Election bannerElection banner
Published:Updated:

தொலைந்த பால்யம், தோற்ற காதல், வரலாறான வாழ்வு! - மைக்கேல் ஜாக்ஸன் நினைவுகள் #MJ

Michael Jackson
Michael Jackson

"இவரது இறப்பில் பல சர்ச்சைகள் இருப்பினும், அவற்றில் பல முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே உள்ளன!" - மைக்கேல் ஜாக்ஸன் நினைவுநாள்

மனித வாழ்வில் இசையின் உறவு மிகவும் நெருக்கமானது. மகிழ்ச்சி, கொண்டாட்டம், கவலை என ஒவ்வோர் உணர்ச்சிகளையும் தாண்டி அரசியல், புரட்சி வரை மக்களின் மனதில் ஆளமாகப் பதிவது இசைதான். இசை என்பது மனதை மயக்கும் ஒரு முகமில்லா தந்திரக்காரனின் மாயாஜாலம். ஒவ்வோர் இசையமைப்பாளரிடமும் உள்ள தனித்திறமையே அதன் ருசியைக் காலத்திற்கேற்ப மேலும் மேலும் கூட்டுகிறது. சிலரது இசையானது காலம் கடந்தும் ஒவ்வொருமுறையும் சலிக்காத புதுவித உணர்வைத் தரும். அப்படி காலத்தையும் கண்டத்தையும் கடந்து 80'ஸ், 90'ஸ், 20'ஸ் வரை அனைவராலும் இன்றும் ஒருவரது இசையானது பித்துப்பிடித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது என்றால், அது மைக்கேல் ஜாக்ஸனின் இசைதான்!

Michael Jackson
Michael Jackson

10 ஆண்டுகளுக்கு முன்னர், ஜூன் 25, 2009-ம் ஆண்டு சரியாக மாலை 3:15 மணியளவில் இவரது இறப்புச் செய்தியைக் கேட்டு மொத்த இசை உலகமும் ஸ்தம்பித்து போனது. அன்று பட்டிதொட்டியெங்குமுள்ள ஊடகங்களின் பிரேக்கிங் நியூஸ் இவர்தான். அடுத்த நாளின் நாளிதழ்களில் தலைப்புச் செய்தியும் இவர்தான். சிறுவயதில் தனது பால்யத்தைத் தொலைத்து, பின்னர் தனது இசையில் கொடிகட்டிப் பறந்த காலத்தில் புகழும் சர்ச்சைகளும் ஆடும் சதுரங்க வேட்டையில் சிக்கினாா். இறுதிவரை புகழ் தரும் போதையை அனுபவிக்காமலேயே வாழ்ந்தவர்தான், மைக்கேல் ஜாக்ஸன்.

1960-களில் வெள்ளையின ஆதிக்கம் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் ஒரு கறுப்பினத் தந்தை, தன் மகன் மீது கொண்டிருக்கும் கண்டிபு என்பது, எந்த விதத்திலும் தன் மகன் வெள்ளையின ஆதிக்கத்திற்கு இரையாகிவிடக் கூடாது என்பதால் மிகவும் அதிகமாகவே இருக்கும். ஜாக்ஸனின் தந்தை ஜோஸப்பும் அப்படித்தான். இரவு 12 மணிக்கு ஒரு கச்சேரி முடிகிறது என்றால், வேறு ஓர் ஊரில் அடுத்த கச்சேரிக்கான நேரம் 3 மணியாக இருக்கும். இப்படி ஓய்வு என்னும் சொல்லை அகராதியில்கூட காட்டாமல் மகனை வளர்த்த கண்டிப்பான காட்ஃபாதராக இருந்தாா். அப்போதிருந்த அனைத்துத் துறைகளிலும் வெள்ளையின ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது. இசையில் மட்டும்தான் கறுப்பினர்களால் காலூன்ற முடிந்தது. தான் ஒரு மிகச்சிறந்த இசைக் கலைஞன் ஆகவேண்டுமென்ற கனவிற்கு முட்டுக்கட்டையாக இருந்தனர், ஜோஸப்பின் பெற்றோா். மைக்கேல் ஜாக்ஸனின் குடும்பத்தில் மொத்தம் 10 குழந்தைகள். இருப்பினும் கடைக்குட்டியான மைக்கேல் ஜாக்ஸனை மிகவும் கண்டிப்புடனே வளர்த்து வந்தார்கள். அதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பல நேரங்களில் தனிமையை உணர்ந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறாா், மைக்கேல் ஜாக்ஸன்.

Michael Jackson
Michael Jackson

தனது ஐந்து வயதில் தந்தையின் 'ஜாக்ஸன் ப்ரதர்ஸ்' இசைக்குழுவில் மேடை ஏறினாா். சகோதரர்களுடன் இணைந்து உருவாக்கிய 'ஜாக்ஸன் 5' இசைக்குழுவில் அனைவராலும் அதிகமாகக் கவனிக்கப்பட்டார். 1963 முதல் 1968 வரை இந்த `ஜாக்ஸன் 5' இசைக்குழு அதிக இசைக் கச்சேரிகளைப் பல்வேறு இடங்களில் அரங்கேற்றியது. `ஜாக்ஸன் 5'யின் புகழ் கொடிகட்டிப் பறந்தது, பல விருதுகளையும் வென்றது.

இனப்போரால் தங்களை அடிமைப்படுத்தி வந்தவர்களை தனது இசையால் அடிமைப்படுத்தினாா், மைக்கேல் ஜாக்ஸன். அவர் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக செல்வத்தில் தழைக்கத் தொடங்கியது. `ஜாக்ஸன் 5' குழுவில் ஒவ்வொரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்கினாலும், கடைக்குட்டி ஜாக்ஸன் மீது தனி கவனம் இருந்து வந்தது. பிறகு, பாப் இசையில் கோலோச்சிய டயானா ராஸ், மைக்கேல் ஜாக்ஸனுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்த, உலகளவில் கவனம் பெறத் தொடங்கினாா்கள் இருவரும். கூடவே இவர்கள் நட்பும் வலுப்பெற்றது.

`ஜாக்ஸன் 5' குழுவிலிருந்து விலகி, தனியாக தனது முதல் ஆல்பமான `சோலோ'வை வெளியிட்டாா். பிறகு வெளியான `காட் டு பி தேர்' , `பென்' ஆகிய ஆல்பங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. கூடவே தனது சகோதரர்களுடன் இணைந்து ஆல்பங்கள் செய்துவந்தாலும் மக்கள் மைக்கேலின் தனி ஆல்பங்களுக்கே அதிக ஈடுபாடு காட்டினாகள். `ஜாக்ஸன் 5' குழுவில் ஜாக்ஸனின் சகோதரிகளும் இணைந்த பின்னர் அக்குழு 'தி ஜாக்ஸன்ஸ்' எனப் பெயர் மாற்றம் பெற்று செயல்படத் தொடங்கியது. பிறகு, நான்கு ஆண்டுகள் கழித்து `ஆஃப் தி வால்' ஆல்பம் வெளியானது. சிறுவனாக உலகமெங்கும் தனது இசையால் பரவசப்படுத்தி வந்த மைக்கேல் ஜாக்ஸன் அப்போது வாலிபனாகி இருந்தாா். அதில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் ஹிட்டடித்தது, அமெரிக்க இசை வரலாற்றில் அதுவே முதல் முறை.

