’’அசிஸ்டெண்ட் டைரக்டரா இருக்குறது வேஸ்ட்!’’ - A Mani Ratnam Suggestion

"In the beginning, industry treats you like you don't know anything. All you need is just one film where the industry starts believing that you know everything & they don't know anything."  - Mani Ratnam

விஸ்காம் சேர்ந்த முதல் நாள். “கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு போ..” என்று சொன்னதும் நான் “மணிரத்னம் படைப்புகள் - ஓர் உரையாடல்” என்ற புத்தகத்தை தொட்டுக் கும்பிட்டுவிட்டுப் போனேன். என்னோட எந்தக் குறும்படம் ஆரம்பிக்கும்போதும், மணி சாரோட ஏதாவதொரு படத்தைப் பார்த்து நம்பிக்கையை லிட்டர் கணக்குல ஏத்திக்குவேன். அந்த மனிதர் பெங்களூர் சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகிறார்.நான் சும்மா இருப்பேனா? இந்தச் செய்தி கண்ணில்பட்ட நாளில் இருந்து, நம்ப முடியாத ஒரு சந்தோஷம். எங்க கல்லூரியில் இருந்து இந்த BIFFes குழுவிலிருந்து வாலண்டியர்ஸ் லிஸ்ட் எடுத்தார்கள். நாம டிராவல் மேனேஜ்மெண்ட்ல சேர்த்துடலாம், அப்போதான் மணி சார் கூட தனியா கார்ல போற வாய்பெல்லாம் கிடைக்கும் என எண்ணி அதில் பெயரைக் கொடுத்தேன்.

முதல் நாள் வேலை – மணி சார் வரல. எப்போ வராரு? யாருக்கும் தெரில. எங்க தங்கி இருக்காரு? யாரும் சொல்லல! மொத்தம் மூணு ஹோட்டலில் விருந்தினர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மூன்று ஹோட்டல்களையும் கூகிள் தராசில் வைத்து கணக்கிட்டேன், “மேரியட் ஹோட்டல்” போட்டியில் ஜெயித்துவிட்டது. சரி என்று அடம் பிடித்து, சண்டைபோட்டு அங்கே வேலை வாங்கினேன். முதல் நாள் முடிவில் இந்தியா முழுவதிலிருந்தும் இயக்குனர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், மூத்த கலைஞர்கள் என எல்லோரும் வந்திருந்தனர். அனைவருக்கும் என்னைப் பிடித்து போய் விட்டது.. கிட்டத்தட்ட எல்லோருடைய நம்பரும் என் கையில்..

ஆனால் என் மனம் கேட்டுக் கொண்டே இருந்தது.. கண்கள் தேடிக்கொண்டே இருந்தன... “அடேய்... என் மணி சார் எங்கடா?”

அன்றைய இரவு "கன்னத்தில் முத்தமிட்டால்” பார்த்துவிட்டு உறங்கினேன்.  அடுத்த நாள் மந்தமாகச் சென்று கொண்டிருந்தது.. திடீரென ஒரு இன்னோவா கார் வந்தது ஹோட்டலுக்கு. மணி சார்  இறங்கி உள்ளே நடந்து வந்து ”போலாமா சூர்யா?”னு கேட்டார். நான் “பூம் பூம் மாடு” மாதிரி தலையாட்டினேன். பிறகு அவர் ரூமுக்கு சென்று குளித்து தயாராகி வந்தார். இருவரும் காரில் தியேட்டருக்குச் சென்றோம். போகும் வழியெல்லாம் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தைப்பற்றி நான் அவரிடம் பேசிக்கொண்டே வந்தேன். நடுவில் ஒரு செல்ஃபி, கடைசியில் அவர் போன் நம்பர், ஆதார் கார்ட் நம்பர், ரேஷன் கார்ட் நம்பர் என எல்லாவற்றையும் வாங்கிவிட்டேன்.
   
“வெத்து கனா காணாதடே.. அது என்னைக்குமே பலிக்காதுன்னு எங்கப்பா சொல்லுவார். ஆனா நான் கனவு காணுவேன்” - குரு.

"டேய்.. எந்திரிடா..” என நண்பன் எழுப்ப...’

அடுத்த நாளும் மணி சார் வரவே இல்லை. இந்த நேரத்துல ஊர்ல இருந்து அப்பா கூப்டாரு. “டேய்.. அக்கவுண்டன்சில சென்டம் வாங்கினதுக்கு ஸ்கூல்ல அவார்ட் தராங்க... இந்த சனிக்கிழமை இங்க வந்துடு”

எனக்கு எங்க போறதுன்னே தெரில. குரு படத்துல ஒரு பாட்டு வரும்... “ஒரே கனா என் வாழ்விலே”னு. அப்போ, அதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. “அவார்டெல்லாம் நீங்க வாங்கிக்கோங்கப்பா”ன்னு சொல்லிட்டு ‘ஆபரேஷன் மணி’ல முழுக் கவனத்தையும் போட்டேன். எப்போ வரார்னு கண்டுபிடிச்சேன். தாஜ்ல தனியா இருக்கார்னும் கண்டுபிடிச்சேன்.

என் வாழ்க்கைல மறக்க முடியாத நாள்... ஜனவரி 30.

“Discussion with ManiRathnam Screen 11. Orion Mall at 10:30 AM”

சீக்கிரமா விடிகாலை எட்டு மணிக்கெல்லாம் எழுந்து, குளியல் போட்டுட்டு, என்னோட லக்கி நீல நிற ஜீன்ஸ் ஷர்ட் போட்டுட்டு பஸ் புடிச்சா லேட் ஆயிடும்னு ஆட்டோ புடிச்சு காச தண்ணி மாதிரி விட்டெறிஞ்சு 9:30 மணிக்கு மாலுக்குள்ள போய்ட்டேன். பாக்குற இடமெல்லாம் ‘தலைவர் எங்க? யாராவது இருக்காங்களா? எங்கயாவது கூட்டமா இருக்கா?’னு பாத்து பாத்து ஸ்கிரீன் 11-க்கு ஓடிப் போய் நிக்குறேன். ஒரு எதிரி (பவுன்ஸராம்) சொல்றான்... “யாருக்கும் அனுமதி கிடையாது Go to 4th floor”. புடிச்சேன் ஒரு ஓட்டம். நாலாவது மாடிக்கு போய்ப் பாத்தா.... ரேஷன்ல கிருஷ்ணாயில் வாங்க வந்த மாதிரி ஒரு பெரிய வரிசை! சரினு நானும் நின்னேன். ஒருத்தன் வந்து “ஈமெயில் காட்டுங்க“-ன்னான். “ஒண்ணு என்ன.. எவ்ளோ வேணாலும் காட்டுறேன்” னு சொல்லி போன்ல என் ஜிமெயிலை ஓப்பன் பண்ணிக் காட்டினேன். “அட இது இல்ல.. மணிரத்னம் ப்ரோக்ராமை பார்க்க அனுமதி ஈமெயில் from BIFFes”  என்றான்.

“டேய்... இது என்னடா.. மணி சார் படத்துலயே கூட இவ்ளோ ட்விஸ்ட் இருக்காதே”ன்னு கேட்டதுக்கு...அந்த லைன்ல இருந்து என்னை தூக்கி அனுமதி வாங்காதவங்க வரிசையில் வீசிட்டான். இந்த வரிசை நயன்தாராவைப் பார்க்க, நகைக்கடை வாசல்ல நின்ன கூட்டம் மாதிரி போகுது. எனக்குப் பின்னாடி எங்கேயோ கேட்ட குரல், திரும்பி பாத்தா – ‘நம்ம டைரக்டர் வசந்த் சார். நெஜமா சொல்றேன் ரொம்ப தங்கமான மனுஷன் அவர். அவ்ளோ மரியாதையா என்கிட்டே ஹோட்டல்ல நடந்துகிட்டார். பாவம் இந்தி தெரியாம ரூம் சர்வீஸ் காரன்கிட்ட சைகை பாஷைலலாம் பேசிட்டு இருந்தார், செம்ம பங்ச்சுவல்..!’’

“சார். நீங்க ஏன் சார்  நிக்கறீங்க? நீங்க ஜூரிதானே? நேரா உள்ள போங்க சார்” னு சொன்னேன்.

“இல்லப்பா பரவால்ல. என்கிட்டே அவன் கேக்குற ஈமெயில்.லாம் இல்ல. நான் இங்கயே நிக்குறேன்” அப்படின்னார்!

இந்த நீண்ட நெடுங் கியூவில் என்னால நிக்க முடியல. ஆய்தஎழுத்தில் சித்தார்த், யு.எஸ் விசாவுக்காக நண்பரிடம் பேச்சுக் கொடுத்தபடியே க்யூவில் புகும் காட்சி ஞாபகம் வந்தது. முன்னால் நின்னுட்டிருந்த என் மலையாள நண்பனிடம் பேச்சுகொடுத்துக்கொண்டே வரிசையில் நின்றுவிட்டேன். அந்த ஈமெயில்காரர்களை எல்லாம் உள்ளே விட்டதுக்குப் பின்....

கதவைச் சாத்திவிட்டார்கள்!

“அடேய்.. !!”

கனவெல்லாம் சிதைந்தது போல உணர்ந்தேன் அந்தக் கதவு சாத்திய சத்தத்தில். பின்னாடி நின்னுட்டு இருந்தவங்க, முன்னாடி நின்னுட்டு இருக்கவங்க எல்லாரும் சண்ட போட ஆரம்பிச்சுட்டாங்க!

“என்ன ப்ரோக்ராம் நடத்திறீங்க? எல்லாத்துக்கும் சேர்த்துதானே சார் டிக்கெட் குடுத்தீங்க? இப்போ என்ன அரசியல் பண்றீங்க?”

“ஏய் எவர்ரா நீவு? ஓபன் மாடி”

“சார், அனுமதி இல்லைன்னு நாங்க ஒரு மணிநேரமா நிக்குறதுக்கு முந்தி சொல்ல மாட்டீங்களா?“

“sir we are waiting from 7 o clock”

“எனக்கு கதவு தொறக்கணும் டாட்”

கொஞ்சம் கொஞ்சமாக கூச்சலும் குழப்பமும் பெருகிக்கொண்டே போனது. வாக்குவாதம் செய்துகொண்டிருந்த ஒருவர் சண்டை போட ஆரம்பித்துவிட்டார். சத்தம் காதை பிளந்துவிட, போலீஸ் என்ட்ரி. “சரி இருப்பா... ஏய் நாலு பேர உள்ள அனுப்புங்கையா” என்று சொல்லி அந்த மனிதர் அனுமதி பெற்றுத்தந்தார். ‘நீடூழி வாழ்க’ என்று வாழ்த்திவிட்டு வரிசையில் நகர்ந்தேன். என்ன கணக்கோ... நான்காவதாக ஒல்லியான தேகத்தில் பென்சில் போல நின்று கொண்டிருந்த என்னைச் சட்டென்று தடுத்துவிட்டனர். ஒரு எட்டு எடுத்து வைத்திருந்தால் உள்ளே சென்றிருப்பேன்!

பதட்டத்தில் கோபமும் அழுகையும் மூக்கை முட்டிக்கொண்டு வந்துவிட்டன. “சார், நான் வாலன்டியர். டாகுமென்டேஷன் is my job!! I’ve to be inside sir.. please let me in now!! “ என்று கையில் கேமரா இருந்ததால் ஒரு பிட்டை போட்டேன். என் ஐ டி கார்டைப் பார்த்தான். அதில் என் புகைப்படம் இல்லை.

“இதை எப்டி உன்னோடதுனு நான் நம்புறது.. எங்க இருந்து திருடினே?” என்றெல்லாம் கேட்டான். கண்களில் தண்ணீர் சுரக்க ஆரம்பித்துவிட்டது. திடீரென்று கதவு திறந்தது. “நெக்ஸ்ட் ஃபோர்“ என்றான். “போடா” என்று குடுகுடுவென மூட்டைசந்தில் சிக்கிய எலி போல உள்ளே ஓடினேன்.

அரங்கம் உள்ளே நுழைந்தவுடனே... ஒரு பெரு மூச்சு விட்டேன்! பாதி ஆற்றைக் கடந்துவிட்டேன் என்று தோன்றியது. என்னுடைய முட்டாள் முரட்டு எதிரி வந்து, “உன்ன யார்டா உள்ள விட்டது? வெளில போடா!” என்றான். “அதச் சொல்ல நீ யார்டா? உன் வேலைய மட்டும் பாரு.. என்ன? இந்த அதிகாரம் பண்ற வேலை எல்லாம் வேற எங்கயாவது போய் வெச்சுக்கோ!” என்றேன்!

சத்தியமா தெர்ல இந்த வீரம் எங்க இருந்து வந்துதுனு... ராவணன் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரம் ஞாபகத்திற்கு வந்ததால் இருக்கலாம்.

எனக்கு ஒரு சீட் குடுத்தாங்க.

காத்திருந்தேன்.

வெளிச்சம் வந்தது.

வெண் முடி, குறுந்தாடி,

ஃப்ரேம்லெஸ் கண்ணாடி,

நீல நிற ஜீன்ஸ் ஷர்ட்,

கருப்பு பேன்ட்,

வுட்லேண்ட் ஷு. இதுதான் மணி சார்!

கூட்டம் ஆர்ப்பரித்தது. விசில்கள் பறந்தன. கைதட்டல்கள் இரண்டு நிமிடங்களுக்கு தொடர்ந்து ஒலித்தன.. மணிரத்னம் வந்தாச்சு.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்துல அமுதா தன் நிஜ அம்மாவை பார்க்க ஆசைபட்டு வளர்ப்பு அம்மாவை இழக்க நேர்ந்த நேரத்தில், போராளி அம்மாவை சந்திக்கும் காட்சியில் உறைந்து வார்த்தைகள் இன்றி தடுமாறி நிற்பாள். நான் இப்பொழுது அமுதாவாக மாறி உறைந்திருந்தேன்.

“ஸாரி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு. என் டிரைவர்கிட்ட சாப்பிட நல்ல ஹோட்டல்ல நிறுத்துங்கன்னு சொன்னேன். அவர் ஒரு ஹோட்டலுக்கு அழைச்சுட்டுப் போனார். பட்டர் தோசை சொன்னேன். அதுல தோசைய விட பட்டர் அதிகமாகிடுச்சு. அதனால கொஞ்சம் ’கேரா’ இருக்கு. யாரும் தப்பா எடுத்துக்காதீங்க” னு மணி சார் சொன்னவுடனே.. கைதட்டல்கள்... சிரிப்பொலிகள்!

நிறைய கேள்விகள்... நிறைய பதில்கள்.

மைக் என்னிடம் வராமல் கண்ணாமூச்சி ஆட்டம் காட்ட, ஒருவரிடமிருந்து மைக்கை லபக்கென்று கைப்பற்றினேன். உடலில் எலும்பெல்லாம் பல்பொடி போல நொறுங்கின. மயக்கம் வருவது போல உணர்ந்தேன். கால் ஸ்டெடியாக இல்லை... மைக் கையில் உள்ளது.. என்ன பேச...?

“ஹலோ சார்.. on to your 2 o clock. இங்க பாருங்க..”

அவர் சரியாக என் திசை திரும்பி.. “ம்ம்.. ய்யா!! தமிழ்!” என்றார். அதுவரை யாருமே தமிழில் பேசவில்லை.

“’ரொம்ப வணக்கம் சார்.. நமக்கு இந்த கொஸ்டின் ஆன்ஸர்லாம் வேணாம்.. எனக்காக ஒரே ஒரு குட்டி ஹெல்ப் மட்டும் பண்றீங்களா?”

“ம்”

“சார்.. என் பேரை மட்டும் சொல்றீங்களா சார் ப்ளீஸ்.. வேற எதுவும் வேணாம்.. ப்ளீஸ் நீங்க சொன்னனா மட்டும் போதும்.”

கூட்டம் “ஓஓஓஓஒஓஓஓ” என்றதும் மணி சார் சிரித்தார்.

“ஹஹஹா... ம்.. ஆனா அதுக்கு கொஞ்சம் ஜாஸ்தி செலவாகும் பா”

“சார்.. என்னால முடிஞ்சது எதுவேணாலும் பண்றேன் சார்.. நீங்க சொன்னா மட்டும் போதும்”

“இல்ல..இங்க நாந்தான் டைரக்டர்.. என்ன செய்யணும்னு நான்தான் சொல்லுவேன்”

“ஐயோ சார்..”

“எதாச்சும் கொஸ்டின் கேளுங்க நான் பதில் சொல்றேன்... சிம்பிள்”

“ம்ம்... எத்தனையோ இருக்கே...  எல்லாத்தையும் எப்படி கேட்பது?’’

’’சரி.. நிறைய ஷார்ட் ஃப்லிம்ஸ்லாம் வருது.. அதைப் பத்தி உங்க ஒப்பினியன் என்ன?”

“யா யா யா... short films are a very powerful tool to enter cinema.. assistant director-ஆ இருக்குறது வேஸ்ட். என்கிட்ட மட்டும் இல்ல யார்கிட்டயா இருந்தாலும் வேஸ்ட்தான். நாங்க பத்து சீன் ல சொல்றத நீங்க ஒரு சீன்ல சொல்லிடுறீங்க. நிறைய ஷார்ட் ஃப்லிம்ஸ் எடுங்க. நல்லா பண்ணுங்க... ஆல் த பெஸ்ட்”
மணிரத்னம் பேசுவாரா.. இவ்ளோ பேசுவாரா.. பேசிட்டாரா மணி சார்?

நான் பிரமிப்பில் இருக்க யாரோ மைக்கைப் பிடுங்கிக் கொண்டுவிட, அடுத்த ஒரு கேள்வி கேட்க முடியாமல் போய்விட்டது. வாய்ப்பு கிடைத்தால் அவரை அடுத்தமுறை சந்திக்கும்போது கேட்டு விடுவேன்.

“தளபதி படத்துல ரஜினி கேரக்டருக்கு நீங்க வெச்ச பேர் என்ன சார்?”

நிச்சயம் ”சூர்யா”ன்னு சொல்லுவார்... நானும் சந்தோஷப்படுவேன்..

ஏன்னா, அதுதான் என் பேர்!

- சூர்யபாரதி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!