வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (01/12/2017)

கடைசி தொடர்பு:17:37 (01/12/2017)

எம்.ஜி.ஆரை நடிகராக அறிமுகப்படுத்திய எல்லீஸ்! அமெரிக்கர், தமிழ் சினிமா இயக்கிய கதை #MemoriesOfEllisRDungan

எல்லிஸ் ரோட்ரிக் டங்கன், இன்றைய இளம் சினிமா பிரியர்கள், வெறியர்கள் என பலரும் அதிகம் கேள்விப்படாத சினிமா பிரபலம். எல்லிஸ் ஆர்.டங்கன் என்று அழைக்கப்படும் இவர், அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஆனால், தமிழ்த்திரைப்பட இயக்குநர்! தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னன் எம்.ஜி.ஆர், நடிகராக அறிமுகமான முதல் படம் ‘சதிலீலாவதி’. இதை இயக்கியவர் டங்கன். எம்.ஜி.ஆரின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த ‘மந்திரி குமாரி’ படத்தை இயக்கியவரும் இவரே!

அமெரிக்காவிலுள்ள ‘யூனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா’வில் சினிமா துறையில் பட்டம் பெற்ற இவர், தன்னுடன் படித்த இந்திய நண்பர் மாணிக் லால் தண்டான் விடுத்த அழைப்பை ஏற்று, 1935-ல் இந்தியா வந்தார். கே.பி.சுந்தராம்பாள் நடித்த ‘நந்தனார்’ படத்தை மாணிக் லால் இயக்கினார். இதன் ஷூட்டிங், கல்கத்தாவில் நடைபெற்றபோது, அதைப் பார்வையிட வந்திருந்தார் தயாரிப்பாளர் மருதாச்சலம் செட்டியார். அப்போது, டங்கனை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார் மாணிக் லால். இதையடுத்து, எஸ்.எஸ்.வாசனின் ‘சதிலீலாவதி’ நாவலைத் தழுவி, மருதாச்சலம் செட்டியாரின் தயாரிப்பில் டங்கனின் முதல் படமான ‘சதிலீலாவதி’ படமாக்கப்பட்டது.

தமிழ் சினிமாவின் முதல் ஹீரோவான தியாகராஜ பாகவதரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்திய படம், டங்கன் இயக்கத்தில் வெளிவந்த ‘அம்பிகாபதி’.  டி.எஸ்.பாலைய்யா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மருதம் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் வெளிவந்த அந்தப் படம், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வந்த படங்களில் முக்கியமான வெற்றிப் படமும்கூட. முதன் முதலில் இசையமைப்பாளரின் பெயர் டைட்டில் கார்டில் போடப்பட்ட படமும் அதுவே!

எல்லிஸ்

தொடர்ந்து, தமிழில் பல படங்களை இயக்கிய டங்கன் இந்தியில் ‘மீராபாய்’ படத்தை இயக்கினார். இந்து புராண கதாபாத்திரங்களைக் கொண்ட கதைகளையே அதிகம் இயக்கியுள்ளார் டங்கன். அதனால் இந்துக் கோயில்களில் படப்பிடிப்பை நடத்தவேண்டும் என்ற விருப்பம் அவருக்கு அதிகம் உண்டு. அந்தக் காலகட்டத்தில் இந்து அல்லாதவர்கள், இந்துக் கோயில்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பதால், தன்னை ‘காஷ்மீரி பண்டிட்’ போல காட்டிக்கொண்டு படப்பிடிப்பை நடத்திவிடுவாராம். நவீன ஓப்பனைகள், கேப்ரே டான்ஸ், மொபைல் கேமரா (அதற்கு முன் ஒரே இடத்தில் கேமராவை நிறுத்தி வைத்து படம் பிடிக்கப்பட்டது) போன்ற பல தொழில்நுட்பங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் டங்கனையே சேரும்.

1950-ல் வெளியான ‘பொன்முடி’ படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளை படமாக்கி கடும் விமர்சனத்துக்குள்ளானார். அமெரிக்க கலாசாரத்தை இந்திய மக்கள் மனதில் விதைக்கிறார் என்றெல்லாம் பத்திரிகையாளர்களின் பாய்ச்சலுக்கு ஆளானார் டங்கன். அதே ஆண்டில் குண்டலகேசி காப்பியத்தைத் தழுவி, மு.கருணாநிதியின் திரைக்கதையில், எம்.ஜி.ஆரின் வாள் சண்டையுடன் வெளியான ‘மந்திரி குமாரி’ வசூலில் சக்கைபோடு போட்டு வரலாறு படைத்தது. இதுதான் டங்கன் தமிழில் இயக்கிய கடைசிபடம். இதற்குப் பிறகு, அமெரிக்காவிலுள்ள வர்ஜினியா நகருக்குக் குடிபெயர்ந்த டங்கன், அடுத்த 30 ஆண்டுகள் ஆங்கில டாக்குமென்டரி படங்களை எடுத்து வந்தார். 2001-ஆம் ஆண்டு, இதே நாள் (டிச.1) தன் 92-வது வயதில் உயிர் நீத்தார் டங்கன்.

இந்திய மொழிகளில் அத்தனை பரிச்சயமில்லாமல், தமிழ் சினிமாவில் சுமார் 13 படங்களை இயக்கிய டங்கன், ஓர் ஆச்சர்யம்தான்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்