Published:Updated:

`` `ஒக்கடு’வில் இல்லாத `ஓட்டேரி நரி’ `கில்லி’யில் எப்படி வந்தது?’’ `கில்லி’ கதை சொல்லும் தாமு #15YearsOfGhilli

சனா

`கில்லி' திரைப்படம் வெளியாகி பதினைந்து வருடங்கள ஆன நிலையில் படம் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொள்கிறார் நடிகர் தாமு.

`` `ஒக்கடு’வில் இல்லாத `ஓட்டேரி நரி’ `கில்லி’யில் எப்படி வந்தது?’’ `கில்லி’ கதை சொல்லும் தாமு #15YearsOfGhilli
`` `ஒக்கடு’வில் இல்லாத `ஓட்டேரி நரி’ `கில்லி’யில் எப்படி வந்தது?’’ `கில்லி’ கதை சொல்லும் தாமு #15YearsOfGhilli

மகேஷ் பாபு, பூமிகா நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் `ஒக்கடு'. தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த இந்தப் படம் தமிழில் விஜய் நடிப்பில் `கில்லி'யாக ரீமேக் செய்யப்பட்டது. தரணி இயக்கிய இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். இந்தப் படம் ரிலீஸாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகியுள்ளது. `கில்லி’ படத்தில் `ஓட்டேரி நரி’யாக நடித்த நடிகர் தாமுவிடம் பேசினேன். அவர் பேசிய `கில்லி’ அனுபவத்திலிருந்து...

`` `கில்லி’ படத்தில் நடிப்பதற்காக முதலில் இயக்குநர் தரணி சார் என்னை போன் பண்ணி அழைத்தார். அந்தச் சமயத்தில் `ஜே ஜே' படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அந்தப் படத்துக்காக நிறைய முடி வளர்த்திருந்தேன். படம் முழுக்கக் குடுமியோட வரும் கேரக்டர். `சாணக்கியன் சபதம்’ போல அந்தப் படத்தில் ஒரு சபதம் எடுத்திருப்பேன். அதற்காகத்தான் அந்தக் குடுமி. 

தரணி சாரை சந்திக்கச் சென்றேன். என் முழங்கை அளவுக்கு நீண்ட முடியோடு போய் நின்ற என்னைப் பார்த்த தரணி சார், `யோவ் என்னய்யா... இவ்வளவு முடி வளர்த்து வெச்சிருக்க' என்று கேட்டார். `இந்த முடியாலயே `கில்லி’யில் நம்மால் நடிக்க முடியாமல் போய்விடுமோ' என்று மனசுக்குள் நினைத்துக்கொண்டிருந்தேன். 

என்னை சுற்றிச் சுற்றி வந்த தரணி சார், கையில் ஒரு சீப்பு எடுத்து நடு வகிடு எடுத்து ஒரு கோடு போட்டுப் பார்த்தார். பிறகு ஒரு ஹேர் ஸ்டைலிஸ்டை வரவைத்து, `இந்த முடியை வெச்சு என்ன ஹேர் ஸ்டைல் அமைக்கலாம்’ என்று மும்முரமாகப் பேசினார். அப்போது, ரத்னம் சாரின் பையன் ஒரு நாவலின் பெயரைச்சொல்லி, `அந்த நாவல்ல வர்ற கேரக்டர் போல ஹேர் ஸ்டைல் பண்ணலாம்’ என்றார்.

உடனே, என் தலைமுடியை வாரி இரண்டு பின்னல் போட்டு ஒரு குச்சியை நடுவில் செருகி நிக்க வைத்தார். அதைப்பார்த்த அனைவரும் சிரித்துவிட்டனர். `நரி மாதிரி இருக்க டா' என்று தரணி சார் சொன்னார். `ஓட்டேரி நரி மாதிரி இருக்கா சார்' என்று கேட்டேன். `அது என்னடா ஓட்டேரி' என்றார். சென்னையில் நான் இருந்த ஏரியாவில், `ஓட்டேரி நரி’ என்ற பெயரில் ஒருத்தர் வாழ்ந்திருக்கிறார் சார் என்றேன். `இந்தப் பெயர் ரொம்பப் பொருத்தமா இருக்கும். அதையே உன் படப்பெயரா வெச்சுடலாம்’ என்றார். இதுதான் நான் நரியான கதை. 

பிறகு அந்த கெட்டப்புடன் வீட்டுக்குப் போனேன். வீட்டில் இருந்தவர்கள் என்னைப்பார்த்துச் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஒருவழியாக ஷூட்டிங்கும் தொடங்கியது. மகாபலிபுரத்தில் பெரிய செட். விஜய் சார் வந்தார். `இது என்ன கெட்டப், புதுசா இருக்கு’ என்று அவரும் விசாரித்தார். சுற்றியிருந்த ஆடியன்ஸ் எல்லோரும் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். படத்தில் எனக்கு சென்னை ஸ்லாங். அந்த பாஷை பேசி நடிப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. ஏனெனில் அதுதான் என் தாய்மொழி என்றுகூட சொல்லலாம்.

கபடி பிராக்டீஸ் விஜயா வாகிணி ஸ்டூடியோவில் தினமும் மாலை நடக்கும். விஜய் உட்பட படத்தில் நடித்த எல்லோரும் பிராக்டீஸ் செய்வோம். ரியல் கபடி வீரர்கள் எங்களுக்கு பிராக்டீஸ் கொடுத்தனர். கபடி விளையாடுற நிறைய வீரர்களின் கை, கால் அசைவுகளை உன்னிப்பாகக் கவனிப்போம்.

படம் இந்தளவுக்கு வெற்றி அடைந்ததற்கு விஜய்தான் முக்கியமான காரணம். அவருடைய அர்ப்பணிப்பு அதிகம். அவர் ரியல் கபடி வீரர் மாதிரியே பயிற்சி எடுத்து முழு மூச்சாக விளையாடினார். அவரின் ஆர்வத்தைப் பார்த்து நாங்களும் கபடியைக் கற்றுக்கொண்டு நடித்தோம். 

பிரகாஷ்ராஜ் சாருக்கு அந்த ஸ்லாங் சரியாக வராது. அவரும் சென்னை ஸ்லாங் பேச முயற்சி பண்ணுவார். `டேய் நான் பேசுறேன். சரியா வருதானு பார்த்துச் சொல்லு’ என்பார். என்னிடம்தான் கற்றுக்கொண்டார் என்றே சொல்லலாம். சாலிகிராமத்தில் அவர் என் பக்கத்து வீட்டுக்காரர். நல்ல நண்பர். ஷூட்டிங் ஸ்பாட் வந்தால் கேரக்டராகவே மாறிவிடுவார். அவருடன் `கில்லி’யில் நடித்தது நல்ல அனுபவம். 

விஜய்யுடன் கிட்டத்தட்ட முப்பது படங்களுக்கும் மேல் நடித்துள்ளேன். அவர் என்னை எப்போதும், `தாமு’ என்றுதான் அழைப்பார். ஆனால், இந்தப் படத்துக்குப் பிறகு இன்றுவரை `நரி’ என்றுதான் கூப்பிடுகிறார். `என்ன நரி நல்லாயிருக்கியா’ என்றுதான் பேச்சை ஆரம்பிக்கிறார். விஜய் சாருடன் சேர்ந்து நடித்த கடைசிப் படம் அதுதான். 

தெலுங்கு `ஒக்கடு' படத்தில் என் கேரக்டரே கிடையாது. `கில்லி' படத்துக்காக இந்த கேரக்டரை தரணி சார்தான் உருவாக்கினார். படம் ரிலீஸுக்குப் பிறகு பலரும் என்னை `நரி’ என்றுதான் கூப்பிட்டனர். குறிப்பா என் குழந்தைகள். அவர்கள் 13 வருடங்கள் கழித்து பிறந்த இரட்டைக் குழந்தைகள். `அப்பா’ என்று கூப்பிட்டு நான் திரும்பிப்பார்க்கவில்லை உடனே `நரி' என்றுதான் கூப்பிடுகிறார்கள். அந்தளவுக்குக் குழந்தைகள் மத்தியிலும் இந்த கேரக்டர் பிரபலம்.

இப்படி `கில்லி' படம் என் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல!” என்று முடித்தார்.

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..