Published:Updated:

``செம கிரேஸி விக்ரம்; ஃபிஃபா தனுஷ்..!" - போட்டோகிராபர் சுதர்ஷன் ஷேரிங்ஸ்

ரஜினியுடன் சுதர்ஷன்
ரஜினியுடன் சுதர்ஷன்

விக்ரம், சூர்யா, பிரபாஸ் என சினிமா பிரபலங்களுடன் நடத்திய போட்டோஷூட் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் புகைப்பட நிபுணர் சுதர்ஷன்

ஒரு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை முதலில் தூண்டுவது அந்தப் படத்தின் போஸ்டர் லுக்தான். ஸ்டில் போட்டோகிராபர் என்பவர்களைத் தாண்டி பப்ளிசிட்டி போட்டோகிராபர்களின் பணி, ஒரு படத்துக்கு மறைமுகமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில், 'துருவ நட்சத்திரம்', 'மான்ஸ்டர்', 'பாக்ஸர்', 'சாஹோ' உள்ளிட்ட பல படங்களுக்கு போஸ்டர் போட்டோக்களை எடுத்த சுதர்ஷன், தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

சினிமாவுல பப்ளிசிட்டி போட்டோகிராபருக்கான வேலைகள் என்ன?

"ஸ்டில் போட்டோகிராபர், படத்துல நடிக்கிறவங்களை போட்டோ எடுக்கிறவங்க. ஆனா, ஒரு பப்ளிசிட்டி போட்டோகிராபர்தான் படத்துக்கான போஸ்டர் போட்டோஷூட் வேலைகளைச் செய்வார். பொதுவா, ஒரு படத்துடைய போஸ்டர்தான் அந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும். அதுல படம் என்ன சொல்லப் போகுதுனு சின்னதா சில ஹின்ட்கள் கொடுக்கணும். அதே சமயம், படத்துடைய மொத்த விஷயத்தையும் அந்த ஒரு போட்டோவுல சொல்லிடக் கூடாது. அதை சுவாரஸ்யமா ஆக்குறதுல போட்டோகிராபருடன் சேர்ந்து, டிசைனரும் இயக்குநரும் உறுதுணையா இருப்பாங்க."

சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தது எப்போ?

பாலாஜி மோகன் - தனுஷ் - சுதர்ஷன்
பாலாஜி மோகன் - தனுஷ் - சுதர்ஷன்

"நான் தனியாதான் ஒரு கம்பெனி வெச்சு போட்டோஷூட் பண்ணிட்டிருக்கேன். இருந்தாலும் எனக்கு சினிமா மேல ஆர்வம் அதிகம். நான் கெளதம் மேனன் சாருடைய பெரிய ரசிகன். அவர் எங்கே இருப்பார்னு கேட்டு ஒவ்வொரு காபி ஷாப்புக்கும் அலைவேன். அப்போ நண்பர் ஒருத்தர் மூலமா 'துருவநட்சத்திரம்' படத்துல வொர்க் பண்றதுக்கான வாய்ப்பு கிடைச்சது. ஆர்டிஸ்ட் யாரும் இல்லாம ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடி பண்ணணும்னு கேட்டாங்க. காபி ஷாப் டேபிள், பேப்பர், பேனானு வெச்சு போட்டோ எடுத்துக் காட்டினேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுக்கப்புறம்தான், விக்ரம் சாரை வெச்சு போட்டோஷூட் பண்ண சொன்னார்."

விக்ரமை வெச்சு போட்டோஷூட் பண்ண அனுபவம் எப்படி இருந்தது?

" 'நீங்களே ஃப்ரேம் செட் பண்ணிக்கங்க'னு சுதந்திரம் கொடுத்து என்னை வேலை பார்க்கச் சொன்னார் கௌதம் சார். ஒவ்வொரு போட்டாவா எடுக்க, எடுக்க விக்ரம் சார் செம ஹேப்பியாகிட்டார். விக்ரம் சார் ரொம்ப சின்சியர், ரொம்ப எனர்ஜி. செட்ல கிரேஸியா நிறைய விஷயங்கள் பண்ணுவார். ஏதாவது பிராங்க் பண்ணிட்டே இருப்பார். செட்டே செம ஃபன்னா இருந்தது."

