வெளியிடப்பட்ட நேரம்: 11:24 (08/03/2016)

கடைசி தொடர்பு:11:46 (08/03/2016)

மனோரமா (1937-2015) உலக சினிமாக்களின் கின்னஸ் பெண்மணி! - மகளிர் தினச் சிறப்புப் பகிர்வு!

ரு சாமானியர் சாமானியராக இருப்பதற்கும், ஒரு பிரபலம் சாதாரணமாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது! ஒரு பேட்டிக்காக ஆச்சியைச் சந்தித்தேன். அவர் நைட்டியில் அமர்ந்திருந்தார். சீப்பால் தலை வாரிக்கொண்டிருந்தவர், நடுவே உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றி, கைகளால் குழைத்து, தலையில் தடவிக்கொண்டார். சகல வீடுகளிலும் சாதாரணமாகத் தென்படும் ஒரு அம்மா தோரணைதான். அப்போது, மனோரமா வாசலைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். நான் அவருக்கு முன்னே அமர்ந்திருந்தேன். வாசல் பக்கம் யாரோ வருவது நிழலாகத் தெரிந்தது. ''வந்துட்டா...'' என்றபடி முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டு, ''நீ கேளுப்பா!'' என்றார்.

வந்து அமர்ந்தது ஒரு பிரபலமான திரைப்படத்தில் பத்மினியின் அம்மாவாக, கெத்தாக நடித்தவர். எனக்கோ இன்னொரு பேட்டியையும் முடித்துக் கொள்ளலாம்போல பரபரப்பு. ''என்னடீ... வந்தா 'வா’னுகூட சொல்ல மாட்டேங்கிற?'' என்றார் வந்தமர்ந்த அந்த அம்மா நடிகை. ''எதுக்கு வந்திருக்கேன்னு தெரியுது... அப்புறம் என்ன 'வா’னு சொல்றது?'' - இது மனோரமா. பிடிக்காத நாத்தனாரும் ஓரகத்தியும் பேசிக் கொள்வது மாதிரி இருந்தது அவர்களின் நடவடிக்கை. இரண்டு 100 ரூபாய் தாள்களை எடுத்துக் கொடுத்து அவரை அனுப்பிவிட்டு, ''குடிகாரப் புள்ளையப் பெத்துட்டு படாதபாடு படறாப்பா. 'போய் 200 ரூபா வாங்கிட்டு வா’னு உதைச்சு அனுப்புவான். இவளுக்கு சிவாஜி அண்ணனையும் என்னையும் விட்டா யாரைத் தெரியும்? நேரா புறப்பட்டு வந்துடுவா. நீ வேணா பாரு... அடுத்து அண்ணன் வீட்ல போய் நிப்பா!'' அவர் எந்த ஊரில் பிறந்தார், எத்தனை படம் நடித்தார்... மறக்க முடியாத சம்பவம் என அவர் பேட்டியில் சொன்னதைவிட, சொல்லாத பல விஷயங்கள் புரிந்தன. பெண் என்பவள் தந்தையாலும் கணவனாலும் மகனாலும் பராமரிக்கப்படுவதாக வேதம் சொல்கிறது. பிஞ்சுக் குழந்தையாக இருந்தபோதே தந்தை பிரிந்தார். மணம் முடித்த சில நாட்களிலேயே கணவன் பிரிந்து போய் விட்டார். மகனையோ இவர் பராமரிக்க வேண்டியிருந்தது. எவ்வளவு பெரிய இழப்பு, எவ்வளவு சோகம்? அத்தனைக்கும் இடையில்தான் அவர் அரை நூற்றாண்டுகளாக தமிழ் மக்களைச் சிரிக்கவைத்தார். தமிழ் சினிமாவின் உச்சம் தொட்ட 'பெண் சிவாஜி’ மனோரமா, வீட்டில் மட்டுமல்ல; ஷூட்டிங் நடக்கும் இடத்திலும்கூட ஒரு ஹவுஸ் வொய்ப் மனநிலையில்தான் இருந்தார். ஹோம் மேக்கர் என்பதுகூட அதிகபட்சம்தான். 'புகழ் விஷம்’ தீண்டாத மிக சாமானியரின் மனநிலை அவருக்கு இருந்தது. அது வரம். மனோரமாவுக்குப் பிரத்யேகமாகக் கிடைத்த வரம்!

தமிழ்மகன்,

ஓவியம்: எஸ்.ஏ.வி.இளையபாரதி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்