இணையத்தைக் கலக்கும் மேக்கிங் ஆஃப் தில்லானா மோகனாம்பாள்! (வீடியோ இணைப்பு)

மேக்கிங் ஆப் பாகுபலி யை பார்த்திருக்கிறீர்கள்... மேக்கிங் ஆஃப் 'தில்லானா மோகனாம்பாள்' பார்த்திருக்கிறீர்களா..? ஹாலிவுட்டில், அந்நாளிலிருந்தே மேக்கிங் எனப்படும் ஒரு படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பதிவு செய்யும் வழக்கம் உண்டு. 70 களின் மத்தியில் தயாரான ஜாக்கி ஜானின் திரைப்படங்களில் இவ்வாறு எடுக்கப்பட்ட காட்சிகள் செருகப்பட்டு, படத்தின் வெற்றிக்கு சாமர்த்தியமாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த உத்தி தமிழ் சினிமாக்களில் ஆரம்பநாளில் காணப்படவில்லை. பின்னாளில்தான் இம்மாதிரி உத்தி பிரபல கதாநாயகர்களின் படங்களில் பயன்படுத்தப்பட்டது.

  அதுநாள்வரை புகைப்படங்களாக, படப்பிடிப்புக் காட்சிகளை பதிவு செய்வதோடு சரி.....ஆனால் ஆச்சர்யமாக தமிழகத்தில் 1968 ல் தயாரான, சிவாஜியின் வெற்றிப்படங்களில் ஒன்றான தில்லானா மோகனாம்பாளின் படப்பிடிப்பு காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை எடுத்தது அதன் படப்பிடிப்புக் குழு அல்ல. தமிழகத்தில் சினிமா தயாரிப்பு குறித்து பார்வையிடுவதற்காக அப்போது வெளிநாட்டிலிருந்து வந்த ஒரு குழு. லுாயிஸ் மேள் என்பவரால் எடுக்கப்பட்ட இந்த டாக்குமென்டரியில், தில்லானா மோகனாம்பாள் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சுமார் 4 நிமிடங்களுக்கு நகர்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப் பேரொளி பத்மினி நடித்து, 1969 ல் வெளியான வெற்றிப்படம் 'தில்லானா மோகனாம்பாள்'.

 

ஆனந்தவிகடனில் கொத்தமங்கலம் சுப்புவால் எழுதப்பட்டு, அப்போதைய விகடன் வாசகர்களை வாராவாரம் ஆவலோடு எதிர்பார்க்கவைத்து படிக்கப்பட்ட நாவல் அது. கொத்தமங்கலம் சுப்புவின் இந்த நாவலை ஜெமினி நிறுவனமே தயாரிக்க இருந்த நிலையில், இயக்குனர் ஏ.பி நாகராஜன் சினிமாவாக தயாரிக்க முன்வந்தார். தானே அப்படி ஒரு திட்டம் வைத்திருந்த நிலையில் ஏ.பி.நாகராஜனின் ஆர்வத்தை கண்டு அவருக்கு விட்டுக்கொடுத்தார் ஜெமினி அதிபர் வாசன். ஆரம்ப காலங்களில் சமூக படங்களை எடுத்து பின்னாளில் திருவிளையாடல் உள்ளிட்ட படங்களை எடுத்து புகழ்பெற்றவர் ஏ.பி நாகராஜன். அவரது ஆசைக்கு குறுக்கே நிற்காமல், அந்த படத்தின் உரிமையை அவருக்கு விட்டுக்கொடுத்தார் வாசன். உண்மையில் அந்த நாவலின் உரிமை கொத்தமங்கலம் சுப்புவிடம் இருந்தது.

ஆனந்த விகடனில் இடம்பெற்றதால் வாசன், சுப்புவின் அனுமதியுடன் அதை ஏ.பி.என்- க்கு விட்டுக்கொடுத்தார். இங்கு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடவேண்டும். சினிமா அனுமதி தொடர்பாக வாசன், ஏ.பி. என்.னிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டார். வாசனின் அனுமதி கிடைத்தவுடன் நேரே ஏ.பி.என் கார் சென்றது கொத்தமங்கலம் சுப்புவின் வீட்டுக்கு. சுப்புவை வணங்கிவிட்டு, நாவலின் ஆசிரியர் என்ற முறையில் 10 ஆயிரம் ரூபாய்க்கான செக் ஒன்றை சுப்புவிடம் நீட்டினார் ஏ.பி. என். ஆனால் அதை மறுத்த சுப்பு, "நீங்கள் வருவதற்கு கொஞ்சநேரம் முன்புதான் வாசன் அவர்கள் என் வீட்டிற்கு வந்தார். நாவலை நீங்கள் படம் எடுக்கப்போகும் தகவலை சொல்லி, அதற்கான தொகையை கொடுத்துவிட்டு சென்றார்“ என்றார். ஆச்சர்யத்தின் உச்சிக்கு சென்றார் ஏ.பி.என்.

தன்னிடம் கொடுத்த பணத்தை கொஞ்சமும் தாமதிக்காமல் எழுத்தாளரிடம் கொண்டு சேர்த்த வாசனை பாராட்டுவதா அல்லது இவ்வளவு பெரிய தொகையை வாங்கிக்கொள்ளாமல், தனக்குரிய பணம் வந்த தகவலை மறைக்காமல் கூறிய சுப்புவை பாராட்டுவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்ததுபோனார் ஏ.பி. என். இதுதான் அன்றைய பட உலகம். இத்தகைய புகழ்பெற்ற படத்தின் காட்சிகள்தான் வெளிநாட்டு டாக்குமென்டரி குழுவினரால் படம்பிடிக்கப்பட்டது. இந்த காட்சிகளை பார்ப்பது நம்மை அந்த காலத்திற்கு அழைத்துச்செல்கிறது. சென்னையில் தயாராகும் சினிமா என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட இந்த டாகுமண்டரி படக் காட்சிகள் இப்போது காணக்கிடைப்பது சுவாரஸ்ய அனுபவம். காட்சிகளிடையே சென்னை சினிமா குறித்த வர்ணனை பின்னணியில் இடம்பெறுகிறது.

அந்த வீடியோ இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!