விஜயகாந்த்.. நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்! - #CaptainisKing | What Happened to Vijayakanth' s Voice #CaptainisKing

வெளியிடப்பட்ட நேரம்: 10:53 (11/03/2016)

கடைசி தொடர்பு:11:33 (11/03/2016)

விஜயகாந்த்.. நீங்க பழைய பன்னீர்செல்வமா வரணும்! - #CaptainisKing

விஜயகாந்த். தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நபர். மதுரையில் அரிசி மண்டி நடத்தி வந்த செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்த இவர், சினிமா ஆசையால் சென்னைக்கு வந்தார். விஜயராஜை, விஜயகாந்த் ஆக்கிக் கொண்டார். நண்பர்களுடன் பல படிகள் ஏறி இறங்கி, 1979ல் இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவரது குரல் எத்தனை கம்பீரமானது என்பது தெரியுமா? ஆம்.. அவரது குரலைப் பற்றிக் கொஞ்சம் அலசுவோம்.

இனிக்கும் இளமை படம் சரியாக ஓடாத நிலையில், இவருக்கு பெயர் சொல்லும்படி அமைந்த முதல் படமென்றால் எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய ‘சட்டம் ஒரு இருட்டறை’தான். அதற்கு முன் 1980ல் வெளிவந்த தூரத்து இடிமுழக்கம் என்கிற படமும் ஓகே ரகம்.

ஆனால் - நம்புங்கள் - இந்தப் படங்களில் எல்லாமே அவருக்கு டப்பிங் குரல்தான்.
 

அதன்பின் 1981ல் வெளிவந்த சிவப்பு மல்லியில்தான் இவர் குரல் எல்லோராலும் கவனிக்கப்பட்டது. தன் தாயைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன் என்று சந்திரசேகர் முன் நரம்பு புடைக்க, கண்கள் சிவக்கப் பேசும் காட்சியில் நமக்கும் ரத்தம் சூடேறும்.

அதன்பிறகு பல படங்களில் இவருக்கென்றே ஸ்பெஷலாக பக்கம் பக்கமாக வசனம் எழுதினார்கள். 1990ல்  வெளியான புலன் விசாரணை படத்தில் காவல்துறை ஆட்களின் கடமை என்னவென்று விளக்கும் நீளமான காட்சி ஆகட்டும், சத்ரியனாக அருமைநாயகத்திடம் இடிந்த கட்டிடங்களுக்கு நடுவே குரல் கர்ஜிக்க பேசும் வசனங்களாகட்டும் இன்றைக்கும் கேட்டு ரசிக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது.

1991ல் வெளியான கேப்டன் பிரபாகரன், வியாகத் அலிகானின் வசனங்களை விஜயகாந்தின் குரலில் ரசிகர்கள் ரசித்துத்தள்ளி, மாஸ் அள்ளிய படம். விஜயகாந்தின் 100வது படம். குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் நிற்கும் சீனில் தொடர்ந்து பேசும் வசனங்கள் அத்தனை பிரசித்தம். அரசியல்வாதிகளைச் சாடும்போது கம்பீரமாக கோபம் கொப்பளிக்கப் பேசிக்கொண்டே வந்து, சாதாரண மக்களின் பிரச்சனையைப் பேசும்போது சடாரென்று மாடுலேஷன் மாற்றி பரிதாபத்தை, ஏழ்மையை குரலிலேயே காண்பிப்பார். ‘நான் கவர்மென்ட் சர்வென்ட். ஆனா கவர்மென்டே மக்களின் சர்வென்ட்” ‘இதுவரைக்கும் இந்தியால எந்த விசாரணைக்கமிஷனுக்கு முடிவு தெரிஞ்சிருக்கு?’ என்று வசனங்களில் தீப்பொறி தெறிக்கப் பேசி, ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளைக் குறித்த விமர்சனங்களை நீதிபதி முன்னே எடுத்து வைக்கும் விஜய்காந்தின் கம்பீரக்குரல் அப்போது எதிரொலிக்காத இடங்களே இல்லை.

சின்னக்கவுண்டர் படத்தில், ‘பசு பால் குடுக்கும்ங்கறதுக்காக கொம்புல கலந்தா பால் வராது... மடிலதான் கறக்கணும்’ என்ற வசனத்தைப் பேசும்போது குரலில் தெரியும் நக்கல் கலந்த குழைவை இதைப் படிக்கும்போதே உணர்ந்திருப்பீர்கள். ’அப்டீன்னா இந்தப் பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லவேண்டிய நேரம் வந்துடுச்சு’ என்று எழுந்து நின்று, ‘சங்கரபாண்டி வாத்தியார்னா எல்லாரும் பள்ளிக்க்கூட வாத்தியார்னு தப்பா நெனைச்சுட்டிருக்கீங்க’ என்று ஆரம்பித்து கேப்டன் பிரபாகரன், மாநகர காவல் போன்ற அதற்கு முந்தைய படங்களின் கர்ஜிக்கும் குரலிலிருந்து முற்றிலும் வேறுபட்டு அசத்தியிருப்பார் விஜயகாந்த்.

