வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (01/10/2015)

கடைசி தொடர்பு:12:13 (01/10/2015)

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.. தமிழ் சினிமா உள்ளவரை என்றும் உயிரோடு வாழும் ஒரு சரித்திரம்,

சிவாஜி கணேசன்! ஒப்பிட முடியா நடிப்பாலும், அயரா உழைப்பாலும் பல முத்தான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த வள்ளல். கணேச மூர்த்தி என்ற இயற் பெயரோடு சின்னையா மன்றாயர் மற்றும் ராஜாமணி அம்மாள் தம்பதியினருக்கு மகனாக திரு சிவாஜி கணேசன் 1928 ஆம் வருடம் அக்டோபர் 1 ஆம் தேதி பிறந்தார். சிவாஜியின் தந்தை சின்னையா மன்றாயர், சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

சிவாஜி கணேசன் பிறந்த சமயத்தில் ரயிலுக்கு வெடி வைத்ததாக சின்னையா மன்றார் மீது வழக்கு தொடரப் படவே அவர் சிறைக்கு சென்றார். சிவாஜிக்கு நான்கு வயதானபோது தான் வெளியே வந்தார். அதுவரை ராஜாமணி அம்மாவே சிவாஜியையும் தன் மற்ற பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டார். சிவாஜி கணேசன், வெள்ளித்திரையில் கால் பதிக்கும் முன்னரே பல மேடை நாடங்களில் நடித்து வந்தார். அங்கே தான் இவரது உணர்ச்சிப்பூர்வமான நடிப்புத் திறமை உயிர்பெற்று வலுபெற்றது எனலாம். சிவாஜி நடித்த முதல் நாடகம் “இராமாயணம்”.

அதில் சீதை வேடமிட்டு ஆடி பாடி நடித்த போதே மாபெரும் கலைஞன் இளம் சிவாஜியினுள் உயிர்பெற தொடங்கிவிட்டான். சிறு வயதிலிருந்தே பல்வேறு வகையான கதாபாத்திரங்கள் ஏற்று நாடங்களில் நடிக்க தொடங்கினார். ஒரு முறை “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்தார். அந்த நாடகத்தில் கணேசனின் நடிப்புத்திறனை பார்த்து வியந்த தந்தை பெரியார், அவரை 'சிவாஜி' கணேசன் என்று மேடையில் அழைத்தார். அன்றிலுருந்து அந்த பெயர் கணேசனின் வாழ்வில் மட்டுமில்லாது தமிழ் திரையுலக சரித்திரத்திலேயே நீங்கா இடம்பெற்றுவிட்டது.

திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு சென்னை வந்த சிவாஜி கணேசன் பல சிறு சிறு வேலைகள் செய்து வந்தார். முதல் படம் பராசக்தி 1952 இல் ரிலீஸ் ஆனது. நீளமான மற்றும் ஆழமான வசனங்களும் சிவாஜி கணேசனின் ஒப்பற்ற நடிப்பும் ஒரே படத்தில் இவருக்கு மாபெரும் கலைஞன் அந்தஸ்து கொடுத்தது. அன்று தொடங்கிய ஓட்டம், படையப்பா வரை பல உயரங்களையும் சாதனைகளையும் தொட்டு தமிழ் சினிமாவிற்கே புது அடையாளத்தைத் தந்துவிட்டது. ஒன்பது தெலுங்குத் திரைப்படங்கள், இரண்டு ஹிந்தித் திரைப்படங்கள், ஒரு மலையாளத் திரைப்படம் மற்றும் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் சிவாஜி கணேசன். இவரின் நடிப்பில் வெளிவந்த கர்ணன், கௌரவம், வியட்நாம் வீடு போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் மைல் கற்களாக அமைந்தன.

பல ஆண்டுகளுக்கு பிறகு வந்த டிஜிட்டல் கர்ணன் படமும் கூட ஏக ஹிட். தெய்வ மகன், பாச மலர் போன்ற படங்களில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அசாத்தியமானது. மனோகரா, வீரபாண்டியக் கட்டபொம்மன் போன்ற திரைப்படங்கள் வசனங்களுக்காக பெயர் போனவை. குணச்சித்திர கதாபாத்திரங்களோடு மட்டும் நின்று விடாமல் இராஜராஜ சோழன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் போன்ற தேசத் தலைவர்கள் பாத்திரங்களை ஏற்றும் திறம்படச் செய்தார். ரஜினி, கமல், விஜய் என வெவ்வேறு தலைமுறை நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துள்ளார். உறவினரான கமலாவை திருமணம் செய்துக் கொண்டார். ராம்குமார், பிரபு, சாந்தி, தேன்மொழி ஆகியோர் சிவாஜி கணேசனின் வாரிசுகள்.

பிரபுவும் சினிமா துறைக்கு வந்து புகழ்ப் பெற்ற நடிகரானார். பல விருதுகளுக்கு சொந்தக்காரர் சிவாஜி கணேசன் என்று சொல்வதைவிட பல விருதுகள் இவருக்கு கொடுக்கப்பட்டதால் பெருமையுற்றன எனலாம். செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் சிவாஜி கணேசன். கலைமாமணி விருது, பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, தாதாசாகெப் பால்கே விருது என பல விருதுகள் இவருக்கு கொடுக்கப்பட்டன. அப்போதைய எகிப்து அதிபர் கமால் அப்தெல் நாசர் இந்தியாவிற்கு வருகை தந்த போது அவரை சந்தித்து உபசரிக்க இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அனுமதி வழங்கிய ஒரே தனி நபர் சிவாஜி கணேசன் ஆவார். 1962 இல் அமெரிக்க நாட்டின் சிறப்பு விருந்தினராக சிவாஜி கணேசன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ஒரு நாள் மேயராக அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

சிவாஜி கணேசன், சுவாச கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2001 ஆம் வருடம் ஜூலை 21 ஆம் தேதி தனது 72 வது வயதில் இயற்கை எய்தினார். நம்மை விட்டு நீங்கினாலும் இன்றும் கூட கோடம்பாக்கத்தில் நடிகனாகும் கனவோடு வரும் பலருக்கு சிவாஜி கணேசனின் நடிப்பு தான் முதல் ஆஸ்தான ஆசான் என்றால் மிகையாகாது.

 

 

கோ. ராகவிஜயா

 

 மாணவப் பத்திரிக்கையாளர்- 2015

நீங்க எப்படி பீல் பண்றீங்க