சு இதுகளை ஆளாக்கிச்சு. எம் புருசன் மரிப்புத்துறை எஸ்டேட்டுல கங்காணியா இருந்தவரு.

நல்லா நாடகமெல்லாம் போடுவாரு. எங்க ராசா, அமரு. பாஸ்கரு எல்லாம் மெட்ராசுக்குப் போயும் ரொம்ப கஸ்டப்பட்டுச்சுகளாம். வீட்டுல இருந்த லேடியோ (ரேடியோ) பெட்டிய வித்து நான் ரூபா கொடுத்தனுப்பிச்சேன். எம் புள்ளைக கருத்தான புள்ளைக. எள்ளுருண்டை செஞ்சு குடுத்தாலும் அத மூணா பகுந்துதான் தின்னாங்க. மெட்ராசுக்குப் போன மூணு வருசத்துல என்னை சாப்பாடு பொங்க ராசா கூப்பிட்டுக்கிருச்சு. அங்க பாரதிராசா, வாசுதேவன் (மலேசியா), பாஸ்கர், செல்வராசு எல்லாம் கூடப் பொறந்த பொறப்பா இருக்குங்க.

முந்தி எங்க ராசா (இளையராஜா) எட்டையபுரத்தில் பாட்டு படிச்சப்ப நான் போயி கேட்டுருக்கேன்... அதுக்குப் பின்னாடி நாங்க வளர்ந்த இந்த மண்ணுல இன்னைக்கு எம் புள்ளைக பாடப் போகுதுக...” என்று நெஞ்சு நிறையக் கூறினார். இன்னொரு வீட்டில் மாலை விழாவுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரித்துக் கொண்டிருந்த கங்கை அமரனைச் சந்தித்த போது, “நாங்க பொறந்து வளர்ந்தது இந்த மண்ணுலதான், இந்த மனுசர்களோட தான். நாங்க இங்க இருந்து போயி இருவது வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு... எங்க பக்கத்து ஜனங்களுக்காக ஒரு நிகழ்ச்சி குடுக்கணும்னு நெனைச்சோம்.

“எங்க பெரிய பிரதர் வரதராஜன், எங்களுக்கு அப்பாவா, குருவா எல்லாமுமா இருந்து தொழில் கத்துக் குடுத்தார். அவர் மட்டும் இல்லைன்னா நாங்க யாருமே இல்லை. தமிழ்த் திரையுலகத்துக்கு இளையராஜாங்கற இசைமேதை கிடைச்சிருக்கமாட்டார். நம்ம ஜனங்களை ஒண்ணா சந்திக்கணும். நாங்க எங்க இருந்தாலும் உங்களோட மனிதர்கள் தான்னு நினைவுபடுத்தத்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு...” என்றார்.

Pavalar Brothers' first visit to Pannaipuram
Pavalar Brothers' first visit to Pannaipuram

மதியம் 12 மணியிலிருந்தே லாரிகளும் கார்களும் பண்ணைப்புரத்தை நோக்கிப் பாய்ந்து வந்து குவிந்தன. லேசான தூறல் ஆரம்பித்தும் கூட்டம் திகைத்து நின்றபோது. கைகளைத் தலைக்கு உயர்த்திக் கும்பிட்டவாறே இளையராஜா பிரசன்னமானர். துறுதுறுவென்று அலைபாயும் கண்களுடன் தன் ஊர்ப் பெரியவர்கள், பழைய நண்பர்களை வணங்கி மாலை அணிவித்துக் கெளரவித்தார் திரையுலகின் பின்னணிப் பாடகர்களில் பெரும்பான்மையினர் ஆஜராகியிருந்தனர். பாரதிராஜாவும் தன் அம்மா அப்பவுடன் வந்திருந்தார்.

தன் அன்னை சின்னத்தாயிக்கு மாலை அணிவித்துவிட்டுக் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டதும் பாரதிராஜா, ஜி.கே. வெங்கடேஷ் இவரிடமும் ஆசீர்வாதம் பெற்ற பின், இளையராஜாவே ‘எல்லாரும் ஒண்ணா சேர்ந்து போட்டோ எடுத்துக்கணும்’ என்றதும், எல்லாரும் சிரித்த முகத்தோடு தோள் மீது கைபோட்டு நின்று 'போஸ்’ கொடுத்தார்கள். அருகில் உட்கார்ந்திருந்த பாரதிராஜாவின் தாய் மீனாட்சி அம்மாளைக் கவனித்தோம். கண்ணாடியை மேலேற்றிவிட்டு மகிழ்ச்சிப் பெருக்கில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

