Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

''சத்யஜித் ரே... புல்லின் நுனியில் உறங்கும் பனித்துளி!" #HBDSatyajitRay

''நானறிந்த சிறந்த இந்தியத் திரைப்படம், 'பதேர் பாஞ்சாலி'தான். அதைவிடவும் இந்தியாவில் ஒரு சிறந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது என்று நான் கருதவில்லை. உண்மையும் எளிமையும் நிரம்பியிருக்கும் அந்தப் படத்தில்தான், இந்திய நிலவெளியின் ஆன்மா வெளிப்பட்டிருக்கிறது. நான் ஒவ்வொரு முறை திரைக்கதை எழுதத் தொடங்கும் முன்பாகவும் சத்யஜித் ரே இயக்கிய 'பதேர் பாஞ்சாலி'யைப் பார்த்துவிடுவேன்”

- மொஹ்சன் மக்மல்பஃப் (ஈரானிய திரைப்பட இயக்குநர்)

உலக திரைப்பட அரங்கில், இந்தியத் திரைப்படங்களுக்கு முதல்முதலாக அங்கீகாரம் பெற்றுத்தந்த ஒப்பற்ற திரை மேதை, சத்யஜித் ரே. இவரது திரைப்படங்களுக்குப் பிறகே இந்தியாவின் மீது பெருவாரியான உலக இயக்குநர்களுக்கு ஆர்வம் உண்டானது. சம காலத்தின் மிக முக்கியமான இயக்குநராகக் கருதப்படும் வெஸ் ஆண்டர்சனில் தொடங்கி பலரும், ரேயின் திரைப்பட தாக்கத்துக்குள்ளாக்கியிருக்கின்றன.  

''சத்யஜித் ரேயின் திரைப்படங்களை ஒருவர் பார்த்திருக்கவில்லை என்றால், அவர் சூரியனையும், நிலவையும் கண்டிராமல் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம்" என அகிரா குரோசாவா ரேயின் திரைப்படங்களுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். சத்யஜித் ரே ஒரு திரைப்பட இயக்குநர் என்பதைக் கடந்து, மிகச் சிறந்த எழுத்தாளராகவும், ஓவியராகவும், இசையமைப்பாளராகவும் பன்முக ஆற்றல்கொண்ட மனிதர்.

சத்யஜித் ரே

இந்திய கிராமங்களின் எளிய முகத்தை முழு எதார்த்தத்தோடும், அந்த மனிதர்களின் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை அழகியலோடும் தனது திரைப்படங்களில் பதிவுசெய்த சத்யஜித் ரே, முழுக்க முழுக்க நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். அவரது திரைப்படங்களில் பெரும்பாலானவை நாவல்களிலிருந்து உருப்பெற்றவை. புத்தகப் பிரதிகளின் வழியாகவே இந்திய கிராமிய மனங்களில் உருக்கொண்டிருக்கும் இலகு தன்மையையும், எளிமையையும் ரே கண்டடைந்தார்.

1921-ம் ஆண்டு மே 2-ம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர், சத்யஜித் ரே. இவரது குடும்பம் நீண்டநெடிய கல்வியறிவும், சமூக சீர்த்திருத்த நடவடிக்கைகளில் பங்குகொண்ட வரலாற்றையும் கொண்டது. ரேயின் தாத்தாவான உபேந்திர கிஷோர் ரே பலதுறை அறிவுகொண்டவராக இருந்தார். எழுத்தாளர், ஓவியர், பதிப்பாளர் என்பதோடு, 'பிரம்ம சமாஜ்' இயக்கத்தின் தலைவராகவும் விளங்கினார். சத்யஜித் ரேயின் தந்தையும் மிகச் சிறிய அளவில் இலக்கியப் பங்காற்றியவர்தான்.

ரேவுக்கு மூன்று வயதிருக்கும்போது, அவரது தந்தை நோய்வாய்ப்பட்டு காலமாகிவிட்டார். இதனால், ரேயின் குடும்பம் தாயின் வருமானத்தில்தான் வளர்ச்சியுற்றது. சிறுவயதிலேயே வறுமையை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறார், ரே. பள்ளிக் கல்வியை முடித்ததும், தாயின் வற்புறுத்தலுக்கு இணங்கி, தாகூரின் 'சாந்தி நிகேதன்' பல்கலைகழகத்தில் சேர்ந்து ஓவியக் கலை பயில்கிறார்.

இதன் பின், புத்தக அட்டைகளுக்கு ஓவியம் வரைந்து கொடுக்கும் பணியில் ரே தன்னை இணைத்துக்கொண்டார். ஜவஹர்லால் நேருவால் எழுதப்பட்ட 'டிஸ்கவரி ஆஃப் இந்தியா', விபூதிபூஷண் பந்தோபாத்யாவின் நூல்கள் எனப் பல புத்தகங்களுக்கு முன் அட்டைகளை சத்யஜித் ரே வரைந்து கொடுத்துக்கொண்டிருந்தார்.

பதேர் பாஞ்சாலி நாவலை எழுதியவர், விபூதிபூஷண் பந்தோபாத்யா. முன் அட்டை வரைவதற்குத் தன்னிடம் வந்து சேர்ந்த பதேர் பாஞ்சாலியை ரே படிக்கிறார். அந்த நாவல் அவரை வெகுவாகப் பாதிக்கிறது. 'அப்பு' என்கிற எளிய கிராமியச் சிறுவன் ஒருவனைப் பின்தொடர்ந்து செல்லும் அந்த நாவல், இந்திய கிராமங்களின் அசலான வாழ்க்கையைக் கொண்டிருந்தது. சத்யஜித் ரே அப்போதே அந்த நாவலைக் காட்சிரீதியிலாக தமது மனதினுள் தீட்டிப் பார்த்தார். பிற்காலங்களில் மிகச்சிறந்த மேதையெனப் போற்றப்பட்ட ரேவின் திரை ஆளுமை விழித்துக்கொண்ட புள்ளிகளில் இதுவும் ஒன்று.

சத்யஜித் ரே

பிரான்ஸ் தேசத்து இயக்குநரான ழான் ரெனவர், தனது 'ரிவர்' திரைப்படத்தை இயக்குவதற்காக கொல்காத்தாவுக்கு வருகை புரிகிறார். சத்யஜித் ரேவிற்கு அந்தப் படப்பிடிப்பை காணும் சந்தர்ப்பம் கிடைக்கிறது; பார்க்கிறார். அவரது மனதில் ஊர்ந்துகொண்டிருந்த திரைக் கலைஞனை இந்தப் படப்பிடிப்பு தளம் கிளர்த்திவிடுகிறது. ரே, ரெனவரிடம் அறிமுகம் செய்துகொள்கிறார். தனக்கு இருக்கும் திரைப்பட வேட்கையை அவரிடத்தில் பகிர்ந்துகொள்கிறார்.  

1950-ம் ஆண்டில் பணி நிமித்தமாக லண்டனுக்குச் செல்லும் சத்யஜித் ரேவுக்கு அங்குதான், 'பைசைக்கிள் தீவ்ஸ்' திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு உண்டாகிறது. இத்தாலியன் நியோ ரியலிஸ பாணி திரைப்படம் என வகைப்படுத்தப்படுகிற அந்தத் திரைப்படம் ரேவுக்குத் திரைப்படங்கள் சார்ந்த புரிதலை மேலும் அதிகரிக்கச் செய்தது. மிக எதார்த்தமாக, திரைக் கலைஞர்கள் அல்லாத அசலான மனிதர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட அத்திரைப்படத்தால், ரே வெகுவாகக் கவரப்பட்டார். இந்தியாவுக்குத் திரும்பியதும் 'பதேர் பாஞ்சாலி' திரைப்பட வேலைகளைத் தொடங்குகிறார்.

பொதுவாக இந்தியத் திரைப்பட வரலாற்றினை ரே வருகைக்கு முன், ரே வருகைக்குப் பின் என இரு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள், திரைப்பட வரலாற்றாளர்கள். புராணக் கதைகளை அரங்கேற்றம் செய்து பதிவு செய்யப்பட்ட முறையைத் தொடக்கமாகக் கொண்டு, நாடகத்தனமாக மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த இந்தியத் திரைப்படங்களின் வழமையில் இருந்து மாறி, இயல்பாகவே தன்னை விடுவிடுத்துக்கொண்டார், ரே. காட்சிரீதியிலான அணுகுமுறையே திரைக்கலைக்கு உரித்தான கதைசொல்லும் முறை என்பதில் தீர்மானமாக இருந்த ரே, தனது படங்களில் அதனை செயல்படுத்தியும் காட்டினார். ஸ்டூடியோக்களில் புழங்கும் மனித குவியத்துக்கிடையில் நிகழ்த்திப் பதிவு செய்யப்படும் வழக்கத்துக்கு மாறாக, தான் தேர்வுசெய்த பதேர் பாஞ்சாலிக்கான நிலவெளியை கிராமங்களில் தேடிக் கண்டடைந்தார்.

கொல்காத்தாவுக்கு அருகில் இருந்த போரல் என்ற கிராமத்தைத் தேர்வுசெய்து படப்பிடிப்பைத் தொடங்கினார். புகழ் பெற்றிராத திரைக் கலைஞர்களையும், அசலான கிராமத்து மனிதர்களையும் தமது கதாபாத்திரங்களாக நடிக்கச் செய்தார். கிராமத்து மண் பாதையும், பறந்து அலையும் தும்பிகளும், பல ரகசியங்களைத் தன்னுள் மூடி மறைத்துக்கொண்டிருக்கும் நீர் நிலைகளும், தொலைவில் புகை பரப்பிச் செல்லும் ரயில் வண்டிகளும், சிறுவர்களைத் தன் பின்னால் இழுத்துச்செல்லும் சிற்றுண்டிக்காரர்களும் ரேயின் 'பதேர் பாஞ்சாலி'யில் இயல்பாக முகம் காட்டியிருந்தார்கள். இந்திய இசை மேதையான ரவி ஷங்கர் இந்தத் திரைப்படத்துக்கு இசையமைத்திருந்தார். சலசலத்தோடும் ஆற்று நீரைப்போல பதேர் பாஞ்சாலியில் ரவி ஷங்கரின் இசை உணர்வுகளை கிளர்த்தக்கூடிய வகையில் பிரயோகிக்கப்பட்டிருந்தது.

சத்யஜித் ரே

தனது 31 வயதில் 'பதேர் பாஞ்சாலி'யைத் துவங்கிய சத்யஜித் ரே, அப்படத்தை இயக்கி முடிப்பதற்குள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒருவரும் துவக்கத்தில் அந்தப் படத்துக்கு நிதியுதவி அளிக்க முன்வரவில்லை. எவ்வித சமரசமுமின்றி தனது திரைப்படத்தை உருவாக்கும் முனைப்பில் இருந்த ரே, தயாரிப்பு செலவுகளுக்கு தனது மனைவியின் நகைகளை விற்றுப் படப்பிடிப்பைத் துவங்கினார், நண்பர்களிடம் கடன் பெற்றார். பல போராட்டங்களைக் கடந்து அரசின் நிதியுதவியை சில நிபந்தனைகளின் பெயரில் கிடைக்கப் பெற்றார். 1952-ல் துவங்கப்பட்ட அத்திரைப்படம் மூன்றாண்டுகள் பல சோதனைகளைக் கடந்து 1955-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. சத்யஜித் ரே எனும் மகத்தான படைப்பாளியை இத்திரைப்படம் அடையாளம் காட்டியது.

'பதேர் பாஞ்சாலி'யைத் தொடர்ந்து 'அபரஜித்தோ', 'அபுர் சான்ஸர்' முதலிய திரைப்படங்களை இயக்குகிறார். 'பதேர் பாஞ்சாலி'யில் சிறுவனாக அறிமுகமாகும் அப்புவின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளை இத்திரைப்படங்கள் கொண்டிருந்தன. 'அப்பு தொகுதி திரைப்படங்கள்' என்று வகைப்படுத்தப்படும் இம்மூன்று திரைப்படங்களும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளைக் குவித்திருக்கின்றன. உலகெங்கிலும் ரே அறிமுகமாகிறார். அவரது திரைப்படப் பங்களிப்பு வெகுவாகப் பாராட்டைப் பெறுகிறது. ஏனெனில், எளிய இந்தியக் குடும்பமொன்றின் கதையாகக் கொள்ளப்படும் இத்திரைப்படத் தொகுதி, இந்திய நிலவெளியின் உயிர் ஆன்மா.

இயல்பான கிராமத்து சிறார்களாக புல்வெளியில் அலைந்து திரியும் அப்பு கதாபாத்திரத்தை ஏற்றிருந்த சுபீர் பானர்ஜியின் வெகுளித்தனமான முகத்தையும், அப்புவின் சகோதரி துர்காவாக நடித்த ருன்கி பானர்ஜியின் துயரம் ஊறிய முகத்தையும் ஒருபோதும் மறக்க இயலாது. 'பதேர் பாஞ்சாலி' திரைப்படத்துக்குப் பிறகு இருவரும், திரைப்படங்களிலிருந்து விலகி மிக சராசரியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். சுபீர் பானர்ஜியின் 'பதேர் பாஞ்சாலி'க்குப் பிறகான வாழ்க்கை, 'அபூர் பாஞ்சாலி' எனும் பெயரில் படமாக்கப்பட்டு 2013-ம் ஆண்டு வெளியானது.

சத்தியஜித் ரே அப்பு தொகுதி திரைப்படங்களுக்குப் பிறகு, 'சாருலதா’, ‘நாயக்’, ‘தேவி’, ‘மஹாநகர்’ உள்ளிட்ட 36 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். துவக்கத்தில் தான் கொண்டிருந்த திரைக்கலையின் மீதான எண்ணப்பாட்டினை எந்தவொரு திரைப்படத்திலும் ரே தளர்த்திக் கொண்டதில்லை. ரவிஷங்கர், விலாயர் கான், அலி அக்பர் கான் முதலிய பல இசை மேதைகள் அவரது திரைப்படங்களில் பங்காற்றியிருக்கிறார்கள். சத்யஜித் ரேவே தனது சில திரைப்படங்களுக்குப் பின்ணனி இசை அமைத்திருக்கிறார்.

சத்யஜித் ரே

வங்க இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த ரே, தமது பெரும்பாலான திரைப்படங்களை இலக்கியங்களிலிருந்து உருக்கொணர்ந்தார். அவரது திரைப்படப் பங்களிப்பினைக் கெளரவிக்கும் வகையில் 1991-ம் ஆஸ்கர் விருது அவருக்கு அளிக்கப்பட்டது. ரே சில ஆவணப் படங்களையும் இயக்கியிருக்கிறார்.

சத்யஜித் ரே திரைப்படங்களை இயக்கியதோடு, 'சந்தோஸ்' எனும் சிறுவர் இதழையும் நடத்தியிருக்கிறார். ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியிலான துப்பறியும் சாகச நாயகன் ஒருவனை 'பெலுடா' எனும் பெயரில் உருவாக்கிப் பல சாகச நாவல்களையும் சத்யஜித் ரே படைத்திருக்கிறார்.

உலகின் பல முக்கிய விருதுகள் அனைத்தையும் பெற்றிருந்த சத்யஜித் ரே, தமது 70-வது வயதில் இருதய நோயின் காரணமாக, 1992-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி உயிர் நீத்தார்.     

வங்க கவிஞரான ரவீந்திரநாத் தாகூர் சத்யஜித் ரேயின் பிறந்த நாளொன்றில் இப்படியொரு கவிதை எழுதியிருக்கிறார்.

''நான் உலகத்தின் பல நாடுகளுக்கு
சென்று வந்திருக்கிறேன்
இந்த உலகில் உள்ள 
மாபெரும் நதிகள், பறவைகள், அருவிகள்
எல்லாவற்றிலும் 
என் பாதம் பட்டிருக்கிறது
ஆனால் என் மகனே!
என் வீட்டுத் தோட்டத்திலுள்ள
புல்லின் நுனியில் உறங்கும் 
பனித் துளியை மட்டும் பார்க்கத் தவறிவிட்டேன்!”

இந்தியத் திரைப்பட வரலாற்றில் ரேவின் பங்களிப்பு மகத்தானது. நரைத்த தலை கேசமும், நெடிதுயர்ந்த தோற்றமும், வெண்ணுடையும், விரல்களுக்கிடையில் சுருள் சுருளாகப் புகைந்துகொண்டிருக்கும் சிகரெட்டும், காட்சி சட்டகத்தின் கோணத்தை முன்னோட்டமிடும் வியூ ஃபைண்டரும், ஆழ்ந்த ஞானம் எய்திய கண்களும்... என வசீகர தோற்றத்தைக் கொண்டிருக்கும் சத்யஜித் ரே இந்திய சினிமாவில் காட்சி ரீதியிலான சினிமா அணுகுமுறையைத் துவங்கி, திரைப்படைப்பாளிகளை கிராமங்களை நோக்கித் திருப்பிவிட்டவர்.

எதார்த்த சினிமா எனும் அலை இன்னமும் முழு தீவிரத்தில் நமக்கிடையில் எழுப்பப்படவில்லை. கொண்டாட்ட மனநிலையைத் தோற்றுவிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கும் நம் திரைப்படங்கள், நம் நிலத்தின் அசலான உயிர்ப்புத் தன்மையைப் பதிவுசெய்ய வேண்டும் என்ற கடமையை இன்னமும் கைக் கொள்ளவில்லை. வரலாற்றின் ஒரு புள்ளியில் முளைத்த எதார்த்த திரைப்படப் படைப்பாளியான ரேயின் பிறகான காலக்கோட்டில் மிக அரிதாகவே அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அசலான திரைப்படங்கள் உருவாகியிருக்கின்றன. இன்னமும் அதுவொரு பேரியக்கமாக உருவெடுக்கவில்லை.  

தனது விரல்களில் தீர்ந்துகொண்டிருக்கும் சிகரெட் வெளியிடும் புகையினூடாக ரே பார்த்துக்கொண்டிருக்கிறார். ரேயின் விதைகள் முளைக்கும் காலம் சாத்தியாகும் நிலையும் ஒருபோது உண்டாகும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். கிராமிய மண் பாதையில் தும்பிகளை விரட்டிச்செல்லும் அப்புவையும், துர்காவையும் கண்டடைய வேண்டிய பொறுப்பு, காலம்காலமாக இன்னமும் கைமாற்றம் செய்யப்பட்டபடியே இருக்கிறது. நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் ரே இன்னமும் இந்தியத் திரைவெளியில் இயல்பான வாழ்க்கையை காட்சி ரீதியிலான மேதமையோடு அணுகிய ஒற்றை இயக்குநரெனத் தனிப்பெரும் அடையாளத்துடன் தனித்து நின்றிருக்கிறார்.

தன்னிறகரற்ற கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement