Published:Updated:

ஸ்ருதி முதல் சமந்தா வரை ரவிவர்மாவின் ஓவிய வெர்ஷன்! ஜி.வெங்கட்ராம் போட்டோஷுட் கதை

ரவிவர்மா ஓவியங்களைப் புகைப்படங்களாக மறு உருவாக்கம் செய்து, அதற்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார் புகைப்படக்கலைஞர் ஜி. வெங்கட்ராம்.

ஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களும் அவரின் ஓவியப் பெண்களும் தனித்துவம்கொண்டவை. பேரமைதி முகமும், பேசும் கண்களுமாயிருக்கும் அவரது ஓவியப் பெண்களின் அழகில் லயிப்பவர்கள் பலர். தனித்துவமிக்க இந்த ஓவியங்களை, பெண்களை மாடலாகக்கொண்டு, புகைப்படங்களாய் மறுஉருவாக்கம் செய்து உயிர் கொடுத்திருக்கிறார் புகைப்படக்கலைஞர் ஜி.வெங்கட்ராம்.

அடுத்தடுத்த போட்டோக்களுக்கு ஸ்லைடு செய்யவும்!

சமீபத்தில், குஷ்பூவை வைத்து ரவி வர்மாவின் ஓவியப் பெண்ணாக இவர் எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது. இதை அடிப்படையாகக்கொண்டு, சுஹாசினி மணிரத்னம் பெண்கள் முன்னேற்றத்திற்காக நடத்தும் `நாம்' ட்ரஸ்ட்டின் நிதிக்காக, ரவிவர்மாவின் 12 தலைசிறந்த ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து நதியா, ஷோபனா, குஷ்பூ, லிசி, ரம்யா கிருஷ்ணன், ஷ்ருதிஹாசன், சமந்தா, ஐஷ்வர்யா ராஜேஷ், பிரியதர்ஷினி கோவிந்த் எனப் பலக் கலைஞர்களை மாடலாகக்கொண்டு மீண்டும் புகைப்படங்களாக மறு உருவாக்கம் செய்துள்ளனர். இந்தப் புகைப்படங்களின் தொகுப்பாக இந்த வருடத்திற்கான காலண்டர் வெளியீட்டு விழா, ஒரு மாலைப் பொழுதில் சென்னையில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜிவ்மேனன், கர்னாடக இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புகைப்படக்கலைஞர் ஜி.வெங்கட்ராம்
புகைப்படக்கலைஞர் ஜி.வெங்கட்ராம்

நிகழ்ச்சியில் ஓவியர் ரவிவர்மா குறித்தும், அவற்றைப் புகைப்படங்களாக மாற்றும்போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்தும் புகைப்படக்கலைஞர் ஜி.வெங்கட்ராம் பகிர்ந்துகொண்டார்.

``ஒரு நல்ல புகைப்படம் எடுக்க முக்கியமானது ஒளியும், தொழில்நுட்ப வித்தையும்தான். இதை மிகச் சரியான விதத்துல ஓவியர் ராஜா ரவிவர்மா கையாண்ட விதம், எப்பவுமே எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிற விஷயம்தான். இந்த நுட்பத்தை, அவர் ஓவியத்துல பயன்படுத்தி புகைப்படங்களா பரிசோதிச்சுப் பார்க்கலாம்னு எண்ணம் வந்ததும் முதல்ல குஷ்பூவை மாடலா வெச்சு போட்டோஷூட் பண்ணோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது.

இதைப் பார்த்து சுஹாசினி மணிரத்னம் அவங்களோட `நாம்' ஃபவுண்டேஷனுக்காக ரவி வர்மாவுடைய ஓவியப்பெண்களை மாடலா வெச்சு ஃபோட்டோஷூட் பண்ணலாம்னு சொன்னாங்க. இந்த ஐடியா எனக்கும் பிடிச்சிருந்தது. ரவிவர்மாவுடைய தலைசிறந்த 12 ஓவியங்களைத் தேர்ந்தெடுத்து அதற்கான மாடல் பெண்களையும் தேர்ந்தெடுத்து ஷூட் பண்ணோம். ஓவியப் பெண்களுக்கான உடைகள், நகைகள், மேக்கப்னு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து பண்ணோம். ஷூட் முடியிற வரை சுஹாசினி கூடவே இருந்தது பெரிய பலம். இப்போ அதற்கான அவுட்புட் எல்லாருக்கும் பிடிச்ச விதமா வந்திருக்கறதுல சந்தோஷம்'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரை தொடர்ந்து பேசிய சுஹாசினி மணிரத்னம், ``ரவி வர்மாவுடைய ஓவியப்பெண்களை கவனிச்சீங்கன்னா அவங்களுக்குள்ள எப்பவுமே ஒரு விஷயத்தையோ, இயற்கையையோ ரசிச்சு மெய்மறந்து மென் சோகத்துலயும் மகிழ்ச்சியிலையும் இருப்பாங்க. அந்த ஓவியங்களை மறு உருவாக்கம் செய்றது பெருமையான விஷயம். எங்களுடைய `நாம்' அமைப்பிலிருந்து இரண்டு பெண்கள் ரவிவர்மாவுடைய ஓவியத்துக்கு மாடலா இருக்கிறது எனக்கு நெகிழ்ச்சியா இருக்கு. ஐஷ்வர்யா ராஜேஷ், `ரவிவர்மா ஓவியங்களுக்கு என்னை மாடலா தேர்ந்தெடுத்ததுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும்'னு சொன்னாங்க. இந்த ஷூட்ல மறக்கமுடியாதது டான்ஸர் ஷோபனாவோட ஷூட்தான்."

விழாவின் போது மேடையில்
விழாவின் போது மேடையில்

``ஷோபனா கையில வெச்சிருக்க குழந்தை பயங்கரச் சுட்டி. யார்கிட்டயும் போகாது. மொபைல்ல வீடியோல்லாம் போட்டுக் காட்டி, எங்க வழிக்குக் கொண்டு வந்து, அந்தக் குழந்தைக்கு வேஷ்டி கட்டி, கொலுசு போட்டுவிட்டு ஷோபனா கையில தர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு. அந்தப் போட்டோவுல இருக்கிற நாயும் நிறைய தேடுதல்களுக்குப் பிறகுதான் அசல் ஓவியத்துல இருக்கிற மாதிரி கிடைச்சது. ஆனா, அதைப் போட்டோஷூட் நடந்த ஸ்பாட்டுக்குக் கூட்டிட்டு வர முடியாத சூழல் இருந்ததால, தனியா அதைப் புகைப்படம் எடுத்து போட்டோல பேஸ்ட் பண்ணிட்டோம். இந்த மாதிரி நிறைய மறக்க முடியாத சவால்கள், சுவாரஸ்யமான அனுபவங்கள் ஒவ்வொரு போட்டோஷூட் பின்னாடியும் இருக்கு போல" என்றார் சிரித்துக்கொண்டே.

தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ``இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கறது ரொம்பவே சந்தோஷம். நிச்சயம் இது வரவேற்கக் கூடிய ஒரு விஷயம். இதுக்குப் பின்னாடி என்ன மாதிரியான சவால்கள் இருந்தது, இதற்கான நோக்கம் என்னங்கிறதை தெளிவா சொல்லியிருக்காங்க. இது மூலமா பலப் பெண்களுடைய வாழ்க்கைக்கு துணை புரியும்ங்கறது நல்ல விஷயம். "

விழாவில்...
விழாவில்...

``இந்த 12 ஓவியங்கள்ல கையில சித்தார் வெச்சிருக்க பெண்ணும், சுஹாசினி பகிர்ந்துக்கிட்ட ஷோபனா-குழந்தை ஓவியமும்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. அந்த ஓவியத்துல இருக்கிற தாயோட கண்ணுல தேங்கியிருக்க தாய்மையும் பாசமும் அற்புதமா புகைப்படத்துல ஷோபனா கொண்டு வந்திருக்காங்க. இந்த ரெண்டு படங்கள் மட்டுமல்ல, எல்லாப் புகைப்படங்களுமே ஓவியத்துக்கு இணையா ரொம்ப அருமையா வந்திருக்கு" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு