Published:Updated:

`திரை முழுக்க வாட்டர்மார்க்; படம் தெளிவாயிருக்காது!'- சீனா திரைத்துறையை வரவேற்கும் பி.சி.ஶ்ரீராம்

தமிழ் சினிமாவுக்கு இன்றுவரை பெரும் பிரச்னையாக இருப்பது `பைரஸி'. எப்பேற்பட்ட படமாக இருந்தாலும், திரையிடப்பட்ட சில மணி நேரத்திலோ அல்லது படம் வரும் முன்போ அது இணையத்தில் வெளியாகிவிடுகிறது. இது தயாரிப்பாளர்களுக்கு பெரும் சிக்கலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது.

PC Sreeram
PC Sreeram

இந்நிலையில் `பைரஸி'யை ஒழிக்க, சீனா புது டெக்னாலஜி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் தனித்துவம் கொண்ட ஒளிப்பதிவாளரான பி.சி.ஶ்ரீராம், அந்த டெக்னாலஜியின் செயல்முறை வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்து, அத்திட்டத்தை வரவேற்றுள்ளார்.

Piracy Blocker
Piracy Blocker

எவ்வளவுதான் காதும் காதும் வைத்ததுபோல் படத்தின் வேலைகளை முடித்தாலும் அதன் டீசரில் ஆரம்பித்து டிரெய்லர், பாடல்கள், படங்கள், போட்டோக்கள் என அதிகாரபூர்வமாக வெளிவரும் முன்னே இணையத்தில் படத்தின் சகலமும் வந்துவிடுகிறது. சின்ன பட்ஜெட் படங்களில் ஆரம்பித்து பெரிய பட்ஜெட் படங்கள் வரை எல்லா ரக படங்களுக்கும் இதே பிரச்னைதான். விஷாலில் ஆரம்பித்து பலரும் இதை எதிர்த்து போராடி வந்தாலும் எல்லா வகை புதுப் படங்களும் உடனுக்குடன் இணையத்தில் வெளியாகத்தான் செய்கிறது. நீதிமன்றத்தில் இது சார்ந்த வழக்குகள் இன்னும் நிலுவையில்தான் உள்ளன. சூப்பர் ஹீரோக்களைப்போல் பிடிக்க முடியாத நிலையில்தான் பைரஸி இயங்கிவருகிறது.

இந்த நிலையில், திருட்டுத்தனமாக படம் பிடிப்பதை ஒழிக்க, சீனா `Infrared'யைப் பயன்படுத்தி புதிய டெக்னாலஜி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டெக்னாலஜியின் சாரம்சம் என்னவென்றால், படத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் வெறும் கண்களில் படத்தைப் பார்க்கும்போது எந்தவித தொந்தரவும், திரையில் எழுத்துகளும் தோன்றாமலும் இருக்கும். இதுவே ஓடிக்கொண்டிருக்கும் படத்தை கேமராவில் ஷூட் செய்தால், பெரிய எழும்புக்கூடு மண்டையோடு, `பைரஸி ப்ளாக்கர்' என்று பெரிய வாட்டர்மார்க் திரை முழுக்கத் தோன்றுவதுபோல் உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் திரையிடப்படும் படம் தெளிவாகத் தெரியாது. இப்படிப்பட்ட டெக்னாலஜிதான் சீனாவில் கொண்டுவரப்பட்டுள்ளது.

சீனா திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், `இதனால் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும், பைரஸியும் ஒழியும்' எனத் தெரிவித்துள்ளார்கள். இப்படியான டெக்னாலஜியைச் சுருங்கச் சொல்லும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது சீனா திரைத்துறை. அதை, `பைரஸியை ஒழிக்க புது வழி' என்று கேப்ஷனிட்டுப் பகிர்ந்துள்ளார் பி.சி.ஶ்ரீராம்.