Election bannerElection banner
Published:Updated:

'நேர்கொண்ட பார்வை' vs 'பிங்க்'... ஆறு வித்தியாசங்கள்..!

Pink vs Nerkonda Paarvai
Pink vs Nerkonda Paarvai

இந்தியில் அமிதாப் நடித்த 'பிங்க்' படத்தைத் தமிழில் அஜித்தை வைத்து படமாக்கப்போகிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே, அந்தப் படத்தைப் பார்த்தேன். (Spoilers Ahead)

கதைகள் பல விதம். பெரும்பாலும், இங்கே மனிதனால் கற்பனை செய்யமுடிகிற எல்லா கதைகளும் சொல்லப்பட்டுவிட்டன. சில கதைகளைச் சொல்லும்போதுகூட, ஏற்கெனவே எங்கோ கேட்ட கதைகளைப் போன்றே இருக்கும். இங்கே சொல்வதற்குப் புதிதாய் கதைகள் இல்லை. என்றாலும், ஒரு கதைக்கும் அதைப்போன்று இருக்கும் மற்றொரு கதைக்கும் இடையிலான வேறுபாடு, அவை சொல்லப்படும் விதங்களில்தான் இருக்கும் அல்லது அவை என்ன காரணத்துக்காகச் சொல்லப்படுகின்றன என்பதில் இருக்கும். புதினம், தொடர், நாடகம், கூத்து என கதை எந்த வடிவிலிருந்தாலும் இதுதான் இயல்பு. இந்த இயல்பில் திரைப்படமும் அடக்கம்.

ஒரு மொழியில் வெளியான படத்தை இன்னொரு மொழியில் ரீமேக் செய்யும்போது, பெரும்பாலும் கதையை மட்டும் அப்படியே எடுத்துவிட்டு, கதை சொல்லும் விதத்தை திரைக்கதை மூலமாக மாற்றிவிடுவார்கள். இந்த மாற்றங்கள், அந்த மொழி பேசும் மக்களின் வாழ்வியல், நிலம், விழுமியங்களைப் பொறுத்து மாறும். ஆனால், எதை மாற்றினாலும் ஒரு திரைப்படத்தை ரீமேக் செய்யும்போது ஒன்றை மட்டும் மாற்றமுடியாது, மாற்றவும் கூடாது. அதுதான், அந்தக் கதையின் 'நோக்கம்'. ஒரு கதை என்பது அது சொல்லப்படும் விதமோ, அதில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கையோ அல்ல. ஒரு கதை என்பது, அதில் உள்ள மனிதர்களின் நோக்கம், அதன் மூலமாக நேரும் விளைவுகள்தாம்.

இந்தியில் அமிதாப் நடித்த 'பிங்க்' படத்தை தமிழில் அஜித்தை வைத்து படமாக்கப்போகிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே, அந்தப் படத்தைப் பார்த்தேன். அடிப்படையில் அது, சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் மிக வக்கிரமான சிக்கலைப் பற்றிய படம். 'பிங்க்'கின் வெற்றிக்குக் காரணம் அதன் நோக்கம்தான். ஒரு பெண்ணின் உடல்மீது அவளுக்கு மட்டுமே உரிமையுள்ளது. அவள் அனுமதியின்றி அவளிடம் நெருங்குவது முற்றிலும் குற்றம். மனைவி, காதலி, தோழி, ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்தாலும்கூட, அவளிடம் நெருங்க அவள் அனுமதி தேவை என்பதை உணர்த்துவதே 'பிங்க்' படத்தின் முழு முதல் நோக்கம்.

Ajith in NKP
Ajith in NKP

பிங்க் Vs நேர்கொண்ட பார்வை:

சண்டைக் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே இத்தனை ஆண்டுக்காலமாக பார்க்கப்பட்ட ஒரு மாஸ் ஹீரோவான அஜித்தை, அந்தப் படத்தில் பொருத்திப் பார்ப்பதற்கே முதலில் எனக்கொரு மனச்சிக்கல் இருந்தது. எங்கே அஜித்துக்காக வணிக ரீதியில் சில சமரசங்களைச் செய்துவிடுவார்களோ, அதனால் படத்தின் நோக்கம் குலைந்துவிடுமோ என்ற குழப்பம் இருந்தது. படத்தின் பெயர் 'நேர்கொண்ட பார்வை' என அறிவிக்கப்பட்டதுமே அந்தக் குழுப்பம் முற்றிலுமாக நீங்கியது. 'பிங்க்' என்ற பெயரைவிடவும் 'நேர்கொண்ட பார்வை' என்ற பாரதியின் வரி, இந்தக் கதைக்கும் அதன் நோக்கத்தும் சரியான தேர்வு என்றே சொல்லலாம். அதை இன்னமும் உறுதிசெய்ய, சுப்பிரமணிய பாரதி என்ற பெயரை பரத் சுப்பிரமணியம் என மாற்றி, அஜித்தின் கதாபாத்திரத்துக்கு வைத்திருப்பது மேலும் சிறப்பு.

தீபக் Vs பரத்:

'பிங்க்'கில் அமிதாப்பின் தீபக் ஷேகல் கதாபாத்திரத்துக்கு, கிட்டத்தட்ட 60 வயது இருக்கும். அந்தப் பாத்திரம் அதிகப்படியாகச் செய்யும் உடலசைவே, ஜாகிங் மட்டும்தான்.

Amitabh in Pink
Amitabh in Pink

அஜித்தின் பரத் சுப்பிரமணியம் கதாபாத்திரத்துக்கு தீபக்கைவிடவும் வயது குறைவு. அதனால் பரத் கேரக்டர் ஒரு மனநல குறைபாடுடன் டைனமிக்காக இருக்கும்.

சாந்தம் Vs சண்டை:

படத்தின் முன்னோட்டத்தில், அஜித்தின் சண்டைக் காட்சிகளின் துணுக்குகள் காட்டப்பட்டபோது, இதில் எதற்கு தேவை இல்லாத ஒரு சண்டைக் காட்சி என்று தோன்றியது. படத்தைப் பார்த்தவுடன் அந்த ஐயப்பாடும் அற்றுப்போனது. சண்டைக்கான காரணமும் திரைக்கதையில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஊரில் செல்வாக்கு மிகுந்த ஒருவரின் மகனை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும்போது, எதிர்த்து நிற்கும் வழக்கறிஞர்களுக்கு இப்படிப்பட்ட அச்சுறுத்தல்கள் வருவது செய்தித்தாள்களில் அடிக்கடி தென்படும் துணுக்குகள்தானே. அதுவும், இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளும் உடனடியாக வழக்காக மாறி, நீதிமன்றத்துக்கு வந்துவிடுவதில்லையே. சமரச முயற்சிகள், மிரட்டல்கள், கைகலப்புகளை எல்லாம் தொடர்ந்துதானே நீதியைத் தேடுகின்றன. அந்த ஒரு அம்சம், 'பிங்க்'கில் குறைவாக இருந்திருந்தாலும், 'நேர்கொண்ட பார்வை'யில் விளக்கமாகவே காட்டப்படுகின்றன.

Ajith in NKP
Ajith in NKP

டாப்ஸி Vs ஷ்ரத்தா ஸ்ரீநாத்:

பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளான ஒரு பெண்ணின் மனநிலை எப்படியிருக்கும் என்பதையும் 'நேர்கொண்ட பார்வை' ஒருபடி மேலே போய் காட்டியிருக்கிறது. மீராவின் (ஷ்ரத்தா ஶ்ரீநாத்) ஒவ்வொரு அசைவிலும் ஒரு பதட்டத்தையும் சேர்த்தே படம்பிடித்திருக்கிறார்கள். சாதாரணமாக சாலையில் நடந்து செல்லும்போதுகூட, எதிரில் வரும் ஒரு ஆணைக் கண்டு சற்று விலகுவது, தன்னைப் புறம் பேசுபவர்கள் முன் முகத்தை மறைத்துக்கொள்வது என அந்தக் கதாபாத்திரத்துக்கான அச்சம் வெளிப்படையாகத் தெரியும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

டெல்லி கோர்ட் Vs செங்கல்பட்டு கோர்ட்:

'பிங்க்'கின் இரண்டாம் பகுதியான கோர்ட் ரூம் ட்ராமாவின் உண்மைத் தன்மை, 'நேர்கொண்ட பார்வை'யில் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. தீபக்கின் 'நோ மீன்ஸ் நோ' வசனமும் சரி, பரத்தின் 'வேண்டாம்' என்ற வசனமும் சரி, படத்தின் நோக்கத்தை இரண்டு படங்களிலுமே உயர்த்திப்பிடிக்கின்றன.

'நேர்கொண்ட பார்வை' vs 'பிங்க்'... ஆறு வித்தியாசங்கள்..!

சாரா ஷேகல் Vs கல்யாணி பரத்:

’பிங்க்’ படத்தில் தீபக்கின் மனைவி சாரா, நிகழ்காலத்தில் இருப்பது போல் காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஆனால், அவர் உடல்நல குறைபாடால் படுத்தப் படுக்கையில் இருப்பார். நேர்கொண்ட பார்வை படத்தில், கல்யாணி பரத்திற்கென முன்கதை இருக்கும். அதில் ஒரு காதல் பாடலும் அடக்கம்.

ஆனா, பிரச்னை ஒண்ணுதான்:

நோக்கம்தான் எல்லாம் என்றே இரண்டு படங்களும் தொடங்கி, முடிவுபெறுகின்றன. ஏ-ஜோக் சொல்லும் பெண்ணை தப்பானவளாகப் பார்க்கும் ரெஸ்டாரன்ட் ஆட்களைப் போன்ற ஆண்களோ, தன்னுடன் அமர்ந்து மது அருந்தும் பெண்ணிடம் எதையும் எதிர்பார்க்கலாம் என்ற மனநிலையில் இருக்கும் ஆண்களோ இங்கே தேவையில்லை. ஆனால், 'அசோஸியேஷன் காரங்க மொத்தமா வந்தா பார்த்துக்கலாம்' எனக் கூறி பக்கபலமாக நிற்கும் ஹவுஸ் ஓனரைப் போன்ற ஆண்களும், ஏளனம் செய்பவர்களுக்குப் பயந்து முகத்தை மூடிக்கொள்ளும்போது, அதை நீக்கி நேர்கொண்ட பார்வையோடு நடக்க வேண்டும் என ஊக்கம் தரும் பரத் போன்ற ஆண்களும்தான் இங்கே தேவை என 'பிங்க்'கும், 'நேர்கொண்ட பார்வை'யும் தத்தம் நோக்கத்தைச் சொல்கின்றன.

இப்படிப்பட்ட கருத்தை ஒரு திரைப்படம் சொல்கிறது என்றாலே அது, பலர் காதுகளுக்கு எளிதில் கேட்கும். அதுவே அமிதாப், அஜித் போன்ற பெரும் ஆளுமைகள் மூலமாகச் சொல்லப்பட்டால் இன்னமும் சத்தமாகவே கேட்கும். இந்தக் கருத்தைப் பேச அஜித்தும் அமிதாப்பும் இறங்கி வந்துவிட்டனர். ஆனால், அவர்கள் சாடும் சமூகம்தான் இன்னமும் அப்படியே இருக்கிறது.

A scene from NKP
A scene from NKP

அதனால், இங்கே 'பிங்க்' சிறந்ததா, 'நேர்கொண்ட பார்வை' சிறந்ததா என்ற விவாதத்துக்குள் செல்வதைவிட, இந்த இரண்டு படத்தின் நோக்கமும், அவை சொல்லவரும் பெண்ணுக்குப் பாதுகாப்பான சமூகத்தைச் சிறந்ததாக்குவதற்கான விவாதங்களே தேவை. இப்படிப்பட்ட படங்கள், இங்கே எடுக்கப்படவேண்டிய அவசியம் இனி இல்லை என்ற அளவுக்கு சமூகத்தைச் சிறந்ததாக்குவதற்கான விவாதங்களே தேவை. அதுவே,'பிங்க்'கை இயக்கிய அனிருத்தா ராய்க்கும், ' 'நேர்கொண்ட பார்வை'யை இயக்கிய ஹெச். வினோத்துக்கும் வெற்றி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு