அந்தத் தருணம் உலகின் உன்னதமான தருணமானது எப்படி? | Oscars 2016: leonardo Dicaprio The revenant

வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (29/02/2016)

கடைசி தொடர்பு:17:52 (29/02/2016)

அந்தத் தருணம் உலகின் உன்னதமான தருணமானது எப்படி?

ஸ்கர் என்றாலே எந்தப் படம் விருதை வெல்லும் என்ற எதிர்பார்ப்புதான் அனைவரிடமும் இருக்கும். நடிகர், நடிகைகளைத் தாண்டி படத்தின் மீதான எதிர்பார்ப்பே ரசிகர்கள் முதல் விமர்சகர்கள் வரை அதிகமாக இருக்கும். ஆனால் இவ்வாண்டு அனைவரின் பார்வையும் ஒற்றை மனிதன் மீது திரும்பியது. அது வேறு யாருமல்ல நம்ம ஜேக்தான்.

டைட்டானிக் நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ மீது மொத்த உலகின் பார்வையும் திரும்பியது.அதற்குக் காரணம் அவரது முந்தைய வெற்றிகள் அல்ல. அந்த மாபெரும் மேடையில் இவர் சந்தித்த ஏமாற்றங்களே இம்முறை அவரை விழா நாயகனாக்கியது. ஐந்து முறை இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட போதிலும்,  ஒருமுறை கூட வெல்ல முடியாமல் ஏமாற்றமடைந்த இந்த மாடர்ன் ‘கஜினி முகம்மது’வின் கைகளில் இவ்விருது கடைசியாகத் தஞ்சம் புகுந்துள்ளது. இந்த மனிதன் மீது ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு? இதோ அலசுவோம்..


முதல் தோல்வி

 1991ல் திரைப்படங்களில் நடிக்கத் தொடர்ந்த டி காப்ரியோ, 1993-ம் ஆண்டே ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்றார். ‘வாட்ஸ் ஈட்டிங் கில்பெர்ட்ஸ் கிரேப்ஸ்’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை முன்னணி நடிகர் டாமி லீ ஜோன்சிடம் இழந்தார். ஆர்னி கிரேப் என்ற கதாபாத்திரத்தில் ஜானி டெப்புடன் இணைந்து மனநலம் பாதித்த 18 வயது சிறுவனாக நடித்திருந்த இவரது நடிப்பு,  உலகத்தரம் வாய்ந்தது. ஒரு காட்சியில் பாத் டப்பில் ஜானி இவரை விட்டுச் செல்ல, அடுத்த நாள் அவர் வரும் வரை அதிலிருந்து எழத் தெரியாமல் உள்ளேயே கிடக்கும்போது வெளிப்பட்ட அவரது பாவனைகள் ஒவ்வொரு பார்வையாளரையும் கண்ணீர் சிந்த வைத்தது. அப்படிப்பட்ட நடிப்பிற்கு ஆஸ்கர் கிடைக்காமல் போனது ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அளித்தது.

உலக காதல் மன்னன்

ஃபெர்ஃபார்மென்ஸ் ஆர்ட்டிஸ்டாக மட்டுமல்லாமல, கதையின் நாயகனாகவும் ஜொலிக்கத் தொடங்கினார் டி காப்ரியோ. 1996-ல் ரோமியோ+ஜூலியட் படத்தில் இவரது ரொமான்டிக் பார்வைகள், பல ரசிகைகளைக் கவர்ந்திழுத்தது. ஷேக்ஸ்பியரின் எழுத்துக்கு டி காப்ரியோ உயிரளித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி உருகினார் மனிதர். அப்பட நாயகி கிளேர் டேன்சுக்கு இவர் தந்த முத்தமே விருதுகளை அள்ளியது. அடுத்த ஆண்டு வெளியானது உலகக் காதல் காவியம் ‘டைடானிக்’. அதைப் பற்றி நாம் சொல்ல என்ன இருக்கிறது. இளம் மங்கைகள் மனதில் ஜேக் என்ற பெயரை  பச்சை குத்தினார் டி காப்ரியோ.

நெற்றியைத் தாண்டித் தொங்கும் முடி, கூர்ந்து பார்க்கும் கண்கள் என காதல் மன்னனாகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் இந்த டைட்டானிக் நாயகன். அதிலிருந்து இவரது ரசிகர் பட்டாளம், அலெக்சாண்டரின் சாம்ராஜ்ஜியம் போல் உலகெங்கும் பரவியது. ஆனால் காதல் மட்டுமல்ல ஆக்சன், சோகம், ஹியூமர் என நவரசங்களையும் அள்ளிக் கொட்டும் ஒரு அசாத்திய நடிகர் இவர்.