'மான்ஸ்டர்' படத்துடைய ஃபர்ஸ்ட் லுக் எல்லோராலும் பேசப்பட்டது. அந்த போட்டோஷூட் எப்படி நடந்தது?

துருவநட்சத்திரம் படப்பிடிப்பில்
துருவநட்சத்திரம் படப்பிடிப்பில்

"எலிக்கும் எஸ்.ஜே.சூர்யா சாருக்குமான 'டாம் அண்ட் ஜெர்ரி' கதைதான் 'மான்ஸ்டர்'. ரொம்ப கார்டூனா இருக்கணும்னு நெல்சன் சார் சொன்னார். போட்டோஷூட்ல எலிக்கிட்ட ஏதாவது பேசிட்டிருப்பார். இந்த லுக் ஹிட்டாக டிசைனருடைய பங்கும் ரொம்ப முக்கியம்."

'மாரி' கெட்டப்ல தனுஷ் சாரை ஏற்கெனவே எல்லோருக்கும் தெரியும். அப்போ 'மாரி 2' படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் பண்ண சவாலா இருந்திருக்குமே!

"நிச்சயம் ரொம்பவே சவாலா இருந்தது. 'மாரி' லுக்ல தனுஷ் சாரை எல்லோரும் பார்த்துட்டாங்க. இந்தப் படத்துல என்ன வித்தியாசமா பண்ணலாம்னு ரொம்ப நேரம் யோசிச்சோம். படம் தீபாவளிக்கு ரிலீஸ்னால, தனுஷ் சார் வெடியைத் தூக்கிப்போடுற மாதிரி பண்ணலாம்னு நினைச்சோம். அது தனுஷ் சாருக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. 'மாரி கேரக்டர் என்னல்லாம் பண்ணுமோ அதையெல்லாம் நான் பண்ணிட்டிருக்கேன். நீங்க போட்டோ எடுத்துக்கிட்டே இருங்க'னு எனக்கான சுதந்திரத்தைக் கொடுத்தார், தனுஷ். ஃப்ரீயா இருக்கும்போது போன்ல ஃபிஃபா கேம் விளையாடிட்டிருப்பார். 'சார் ஷூட் போலாம்'னு சொன்ன அடுத்த நிமிடம் ரெடியாகிட்டு வந்து நிற்பார். அவரை அப்படியே ரசிச்சுட்டே இருந்தேன்."

சூர்யா போட்டோஷூட் பத்தி?

சூர்யாவுடன் சுதர்ஷன்
சூர்யாவுடன் சுதர்ஷன்

"எங்க வீடும் சூர்யா அண்ணா வீடும் பக்கத்துல, பக்கத்துலதான். சின்ன வயசுல இருந்து அவர் என்னைப் பார்த்துட்டிருக்கார். ரொம்ப நாள் போட்டோஷூட் பண்ணலாம்னு சொல்லிட்டே இருந்தேன். ஒரு நாள் அவரே கால் பண்ணி போட்டோஷூட் பண்ணலாம்னு சொன்னார். 'சிங்கம் 3' முடிஞ்ச நேரத்துல ஷூட் பண்ணோம். 'ரொம்ப நாளா உங்களை 'சிங்கம்' மீசையிலேயே பார்த்துட்டிருக்கோம். இப்போதான் படம் முடிஞ்சிருச்சே, மீசையை ட்ரிம் பண்ணி கொஞ்சம் தாடி வெச்சா நல்லா இருக்கும்'னு சொன்னேன். நேர்ல மீட் பண்றப்போ நான் சொன்ன மாதிரியே இருந்தார். உடனே பிளேசர்லாம் போட்டு அவர் வீட்லேயே ஷூட் பண்ணோம். அந்தப் போட்டோவைத்தான் அவர் பிறந்தநாளுக்கு ரிலீஸ் பண்ணோம். ரசிகர்கள்கிட்ட இருந்து நல்ல வரவேற்பு கிடைச்சது. சீக்கிரம் ஒரு படத்துல வொர்க் பண்ணலாம்னு சொல்லியிருக்கார். பார்ப்போம்."

சமீபமா வெளியான 'பாக்ஸர்' பட போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதைப் பத்தி சொல்லுங்க?

''படத்துடைய இயக்குநர் விவேக் படத்தைப் பத்தி சொன்னதும் எனக்கு ஆர்வம் அதிகமாகிடுச்சு. இந்த மாதிரியான பாக்ஸிங் படம், இதுவரை தமிழ் சினிமாவுல வரலை. அருண் விஜய் சாருடைய ஃபிட்னஸ் பத்தி எல்லோருக்கும் தெரியும். அதை இன்னும் மிரட்டலா காட்டணும்னு தெளிவா இருந்தேன். பாக்ஸிங் கூண்டுக்குள்ள அவர் பண்ண ஒவ்வொரு போஸும், ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ற அளவுக்கு சூப்பரா இருந்தது. காலையில 9 மணிக்கு ஆரம்பிச்சது. ஆனா, முதல் க்ளிக் எடுக்கவே சாயங்காலம் 4.30 மணி ஆகிடுச்சு. அவர் ஹேர்ஸ்டைல், மேக்கப், டாட்டூனு எல்லாத்தையும் ரெடி பண்ணிகிட்டு, கொஞ்ச நேரம் வொர்க் அவுட் பண்ணிட்டு வந்து நின்னார். ப்பா... பார்க்கவே அவ்வளவு ஆக்ரோஷமா இருந்தது. நைட் 12 மணி வரை ஷூட் பண்ணோம்."

'சாஹோ' படத்துக்குள்ள எப்படி வந்தீங்க?

அனுராக் காஷ்யப்புடன் சுதர்ஷன்
அனுராக் காஷ்யப்புடன் சுதர்ஷன்

"இது என்னுடைய ரெண்டாவது தெலுங்கு படம். முதல் படத்துலேயும் பிரபாஸ் சார்கூடதான் வொர்க் பண்ணேன். அது அடுத்த வருடம்தான் வெளியாகுது. கேமராமேன் மனோஜ் பரமஹம்சா சார் மூலமாதான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன். டைரக்டர் ராதாகிருஷ்ணன் சார் போட்டோஷூட்காக கதையையே என்கிட்ட சொன்னார். அந்தக் கதைக்கு போஸ்டர் எப்படி இருந்தால் நல்லா இருக்கும்னு நான் சொன்னதும் அவங்களுக்கு பிடிச்சிருந்தது. என் கிரியேட்டிவிட்டிக்கு சுதந்திரம் கொடுத்தாங்க. அதைப் பார்த்துட்டு, 'பிரபாஸ் சாருக்கு உங்க வொர்க் பிடிச்சிருக்கு. அதனால 'சாஹோ' படத்துடைய கடைசி போர்ஷன்ல நீங்களே வொர்க் பண்ணுங்க'னு சொல்லி எனக்கு போன் வந்தது. பாடல் காட்சிகளுக்காக ஆஸ்ட்ரியா போனோம். அங்க எடுத்த போட்டோதான் இப்போ ரிலீஸ் ஆகியிருக்கு."

பிரபாஸ் ஸ்பாட்ல எப்படி?

சமந்தாவுடன் 'இரும்புத்திரை' படப்பிடிப்பில்
சமந்தாவுடன் 'இரும்புத்திரை' படப்பிடிப்பில்

" 'பாகுபலி' பார்த்துட்டு அந்த பிரமிப்புடன்தான் அவரைச் சந்திச்சேன். ஆனா, அவருக்கு ரொம்பக் கூச்ச சுபாவம். செல்ஃபிகூட வேண்டாம்னு சொல்லிட்டார். அவர்கூட பழக ஆரம்பிச்சதும் கொஞ்சம் நெருக்கமாகிட்டார். ஒவ்வொரு போட்டோவையும் தன் ரசிகருடைய மனநிலையிலதான் பார்க்கிறார். 'இது அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்ல'னு கேட்டுட்டே இருப்பார். அவர்கூட வொர்க் பண்ணும்போது 'பாகுபாலி' மாஸ் சீன் எல்லாம் கண் முன்னாடி வந்து போகும்."

யாரை போட்டோஷூட் பண்ணணும்னு ஆசைப்படுறீங்க?

"தல - தளபதி ரெண்டு பேரையும் க்ளாஸா ஒரு போட்டோஷூட் பண்ணணும்."

அடுத்த கட்டுரைக்கு