எளிதில் கடந்துபோக முடியாத இயக்குநர் செல்வராகவன் - ஹேப்பி பர்த்டே செல்வா! | Selvaraghavan Birthday Special Article

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (05/03/2016)

கடைசி தொடர்பு:14:27 (05/03/2016)

எளிதில் கடந்துபோக முடியாத இயக்குநர் செல்வராகவன் - ஹேப்பி பர்த்டே செல்வா!

2002 ஆம் ஆண்டு. பல மாதங்களாக வெளியாக முடியாமல் தவித்துக் கொண்டிருந்த ‘துள்ளுவதோ இளமை’ படம் மே மாதத்தில் வெளியாகிறது. இயக்குநர் கஸ்தூரிராஜா அப்படத்தை வெளியிட மிகவும் போராடினார் என்றே சொல்லலாம். முந்தைய படத்தோல்விகள் காரணமாக தன்னுடைய மகன் பிரபுவை தனுஷ் என்கிற பெயரில் நடிக்க வைத்து எடுத்தார். படத்தை முடித்து வெளியிட நிறையப் போராட்டங்கள். வழக்கமாக ஒரு படத்துக்குச் செய்யக்கூடிய விளம்பரங்கள் கூட செய்யாமல் அப்படம் வெளியானது. அதிக விளம்பரமோ, வித்தியாசமான போஸ்டர்களோ எதுவும் இல்லை.


ஒல்லியான, யாரென்றே தெரியாத, ஓபனிங் இல்லாத அந்தப் படம் உதயத்தில் வெளியானபோது முதல்காட்சி முடிந்து வெளியே வந்த இளைஞர்களின் ரியாக்‌ஷன் கொண்டாட்டமாக இருந்தது.  மவுத்டாக் எனும் தனிநபர்களின் விளம்பரங்களிலேயே அந்தப்படம் பெரிதானது. அப்போது, இது கஸ்தூரிராஜா படம் போன்று இல்லை என்கிற பேச்சும் இப்படத்தை இயக்கியது அவருடைய மகன் செல்வராகவன் என்றும் பேச்சு வந்தது. இன்றைக்கும் அந்தப்படத்தின் கதை - இயக்கம் என்று கஸ்தூரிராஜா பெயர் இருந்தாலும்,  திரைக்கதை, வசனமெழுதிய செல்வராகவனின் படமாகத்தான் அது  கொண்டாடப்படுகிறது.


 

அந்தப்படம் கொடுத்த வெற்றியின் விளைவு, அடுத்த படம் கஸ்தூரி ராஜா தயாரிப்பில் செல்வராகவன் தானே இயக்குகிறார். 2002ல்  வெளியாகிறது காதல்கொண்டேன். தனுஷின் பாத்திரப்படைப்பும் சரி, அவ்வளவு சிக்கலான கதையை இயக்குநராக கையாண்ட விதமும் சரி, இளைஞர்களை மயக்கும் மந்திரச்சாவி இவர் கையில் இருந்தது போல எல்லோரையும் ஆட்டுவித்தார். அப்படம் பார்த்து மயங்காதவர்கள் இல்லை என்கிற அளவு அந்தப்படம் பெரிதாக அமைந்தது. அதிகாரப்பூர்வமாக செல்வராகவனின் முதல்படமான காதல் கொண்டேனில், தமிழ்த்திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் என்கிற பெயரைப் பெற்றார்.


தொடர்ந்து அடுத்த ஆண்டே (2003) அவர் இயக்கிய படம் 7ஜி ரெயின்போகாலனி. ஹீரோ, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவிகிருஷ்ணா. இதிலும் தன் முத்திரையைப் பதிக்கிறார் செல்வராகவன். இதுவும் சூப்பர் ஹிட்.


அதன்விளைவு அடுத்தபடமான புதுப்பேட்டையை எடுக்க அதிககாலம் எடுத்துக்கொண்டார். 2006ல் வெளியாகிறது அந்தப் படம். அது, இன்றைக்கு அனைவரும் கொண்டாடும் புதுப்பேட்டை. படம் வெளிவந்த சமயம் வரவேற்பும் எதிர்ப்பும் ஒருசேர வந்திருந்த அந்தப்படம் வசூல் ரீதியாக தோல்விப்படம்தான். ஆனால் இன்றைக்கு, அந்தப் படமும், அதில் தனுஷின் நடிப்பைக் கொண்டுவந்த செல்வராகவனின் உழைப்பும் கொண்டாடப்படுகிற ஒன்று. சொல்லப்போனால், இன்றைக்குக் கொடுத்தால் சூப்பர் ஹிட்டாகும். பத்து வருடங்களுக்கு முன் அதைச் சிந்தித்தவர் செல்வராகவன்!