நடிப்பு + அழகு

பிராட் பிட், ஜானி டெப், டாம் குரூஸ் என உலகம் மொத்தமும் பிரசித்தி பெற்ற நடிகர்கள் வரிசையில் டி கேப்ரியோவிற்கும் முக்கிய இடமுண்டு. ஒரு சில சிறந்த பெர்ஃபார்மர்கள் ஹேண்ட்சமாக இருக்க மாட்டார்கள். அழகு நாயகர்களிடம் நடிப்பு மிஸ் ஆகும். ஆனால் இரண்டையும் கலந்துகட்டி அடிப்பவர் டி காப்ரியோ. பெண்களை மயக்கும் தனது அழகை மட்டுமே நம்புபவரல்ல இவர். எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் உயிர்கொடுக்கும் மாபெரும் நடிகன். கமர்ஷியல் படமாக இருந்தாலும் சரி பீரியட் படமாக இருந்தாலும் சரி, அந்தக் கதாபாத்திரத்தை வேறு லெவலுக்கு எடுத்துச் சென்றுவிடுவார். ஆனால் அங்கு அந்த கதாபாத்திரம் மட்டுமே வெளிப்படும். எந்தவொரு சீனிலும் டி கேப்ரியோ தெரியவே மாட்டார். அந்த கதாபாத்திரத்திரத்திற்கு டூப் போடுவதுதான் அவரது வேலை. தனது உண்மை முகத்தை மறைத்து அந்த கேரக்டரை மெருகேற்றுவார். அதனால்தான் ஜேம்ஸ் கேமரூன், கிரிஸ்டோஃபர் நோலன் போன்ற மகா திறமைசாலி இயக்குநர்களும், இவரை தங்கள் படங்களில் புக் செய்கின்றனர்.மீண்டும் ஏமாற்றம்

 மீண்டும் 2005-ல் இவரது பெயர் ஆஸ்கர் பட்டியலில் இடம்பெற்றது. ‘தி ஏவியேட்டர்’ திரைப்படத்தில் ஹோவர்ட் ஹியூக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். ஹாலிவுட்டின் மற்றொரு பெருமைமிக்க விருதான ‘கோல்டன் குளோப்’ விருதைப் பெற்றதால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் சக அமெரிக்கர் ஜேமி ஃபாக்சிடம் ஆஸ்கரை இழந்தார் டி கேப்ரியோ. மீண்டும் இரண்டு ஆண்டுகள் கழித்து அதே சோகம். ப்ளட் டயமண்ட் படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டு மீண்டும் வெறும் கையுடனேயே திரும்பினார். ஏழு ஆண்டுகள் கழித்தும் தொடர்ந்தது சோகம். ஆனால் இம்முறை இரட்டைச் சோகம். ‘தி வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த படம் என இரு விருதுகளுக்கு  பரிந்துரைக்கப்பட்டார் லியோ. மீண்டும் கோல்டன் குளோப் விருதைப் பெற உச்சம் தொட்டது இவர் மீதான எதிர்பார்ப்பு. ஏதேனும் ஒரு விருதையாவது லியோ வென்றுவிட வேண்டுமென ஹாலிவுட் ரசிகர்கள் வேண்ட, மீண்டும் ஏமாற்றமடைந்தார் டி கேப்ரியோ. இப்படி உலகமே கொண்டாடும் ஒரு நாயகன் தோல்வியை மட்டுமே சந்தித்தால் எப்படி இருக்கும். ஆஸ்கருக்கும் கேப்ரியோவிற்கும் ஏழாம் பொருத்தம் என்று மீம்ஸ் தட்டுமளவிற்கு ஆகிப்போனது.


“ எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா கொடுத்தாங்க, நடிச்சே செத்த சிவாஜிக்கு ஒண்ணுமே தரலேயே’ என்னும் ஒவ்வொரு தமிழனின் மனநிலையும்தான் ஒவ்வொரு ஹாலிவுட் ரசிகனுக்கும். அந்தக் கவலையையெல்லாம் தீர்க்க வந்ததே ‘தி ரெவனென்ட்’. இப்படத்தின் மூலம் தன் திரைப்பயணத்தில் நடிப்பின் உச்சத்தை எட்டியுள்ளார் டி கேப்ரியோ. தன் உடல் முழுவதும் காயங்களை வைத்துக்கொண்டு, தன் மகனைக் கொன்றவனைப் பழி வாங்க வேண்டும் என்ற கோபத்தை முகத்தில் காட்டும் போது,  'நீ நடிகண்டா' என்று கூற வைத்தது. குளிருக்காக இறந்த குதிரையின் உடலில் படுத்து உறங்குவது, கிளைமேக்ஸில் வில்லனைப் பழி வாங்க சாமர்த்தியமாக யோசிப்பது  எனப் பல இடங்களில் கைத்தட்டவும், கண் கலங்கவும் வைத்தார் இம்மனிதன். ‘இதற்கு மேல் என்னால் நடிக்கவே முடியாது’ என்பதைப்போல் 100 சதவிகித நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு இப்பொழுதுதான் அந்த வாள் ஏந்திய வீரனின் சிலை அருள் பாலித்துள்ளது.

சிறந்த நடிகருக்கான விருதுத் தருணம் வந்தபோது மொத்த அரங்கமும் நிசப்தமாய் இருந்தது. ‘டி கேப்ரியோ’ என்ற பெயர் உச்சரிக்கப்பட்ட தருணம் மொத்த ஹாலிவுட்டும்  மொத்த அரங்கமும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தியதே இத்தனை வருடங்களாக அவரது கடின உழைப்பிற்கான வெற்றி.

தனது தாயுடன் விருது விழாவிற்கு வந்த டி கேப்ரியோதான் உண்மையில் இப்போது ‘உலக நாயகன்’. இது அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களுக்குமான வெற்றிதான். விருதைக் கையில் பெற்றுக்கொண்டு, “பருவ நிலை மாற்றத்தை சீராக்க நாம் பாடுபட வேண்டும்” என்று அவர் கூறிய போது மொத்த அரங்கும் அதிரத்தான் செய்தது. விடாமுயற்சிக்கு எடுத்துக்காட்டுகள் சிலந்தியும், கஜினி முகம்மதுவும் மட்டுமல்ல லியோனார்டோ டி காப்ரியோவும் தான்.

-மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்