வெளியிடப்பட்ட நேரம்: 19:12 (26/09/2018)

கடைசி தொடர்பு:19:12 (26/09/2018)

``ஆர்மில சேர உடம்பைக் குறைச்சேன்; ஆனா, காதலில் விழுந்துட்டேன்!" - நகுல் #10YearsOfKadhalilVizhunthen

`காதலில் விழுந்தேன்' திரைப்படம் வெளியாகி, இன்றுடன் 10 வருடங்கள் நிறைவாகியிருக்கிறது. இப்படம் குறித்த நினைவுகளைச் சொல்கிறார், படத்தின் ஹீரோ நகுல்.

``ஆர்மில சேர உடம்பைக் குறைச்சேன்; ஆனா, காதலில் விழுந்துட்டேன்!

`பாய்ஸ்’ படத்தில் `ஜுஜு' கேரக்டரின் மூலம் நடிகராக அறிமுகமானார், நடிகை தேவயானியின் தம்பி நகுல். இந்தப் படம் வெளியாகி 4  வருடங்கள் கழித்து, இவர் ஹீரோவாக நடித்த `காதலில் விழுந்தேன்' படம் ரிலீஸானது. இதில், `பாய்ஸ்' படத்தில் பப்ளி பாயாக நடித்த நகுலா இது... என ஆச்சர்யப்பட வைத்தார். இன்று 'காதலில் விழுந்தேன்’ ரிலீஸாகி 10 வருடங்கள் ஆகின்றன. நகுலிடம், `காதலில் விழுந்தேன்' நினைவுகளைக் கேட்டோம். 

```பாய்ஸ்' படத்துக்குப் பிறகு ஹீரோவாகணும்னு ஆசையா இருந்தேன். ஆனால், எனக்கு வந்த கதைகள் எல்லாமே `பாய்ஸ்' படம் மாதிரியே இருந்துச்சு. அதனால, ஆக்டிங்மேல இருந்த ஆர்வத்தை ஆர்மி பக்கமா திருப்பிட்டேன். ஆர்மில சேரணும்னு ஆசைப்பட்டு ஜிம்முக்குப் போய் வொர்க் அவுட் பண்ணினேன். அந்தச் சமயத்துலதான் `அந்நியன்' படத்தில் `காதல் யானை’ பாடலைப் பாடினேன். அந்தப் பாட்டு சம்பந்தமா ஒரு சேனலுக்குப் பேட்டி கொடுத்தேன். அந்தப் பேட்டியைப் பார்த்த இயக்குநர் பி.வி.பிரசாத் சாரோட மனைவி, `நீங்க எடுக்கப்போற படத்துக்கு `பாய்ஸ்’ படத்துல நடிச்ச பையன் சரியா இருப்பான்’னு பிரசாத் சார்கிட்ட சொல்லியிருக்காங்க. `எந்த பையன்?'னு அவர் கேட்க, `அதான் முள்ளம்பன்றி மாதிரி முடி வெச்சு நடிச்சிருப்பான்ல... அந்தப் பையன்'னு அவங்க சொன்னதும், பிரசாத் சார் செம டென்ஷன் ஆகியிருக்கார். `அவன் எவ்ளோ குண்டா இருப்பான். அவன் எப்படி இந்தப் படத்துக்கு செட் ஆவான்?’னு சொல்லியிருக்கார். `இல்லை, அந்தப் பையன் இப்போ உடம்பைக் குறைச்சிருக்கான். நீங்க பாருங்க’னு சொல்லியிருக்காங்க. பிறகு, நான் பிரசாத் சாரை சந்திச்சேன். `இன்னும் 10 கிலோ எடையைக் குறைச்சா, இந்தப் படத்துக்கு நீங்க சரியா இருப்பீங்க. இந்தப் படம் ஹிட் ஆனா, பெரிய ஹிட் ஆகும். ஃபிளாப் ஆனா, அட்டர் ஃபிளாப் ஆகும்!"னு சொன்னார். நான் உடனே ஓகே சொல்லிட்டேன். என் வாழ்க்கையிலேயே ரொம்ப சீக்கிரமா நான் எடுத்த முடிவு இதுதான். இப்படித்தான் `காதலில் விழுந்தேன்' ஆரம்பமாச்சு.

நகுல்

`காதலில் விழுந்தேன்' ஷூட்டிங்லதான், `நகுல் இவ்வளவு பண்ணுவானா?'னு நானே தெரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா, என்னோட ரியல் கேரக்டருக்கும், இந்தப் படத்துல நான் நடிச்ச சபாபதி கேரக்டருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. ஹீரோவா எனக்கு இது முதல் படம்; சுனைனாவுக்கும் இது முதல் படம். அவங்களும் ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சாங்க. படத்துல பெரும்பாலும் சுனைனாவை முதுகுல தூக்கி வெச்சுக்கிட்டு ஓடிக்கிட்டே இருப்பேன். நான் ஓடும்போது என் கை சுனைனாவோட வயித்துல அடிக்கும். அதையெல்லாம் அவங்க தாங்கிக்கிட்டு நடிச்சாங்க. எங்க ஜோடிப் பொருத்தமும் மக்களுக்குப் பிடிச்சிருந்தது. `மாசிலாமணி' படத்திலும் நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து நடிச்சோம். இப்போ மறுபடியும் நாங்க சேர்ந்து ஒரு படம் நடிக்கிறதுக்கான பேச்சுவார்த்தை போய்க்கிட்டிருக்கு. சீக்கிரமே எங்க காம்போவுல மூணாவது படம் வரும்.’’

``சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் படத்தில் நீங்க ஹீரோனு நினைக்கும்போது, அந்தச் சமயத்துல எப்படி இருந்தது?" 

``இந்தப் படம் ஆரம்பிக்கும்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதைத் தயாரிக்கல; உமாபதி சார்தான் தயாரிச்சார். இது ஒரு சின்ன பட்ஜெட் படமாகத்தான் ஆரம்பமாச்சு. ஆனால், அதுக்கே பலமுறை பணப் பிரச்னை வந்துச்சு. ரெண்டு நாள் ஷூட்டிங் நடக்கும்; ரெண்டு வாரம் வீட்டுல சும்மா இருப்போம். ஆனால், பிரசாத் சார் ரொம்ப உறுதியா இருந்தார். `இந்தப் படத்தை செமையா பண்றோம்; நல்லா வரும்’னு சொல்லிக்கிட்டே இருந்தார். பல சிக்கல்களுக்கு மத்தியிலதான் படத்தை முடிச்சோம். பிறகு, இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்  வெளியிட்டது. இந்தப் படத்தை வாங்குறதுக்கு முன்னாடி பல படங்களை வாங்கி எந்தெந்தப் படத்தை எப்போ ரிலீஸ் பண்ணணும்னு லிஸ்ட் போட்டு வெச்சிருந்தாங்க. இந்தப் படத்தைப் பார்த்ததும், `இதைத்தான் முதல் படமா ரிலீஸ் பண்ணணும்’னு சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு பண்ணி விளம்பரம் பண்ண ஆரம்பிச்சாங்க. அதையெல்லாம் பார்க்கும்போது, செம ஹேப்பியா இருந்தது."

நகுல், சுனைனா

``இந்தப் படத்துல பாடல்கள் எல்லாமே செம ஹிட்... பாடல்களை ஷூட் பண்ணும்போது நடந்த சுவாரஸ்யங்களை சொல்லுங்களேன்?!" 

``விஜய் ஆண்டனி சாரை எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே தெரியும். ஒருநாள் எங்க ஸ்கூல்ல இருந்த லதா மிஸ் எங்களைப் பாட வைக்க ஸ்டுடியோவுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. அன்னைக்கு எனக்குச் சின்ன கோரஸ்தான் கொடுத்தாங்க. அது எனக்கு வரவேயில்லை. டைமிங் மிஸ்ஸாகிட்டே இருந்துச்சு. அப்போ அங்க ரெக்கார்டு பண்ணிட்டு இருந்த சவுண்ட் இன்ஜீனியர்கிட்ட, `எனக்குப் பாட்டு வராதா சார்?'னு கேட்டேன். `வரவே வராது. பாட்டுல ஆர்வம் இருந்தா அதை விட்டுடு'னு சொன்னார். அந்த சவுண்ட் இன்ஜீனியர்தான், விஜய் ஆண்டனி. என் முதல் படத்தோட பாடல்களை செம ஹிட் ஆல்பமா கொடுத்த விஜய் ஆண்டனி சாருக்கு எப்போதும் நன்றி சொல்லிக்கிட்டு இருப்பேன். `நாக்க முக்கா', `உன் தலை முடி', `தோழியா என் காதலியா', `உனக்கென நான்'னு எல்லாமே ஆல் டைம் ஃபேவரைட். இந்தப் பாடல்களை ஷூட் பண்ணும்போதும் செம ஜாலியாதான் இருந்தது. 

டான்ஸ், சண்டை... எதை ஷூட் பண்ணுனாலும், என்னைச் சுத்தி உதவி இயக்குநர்கள் 5 பேர் நின்னுக்கிட்டு, `இப்படிப் பண்ணுங்க; அப்படிப் பண்ணுங்க'னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஒரு டைம்ல படத்தோட ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் சார், `ஏய் அந்தப் பையனை விடுங்கய்யா. அவன் பண்ணுவான்'னு சொன்னார். க்ளைமாக்ஸ் எடுக்கிறதுக்கு முன்னாடியும் உதவி இயக்குநர்கள் போன் பண்ணி, `சார் க்ளைமாக்ஸ்தான் படத்தோட உயிர். செமையா பண்ணிடுங்க'னு சொல்வாங்க. இப்படிப் படத்தில் வேலை பார்த்த எல்லோரும், அந்தப் படத்துக்காக அதிகம் உழைச்சோம். பல மணி நேரம் தொடர்ந்து ஷூட் பண்ணியிருக்கோம். 10 வருடம் கழிச்சு இந்தப் படத்தைப் பற்றி நினைக்கும்போது, எல்லாமே ஸ்வீட் மெமரீசா இருக்கு.’’