'விசாரணை' படத்தை அவசியம் பார்ப்பதற்கான 14 காரணங்கள்..!

'விசாரணை' படத்தை ஒவ்வொரு தமிழனும் ஏன் பார்க்க வேண்டும் தெரியுமா..? அதற்கு பலப்பல காரணங்கள் இருக்கிறன. அதில் 14 மட்டும் இங்கே...

1) ஒரு சினிமா அழகியலைக் காட்டலாம். சுவாரஸ்யத்தைக் காட்டலாம். விசாரணை, முகத்திலறைகிற உண்மையைச் சொல்கிறதென்பதற்காக.

 

2) எந்தப் பாத்திரத்திற்கு யார் பொருத்தம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப அவர்களை பயன்படுத்தியமைக்காக....

3) திரையில் கதாபாத்திரங்கள் கஷ்டப்பட்டால் கண்ணீர் சிந்தும் ரசிகர்களை, ஒரு துறையின் ‘சிஸ்டம்’ குறித்து சிந்திக்க வைக்கிற ரசிகர்களாக மாற்ற முயலும்  படைப்பாக இருப்பதற்காக..

4) டாஸ்மாக் சீன் இல்லாமல், பாடல் இல்லாமல், அச்சுபிச்சுக் காமெடி இல்லாமல் ஒரு யதார்த்தத்தை திரையில் காட்டும்போது, கமர்ஷியலாக ரசிகனை உட்காரவைப்பது சிரமம். ஆனால் இரண்டு மணி நேரமாக ரசிகனைக் கட்டிப் போட்டு வைக்கிற படைப்பாக இருப்பததற்காக..

5) தன் படத்தில் ஒலிக்கிற யாருடைய குரல் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து, அதைச் சரியாக செய்தமைக்காக..

6) இந்து கதாபாத்திரங்கள் ‘ஒண்ணும் ஆகாதுடா’ என ஆறுதல் தர, முஸ்லிம் கதாபாத்திரம் ‘இல்லடா நம்மளைக் கொன்னுடுவாங்க..’ எனப் புலம்புவதன் மூலம் அவர்களின் மன ஆழத்தில் இருக்கும் பயத்தை, உளவியலை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்காக..

7) தான் எடுக்கும் படத்தின் டீட்டெய்லிங்கிற்காக உழைத்த இயக்குநர், அதை திரையில் காட்டியதில் இம்மியளவும் பிசகாமல் இருந்ததற்காக..

8) வேளச்சேரி ஏ.டி.எம். என்கவுண்டர், பவர் புரோக்கர் தற்கொலை என, பல உண்மைச் சம்பவங்களை  உள்ளே புகுத்திய சாமர்த்தியத்திற்காக..

9) உண்மையை எழுத்தில் கொண்டுவருவதை விட, திரையில் காட்சிகளாக கொண்டு வந்து, அதை ரசிகனை ஏற்கவும் வைப்பது கடினம். அந்தச் சவாலில் வெற்றி பெற்றதற்காக..

10) நேரடியாக மட்டுமல்லாமல், சின்னச் சின்ன வசனங்கள் மூலம் தான் சொல்ல வருவதைச் சொல்லி, படம் முடித்து வரும் ரசிகர்களை அதை விவாதமாகப் பேசுவதன் மூலம் - ஒரு நல்ல பேசுபொருளை படம் வெளிவந்த நாளிலிருந்து மக்களுக்கு அளித்தமைக்காக..

11) மக்கள் ரசிப்பதைக் கொடுக்கலாம் என்று எண்ணாமல், எதைப் பார்க்க வேண்டுமோ அதை தைரியமாகக் கொடுத்து, ரசிகன் மனதில் அதைத் தெளிவாகக் கடத்தியதற்காக...

12) சினிமா என்கிற ஊடகத்தை எப்படிப் பயன்படுத்திட வேண்டும் என்று சக படைப்பாளிகளின் மனதிலும், இயக்குநராகும் ஆசையில் இருப்பவர்கள் மனதிலும் விதைத்ததற்காக..

13) ‘அந்த நாவல் வெறும் இன்ஸ்பைரேஷன்தான்’ என்றெல்லாம் சொல்லாமல்,  படம் ஆரம்பிக்கும் முன் எந்த நாவலின் தழுவல் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், படத்தின் இறுதியில் அந்தப் படைப்பாளியின் குரலை ஒலிக்கவைத்து மரியாதை செய்த அறத்திற்காக..

14) இவை எல்லாவற்றையும்விட, வணிக சமரசத்தை மனதில் கொள்ளாமல் உள்ளதை உள்ளபடி சொல்ல ஒரு சின்ன காட்சி, வசனம் கூட செயற்கையாக திணிக்கப்படாமல் உருவான‌ அந்தப் படைப்பின் நேர்மைக்காக! 

 -பரிசல் கிருஷ்ணா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!