Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சினிமாவை விட செம சீன் காட்டுதே இந்த தியேட்டர்..!!

பிரம்மனின் பிரம்மாண்ட படைப்பில் 'அழகே' பிரதானமாக நிமிர்ந்து நிற்கிறது. உலகில் உள்ள எந்த அழகியையும், எந்த ஆண்மகனும் பிரம்மாண்டம் என்று அழைப்பதில்லை. ஆனால், மாளிகையின் கோபுரங்களையும், அந்தக் கோபுரங்களில் ஒளிந்திருக்கும் அழகிய கலைகளையும் பிரம்மாண்டம் என்று வரலாறும், நாமும் வர்ணிக்க ஒருபோதும் தவறியதில்லை.

பிரம்மாண்டம் என்று சொன்னாலே மன்னர்கள் வாழ்ந்த பழங்கால அரண்மனைதான் நமக்குச் சட்டென நினைவுக்கு வரும். ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இயக்குனர் ஷங்கரும், அவரின் படங்கள் மட்டுமே பிரம்மாண்டத்தின் ஞாபகச் சின்னங்கள்.

"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜா மிகப் பெரிய பிரம்மாண்டமான அரண்மனையில வாழ்ந்து வந்தாராம்"...  இப்படித்தான் நம்ம தாத்தாவும், பாட்டியும் நமக்குக் கதை சொல்லியிருப்பார்கள். நாமும் அப்படியான கதையெல்லாம்தான் படித்து வளர்ந்திருப்போம். அந்த மாதிரியான ஒரு அரண்மனை நயத்தோடு மிக பிரம்மாண்டாக கட்டப்பட்டுள்ள வளாகம்தான் சென்னை வடபழனி விஜயா ஃபோரம் மாலில் இருக்கக்கூடிய 'பலாசோ (PALAZZO)' திரையரங்கம். சென்னையின் முன்னணி தியேட்டர் குழுமமான சத்யம் (SPI சினிமாஸ் என்று பெயர் மாற்றிக்கொண்டாலும் மக்களைப் பொறுத்தவரையில் சத்யம் தான்) தனது சாம்ராஜ்யத்தை சென்னை வடபழனியில் விரிவுபடுத்தி உள்ளது.

பிரம்மாண்டத்தின் உச்சம் மட்டுமல்ல.. தொழில் நுட்பத்திலும் ஒரு டிஜிட்டல் புரட்சியே செய்திருக்கிறார்கள் பலாசோவில். அதனாலேயே, இந்தியாவிலேயே நம்பர் ஒன் திரையரங்கமாகவும், ஆசியாவிலேயே முன்னணி திரையரங்கமாகவும், உலக அளவில் தரமான திரையரங்கமாகவும் பலாசோ திகழ்கிறது.

'பலாசோ (PALAZZO)' என்பதற்கு இத்தாலி மொழியில் 'அரண்மனை' என்று பொருள். அந்த வளாகத்தினுள் நடமாடுகையில் நமக்கும் அதே உணர்வு. ‘வ்வாவ்’ என்று சொல்லாமல், வாய் பிளக்காமல் இருக்க மாட்டீர்கள். இந்த மாட மாளிகையின் இருபுறத்திலும் பிரம்மாண்ட திரை, இட்டாலியன் மார்பல்ஸ், ரோமன் பெயிண்டிங், அலங்கார விளக்கு (GOLDEN CHANDELIERS), செயற்கை நீறுற்று இவற்றோடு சுவர் முழுவதும் கோல்டு வண்ணத்தில் அலங்கரிக்கப்பட்ட வால் பேப்பர்கள் என்று கொஞ்ச நேரம் நாம் தமிழ்நாட்டில் இருக்கிறோமா இல்லை இத்தாலியில் இருக்கிறோமா என்று மிரளச் செய்கிறது முன்வளாகம்.

முன்வளாகம்தான் இப்படி எனத் தியேட்டர் உள்ளே சென்றால்.. அமேசிங்! அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சிகள். இந்திய சினிமா வரலாற்றில் அதிகப் பொருட்செலவில், மிகப்பிரம்மாண்டமாகத் தயாரான படம் எனச் சிலவற்றைச் சொல்வோம். அதேபோல், இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக என்றும் சொல்வதுண்டு. அந்த வரிசையில் உலக திரையரங்க வரலாற்றில் முதன் முறையாக அரண்மனையாகவே உருவாக்கப்பட்ட முதல் திரையரங்கம் 'பலாசோ' என்று சொன்னால், அது தகும்.

இந்த அரண்மனையில் 3 பெரிய திரையும், 5 சிறிய திரையும் உள்ளது. பிரம்மாண்ட திரையான ஐமேக்ஸ் இன்னும் திறக்கப்படவில்லை. இன்னும் சில மாதங்களில் அந்தத் தரிசனமும் ரசிகர்களுக்குக் கிடைக்கும். திரையரங்கின் உள்ளேயும் வெல்வெட் துணிகள் தோரணையாக தொங்கவிடப்பட்டு, அரண்மனைக்கே உரிய அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு இன்னும் புதுமை சேர்த்து கம்பீரமாகப் பளிச்சிடுகிறது.

இங்குள்ள 9 திரையரங்குகளுமே 'LED' தொழில்நுட்பத்திலும், 'ஐமாக்ஸ்' திரைநுட்பத்துடன் ஒரு தியேட்டரும் உருவாக்கப்பட்டுள்ளன. RDX-4K புரொஜக்டர் தொழில் நுட்பத்தைப் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளனர். இதனால், திரையிடப்படும் காட்சிகள் அனைத்தும் பளிச்சிடுகிற வகையில்  வண்ணமாகவும், நல்ல வெண்மையாகவும் இருக்கும். புரொஜக்டருக்கு என்று தனியாக அறை ஏதும் கிடையாது. அதற்கென ஆபரேட்டர்கள் தேவையில்லை. புரோகிராம் முறையில் கம்பியூட்டரிலேயே ஆன்/ஆஃப் செய்யப்படுகிறது. சவுண்ட் எபெக்டில் 'டால்பி (DOLBY) சவுண்ட் சிஸ்டம்' என்று சொல்லப்படும் டிஜிட்டல் நுட்பத்தையும் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளனர். ஒவ்வொரு தியேட்டருக்கும் 33 ஸ்பீக்கர்ஸ் பொருத்தப்பட்டுள்ளன. இந்த முறையிலான சவுண்ட் சிஸ்டம், ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குத் தொடர்ச்சியாக செல்லும்போது, கூடவே நமது கவனத்தையும் ஈர்த்து, நம்மையும் அறியாமல் நம்மை சினிமாவுக்குள் மூழ்கடித்து விடுகிறது. முக்கியமாக எல்லா திரைகளும் 3D வசதியோடு உருவாக்கப்பட்டுள்ளன.

இன்னும் சுருக்கமாகச் சொல்லவேண்டும் என்றால், நீண்ட அகலமான திரையில் கரு விழிகளை விரிவடையச் செய்து, காதுக்குள் இடி முழக்கத்தை முழக்கமிடச் செய்து, இதயத்தை அதிர வைத்து, நம்மையும் அறியாமல் விசிலடிக்க வைக்கிறது.

"திரைப்படம் பார்ப்பதை புதிய அனுபவமாக 'SPI சினிமாஸ்' மட்டுமே செய்து வருகிறது. திரையரங்குகளைச் சர்வதேசத் தரத்திற்கு மாற்றியமைத்து, திரையரங்கத் தொழில்நுட்பத்திலும் அவ்வப்போது நவீன மாறுதல்களை உடனுக்குடன் புகுத்தி ரசிகர்களை எங்கள் வசம் ஈர்த்துக்கொள்கிறோம். அதனால், எங்களுக்கு 90 சதவீத ரசிகர்கள் ரெகுலர் கஸ்டமர்களாக இருக்கிறார்கள். நாங்கள் வாடிக்கையாளர்கள் இடத்தில் இருந்து யோசிப்பதால், அவர்களுக்குத் தேவையான உணவு, ஸ்நாக்ஸ். Spa, கேமிங் ஷோ என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்படி இந்தப் ‘பலாசோ’ தியேட்டரை உருவாக்கியிருக்கிறோம். அதேபோல், 9 திரையரங்கிலும் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் படம் பார்க்கும் படியும், ஒரே நாளில் 12 ஆயிரம்பேர் படம் பார்க்கும் படியும் இந்தத் தியேட்டர் வடிமைக்கப்பட்டுள்ளது. சத்யம்னாலே 'பாப்கான்' தான் பேமஸ். இங்கு பாப்கானோடு, பப்ஸ்சும் இன்னும் சுவைபட தருகிறோம். ஒவ்வொரு நாளும் நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால், காலப்போக்கில் நாம் தொலைந்து போய்விடுவோம் பாஸ்!" எனச் சிரித்துக்கொண்டே பலாசோ -வின் சிறப்புகளை விவரித்தனர் ஜெனரல் மேனஜர் (GM) ஜெயிந்த் மற்றும் டெக்னிக்கல் மேனஜர் ரஞ்சித்.

பிரபல சினிமா நட்சத்திரங்கள் முதல், சாதாரணமானவர்கள் வரை குடும்பமாகவும், ஜோடியாகவும் படம் பார்ப்பதற்காக மட்டுமின்றி, சுற்றிப்பார்ப்பதற்காகவும் தினமும் வருகை புரிகிறார்கள். முக்கியமாக ஹைஃபை காதலர்கள் முதல், பள்ளி கல்லூரி காதலர்கள் வரை, எல்லா வகையான ஜோடி புறாக்களையும் இங்குச் சர்வ சாதாரணமாக காண முடிகிறது. எந்தக் காதலர்களும் சேர்ந்து நின்று செல்ஃபி எடுக்கத் தவறுவதில்லை.
 
படம் முடிந்தாலும், அந்த மாளிகையை விட்டு வெளியே வர யாருக்குமே மனம் வராது. படம் பார்ப்பதற்காக இங்கு வரவில்லை. இட்டாலியன் அரண்மணையைக் காணவேண்டும் என்பதற்காகவே, படம் பார்க்கிறோம். இந்த மாளிகையில் இருக்கும் ஒவ்வொரு தருணங்களும் நாமும் ராஜா-ராணி தான்.

மொத்தத்தில், இது தியேட்டர் இல்ல.. அதுக்கும் மேல..!!!

-ரா.வளன், படங்கள்: பா.காளிமுத்து

பலாசோ தியேட்டரின் கலர்ஃபுல் படத் தொகுப்பிற்கு: http://bit.ly/Palazoo

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்