கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

“தனித்தன்மையோடு உள்ளவங்கதான் கவனிக்கப்படுவாங்க!”

எஸ்.ராமச்சந்திரன் போட்டோகிராஃபி
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ராமச்சந்திரன் போட்டோகிராஃபி

பிரபலங்களின் மீதான ஈர்ப்பு இவருக்கு இல்லை என்றாலும், ஒரு பிரபலத்துடனான அனுபவத்தை பாரமாக மனதில் சுமந்துகொண்டிருக்கிறார்.

எஸ்.ராமச்சந்திரன்... உலக நாடுகள் கொண்டாடும் புகைப்படக் கலைஞர். சர்வதேச அளவில் டாப் மாடல்கள் அத்தனை பேருக்கும் பரிச்சயமானவர். வோக், ப்ளேபாய், மாக்ஸிம் உள்ளிட்ட பிரபல இதழ்களில் இவர் எடுக்கும் புகைப்படங்கள் அதிகம் வெளியாகின்றன. ஆனாலும் புகழ் போதையைத் தலைக்கேற்றாத எளிய மனிதர். ஒரு பக்கம் டாப் மாடல்களை வைத்து அட்டைப்பட ஷூட்டிங் என்றால், இன்னொரு பக்கம் லாக்டௌனில் சென்னை எப்படியிருந்தது எனக் காட்டும் ‘சென்னை டு மெட்ராஸ்’ சீரிஸ், கோவிட் விழிப்புணர்வுக்காக நடிகர் சென்றாயனுடன் ‘கோமாளி’ புராஜெக்ட், விஜய் சேதுபதியுடன் ‘மேன் ஆஃப் ஃபியூஷன்’ முயற்சி என வெரைட்டி காட்டுகிறார்.

எஸ்.ராமச்சந்திரன்
எஸ்.ராமச்சந்திரன்

‘‘பூர்வீகம் கும்பகோணம். படிப்பை முடிச்சிட்டு அட்வர்டைசிங் ஏஜென்சி நடத்திட்டிருந்தேன். அதுக்காக நிறைய புகைப்படங்கள் அவுட்சோர்சிங் பண்ண வேண்டியிருந்தது. க்ளையன்ட் எதிர்பார்த்த தரத்தில யாரும் போட்டோஷூட் பண்ணிக் கொடுக்கலை. ஒரு கட்டத்துல நானே போட்டோஸ் எடுக்க ஆரம்பிச்சேன். முருகன் இட்லிக்கடையில முதல் வாய்ப்பு கொடுத்தாங்க. கிட்டத்தட்ட 12 வருஷங்களாகியும் இன்னும் நான் எடுத்த படங்கள்தான் அங்கே இருக்கு...’’ எளிமையாக அறிமுகம் செய்துகொள்கிறார் எல்.ராமச்சந்திரன்.

உலகளாவிய பயணம், பிரபல பத்திரிகைகள் தேடும் நபர், மாடல்களுக்குப் பிடித்த, நம்பகமான போட்டோகிராபர் என மிகக் குறுகிய காலத்திலேயே இவரது கரியர் கிராஃப் உச்சம் தொட்டிருக்கிறது.

‘‘ஆரம்பக்காலத்துல தாப்ஸி பன்னு, ரகுல் ப்ரீத் சிங், பூஜா ஹெக்டேன்னு நிறைய செலிபிரிட்டீஸ் போட்டோஷூட் பண்ணிட்டிருந்தேன். ஒரு கட்டத்துல ‘எல்லாரும்தான் செலிபிரிட்டி போட்டோஷூட் பண்றாங்களே, நாமுமா’ன்னு தோணுச்சு. ஆர்ட் போட்டோகிராபி பக்கம் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டேன்’’ - ரூட்டை மாற்றியவரின் புகைப்படங்கள் 18 நாடுகளின் கேலரிகளில் இடம்பெற்றிருக்கின்றன.

 “தனித்தன்மையோடு உள்ளவங்கதான் கவனிக்கப்படுவாங்க!”
 “தனித்தன்மையோடு உள்ளவங்கதான் கவனிக்கப்படுவாங்க!”

‘‘2018-ம் வருஷம் சென்னை லீலா பேலஸ் ஹோட்டல்ல ஒரு ஏலம் நடந்தது. அதுல பிரபல டென்னிஸ் பிளேயர் விஜய் அமிர்தராஜ் என் போட்டோஸை ஏலத்துக்கு எடுத்து ஒரு ஃபிரேம் ஒரு லட்சம்னு அஞ்சு ஃபிரேம்களை வித்துக்கொடுத்தார். சென்னையில என் போட்டோ ஒரு ஃபிரேம் ஒரு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டதைப் பெரிய அங்கீகாரமா பார்க்கறேன்’’ கண்கள் மின்னச் சொல்பவர், உலகளவில் முதன்முதலில் மூன்றாம் பாலினத்தவரை மாடல்களாக வைத்து ஆர்ட் போட்டோகிராபி செய்த பெருமைக்கும் உரியவர்.

‘‘300க்கும் மேலான மாடல்களோடு வொர்க் பண்ணியிருக்கேன். 150 மாடல்களுக்கும் மேல் நியூடு போட்டோகிராபி பண்ணியிருக்கேன். அவங்கள்ல பலர் உலகளவுல பிரபலமானவங்க, அதிகபட்ச சம்பளம் வாங்குறவங்க. இத்தனை மாடல்களோடு வொர்க் பண்றது சாதாரண விஷயமில்லை. ஒரு போட்டோ ஷூட்னா அதிகபட்சம் அஞ்சு மணி நேரம், அவ்வளவுதான்னு இல்லாம, நாள்கணக்கா மெனக்கெடுவேன். பிளேபாய், மாக்ஸிம் மாதிரியான பத்திரிகைகளின் அட்டைப்படங்களுக்கான நியூடு போட்டோஸெல்லாம் எடுக்கணும்னா ஒரு போட்டோகிராபரா எனக்கு இன்டர்நேஷனல் மாடல்களைப் பத்தித் தெரிஞ்சிருக்கணும். இதுபோல நியூடு போட்டோஷூட் பண்றதுக்காகவே எக்ஸ்க்ளூசிவ் மாடல்ஸ் இருக்காங்க. அவங்களுக்கு என்னைப் பத்தித் தெரிஞ்சிருக்கணும். இதையெல்லாம் தாண்டி அந்தப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு என்மேல நம்பிக்கையை ஏற்படுத்தறது பெரிய சவால்.

திடீர்னு படங்களுக்கு வொர்க் பண்ண வேண்டி வரும். அப்போ ஆன் த ஸ்பாட் லைட்டிங் பண்ண வேண்டியிருக்கும். சினிமா லைட்டிங்கும் போட்டோகிராபிக்கான லைட்டிங்கும் வேற வேற. யோசிக்கக்கூட நேரமிருக்காது. அந்தச் சவால்களையெல்லாம் தாண்டி, நாம எடுத்துக்கொடுக்கிற படங்கள் பாராட்டு பெறும்போது மனசு நிறையும் பாருங்க... அதுதான் கலைஞனுக்கான விருது...’’ பூரிப்பவர், நடிகர்கள் விஜய் சேதுபதியுடனும் சென்றாயனுடனும் செய்த சமீபத்திய போட்டோஷூட்டுகள் செம வைரல்.

 “தனித்தன்மையோடு உள்ளவங்கதான் கவனிக்கப்படுவாங்க!”
 “தனித்தன்மையோடு உள்ளவங்கதான் கவனிக்கப்படுவாங்க!”
 “தனித்தன்மையோடு உள்ளவங்கதான் கவனிக்கப்படுவாங்க!”

“விஜய் சேதுபதிக்குப் பண்ணின போட்டோஸை நான் விற்க முடியாது. அதுவே நான் எடுக்குற ஆர்ட் போட்டோஸையோ, ஆர்க்கிடெக்ச்சுரல் போட்டோஸையோ விற்க முடியும். செலிப்ரிட்டி போட்டோஷூட்ல கிடைக்கிற கவனத்தையோ, பெயரையோ வெச்சு அடுத்து அவங்க என்ன பண்ணப்போறாங்கன்றதுதான் கேள்வி. ஒரு செலிப்ரிட்டியை போட்டோஷூட் பண்றது மூலமா அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் என்பது உண்மைன்னா இன்னிக்கு செலிப்ரிட்டி போட்டோஷூட் பண்ற எல்லாருமே பெரிய ஆட்களா ஆயிருக்கணுமே.

இந்த உலகத்துல வாய்ப்புகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆனா எதையும் தனித்தன்மையோடு செய்யறவங்க மட்டும்தான் கவனிக்கப்படுவாங்க. தன்னைத்தானே விற்கத் தெரிஞ்சவன்தான் புத்திசாலி. போட்டோகிராபர்ஸுக்கும் இது பொருந்தும்.’’

 “தனித்தன்மையோடு உள்ளவங்கதான் கவனிக்கப்படுவாங்க!”
 “தனித்தன்மையோடு உள்ளவங்கதான் கவனிக்கப்படுவாங்க!”
 “தனித்தன்மையோடு உள்ளவங்கதான் கவனிக்கப்படுவாங்க!”

பிரபலங்களின் மீதான ஈர்ப்பு இவருக்கு இல்லை என்றாலும், ஒரு பிரபலத்துடனான அனுபவத்தை பாரமாக மனதில் சுமந்துகொண்டிருக்கிறார். ‘‘ ‘அமைதிப்படை 2’ டைம்ல மணிவண்ணன் சாரை போட்டோஷூட் பண்ணியிருந்தேன். முடிச்சிட்டு நான் அமெரிக்கா போயிட்டேன். திரும்ப வந்தபோது ‘என்ன தம்பி என் போட்டோஸைக் கொடுக்கவே இல்லையே’ன்னு கேட்டார். ‘நாளைக்குத் தரேன்’னு சொல்லியிருந்த நிலையில அடுத்த நாள் அவர் இறந்துட்டார். அந்தப் படங்களை அவர் பார்க்காமலே இறந்ததுல பெரிய வருத்தம் உண்டு’’ என்பவர் ‘‘நிறைய பேர் என்கிட்ட, ‘எப்படி உங்களால மட்டும் இந்தத் துறையில தாக்குப் பிடிக்க முடியுது? எங்களால முடியலையே’ன்னு கேட்கறாங்க. நிறைய பேர் கேமராவைக் கையில எடுத்த அடுத்த வருஷமே பெரிய ஆளா ஆயிடணும்னு நினைக்கிறாங்க. வருமானம் இல்லைன்னு அந்தத் தொழிலையே மாத்திடறாங்க. அதுதான் தப்பு. கொஞ்சநாள் முயற்சி பண்ணுங்க. உங்க புரொஃபைலை பலப்படுத்தற மாதிரி உங்களுக்குப் பிடிச்ச துறையில பெஸ்ட்டா கொஞ்சம் படங்கள் எடுத்து வெச்சுக்கோங்க. என்னிக்கு அதை வெளியில காட்டணும்னு தோணுதோ அன்னிக்குக் காட்டுங்க. அது உங்களை நிச்சயம் உயரத்துக்குக் கொண்டு போகும்...’’ நன்னம்பிக்கை பகிர்கிறார் ராமச்சந்திரன்.