Michael Jackson
Michael Jackson

1982-ம் ஆண்டு வெளியான `கில்லர்' என்ற ஆல்பம் மைக்கேல் ஜாக்ஸனின் மாஸ்டர் பீஸ். அதில் இடம்பெற்ற `பில்லி ஜீன்' பாடல்தான் எம் டிவி-யில் ஒளிபரப்பான முதல் கறுப்பினப் பாடகரின் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆல்பத்திற்காக 7 கிராமி விருதுகளை வென்றாா், மைக்கேல் ஜாக்ஸன். இதன் மூலம் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் அதிக கவனம் பெற்றார். ஒலி அமைப்பிலும், காட்சியமைப்பிலும் ஒவ்வொரு முறையும் புதுமை காட்டி தன்னை நிரூபித்துக்கொண்டே வந்தார்.

அடுத்தடுத்து தனது லைவ் நிகழ்ச்சிகளுக்கு மவுசு ஏற ஏற, தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாா். தனது `கில்லர்' ஆல்பத்தின் நிகழ்ச்சியில் ஒரு புதுவிதமான நடன அசைவைச் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினாா். அந்த நடன அசைவுதான் `மூன் வாக்' என்று பெயர் பெற்றது. அதற்காக மைக்கேல் ஜாக்ஸனிற்குப் பிரத்யேக ஷூவையே வடிவமைத்தாா்கள். இப்படித் தன் கடின உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் புகழின் உச்சிக்குச் சென்ற மைக்கேல் ஜாக்ஸன், `விடிலிகோ' என்ற நோயால் தாக்கப்பட்டாா். இதனால் உடல் முழுவதும் வெள்ளை நிறம் திட்டுத் திட்டாகப் பரவத் தொடங்கியது. இதைச் சரிசெய்ய தன்னை முழுவதுமாக வெள்ளையாக மாற்றிக்கொள்ள ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாா். சிறுவயதில் ஜாக்ஸனின் மூக்கு பெரிதாக இருப்பதாகக் கூறி, அவரது தந்தை அடிக்கடி கேலி செய்வாராம். அதையும் அறுவை சிகிச்சை செய்து சிறியதாக மாற்றிக்கொண்டாா்.

Michael Jackson
Michael Jackson

பிறகு அடுத்தடுத்து ஏற்பட்ட சில விபத்துகள் காரணமாகவும் சில நடன அசைவுகளை மேற்கொள்ள தனது உடல் எடையைக் குறைப்பதற்காகவும் பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டாா். அவை ஏற்படுத்தும் பின்விளைவுகளைக் கட்டுப்படுத்த பல மாத்திரைகளை எடுத்துக்கொண்டாா்.

இத்தனை சம்பவங்களுக்குப் பிறகு வெளியான `பேட்', `டேஞ்சரஸ்', `ப்ளாக் ஆர் வொயிட்' ஆல்பங்களில் பல்வேறு அரசியல்களைப் பேசத் தொடங்கினாா். தனது இசையாலும், நடனத்தாலும் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்தைக் காட்டிய மைக்கேல் ஜாக்ஸனின் இயல்பு வாழ்க்கையானது சோகங்கள் நிறைந்ததாகவே இருந்தது. பால்யத்தின் சுகத்தை அனுபவிக்காமலேயே வாழ்ந்த மைக்கேல் ஜாக்ஸன், தன்னுடைய 34-வது வயதில் இளவரசர் எல்விஸ் ப்ரெஸ்லியின் மகள் லிசா ப்ரெஸ்லியை மணந்தார். ஆனால், அவர்களது திருமண வாழ்க்கை இரண்டு ஆண்டுகள்கூட நீடிக்கவில்லை. பின்னர் தனது செவிலியரான டெர்பி மோவியைத் திருமணம் செய்துகொண்டாா். இவர்களுக்கு ஓர் ஆண் மற்றும் பெண் குழந்தை. மகனுக்கு மைக்கேல் ஜோசப் ஜாக்ஸன் ஜூனியர் (Michael Joseph "Prince" Jackson Jr.) என தனது தந்தையின் பெயரையே சூட்டினாா். டெர்பியுடனான திருமண வாழ்க்கையும் அதிக நாள்கள் நீடிக்கவில்லை.

Michael Jackson
Michael Jackson

சிறு வயதில் தனது குழந்தைப் பருவத்தின் சுகத்தை இழந்த மைக்கேல் ஜாக்ஸன், `நெவர்லேண்ட்' என்ற தனது கனவு மாளிகையைக் கட்டினார். அதில் குழந்தைகள் விளையாட அனுமதித்தாா். மைக்கேல் ஜாக்ஸனுக்குக் குழந்தைகளைப் போலவே மிருகங்களும் பிடிக்கும். `பபூள்' எனும் சிம்பன்சியை வளர்த்து வந்தாா்.

தொட்டதெல்லாம் பிரச்னைகளாக மாறிய ஜாக்ஸனின் வாழ்க்கையில் கனவு மாளிகையும் அப்படியே ஆனது! இவரது `நெவர்லேண்'டிற்கு வரும் குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குகிறாா் எனக் குற்றச்சாட்டுகள் எழ, அதற்குப் பல மில்லியன் டாலர்களை அபராதமாகக் கட்டினாா். பெரும் கடன்களுக்கு ஆளானார். கடன்களுக்காகத் தனது கனவுக் கோட்டையான நெவர்லேண்டை விற்றார். சொந்தமான பிற சொத்துகளையும் ஏலம் விட்டாா். மார்வெல் காமிக்ஸின் புகழ்பெற்ற கதாபாத்திரமான ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது மைக்கேல் ஜாக்ஸனின் ஆசை. அதற்காக மார்வெல் நிறுவனத்தையேகூட வாங்க நினைத்த மைக்கேல்லின் கனவு நிறைவேறவில்லை

Michael Jackson
Michael Jackson

சோகமும் வன்மமும் சூழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த மைக்கேல் ஜாக்ஸன் தனது மன உளைச்சலைக் கட்டுப்படுத்த அதிகப்படியான போதை மருந்துகளை எடுக்கத் தொடங்கினாா். தொடர் சர்ச்சைகள், கடன்கள் எனப் பல இன்னல்களில் சிக்கிக்கொண்டிருந்த மைக்கேல் ஜாக்ஸன் 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும் மேடையேற முடிவெடுத்தாா். மைக்கேல் ஜாக்ஸன் மீண்டும் மேடையேறுகிறார் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான டிக்கெட்டுகள் உலகம் முழுக்க சரசரவென விற்றுத் தீர்த்தது. ஆனால், ரசிகர்களின் எதிர்பாா்ப்பு பெரும் சோகத்தில் முடிந்தது. ஆம், பயிற்சியின்போதுதான் அதிகமாக எடுத்துக்கொண்ட போதை மருந்தின் காரணமாக, மைக்கேல் ஜாக்ஸன் மரணமடைந்தார். அவருக்கு அப்போது வயது ஐம்பது.

இவரது இறப்பில் பல சர்ச்சைகள் இருப்பினும், அவற்றில் பல முடிச்சுகள் அவிழ்கப்படாமலேயே உள்ளன. மைக்கேலின் டாக்டரான கான்ரேட் மூரே ஏன் அதிக அளவு மருத்தைச் செலுத்தினார். மைக்கேல் இரவு முழுவதும் தனது அறையில் மயங்கிய நிலையில் இருந்தபோதும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாததற்குக் காரணம் என்ன... இப்படிப் பல கேள்விகள் இருக்கின்றன.

Michael Jackson
Michael Jackson

பால்யத்தைத் தொலைத்து, காதலில் தோற்று நீங்கா சர்ச்சைகளில் சிக்கி ஒரு பரமபத ஆட்டத்தில் தன்னைச் சிக்கவைத்துக் கொண்ட மைக்கேல் ஜாக்ஸன், கடின உழைப்பாலும், இசையின் மீது கொண்டிருந்த தீராக் காதலாலும் இன்றும் மக்கள் மனதில் தினசரி இரவுகளில் மூன்வாக் ஆடிக்கொண்டுதான் இருக்கிறாா்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு