Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

செம கெத்து போலீஸ் கதை! #11YearsOfVettaiyaaduVilaiyaadu

திறமையானவர்களுக்கு, மதிப்பும் அங்கீகாரமும் நிச்சயம் கிடைத்துவிடும். விளையாட்டு, அரசியல், சினிமா என எந்தத் துறையானாலும் எந்த இடமானாலும் திறமைக்குரிய மரியாதை அவர்களைத் தேடி வருவதில் சற்று காலதாமதம் ஆனாலும், கட்டாயம் வந்தே தீரும்.  இதற்கு சிறந்த உதாரணமாகத் திகழ்பவர், திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.

Vettaiyaadu Vilaiyaadu

இவரின் முதல் திரைப்படம் `மின்னலே'. அதை அவரே இந்தியிலும் இயக்கினார். இரண்டாவது திரைப்படம் `காக்க காக்க' தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், `காக்க காக்க' திரைப்படம் தனி இடத்தைப் பெற்றது. காரணம், கதாநாயகனுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததோ, அதற்கு ஈடாக வில்லனின் பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அதனாலேயே ரசிகர்களை அந்தப் படம் பெரிதாகக் கவர்ந்தது. `காக்க காக்க' திரைப்படம் தந்த வெற்றி, தனக்கு உலகநாயகன் கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பைக் கொடுக்கும் என கெளதம் வாசுதேவ் மேனனே அறிந்திருக்க வாய்ப்பில்லை.

காவல்துறை அதிகாரியின் மகள் கடத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட வழக்குதான் கதை. அதை நோக்கி விரியும் திருப்பங்கள்தான் திரைக்கதை. தமிழ் சினிமாவில் பலமுறை பார்த்து ரசித்த போலீஸ் கதைதான் என்றாலும், கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படத்தை நமக்கு வழங்கியவிதம் இன்றளவும் பேசப்படுகிறது. `ஹாலிவுட் ஸ்டைல் திரைப்படம்' எனப் பலரும் சொல்வதுண்டு. அப்படியொரு ஹாலிவுட் ஸ்டைலில் போலீஸ் திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப கொடுத்ததின் மூலம் கெளதம் வாசுதேவ் மேனன் தனக்கென தனி முத்திரையைப் பதித்தார்.

தான் எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே கமல் ஹாசன் ஆகிவிடுவார் என்பது உலகறிந்த உண்மை. இளம் தலைமுறையினர் பலரையும் `வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் மூலம் கமல்ஹாசன் தன் ரசிகர்களாக மாற்றினார். ஆம், உண்மையிலே `வேட்டையாடு விளையாடு' திரைப்படம் வாயிலாக அஜித், விஜய், விக்ரம், சூர்யா என இளம் நடிகர்களுக்கு மிகுந்த டஃப் கொடுத்தார் என்பதுதான் உண்மை. காரணம், கமல்ஹாசன் கதாபாத்திரத்தை கெளதம் வாசுதேவ் மேனன் நமக்குக் காண்பித்த விதம் அப்படி.

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே “என் கண்ணு வேணும்னு கேட்டியாமே... இப்போ நானே வந்திருக்கேன் எடுடா பாப்போம்” என கர்ஜித்ததில் தொடங்கி, இறந்துபோன தன் மனைவியின் அருகில் கண்ணீர்விட்டு கதறியதாகட்டும் படத்தின் இறுதிக்காட்சியில் வில்லன்களில் ஒருவரை அடித்து வீழ்த்திவிட்டு “சின்னப் பசங்களா யார்கிட்டடா விளையாடுறீங்க?” என வசனம் பேசுவதாகட்டும் அனைத்திலுமே இதுவரை பார்த்திராத கமல் ஹாசனைத்தான் நம் பார்த்தோம். அவ்வளவு ஏன், இன்றும்கூட கமல் ஹாசனின் ட்வீட்களின் தொகுப்பாகப் பரவப்படும் மீம்ஸ்களுக்கு `வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் காட்சிகளைத்தான் நெட்டிசன்கள் அதிகமாகவே உபயோகிக்கிறார்கள். கமல் ஹாசன் பாத்திரத்தை அந்த அளவுக்கு பார்த்துப் பார்த்து வடிவமைத்திருப்பார் கெளதம் வாசுதேவ் மேனன்.

Vettaiyaadu Vilaiyaadu

ஒரு குழந்தையின் தாயாகவும் விவாகரத்தான மனைவியாகவும் ஆராதனாவாகவே ஜோதிகா நமக்குக் காட்சியளித்தார். கமல் ஹாசன் தன் காதலைச் சொல்லுமிடத்தில் தயக்கத்துடன்கூடிய முகபாவங்களின்மூலம் தன் முதிர்ச்சியான நடிப்பை ஜோதிகா தந்திருந்தார். மிகச்சில காட்சிகளிலேயே வந்திருந்தாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது கமலினி முகர்ஜியின் கதாபாத்திரம்.

வலுவான திரைக்கதைக்குக் கூடுதல் வலுசேர்ப்பதாக அமைந்தது, ஹாரிஸ் ஜெயராஜின் பின்னணி இசை. தாமரையின் பாடல் வரிகளை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது. `மாவீரமும் ஒரு நேர்மையும் கைகோத்துக்கொள்ள, அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் சொல்ல' என தனித் தமிழிலேயே அமைந்த பாடல் வரிகள், அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி இருந்தன. சென்னை, மதுரை, கோவா, நியூயார்க் என அனைத்து நகரங்களையும் அதன் அழகியலோடு படம்பிடித்துக் காண்பித்தது ரவிவர்மனின் கேமரா.

பொதுவாகவே, கெளதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்கள் A சென்டர் ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கும் எனப் பரவலான ஒரு கண்ணோட்டம் உண்டு. ஆனால், அவை அனைத்தையும் உடைக்கும்விதமாக அனைத்து தரப்பு ரசிகர்-ரசிகைகளுக்கும் பிடித்தமான திரைப்படமாக அமைந்தது `வேட்டையாடு விளையாடு'. எனினும் படத்தில் அமுதன், இளமாறன், ஆராதனா என அழகு தமிழில் பெயர்கொண்ட கதாபாத்திரங்கள் திரைப்படத்தில் உச்சரித்தது ஆங்கில வசனங்களைத்தான்.

எப்படியிருந்தாலும் தமிழ் சினிமாவில் போலீஸ் வகையிலான திரைப்படங்களுக்கு வித்தியாசமான திரைக்கதை அமையுமாறு வழிவகுத்த திரைப்படம் `வேட்டையாடு விளையாடு'.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்