Published:Updated:

''பொழைக்கத் தெரியாத ஏமாளி நான்!" - சினேகன் ஷேரிங்ஸ்

சினேகன்
சினேகன்

"என் பெயர் வைத்த நேரமோ என்னவோ, நான் எல்லோரிடத்திலும் சினேகமாக இருக்கவே நினைக்கிறேன். என் வாழ்க்கையில் இழப்பையும் துரோகத்தையும் அதிகம் சந்தித்திருக்கிறேன்'' பேட்டியைத் தொடங்கும்போதே வலியோடு ஆரம்பிக்கிறார் சினேகன்.

ஏன் இவ்வளவு வலியோடு பேசுகிறீர்கள்?

''நான் சொல்வதெல்லாம் உண்மை, சத்தியம். என்னிடம் உதவி கேட்கும்போது அப்போதைக்கு முடியவில்லை என்றாலும், அவகாசம் கொடுங்கள் என்று கேட்பேன். அடுத்த சில நாள்களில் அதைச் செய்து கொடுத்துவிடுவேன். நான் ஒரு ஏமாளி. எளிதில் என்னை ஏமாற்றிவிடலாம். அப்படி என்னைப் பலபேர் ஏமாற்றியிருக்கிறார்கள். ஒரு கலைஞனுக்குப் பின்னால் நிறைய வலிகளும் வலியின் சுவடுகளும் இருக்கும் என்று படித்திருப்பீர்கள். அப்படி அடிபட்டு, அடிபட்டு எழுந்து நின்ற கலைஞனோடுதான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறீர்கள்'' என்றவரை, சினிமா பக்கம் இழுத்து வந்தோம்.

ஒரே மாதிரி காதலுக்குப் பாடல்கள் எழுதுவது உங்களுக்கு சலிப்பாக இல்லையா?

சினேகன்
சினேகன்

''நிச்சயம் இருக்கும். குழந்தை பெற்றுக்கொள்ள ஆணும் பெண்ணும் தேவை. இரு உணர்வுகள் சேர்ந்துதான் ஒரு உயிரை உருவாக்க முடியும். ஆனால், ஒரு கவிஞன் பாடல் எழுதும்போது அவனே கதாநாயகனாக, கதாநாயகியாக மாற வேண்டியிருக்கிறது. இப்போது சேரன், அமீர், வெற்றி மாறன் போன்ற சில இயக்குநர்களைத் தவிர மற்றவர்கள் சூழ்நிலையைக்கூட முழுமையாகச் சொல்ல மாட்டார்கள். நல்ல கதாபாத்திரத்தை விலக்கிச் சொல்லும்போது, கதை நன்றாக வரும். எத்தனை முறை காதலைப் படமாக எடுத்தாலும், காதல் சலிப்பதில்லை. ஆனால், கதைக்களம் சரியாக இல்லாதபோது, காதலும் சலிப்படையத்தான் செய்யும்."

உங்களுடைய படைப்புகளுக்காக எவ்வளவு மெனக்கெடுவீர்கள்?

''எனக்கு ஒரு பாடல் முழுமையாக இல்லையெனத் தோன்றினால், அதைக் கொடுக்க மாட்டேன். அமீரின் முதல் படத்திலிருந்து சமீபத்தில் முடிந்த படம் வரை நான்தான் பாடல்கள் எழுதுகிறேன். என் பாடல்களுக்கான அவகாசத்தை அவர் தருவார். சிலசமயம் வேறுசில இயக்குநர்கள் உடனடியாகக் கேட்பார்கள். படப்பிடிப்புத் தளத்தில் எல்லோரும் காத்திருக்கிறார்கள் என 15 நிமிடத்தில் ஒரு பாடல் எழுதினேன். அதுதான், 'கழுகு' படத்தில் இடம்பெற்ற 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்' பாடல். அப்படி அவசரத்தில் எழுதியது, மிகப்பெரிய ஹிட் ஆனது. 'பாண்டவர் பூமி'யில் இடம்பெற்ற என் முதல் பாடலான 'அவரவர் வாழ்க்கையில்' பாடல் மிகப்பெரிய ஹிட். அந்தப் பாடல் 25 நிமிடத்தில் எழுதியது. இதில் ஏதாவது மாற்றி எழுதட்டுமா எனச் சேரனிடம் கேட்டேன். 'நத்தை என்கிற வார்த்தை வருகிற ஒரு கவிதையைப் படித்திருக்கிறேன். அது எந்தக் கவிதை என்று தெரியவில்லை. அந்த வார்த்தையை இந்தப் பாடலில் வைக்க முடியுமா' எனக் கேட்டார்.

சினேகன்
சினேகன்

'நத்தை முதுகில் நாம் ஏறி நாடு கடந்து நாம் போவோம்' என்ற ஒரு வரியை வைத்தேன். நத்தையை யோசித்தபோது, ஞாபகங்கள் பின்நோக்கிப் போனது. சின்ன வயதில் வயல்வெளிகளில் திரிந்திருக்கிறோம். ஒரு குருவி நத்தைக் கூட்டில் தேங்கி நிற்கும் மழைநீரைத் தன் அலகால் குடிக்கும் காட்சி விரிந்தது. 'நத்தாங்கூட்டின் நீர் போதும்; எங்களின் தாகம் தீர்த்துக் கொள்வோம்' என்ற வரியைச் சேர்த்தேன். அதேபோல, 'ஆடுகளம்' படத்தில் 'வெள்ளாவி வெச்சுத்தான் வெளுத்தாங்களா' என்ற வார்த்தையை விளையாட்டாகச் சொன்னேன். கதையைக் கேட்கும்போதே, நமக்கு ஒரு நல்ல காட்சி விரியும். அப்படி விரிந்தால், அது ஒரு நல்ல கதை என்று அர்த்தம்.

எல்லா படைப்புக்குள்ளும் ஓர் உண்மை இருக்கும். அது எத்தனை சதவிகிதம் என்பதில் இருக்கிறது, அதன் வெற்றி. அதிக சதவிகிதம் இருக்கும்போது, அது காலத்தால் அழியாத பாடலாக மாறும். மற்றபடி, எல்லாவற்றையும் நாம் கற்பனையாக எழுதிவிட முடியாது. அனுபவித்த, கடந்துவந்த பாதைகளைத்தான் வரிகளாக, கதைகளாக மாற்றுகிறோம்.''

நீங்கள் பாடல் எழுதும்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களில் மறக்க முடியாதவை?

''நிறைய இருக்கிறது. 'தாயைப் பற்றி எழுதவேண்டுமானால், மார்பு சுரக்க வேண்டும்' என்பார் வைரமுத்து. அதுபோல, வட்டார வழக்குகளை வைக்கும்போது, அந்த மண்வாசனை வரிகளில் தெரிய வேண்டும். 'பருத்திவீர'னில் 'ஐயய்யோ' பாடலை எழுதிவிட்டேன். 'ஆடுகளம்' படத்திலும் 'ஐயய்யோ' வார்த்தை வேண்டுமென உறுதியாக இருந்தார் வெற்றி மாறன். வைத்தேன். 'பருத்தி வீர'னில் 'ஐயய்யோ'வை வைக்க அமீர் சாரை சமாளித்தேன். 'என்னங்க பாட்டு ஆரம்பிக்கும்போதே ஐயய்யோவா' எனக் கேட்டார். பாடலைக் கேட்டு காம்ப்ரமைஸ் ஆனார்.

எதை வேண்டுமானாலும், யுவனிடம் ரகசியமாகப் பேசலாம். நானே பாட்டெழுதி, நானே டியூன் போட்டு அவரை டார்ச்சர் பண்ணியிருக்கேன். அப்படி ஒருநாள் நானும் யுவனும் பேசும்போது, நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, அப்பா சோளக்கொள்ளைக்கு அனுப்பி வைப்பார். நானும் அண்ணனும் அப்படி காக்கா, குருவி விரட்டும்போது, மரத்துமேல உட்கார்ந்து பாடியிருக்கோம். அதை ஞாபகம் வைத்து, 'ஒத்தப் பனை ஓரத்துல' பாடலைச் சொல்லி முடித்தேன். உடனே, அதை மைக்கில் பாடச் சொல்லிவிட்டார் யுவன். அந்தப் பாடல் செம ஹிட்!"

பாரதிராஜா, நீங்கள் எழுதிய பாடலின் சில வரிகளை நீக்கச் சொன்னாராமே?

''பாரதிராஜாவின் 'ஈர நிலம்' படத்தில் ஒரு பாட்டு எழுதினேன். அந்தப் பாடலின் வரிகள் விரசமாக இருப்பதாகச் சொன்னதால், 'உன் கற்பக மரமும் நானே... கற்புள்ள மரமும் நானே... உன்னை நினைச்சுத்தானே மஞ்ச குளிச்சேன் நானே...' என வரிகளை மாற்றி எழுதினேன். பாரதிராஜா வேண்டாம் என்று சொன்ன வரியை அமீர் வாங்கி வைத்திருக்கிறார். 'ஏதாவது ஒரு படத்தில் இந்த வரிகளைப் பயன்படுத்தலாம்' எனச் சொல்லியிருக்கிறார்.''

ஒரு கலைஞனின் படைப்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?

சினேகன்
சினேகன்

''ஒரு படைப்பு, படைத்தது மாதிரியே காலம் கடந்து தெரிந்தால் நாம் வளரவில்லை என்று அர்த்தம். நாம் நன்றாக எழுதியிருப்போம் எனத் தோன்றினால், வளர்ந்து வருகிறோம் என்று அர்த்தம். 1998-ல் 'இன்னும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள்' என்ற கவிதை நூலை வெளியிட்டேன். எல்லாம் ஒரே வரியில் இருக்கும். 'உனக்கு தாஜ்மஹால் கட்டமாட்டேன். தாலிதான்', 'நீ, நீர்... எப்போதும் தேவை', 'அடச்சீ இன்னும் எத்தனை முறைதான் காதலிப்பது' எனப் பல கவிதைகள் அதில் இருக்கும். இது, கவிதையின் வடிவத்தை உடைத்த புத்தகம். 'இப்படியும் இருக்கலாம்' என்கிற ஒரு புத்தகம். தமிழ் நூல்களில் இது புது முயற்சி. பொதுவாக ஒரு கவிதை பாடலாக மாறுவது இயல்பு. அந்தப் பாடலே மறுபடியும் கவிதையாக மாறுமா?! அந்தமாதிரி, நான் எழுதிய 25 பாடல்களைப் பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டு, அதைக் கவிதையாக எழுதியிருக்கிறேன். படைக்கிற காலத்தில் சரி, படிக்கிற காலத்தில் தவறாக இருந்தால் திருத்திக்கொள்வோம் அவ்வளவுதானே!''

உங்களை எழுதக் தூண்டியது யாருடைய எழுத்துகள்?

''பட்டுக்கோட்டை பாடல்கள்தான். என்னுடைய மூத்த அண்ணன் சிவக்கொழுந்து. அவர் இப்போது உயிரோடு இல்லை. அவர் காங்கிரஸில் இருந்து கம்யூனிஸ்டுக்கு மாறியவர். என்னை முதன்முதலாகப் பாடப் புத்தகத்தைத் தவிர வேறு புத்தகத்தைப் படிக்க வைத்த முதல் மனிதர். காரல் மார்க்ஸ், லெனினை அறிமுகப்படுத்தியவர். எங்க ஊர்க்காரனை. மண்ணைப் பற்றி, எனக்கும், என் அப்பனுக்கும் பாடெழுதியவன் பட்டுக்கோட்டை. அவர் பாடல்கள்தான் 'யார்ரா இவன்'னு என்னைத் தேட வைத்தது. அதுதான் பின்னாளில் கவிதை எழுதத் தூண்டியது. இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருந்தாலும், எனக்கான அங்கீகாரம் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கிறது."

புதிய கல்விக் கொள்கை பற்றிய உங்கள் கருத்து?

சினேகன்
சினேகன்

''மும்மொழிக் கொள்கை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கில்லை. தேர்வு வேண்டாம் என்று சொல்லவில்லை. அதேநேரம் மூன்றாம் வகுப்பிலோ, ஐந்தாம் வகுப்பிலோ தேர்வு என்பது வேண்டாம் என்றுதான் கமல் சொல்கிறார்.''

உங்கள் தலைவர் கமலிடம் நீங்கள் கற்றுக்கொண்ட, கடைப்பிடிக்கிற விஷயம்?

''பல விஷயங்கள் தெரிந்து வைத்திருந்தாலும், பிறர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பார். அந்த நல்ல பழக்கம் எத்தனைபேரிடம் இருக்கிறது என்று தெரியவில்லை. அதேநேரம், சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மரியாதையுடன் அழைப்பார். மிகக் கண்ணியமான மனிதர். அவரைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அவற்றில் சிலவற்றை நான் கடைப்பிடித்து வருகிறேன். எங்கள் தலைவரால் நிச்சயம் இந்தச் சமூகத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை உறுதியாகச் சொல்வேன்'' என்று முடித்தார் சினேகன்.

அடுத்த கட்டுரைக்கு