Pavalar Brothers' first visit to Pannaipuram
Pavalar Brothers' first visit to Pannaipuram

அமைச்சர் காளிமுத்து பேசும்போது, “இளையராஜா நினைத்திருந்தால் முதல்வரையே இங்கு அழைத்திருக்க முடியும். என்னை அழைத்தமைக்கு மிகுந்த நன்றி. எட்டையபுரம், பாரதியைத் தந்தது பண்ணைப்புரம் பழகு தமிழ்க் கலைஞர்களைத் தந்துள்ளது. இனி வருடா வருடம் ஒரு இசை விழாவை இங்கு பாவலர் பெயரால் எடுக்கவேண்டும், அதற்கு அரசு ஆவண செய்யும்” என்றார். “நாங்க ஓடியாடி விளையாடினது இந்த மண்ணில்தான். நீங்கள் இன்றைக்கு மதிக்கும் கலைஞர்களாக எங்களை வாங்கியவர் பாவலர் வரதராஜன்தான்.

இந்த மண்ணின் கடைக்கோடியில் பிறந்த சிறு ஜீவன் (இளையராஜா) விஸ்வரூபம் எடுத்துள்ளது. ராஜாவிடம் உற்சாகமும் உழைப்பும் சேர்ந்த ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கிறது. நானும் 22 வருஷமாகப் பழகுகிறேன். இந்த ஜீவனுக்குள் இருக்கும் ஆற்றலை என்னால் அளக்க முடியவில்லை.

எங்கள் வெற்றி என்பது ஜீவனுள்ள கிராமத்து ஜனங்களாகிய உங்களின் வெற்றிதான்” என்று பாரதிராஜா உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார். அவர் பேசி முடித்துவிட்டு மேடையை விட்டுக் கீழே வந்து வைரமுத்துவுடன் அமர்ந்து கொண்டார். இளையராஜாவும் கங்கை அமரனும் பாடிக் கொண்டிருக்கும்போது, பாரதிராஜா சொல்லுவதற்கெல்லாம் வைரமுத்து விழுந்து விழுந்து சப்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்!

Pavalar Brothers' first visit to Pannaipuram
Pavalar Brothers' first visit to Pannaipuram

நள்ளிரவுக்குப் பிறகு கச்சேரி முடிந்ததும் கலைந்து சென்ற கூட்டத்தில் இருந்து காதில் விழுந்த சில காமெண்ட்கள்: “அந்த மகராசி சின்னத்தாயி கொஞ்சம் கஸ்டமா பட்டா? ஒரு கைம்பொஞ்சாதியா இருந்து இத்தனை புள்ளைகளையும் வளத்துக் கரை சேத்தா.

இத்தினி சத்தினியா நம்ம கைக்குள்ளேயும் காலுக்குள்ளேயும் திரிஞ்ச புள்ளக, இம்புட்டுப் பெரிய மகராசங்களா வந்திருச்சு காரு என்னா, லாரி என்னா. ஏய் யப்பே. எம்புட்டு ஜனங்க! டவுனுக்குள்ளருந்து சூட்டுப் போட்ட - படிச்சவக அம்புட்டுப் பேரும் வந்திட்டாக.

இனி ஒரு மாத்தைக்கு (மாதத்துக்கு) இங்கிட்டு இதானே பேச்சு!” என்றார் ஒரு பண்ணைப்புரத்துக்காரக் கிழவி. “நம்ப பொறந்த மண்ணை மறக்காம வந்து இப்படித் திருவிழா நடத்திப்புடுச்சுக. நம்ம ஆயுசுல சினிமாவுல பாடுறவுகளை என்னைக்குப் பாக்க முடியும்? இவுங்க அண்ணன் வரதராசன் மட்டும் இன்னைக்கு இருந்தா அந்த மனுசன் பட்ட செரமத்துக்கெல்லாம் பரிகாரம் கெடச்சிருக்கும்..”

“ஏலேய், இந்த ஊரு ரோடு கெடக்கிற கெடப்புக்கு இந்தப் பக்கம் யாரு வருவாங்க? ராஜா அண்ணன் தலையெடுத்து, இன்னைக்கு 'நாங்க பண்ணேப்புரம்’னு நெஞ்சத தூக்கிச் சொல்ற மாதிரி பண்ணிப்புட்டாரு. இது போதும்டா. இனி என்னடா வேணும்!” என்று இளவட்டங்களில் ஒன்று, சப்தம் போட்ட குரலில் பேசிக்கொண்டே நடந்தது.

- ஏ. செளந்தரபாண்டியன்

படங்கள் - கனகசபாபதி

(29.12.1985 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து....)