Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினி கொடுத்த பரிசு, கமல் கண்ணீர்- உச்சநட்சத்திரங்கள் உருகிய தருணம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு வந்து 40 வருடங்கள் ஆனதையொட்டி கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் திரைத் துறையில் கமல் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததைக் கௌரவிக்கும் விதமாக 2010ம் ஆண்டு நடைபெற்ற பாராட்டு விழாவில் இருந்து சில காட்சிகள்..

தமிழ்த் திரையுலகமே திரண்டு வந்து 'கலைத் தாயின் தவப் புதல்வன்' என்று கமலை உச்சி மோந்த அந்த விழாவில் மேடையேறினார் ரஜினி.  ''நான் அடிக்கடி யோசிப்பேன். இங்கே நான், மோகன்லால், மம்மூட்டி, வெங்கடேஷ், சரத்குமார் மாதிரியானவங்களை கலைத் தாய் தன் கையைப் பிடிச்சு அழைச்சுட்டுப் போறா. ஆனா, கமலை மட்டும் தோள்ல தூக்கிவெச்சு மார்போடு அணைச்சுட்டுப் போறா. நான் கலைத் தாய்கிட்டே கேட்டேன், 'ஏம்மா, இது உனக்கே நியாயமா? நாங்களும் உன் குழந்தைங்கதானே... அப்புறம் ஏன் இந்தப் பாரபட்சம்?'னு. அதுக்கு கலைத் தாய் சொன்னாங்க... 'ரஜினி! நீ போன ஜென்மத்துலதான் நடிகனாகணும்னு ஆசைப்பட்டே. ஆனா, கமல் ஒரு ஜென்மத்துல டான்ஸ் மாஸ்டர், இன்னொரு ஜென்மத்துல அசிஸ்டென்ட் டைரக்டர், வேறொரு ஜென்மத்துல நடிகர், இன்னும் ஒரு ஜென்மத்துல டைரக்டர்னு கடந்த 10 ஜென்மங்களா போராடிட்டு இருக்கான். அதனாலதான் கமலைத் தோளில்வெச்சுக் கொண்டாடுறேன்!'னு சொன்னா. கமல் வாழ்ந்த காலத்தில், கமல் நடித்த காலத்தில் நானும் வாழ்ந்தேன், நானும் நடித்தேன்கிற பெருமையே போதும்!' என்று படபடவெனத் தன் பாணியில் ரஜினி பாராட்டி அமர, கமல் கண்களில் கண்ணீர்த் திரை. தொடர்ந்து மேடையில் இருவரும் கட்டியணைத்துக் கண்ணீரில் கரைந்த அந்தக் கணங்கள் நட்பு இலக்கணத்துக்கான அபூர்வ அத்தியாயங்கள்.ஆனால், அத்தியாயம் அதோடு முற்றுப் பெறவில்லை. விழா முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகும் ரஜினியின் மனதில் நீங்காத நினைவலைகள். சட்டென்று முடிவெடுத்து, ஒரு பிரபல ஓவியரிடம் தனது மனதில் தோன்றிய எண்ணத்தைச் சொல்லியிருக்கிறார். கலைத் தாய் கமலைத் தன் தோளில் தூக்கிக்கொண்டு சிரஞ்சீவி, மோகன்லால், விஷ்ணுவர்தன், ரஜினி, அமிதாப் பச்சன் ஆகியோரைத் தன் கைப்பிடித்து அழைத்துச் செல்வது போன்ற ஓவியத்துக்கு உயிர் கொடுப்பதுதான் ரஜினியின் திட்டம். குழந்தை உடலில் இவர்களது இளமைக் காலத் தத்ரூப முகங்கள் வர வேண்டுமென்பது மாஸ்டர் பிளான். கமலுக்கு இந்த ஓவியம்பற்றிய தகவல் சென்றுவிடக் கூடாது என்று கண்டிப்பான உத்தரவிட்டிருக்கிறார் ரஜினி. 30 இஞ்ச் அகலமும், 40 இஞ்ச் உயரமுமாக ஓவியம் முழுமையடைந்தபோது ரஜினி முகத்தில் பரம திருப்தி.

கடந்த வாரத்தில் ஒருநாள் கமலுக்கு அந்த அன்புப் பரிசை அனுப்பி இருக்கிறார் ரஜினி. பார்சலைப் பிரித்து ஓவியத்தைப் பார்த்த கமல் நெகிழ்ந்துவிட்டார். சில நிமிடங்கள் ஓவியத்தை உற்றுப்பார்த்தவர் கண்களில் மெல்லிய கண்ணீர்த் திரை. உடனே, ரஜினியைத் தொடர்பு கொண்டார் கமல். ''ஹாய் கமல், எப்டி எப்டி? நல்லா இருந்துச்சா? ஆர் யூ ஹாப்பி?'' என்று ஆர்வமும் எதிர்பார்ப்புமாக விசாரித்திருக்கிறார். நெகிழ்வும் மகிழ்வுமாகப் பதில் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார் கமல்.

''சிவாஜி, நாகேஷ் இவங்க ரெண்டு பேர் படம்தான் இதுவரை என் ஆபீஸ்ல மாட்டியிருக்கேன். இனி, ரஜினியின் இந்தப் பரிசுக்கும் என் ஆபீஸ்ல ஓர் இடம் நிரந்தரம்!'' என்று மனம் திறந்திருக்கிறார். உயிரைக் குழைத்து வரைந்த அந்த ஓவியம் ரஜினி - கமலின் நட்பின் நினைவுச் சின்னமாக கமலின் அலுவலகத்தில் மின்னிக்கொண்டு இருக்கிறது.

- எம்.குணா

படம்: கண்பத் மோகன்

 

இதோ இப்போது ரஜினியின் 40வது ஆண்டுவிழா. ரஜினிக்கு இப்போது என்ன பரிசு தர காத்திருக்கிறார் கமல்?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
[X] Close