தமிழில் தோல்வி வந்தவுடன் வேறுமொழிக்குச் சென்றுவிடுவது ஒரு உத்தி. அந்த உத்தியைச் செல்வராகவனும் பின்பற்றினார். தெலுங்கில் வெங்கடேஷ் த்ரிஷா நடித்த ஒரு படத்தை இயக்கினார். அந்தப் படம் வெற்றி. தமிழில் தனுஷ் நயன்தாரா நடித்து வெளிவந்த யாரடிநீமோகினி படம் அந்தத் தெலுங்குப்படத்தின் தமிழ்மாற்றுதான்.
 

அதற்கடுத்து தயாரிப்பில் அதிகநாட்கள் எடுத்துக்கொண்ட படம் ஆயிரத்தில்ஒருவன். புதிய கதைக்களத்துடன் நிறைய நடிகர்களுடன் படம் எடுத்தார். தமிழ்சினிமாவில் இருக்கிற 24 வகைக் கலைஞர்கள் மட்டும் போதாது. தொழில்நுட்பரீதியாக இன்னும் பல வகைக்கலைஞர்கள் இங்கே தேவை என்று செல்வராகவனை சொல்லவைத்தது அந்தப்படம். இதுவரை தமிழ்த்திரையுலகில் இப்படி ஒரு கருத்தை யாரும் சொன்னதில்லை. இவர் சொன்னபிறகு, அது சரிதான் என்று கமல் சொன்னார்.
அந்தப்படம் மட்டுமின்றி அடுத்து வந்த ‘மயக்கம் என்ன’ மற்றும் ‘இரண்டாம் உலகம்’ ஆகிய படங்களும் அவருக்கு பொருளாதார ரீதியாகப் பலம் சேர்க்கவில்லை. இது மற்றுமோர் தோல்விப்படம் என்று ஒதுக்கிவிட முடியாத அளவு அதுபற்றிய வாதப்பிரதிவாதங்களைக் கொண்டிருக்கிற படங்கள்தாம் அவை. ஆனாலும் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு ஒரு தனி ரசிகர்கூட்டத்தையே சேர்த்திருக்கிறார் செல்வராகவன் .
 

வழக்கமான கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அவற்றை வித்தியாசமாகக் காட்சிப்படுத்திக் கவனத்தை ஈர்த்த அவர், கிடைத்த வெற்றிகளைத் தக்க வைக்கும் பாதுகாப்பான பாதையில் பயணம் செய்ய எண்ணாமல் புதிது புதிதுதாக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தார். அதைச் செய்யவும் துணிந்தார். திரைத்துறையை நம்மால் இயன்ற அளவு அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்கிற எண்ணமுடைய மிகச்சில இயக்குநர்களில் செல்வராகவன் முக்கிய இடம் வகிக்கிறார். 


ஹீரோ கதாபாத்திரத்திற்கான இலக்கணங்களை உடைத்ததில், செல்வராகவன் செய்தது அதகள ஆட்டம்.


காதல் கொண்டேனில், தன்னைக் காதலிக்காத பெண்ணை ‘திவ்யா திவ்யா’ என்று டார்ச்சர் செய்யும் ஹீரோ, 7ஜி ரெயின்போ காலனியில் ஒன்றுக்கும் உதவாத, பெண் பின்னால் சுற்றுகிற உதவாக்கரை ஹீரோ, புதுப்பேட்டையில் திருமணத்துக்குத் தாலி எடுத்துக் கொடுக்கப் போய், தானே மணப்பெண்ணுக்கு கட்டிவிடுகிற ஹீரோ, யாரடி நீ மோகினியில் நண்பனைத் திருமணம் செய்து கொள்ளப்போகும் நாயகியை ‘லவ் டார்ச்சர்’ செய்து கரம் பிடிக்கும் ஹீரோ, மயக்கம் என்ன படத்திலும் நண்பனின் காதலி என்று அறிமுகமாகும் பெண்ணின் மீது காதல் கொள்ளும் ஹீரோ..
 

இப்படி அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களின் மூலம் அவரைப் பற்றி எவ்வாறு புரிந்துகொள்ளலாம் என்று ஆராய்ச்சிக்கட்டுரைகளே எழுதலாம். அவ்வளவு விசயங்கள் அவற்றுக்குள் இருக்கின்றன.
 

பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதெல்லாம் தாண்டி எளிதில் கடந்து போக முடியாது, கொஞ்சமேனும் விவாதிக்க வைக்கிற படைப்புகளைத் தந்தவர்தான் செல்வராகவன் என்பது மறுக்க முடியாத ஒன்று.

அவருக்கு இன்று பிறந்தநாள்! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் செல்வா.
 

-அ. தமிழன்பன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்