Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆனந்த விகடன் விமர்சனக் குழுவின் இரண்டாவது அதிகபட்ச மதிப்பெண்கள் 'விசாரணை'க்கு!

ஆனந்த விகடன் விமர்சனக் குழு 1977-ல் வெளியான '16 வயதினிலே' படத்துக்கு 62.5 மதிப்பெண்கள் அளித்திருந்தது. அதன் பின் ”முள்ளும் மலரும்” மட்டுமே  61 மதிப்பெண்கள் பெற்றது. தற்போது 38 வருடங்களுக்குப் பிறகு 'விசாரணை' படம் 61 மதிப்பெண்கள் குவித்திருக்கிறது. அந்த‌ளவுக்கு படத்தில் என்ன விசேஷம்...? ஆனந்த விகடனின் விமர்சனத்தைப் படித்து தெரிந்து கொள்ளலாமா?

அதிகார வர்க்கத்தின் அடியாளாக இயங்கும் காவல் துறையின் மனசாட்சியை குறுக்கு ‘விசாரணை’ செய்யும் தமிழ் சினிமாவின் பெருமிதப் படைப்பு!

முகமற்ற, முகவரியற்ற எளிய மனிதர்களுக்காக துளி வீரியம் குறையாமல், இம்மி சமரசம் இல்லாமல் இப்படி ஒரு படம் தந்ததற்காக இயக்குநர் வெற்றிமாறனை ஆரத்தழுவிக்கொள்வோம்.

முகவரியற்ற `கேர் ஆஃப் பிளாட்ஃபார்ம்’ குடிமகனோ, அரசியல் லாபிகளில் மல்ட்டிமில்லியன் புரட்டும் கோடீஸ்வரனோ... அதிகாரம் கழுத்தை இறுக்கினால் துரும்பும் தப்பாது என்பதை, முதுகுத்தண்டு சில்லிட விவரிக்கிறது ‘விசாரணை’யின் ஒவ்வொரு நிமிடமும்!

தினேஷ், ஆந்திராவில் ஒரு மளிகைக்கடையில் வேலைபார்க்கிறார். முருகதாஸ் உள்ளிட்ட தினேஷின் மற்ற மூன்று நண்பர்கள் அங்கேயே வேறு சிறு வேலைகள் செய்கின்றனர். நால்வருக்குமே இரவுகளை பூங்காவில் உறங்கிக் கழித்து, காசை மிச்சம்பிடிக்கும் வயிற்றுப்பிழைப்பு. அப்படியான ஒரு பூங்கா இரவு விடிகிறது... மிக மோசமாக! எந்தக் காரணமும் சொல்லாமல் தினேஷ் மற்றும் நண்பர்களை திடீரென அதிகாலையில் அழைத்துச்செல்லும் ஆந்திர போலீஸ், அடி வெளுத்து எடுக்கிறது. உயிரை மட்டும் மிச்சம் வைத்து உடலின் ஒவ்வோர் அணுவிலும் வலி பாய்ச்சுகிறது போலீஸின் ட்ரீட்மென்ட். உயிர்த் துளி வரை ஊடுருவி நடுங்கவைக்கும் சித்ரவதை. இத்தனையும் எதற்கு என்றே புரியாமல் அடிபட்டு முடங்கிக்கிடக்கிறார்கள் இளைஞர்கள். `விசாரணை'களுக்கு இடையில் அவர்களிடம் கேட்கப்படும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். `ஒப்புக்கிறீங்களா?'.

`எதை ஒப்புக்கொள்ள வேண்டும், தாங்கள் செய்த குற்றம் என்ன?' என்று தெரியாத அந்த இளைஞர்கள், மேலும் மேலும் உயிர் சிதைக்கப்படுகிறார்கள்; தங்கள் கைதுக்கான காரணம் தெரிந்து, அதிர்ந்து, சூழ்ந்திருக்கும் இக்கட்டு உணர்ந்து தவித்துத் தத்தளிக்கிறார்கள். அப்போது எதிர்பாராத திருப்பமாக தமிழக போலீஸான சமுத்திரக்கனி மூலம், ஆந்திர போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து தமிழகம் திரும்புகிறார்கள். வீட்டுக்குக் கிளம்பும் முன், சென்னையில் சமுத்திரக்கனியின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் நிலையத்தை ஆயுதபூஜைக்காக சுத்தம்செய்து தரச் சொல்கிறது போலீஸ். அதற்காக அங்கு தங்கும் ஓர் இரவில் நடப்பவை நடுக்கமூட்டும் திருப்பங்கள். அந்த இரவு தினேஷுக்கும் நண்பர்களுக்கும் எப்படி விடிந்தது என்பது... வெடவெடக்கச்செய்யும் க்ளைமாக்ஸ்!

