Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லவ் யூ ஜெஸ்ஸி.. லவ் யூ கௌதம்!

ன்றைக்கு காலை என் வாட்ஸப் DP பார்த்துவிட்டு ஃப்ரெண்ட் மெசேஜ் அனுப்பியிருந்தான்.

“செம்மடா மச்சி.. நானும் மாத்திட்டேன்’

கொஞ்ச நேரத்தில், என் வாட்ஸப் ஸ்க்ரீன் முழுவதும் பலரது DPக்கள், க்ரூப் DP-க்களில் அவர் மட்டுமே தெரிந்தார். அவர் எங்கள் ஒவ்வொருவரின் காதலையும் காட்டியவர்.

கௌதம் வாசுதேவ் மேனன்!

வாரணம் ஆயிரம் பார்த்துவிட்டு, ‘கௌதம் மேனன்டா’ என்று காலரைத் தூக்கிவிட்டுத் திரிந்து கொண்டிருந்தோம்.

அப்போதெல்லாம் முதல் நாளோ, முதல் ஷோவோ பார்க்கும் வழக்கமெல்லாம் இருக்கவில்லை.  தேர்ந்தெடுத்து, நல்லா இருந்தா போலாம் ரேஞ்சில்தான் இருந்தேன். மாலை சந்தித்த நண்பன் ஒருவன் ‘ச்சும்மா பேசிட்டே இருக்காங்கடா’  என்றதும் எனக்குக் கொஞ்சம் ஏமாற்றமாகப் போனது.  ‘’உனக்குப் பிடிச்ச படத்துல ஒரு சீன் சொல்லேன்?’ என்று கேட்டேன்.  ‘ஆழ்வார் படத்துல ..’ என்று அவன் ஆரம்பிக்க எனக்கு ஆசுவாசமாய் இருந்தது.

அடுத்தநாள் காலை, ஒரு ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்தான். அவன் ஃபோன் வால் பேப்பரில் த்ரிஷா சேலையில். ’டேய் மேல வாடா’ என்று மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றவனுக்கு ஃபோன் வந்தபோது அடித்த, ரிங் டோன் ஹொசன்னா.  நாடி, நரம்பு, ரத்தம், சதையெல்லாம் விண்ணைத் தாண்டி வருவாயா ஆக்ரமித்திருந்தது அவனை.

‘டைட்டில் போடற ஸ்டைல் இருக்குல்லடா..’

டேய் சொல்லாதடா.. சொல்லாதடா என்று கெஞ்சினேன் நான். அவன் என்னைத் திட்டினான் ‘ஏண்டா பாக்கல நேத்து? ஜெஸ்ஸிடா.. கௌதம்லாம் மனுஷனே இல்லடா’ என்றான். ‘செம்மயா எடுத்திருக்கார்டா மனுஷன்.. அந்தாளுக்குள்ள லவ் ஊறிருக்குடா’ என்றவன் பேசியே ஆகணும்டா உன்கிட்ட இந்தப் படத்தப் பத்தி. என்னமாச்சும் சொல்லீட்டு கெளம்பு. போலாம். பாக்கலாம்’ என்று கத்த, வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி, தியேட்டரில்  சென்று அமர்ந்தோம்.

ஏ.ஆர்.ரஹ்மான் மெதுவாக கிட்டாரில் கைவைத்து வாசிக்கத் துவங்கினார், மனோஜ் பரமஹம்சா ஆலப்பியின் நீர்வழி சாலைகளில் இருந்து பொறுமையாக அழகாக கேமராவைக் கொண்டு சென்று எனக்குள் மூட் செட் செய்துகொண்டிருந்தார். டைட்டில் கார்டை டிசைன் செய்திருந்த அழகிலேயே படத்தின் மெலோட்ரமாட்டிக் உணர்வு ரசனையானவர்களுக்கு உள்ளே தென்றல் போல வந்துவிட்டது.

டைட்டில் முடிந்து, சின்னதாக சர்ச் மணியோசை கேட்க, பின்னணி இசையுடன் கார்த்திக் எனக்கு ஜெஸ்ஸியை அறிமுகப்படுத்தினான். ‘உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும் நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணினேன்?’ ஒற்றைக் கண்ணை மறைத்து, கார்த்திக் கேட்ட போது,  என்னையறியாமல் கைதட்டினேன். இவன் சொல்லும் இந்த வாக்கியம் பலரது வாழ்க்கையில் திரும்பத் திரும்ப வரும் ஒன்று என்று புரியவந்தது.
 


ஜெஸ்ஸி. திருமணகோலத்தில் ஒரு தேவதையைபோல நின்றுகொண்டிருந்தாள்.  கார்த்திக் ஒரு இஞ்சினியரிங் ட்ராப் அவுட். அசிஸ்டெண்ட் டைரக்டர்  ஆகவேண்டும் என்று அலைந்து கொண்டிருப்பவன்.  என்னைப் போல் ஒருவன். அப்போதே என் கண்கள் விரிந்து ஆர்ட்டின் வந்திருந்தது.  ‘So..பசுமையே இல்லாம ரொம்ப வெறுமையா போயிட்டிருந்தப்போதான் நான் அவளைப் பார்த்தேன்’ என்று அவன் சொல்லி முடிக்கும்போது சாலையோரம் மாலை நேரம் ஜெஸ்ஸி தனக்கே உண்டான  ஸ்டைலான நடையில், நீலக்கலர் புடவையில் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தாள். கார்த்திக்குடன் சேர்ந்து நானும் அந்த பெயர் தெரியாத சாலையோரப் பெண்ணை ரசித்துகொண்டிருந்தேன். அவள் நேரே கார்த்திக்கை நோக்கி வந்தாள்... இதயம் பட பட வென்று துடித்துவிட்டது அவனுக்கு, ரஹ்மான் அப்பொழுதுதான் வயலினில் கைவைத்திருந்தார். அவள் ஏதோ சொன்னாள் எதுவுமே காதில்விழவில்லை. ஏனென்றால், அவன் காதலில் விழுந்திருந்தான்.
இப்படியாக துவங்கிய படத்தில், நானும் திரையில் இருந்தேன். கார்த்திக் உடனேயே இருந்தேன். இன்ச் பை இன்ச் காதலை ருசித்துகொண்டிருந்தேன்.

ஆம்! கார்த்திக்கோடு சேர்ந்து நானும் ஜெஸ்ஸியை காதலிக்கத் துவங்கினேன்.

அவள் பால்கனியில் ஃபோன் பேசும் நேரங்களில் அவளை சைட்டடித்தேன். வாசலில் அண்ணனுடன் நின்ற தருணங்களில் கடவுளைத் திட்டிக்கொண்டே அவள் அழகை கைகளில் ஏந்திட ஏங்கினேன். அவள் வேலைக்கு சென்று திரும்பிய போது நான் சின்னபையன் கணக்காய் தனியாக கார்த்திக்குடன் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் ஜெஸ்ஸி கார்த்திக்கின் வீட்டில் இருந்தாள். கார்த்திக்கின் தங்கையோடு பேசிக்கொண்டிருக்க, அந்த அறையை விட்டுவர மனசே இல்லாமல் கார்த்திக்கும் பேசிக் கொண்டிருந்தான். எனக்கு முதன்முறையாக கார்த்திக் மேல் பொறாமை வந்தது.

திடீரென்று கார்த்திக் என் முன்னால் ஜெஸ்ஸியிடம் “உலகத்துல இருக்க எல்லா பொண்ணுகளையும் தங்கச்சியா ஏத்துக்குறேன் ஆனா உன்ன தவிர..” என்றான்.

“ஏன்” என்றாள் ஜெஸ்ஸி

“ஏன்னா..நா உன்ன லவ் பண்றேன்.. am in love with you Jessy” என்று சொன்ன போது, ஜெஸ்ஸியின் முகத்தை பார்த்திருக்கவேண்டும் அந்த முக பாவத்திலிருந்து அவள் என்ன நினைக்கிறாள் என்றே தெரியவில்லை. கார்த்திக்கைப் போலவே நானும் குழம்பினேன்.

அவளை அதன் பின் வெகு நாட்களாக காணவில்லை. ஏதேதோ எண்ணங்கள் ஓடின மண்டைக்குள். “அவ ஆலப்பி போயிருக்கா.. பாட்டி வீட்டுக்கு” தங்கச்சி சொன்னாள். கார்த்திக்குடன் நானும் கேரளா சென்றேன். ஆலப்பி சென்றேன். துளி யோசனையும் இல்லாமல் அவளைக் கண்மூடி தேடினேன். சர்ச்சில் கண்டேன். வீட்டுக்கு சென்றேன். சிக்கன், மீன், மட்டன் என்று சாப்பிட்டேன். சாப்பிடும்போது என்னை இரண்டுமுறை பார்த்தாள் ஜெஸ்ஸி. அதன்பிறகு அவளுடன் பேசியபடி ஆற்றோரமாய் கார்த்திக் நடந்தபோது, பின்னணியில் ஆரோமலே என்று நான் கத்திப் பாடிய குரலைக் கேட்டிருப்பீர்கள்.

கார்த்திக்கிடம் ஜெஸ்ஸி, ‘உன் கண்வழியா என்னை அவங்க பார்க்கல போலிருக்கு’ என்று சொன்னபோது ‘நான் பார்த்தேனே’ என்று நான் சொன்னது அவர்கள் இருவருக்குமே கேட்கவில்லை. ’ஓமனப் பெண்ணே’ ஒலிக்க கார்த்திக் ஜெஸ்ஸியின் காலைப் பிடித்துக் கொண்டிருந்தான். ஒரு வேகத்தில், தெரிந்தும் - தெரியாததுபோல் அவளை முத்தமிட்டான். ஜெஸ்ஸி கொஞ்சமாக வெட்கப்பட்டாள். இரண்டாம்முறை அனுமதித்தாள். மூன்றாம் முறை அவள் கார்த்திக்கைத் தடுக்கவில்லை.. நான்காம் முறை.. தள்ளிவிட்டாள், கன்னத்தில் பூ போல் அடித்தாள். ரயிலிலேயே தொடங்கியது அவர்கள் காதல் கதை!

“பிடிச்சுருக்குங்கறா... ஆனா இப்போ வேணாங்கறா”

“ஐ ல’ மட்டும் தான் சொன்னாளா? ‘வ் யூ’ சொல்லலையா” என்று கணேஷ் சாரும் கார்த்திக்கைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்.

ஜெஸ்ஸி என்ன நேரத்தில் என்ன செய்வாள்? அவளுக்கு எதுதான் நிலையாக பிடிக்கும்? பிடிக்கவில்லை என்றால் ஏன் என்று விவரிக்கத் தெரியாது அவளுக்கு. தன்னை சுற்றி தானே ஒரு வட்டத்தை போட்டிருக்கிறாள். மிக மிகச் சிறிய வட்டம் அது. சிலநேரம் அவளே அந்த வட்டத்துக்குள் இருக்கிறாளா என்று தோன்றும் அளவுக்கு அதனுள் ஒளிந்து கொள்வாள்.

ஜெஸ்ஸியின் அண்ணன் எங்களை மோப்பம் பிடித்துவிட்டான். கார்த்திக்கை வம்படியாக சண்டைக்கு இழுத்தான். அவன் காலை நக்குவதில் இவனுக்கு விருப்பமில்லை. So, அடித்தான்.
ஜெஸ்ஸியின் அப்பா, அவர்தான் ஹவுஸ் ஓனர். வீட்டுக்கு ஆப்பு வைத்துவிட்டார். போலீஸ் லெவெலுக்கு இரு வீட்டாரும் சண்டை போட்டுக்கொண்டனர். அவளுக்கு தாமஸை மணம் முடிக்க நினைத்தனர்.  அதனால் தான் அவளுக்குக் கல்யாணம்!

கல்யாணத்தின்போது அதை நிறுத்திவிட்டு “நான் எம்.சி.ஏ ஃபர்ஸ்ட் க்ளாஸ் பாஸ் பண்ணினதுக்கு என்னோட ட்ரீட்... எல்லாரும் சாப்பிட்டு போங்க” என்று சொல்லும் தைரியம் ஜெஸ்ஸி எனும் ஒருவளுக்கு மட்டும் தான் உண்டு. சர்ச்சில் கல்யாணத்தை நிறுத்திய அவள் கார்த்திக்கைப் பார்த்து, ‘இவன்தான்’ என்று சொல்லுவாள் என்று கார்த்திக்கும், நானுமே எதிர்பார்த்தோம். ம்ஹும்.

அன்றிரவு அவளை பார்க்க அவள் அழகான வீட்டுக்கு சென்றான். ஜெஸ்ஸி பேசிக் கொண்டிருந்ததை நானும் கேட்டேன். “நீ என்ன கேட்ல நின்னு பார்த்தல்ல.. அப்போவே உன்ன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அப்புறம் என் பின்னாடி வந்து பிடிச்சிருக்குனு சொன்னேல்ல ‘ஐயோ எங்க நீ கண்டுபிடிச்சுட்டியோன்னு’ பயந்துட்டேன்” அடிப்பாவி..போலிஸ் ஸ்டேஷன்லாம் போய் வந்தததுக்கு அப்புறம் தான் உனக்கு லவ் வரணுமா? என்று தோன்றியது கார்த்திக்குக்கு. “மன்னிப்பாயா?” என்றாள் நான் எதுவும் பேசாமல் அவளை கட்டியணைத்து நானும் காதலித்தேன். அந்த வட்டம் எங்கள் காதல் போக்கில் இன்னும் சிறிதாகிக்கொண்டே போனது. அவளால் அதைக் கடக்கவே முடியவில்லை.

கார்த்திக் கோவாவில் இருந்த போது வீட்டில் மறுபடியும் பிரச்சினை என்று தானும் கோவா வருவதாக சொன்னாள். ஒருமுறை யோசித்துவிட்டு மறுத்தான் கார்த்திக். யோசித்தது குற்றமென்று சொன்னாள் ஜெஸ்ஸி. வட்டத்தை உடைக்க அவள் காத்திருந்த நேரம் ஃபோனை அணைத்து வைத்திருந்தான் முட்டாள் கார்த்திக். எல்லாம் முடித்து... கோவாவிலிருந்து ஜெஸ்ஸியை பார்க்க வந்தவனை இறுதியாக ஒருமுறை கட்டியணைத்துவிட்டு கதைவைச் சாத்திக்கொண்டாள் ஜெஸ்ஸி!

எல்லாகதவையும் அடைத்துவிட்டு மாயமானாள்! காலம் உருண்டோடியது. கார்த்திக் தன் முதல் பட வேலைகளில் மூழ்கியிருந்தான். படம் பேர்? வேற என்னவாக இருக்கமுடியும்?

ஜெஸ்ஸி!

லண்டனில், ஆரவாரமில்லாத தேம்ஸ் நதியின் கரையில் ஷூட்டிங்கின் போது, மறுபடியும் அவளை கண்டான் கார்த்திக்! தனக்கே உரியதான நடையில் எவனோ ஒருவனுடன் பேசிக்கொண்டே நடந்துவந்தவளை கனவென்றே நினைத்தான். கார்த்திக்கைக் கண்டுகொண்ட ஜெஸ்ஸி, மெதுவாக நடந்து வந்தாள்... பேசினாள்.. பேசினான்.. பேசினோம்.

“உன் வாழ்கையில வேற யாரோ இருக்காங்க ல?”

“ஆமா... நல்ல உயரம், கர்லி ஹேர்..அங்கங்க மட்டும், அவ நடக்குறது ஒருமாதிரி அழகா இருக்கும்! funnywalk... புடவைதான் அதிகமா கட்டுவா, அவ பேச்சுல மலையாள வாசம் அப்டியே வீசும், அவளுக்கு படம் பார்க்கப்பிடிக்காது.. அவ பேரு ஜெஸ்ஸி, ஜெஸ்ஸி” என்று கார்த்திக் கண்ணீருடன் போராடினான்.
 
இருவரும் கல்யாணம் செய்து போய் ஜெஸ்ஸியின் 6’ 3” அப்பா முன் நின்றனர்.

ஆலப்பியுடன் முடிந்துபோன காதல் லண்டன் வரை கார்த்திகை அழைத்துசென்று என்ன செய்தது? அவனுக்கு மேலும் வலியைத்தான் கொடுத்தது... ஜெஸ்ஸிக்கு திருமணமானதை அவனால் துளி கூட ஏற்க முடியவில்லை அவனைப்பொருத்தவரைக்கும், அவள் - அவனுடைய ஜெஸ்ஸி”

“சீக்கிரம் யாரையாவது தேடிப்பிடி கார்த்திக்..fall in love, move on please”

“லவ். யாரையாவது தேடி பிடிக்க முடியுமா என்ன? காதலிக்கணும்னு போனா அது காதல் இல்ல ஜெஸ்ஸி. அதுவா நடக்கணும். நம்மள போட்டுத் தாக்கணும். தலைகீழா போட்டுத் திருப்பணும்.  உன்னைப் பாத்தப்போ எனக்கு ஆன மாதிரி. என்னைப் பாத்தப்போ உனக்கு ஆன மாதிரி..  லவ்... நம்ம ரெண்டு பேருக்குள்ள இருந்தது was Beautiful Jessy!  தேங்க்யூ ஜெஸ்ஸி...”

ஹப்பா... படம் முழுவதும் புன்முறுவலுடன் சென்றது.. படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு வலி.. அது வலியல்ல.. உண்மையை சொல்லணும்னா, கார்த்திக்குக்காக இப்போ வரை நான் ஜெஸ்ஸியை லவ் பண்றேன்.

லவ் யூ ஜெஸ்ஸி. லவ் யூ கௌதம்!

பரிசல் கிருஷ்ணா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!