அதன்பிறகும் சேதுபதி ஐபிஎஸ், ஹானஸ்ட் ராஜ் என்று கம்பீரமான காவல்துறை வேடங்களாகட்டும், தர்மா, தமிழ்ச்செல்வன் போன்று குரலை அடக்கிவாசிக்க வேண்டிய வேடங்களாகட்டும் அதற்கேற்ப பேசி நடித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த்.2000-ஆவது ஆண்டில் வந்த வல்லரசு இன்னொரு காவல்துறை படம். தன் மேலதிகாரிகளுடன் கம்பீரமாகப் பேசும் இவர், தனிப்படையை வைத்துக்கொண்டு வாசிம்கான் என்ற தீவிரவாதியை டீல் செய்யும்பொது அவனிடம் பேசும் விதத்தில் வித்தியாசப்படுத்தியிருப்பார். அதே ஆண்டு வெளிவந்த ‘வானத்தைப்போல’ படத்தில் பாசம், சென்டிமென்ட் என்று உருகியிருப்பார்.


வாஞ்சிநாதன் (2001) படத்திலும் அப்படியே. காவல்துறை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று க்ளாஸ் எடுக்கும் நீளமான காட்சியை விஜய்காந்த் இல்லாமல் வேறு யாரும் பேசியிருந்தால், அன்றைய தேதிக்கு ரசிகர்களைக் கட்டிப் போட்டிருக்க முடியாது. அதையெல்லாம் விட 2002ல் வெளியான ரமணாவை மறக்க முடியுமா? படம் முழுவதும் அடக்கி வாசிக்கும் விஜயகாந்த், ’மன்னிப்பு.. தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை’ என்ற வசனம் பேசும்போது கோபத்தை குரலிலேயே வெளிப்படுத்துவார்.  கடைசி காட்சியில் மாணவர்கள் முன் நின்று பேசும்போது மெதுவான தொனியில் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக குரலை ஏற்றப்படுத்தி கோபமும், ஆற்றாமையுமாய் அவர் பேசும்போது தியேட்டரே அமைதியும் ரெளத்ரமுமாகக்  கவனித்து கைதட்டிக் கொண்டுதான் இருந்தது. அதே ஆண்டு வெளியான நரசிம்மாவில் இவர் குரல் கர்ஜித்ததைத்தான் மறக்க முடியுமா? காவல்துறை அதிகாரிகளுக்கு முன் ‘அரசியலுக்கு வர்றதுன்னு முடிவு பண்ணீட்டா.. வெட்டு ஒண்ணுதான் துண்டு ரெண்டுதான்’ என் பின்னாடி மனசாட்சியுள்ள மக்கள் இருக்காஙக்ன்னு பேசிட்டிருக்கேன்’ என்றெல்லாம் ஆரம்பித்து இவர் பேசிய வசனங்கள்தான் எத்தனை கம்பீரமாக இருந்தது!

திரைத்துறைக்கு விஜய்காந்த் வந்து 25 வருடமான, 2003ல் வெளியான தென்னவனில் இவருக்கு தேர்தல் கமிஷனர் வேடம். பத்திரிகையாளர் முன்னிலையில் ‘அஞ்சு தேர்தல் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்போறேன்’ என்று ஆரம்பித்து அவர் பேசும் நீளமான காட்சி ஆகட்டும், பதவியை ராஜினாமா செய்து விட்டுப் பேசும் க்ளைமாக்ஸ் பேச்சாகட்டும் கலக்குவார் மனுஷன்!

2005 செப்டம்பரில் கட்சி தொடங்கிய பின்னர் கூட, ஆரம்பத்தில் இவருக்கு வந்த கூட்டமெல்லாமே இவர் குரலைக் கேட்கத்தான் வந்தது. அப்படி ஒரு தனித்துவமான, கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரர்தான் விஜய்காந்த். ஏன், சமீபத்திய ‘தூக்கி அடிச்சுடுவேன் பாத்துக்க’ குரல் கூட நன்றாகத்தானே இருந்தது.

நேற்றைக்கு நடந்த மகளிரணி மாநட்டில் கூட்டத்தில் ’சைனஸ்... டான்சில்ஸ் பிரச்சினையெல்லாம் இருப்பதால்தான் அவர் பேசுவது உங்களுக்கெல்லாம் புரிவதில்லை. ஒரு மூக்கு வேறு அடைத்திருக்கிறது. ஏன்... எம்ஜியார் குண்டடிபட்டபிறகு அவர் பேச்சிற்கும் இதே மாதிரியான விமர்சனங்கள்தானே வந்தன?’ என்று விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கூறியிருக்கிறார்.

என்ன வேணா இருக்கட்டும்.. மறுபடியும் நரசிம்மாவா.. வல்லரசா.. ரமணாவா.. 

உங்க குரல் கர்ஜிக்கணும் கேப்டன். அது அகில உலகமெங்கும் வைரல் அலைகளைக் கிளப்பணும்.

நீங்க, பழைய பன்னீர்செல்வமா வரணும்... வருவீங்க..!


  . 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்