படம் தொடங்கும்போது தினேஷ் பிடித்துச் செல்லப்படும் இரவு, இறுதிக்காட்சியில் திரையில் கவியும் இரவு... இரண்டு இரவுகளுக்கு இடையில் சாமானியர்களின் வாழ்க்கை நூலிழை உத்தரவாதம்கூட இல்லாமல் அல்லாடும் அவலத்தை முகத்தில் அறைகிறது படம். சைல்டு ஸ்பெஷலிஸ்ட், ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் நிபுணர்களைப்போல `என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்'களையும் கொண்டாடப்பட வேண்டிய நாயகர்களாகச் சித்திரிக்கும் சினிமாக் களுக்கு மத்தியில், என்கவுன்டர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் அதிகார அரசியலின் ஒவ்வொரு கண்ணியையும், நுட்பமாக வெளிக்கொண்டு வந்த நேர்மை, படைப்பை வேறு தளத்துக்குக் கொண்டுசெல்கிறது. காவல் துறையின் சித்ரவதையும் அடக்குமுறையும் எந்த எல்லை வரை செல்லும் என்பதற்கு இந்தப் படம் உண்மைக்கு மிக நெருக்கமான ரெஃபரென்ஸ்.

``பேர் என்ன?''

``அப்சல்.''

``ஐ.எஸ்.ஐ.எஸ்-ஸா... அல்கொய்தாவா?''

``இல்ல சார்... தமிழ்நாட்ல இருந்து வந்து வேலைபார்க்கிறேன்.''

``அப்போ எல்.டி.டி.ஈ-யா?’’ - பெயர், இன அடையாளங்களைக்கொண்டே ஒருவரைக் குற்றவாளியாக்கிவிடும் மனநிலை.

``உன்னை, குற்றவாளியைக் கண்டுபிடிக்கவா சொன்னேன்... கேஸை முடிக்கத்தானே சொன்னேன்!’’

``அட சும்மா இருங்க சார்... கோட்டால உள்ளே வந்துட்டு, சிஸ்டம் புரியாமப் பேசிக்கிட்டு!’’

``எத்தனை வருஷமா டிபார்ட்மென்ட்ல இருக்கீங்க, இன்னும் ‘தொழில்’ கத்துக்கலையே..!’’ - காவல் துறையின் கறுப்புப் பக்கங்களில் சகஜமாக நடக்கும் அராஜகங்களை பொளேரென உணர்த்தும் வசனங்கள்.

``ஐயா... என் கன்ட்ரோல்ல இருக்கிற ஸ்டேஷன்ல என்னைக் கேட்காம வந்து எப்படி நீங்க இப்படிப் பண்ணலாம்?’’ என அதிகபட்ச நேர்மையுடன் மேலதிகாரிகளுக்கு எதிராக தன் குறைந்தபட்ச அதிகாரத்தைக்கொண்டு கேள்விகேட்கிறார் சமுத்திரக்கனி. பின்னர் இக்கட்டான தருணத்தில், `‘உங்க கன்ட்ரோல்ல இருக்கிற ஸ்டேஷன்ல இப்படி எல்லாம் நடந்திருக்கு. இதுக்கு யார் பொறுப்பு?’' என்று சமுத்திரக்கனியின் பொறுப்புஉணர்ச்சியை அவருக்கு எதிராகவே பிரயோகிக்கும் மேலதிகாரிகளின் நைச்சிய அரசியல்... கிடுகிடுக்கச் செய்யும் அத்தியாயங்கள்.

முக்கியமாக, படம் நெடுக `சிஸ்டம்' என்ற சொல் பல இடங் களில் வருகிறது. காவல் துறையில் தனிப்பட்ட நபர்களின் நல்லெண்ணம் ஒரு துரும்பைக் கூட கிள்ள உதவாது என்பதையும், அந்த சிஸ்டம் முழுவதுமே கறைபடிந்து கிடப்பதையும் அழுத்தமாகச் சொல்கிறது படம்.

ஆந்திராவில் போலீஸ் முன்னிலையில் தங்களைத் தாங்களே சிக்கவைத்துக் கொள்ளும் ‘கேமரா ஒளிப்பதிவு’ நாடகத்தில் நடிக்கிறார்கள் தினேஷ் குழுவினர். தமிழகத்தில் தங்கள் உடைமைகள் தங்களுக்கு முன்னரே ‘குடி அமர்த்தப் பட்டிருக்கும்’ விபரீதம் புரிந்தும் புரியாமல் பரிதவிக்கிறார்கள். இரண்டுமே காவல் நிலையங்களில் சகஜமாக நிகழும் நிகழ்வுகள் என்பதை நினைத்தாலே... அந்தச் சிவப்புக் கட்டடங்களின் மேல் கிலிகொள்ளச்செய்கிறது. காவல் துறை என்ற சிஸ்டத்தின் ஒவ்வோர் அணுவும் எப்படிச் செயல்படுகிறது என்பதை மிக மிக நுணுக்கமாக ஆராய்ந்து, உண்மைச் சம்பவங்களின் பின்னணியை இணைத்து, நேர்மையான, உண்மையான அரசியல் சினிமாவைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். வெ.சந்திரகுமார் என்கிற கோவை ஆட்டோ ஓட்டுநர், தனக்கு நேர்ந்த உண்மைச் சம்பவங்களைக்கொண்டு எழுதிய `லாக்கப்' என்ற நாவலின் தழுவல்தான் இந்தக் கதை. படம் தொடங்கும்போதும் முடியும்போதும் ஓர் எழுத்தாளனுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியது சிறப்பு.

படத்தின் முதல் பாதிதான் `லாக்கப்’ நாவல். இரண்டாம் பாதி முழுக்க தமிழகத் தலைநகரில் நடந்த சில உண்மைச் சம்பவங்களின் சாயல் நிரம்பியிருக்கிறது. சம்பவங்களில் மட்டும் அல்ல... பாத்திர வடிவமைப்பிலும் சமூக யதார்த்தத்தின் உளவியலை நேர்த்தியாகப் பொருத்தியிருக்கிறார் இயக்குநர். ``நம்மளைக் கொல்ல மாட்டாங்கடா'' என மற்ற நண்பர்கள் சொல்லும்போது, ``இல்லல்ல... கண்டிப்பா கொன்னுடுவாங்க’' என்கிறான் அப்சல். ஒரு முஸ்லிம் இளைஞனுக்கே உரிய உள்ளுணர்வு அது. ஆந்திர போலீஸ் ஸ்டேஷனில் ஒரு பயிற்சி பெண் போலீஸ், தினேஷுக்கு செல்போன் கொடுத்து உதவுகிறார். அதே காவல் நிலையத்தில் சீனியர் பெண் போலீஸ் வழக்கம்போல் இயங்குகிறார். `சிஸ்டத்துக்குள்' புதிதாக உள்ளே வரும் ஒரு பெண்ணின் மரத்துப்போகாத மனசாட்சியும், சிஸ்டத்துக்குள்ளேயே ஆழ்ந்துவிட்ட இன்னொரு பெண்ணின் துருவேறிய மனசாட்சியும் மிக இயல்பாகக் காட்சிப்படுத்தப் படுகின்றன.

சமுத்திரக்கனியின் நடிப்புதான், மொத்த படத்தையும் உயிர்த்துடிப்புடன் தாங்கி நிற்கிறது.அதிகாரத் திமிரும் ஆயுத பலமும் நிரம்பிய காவல் துறைக்குள் மனசாட்சியுடன் செயல்பட முயற்சிக்கும் ஒரு மனிதனின் ஊசலாட்டத்தை, கையறுநிலையை, குற்றஉணர்ச்சி நிறைந்த மனசாட்சியை, தன் உடல்மொழியில் அற்புதமாகக் கொண்டுவந்திருக்கிறார் சமுத்திரக்கனி. இது வேற லெவல் கனி!

அதிகாலைக் குளிரில் நடுங்கி, போலீஸ் அடிக்கு அலறி, உயிர் பயத்தில் வெடவெடக்கும் தினேஷ், ``எனக்கு பல்லுதான் அழகுனு அம்மா சொல்லும்'' என டார்க் ஹ்யூமர் செய்யும் முருகதாஸ், ``நம்மளைக் கொன்னுருவாங்கடா'' என உயிர் நடுங்கும் அப்சல்... என அந்த நண்பர்கள் கூட்டத்தின் மிகையில்லா நடிப்பு, படத்தின் பெரும்பலம். ``ஒவ்வொரு உயிரும் இந்தப் பூமிக்கு வர்றதுக்கு ஒரு காரணம் இருக்கு. அது போறதுக்கும் ஒரு காரணம் இருக்கணும்' என எப்போதும் நைச்சியமாகப் பேசும் இ.ராமதாஸ் பாத்திரம், அசத்தல். அவரை நாம் எல்லா போலீஸ் ஸ்டேஷன் களிலும் பார்க்கலாம். அதிகாரத் தரகராக வரும் கிஷோரின் நடிப்பும், அவர் பேசும் வசனங்களும் கிளாசிக். சரவணசுப்பையாவின் ‘டிப்ளமாட்டிக்’ குயுக்தி, பிரசாதம் தந்து பிரித்து மேயும் அஜய் கோஷ் என அனைத்துப் பாத்திரங்களிலும் சன்னமாகக்கூட பிசிறடிக்காத நடிப்பு.

கிட்டத்தட்ட ‘ரியல் டைம்’ நிகழ்வுகளாக நடக்கும் சம்பவங்களை, நொடிக்கு நொடி பரிதவிப்புடன் கடத்துகிறது கிஷோரின் படத்தொகுப்பு. எப்பேர்ப்பட்ட கலைஞனை காலம் பறித்துக்கொண்டது என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை, காட்சியின் அச்சத்தை ஒரு படி உயர்த்துகிறது. இருளும் ஒளியுமாகப் பயணிக்கும் கால அடுக்கு களைக் கலையாமல் அடுக்குகிறது ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு.

அதிகாரவர்க்கம் எனும் ஆக்டோபஸின் ஒவ்வொரு கரத்திலும் சொட்டும் ரத்தத் துளிகளை உண்மைக்கு நெருக்கமாக அல்ல... உண்மையாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன். ஆனாலும் சில கேள்விகள் எழுகின்றன. காவல் துறையில் பொய் வழக்குகள் போடுவதற்கு என்றே சில பழகிய குற்றவாளிகள் இருப்பார்கள். ஆத்திர அவசரத்துக்கு அவர்கள்தான் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவார்கள். இதில் எந்தத் தொடர்பும் இல்லாத, `தமிழ் பேசும்' ஒரே காரணத்துக்காக இவர்கள் மீது வழக்கு பாய்வது சற்றே நெருடல். மேலும், அவ்வளவு அடித்து நொறுக்கப்பட்டவர்கள், அடுத்தடுத்த காட்சிகளில் அதற்கான சுவடே இல்லாமல் இயல்பாக நடமாடுவது இடறல். இது ஒரு நுணுக்கமான அரசியல் படம் என்பதால், வேறு ஒரு கேள்வியை எழுப்பவேண்டியிருக்கிறது.

படம் முடியும்போது திரையரங்கில் பெரும் அமைதி எழுகிறது. `போலீஸ்கிட்ட சிக்கினா அவ்வளவுதான்' என்ற அச்சம் நம் மனதைக் கவ்வுகிறது. வெற்றிமாறனின் நோக்கம், காவல் துறையின் இரக்கமற்ற முகத்தை வெளிக்கொண்டு வருவதே. ஆனால் அதன் விளைவு, போலீஸ் குறித்து பொது மனதில் உறைந்திருக்கும் அச்சத்தை மேலும் உயர்த்துகிறது என்றால், `விசாரணை' ஏற்படுத்தும் உளவியல் விளைவை குறுக்கு விசாரணை செய்யத்தான் வேண்டும்.

சட்டத்தின் இருட்டு மூலைகளில் அரசியல் கட்சிகளும் அதிகாரவர்க்கமும் ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு, இடஒதுக்கீட்டில் பதவிக்கு வந்தாலே ஏளனமாகப் பார்க்கப்படும் பார்வை என அரசியலின் அத்தனை அழுக்கு களையும் சொல்லி வெற்றிமாறன் மேற்கொண்டிருக்கும் இந்த ‘விசாரணை’... நம் அரசு இயந்திரங்களை மேற்கொள்ளச்சொல்கிறது சத்தியசோதனை.

எளியவர்களின் வலி பேசும் வலிமையான படைப்புக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து உச்சி முகர்கிறான் விகடன்!

- விகடன் விமர்சனக் குழு

'விசாரணை' படம் தொடர்பான ரசிகர்களின் மனநிலை எடுத்துக் காட்டும் 'விகடன் தியேட்டர்- first look' வீடியோ இணைப்பு இங்கே...

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்