சீயானுக்கு வயசு 16...

தமிழ் சினிமாவில் என்றும் பேசப்படக்கூடிய படங்களில் மிகமுக்கியமான படம் சேது இப்படம் வெளியாகி இன்றுடன் 16 வருடங்கள் முடிவடைந்துள்ளது. இப்படம் பற்றியான சில சுவாரஸ்ய தகவல்கள்!

இயக்குநராக அவதரித்த பாலாவின் திரையுலகின் நுழைவுச் சீட்டு சேது. முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றார். கூடுதலாக சிறந்த இயக்குநருக்கான தமிழ்நாடு அரசு விருது மற்றும் ஃபிலிம்பேர் விருதினையும் பெற்றார்.

படம் வெளியான பிறகு அவருக்கு இவ்வளவு பெருமைகளும் கிடைத்தன. ஆனால் அந்தப்படம் வெளியாகவே பல போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அப்போதைய முன்னணி தயாரிப்பாளர்கள் எல்லாம் இந்தப்படத்தை நம்பவில்லை. பிரிவியூஷோவிலேயே நூறுநாட்கள் ஓடியபடம் என்று சொல்லப்பட்ட படம் இது.
இந்தப்படத்தில் சிவகுமார் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அப்போது இயக்குநர் பாலாவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட பந்தம் சினிமாவைத் தாண்டியும் இன்றுவரை தொடருகிறது.

விக்ரமின் முதல் படமான “என் காதல் கண்மணி” வெளியானது 1990. பின்னர் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் “மீரா” , விக்ரமன் இயக்கத்தில் “புதியமன்னர்கள்” என்று தமிழில் விக்ரம் நடித்தபோதும் தோல்வியே கண்டார். பட வாய்ப்பில்லாமல் பிரபுதேவா, அஜித் (அமராவதி) உள்ளிட்டோருக்கு பின்னணி குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார். சேது படத்தின் மூலம் விக்ரம் முதல் வெற்றியை சுவாசிக்க ஒன்பது வருடம் காத்திருக்கவேண்டியிருந்தது.

விக்ரமின் உழைப்பால் தன்னை நடிகராக  நிரூபித்த படம் சேது. இப்படமே விக்ரமின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. இந்தப்படத்தைத் தொடர்ந்து தில், காசி, ஜெமினி, தூள், சாமி, அந்நியன் என்று எல்லாப் படமும் ஹிட் ரகம் தான்.

படத்தின் கதைக்கு முதலில் நாயகனான தேர்வானவர் விக்னேஷ்.அவர் மறுக்கவே பிறகு இதே பாத்திரத்திற்கு முரளியும் தேர்வு செய்யப்பட்டார். ஹீரோயினாக கீர்த்தி ரெட்டி தேர்வானார். பிறகு தான் அபிதா தேர்வானார்.

இந்தக் கதை பாலாவின் நண்பர் ஒருவரின் உண்மையான கதையும் கூட. படப்பிடிப்பு துவங்கி இரண்டு வருடகாலத்தில் பெப்சி போராட்டம் துவங்க படம் மீண்டும் தடைபட்டது. போராட்டம் முடிந்தபிறகு படத் தயாரிப்பாளர் படத்தைக் கைவிட, மீண்டும் பல தடைகளைத்தாண்டி படத்தை எடுத்துமுடித்தார் பாலா.

சீயான் என்றால் விக்ரம் மட்டுமே, “சீயான் விக்ரம்” என்று அரிதாரம்பூசி அழகு பார்த்த படம் சேது. இந்தப்படத்துக்குப் பிறகு, விக்ரமின் அடுத்தடுத்த படங்களிலும் சியான் விக்ரம் என்றே டைட்டிலில் பெயர் வந்தது.

சேதுவுக்குப் பிறகு, காசி, அந்நியன், ஐ, உள்ளிட்ட படங்களில் கடுமையான உழைப்பைக் கொட்டி நடித்திருந்தாலும் இன்றும் நமக்கு “சீயான் விக்ரம்” தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!