Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேவதையின் குரலுக்குச் சொந்தக்காரி - ஷ்ரேயா கோஷல் பிறந்தாள் ஸ்பெஷல்!

"விண்மீனைக் கண்டு கண்டு கோடி கோடிப் பூக்கள் ஏங்கும்
உன் கண்ணைக் கண்டு அந்த விண்மீன் ஏங்கும் "  என ஹரிஹரன் பாடி நிறுத்த அடுத்த விநாடியில் "அஹஹஹஹ ..."  எனத் தொடரும் அந்தக் காந்தக் குரலால் காதல் வயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த "வெயில்" திரைப்படத்தின் "உருகுதே மருகுதே .." வில் உருகிப் போகாத இசைப் பிரியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
 

கண்களை மூடி "உருகுதே.. மருகுதே.. ஒரே பார்வையாலே...
உலகமே.. சுழலுதே.. உன்னப் பார்த்ததாலே.. " 
எனப் பாடி " சொக்கித்தானே போகிறேனே.. மாமா கொஞ்ச நாளா.." எனக் காதலில் கரையும்போது சொக்கிப்போவோம் நாம்.

தமிழில் "ஆல்பம்" திரைப்படத்தில் "செல்லமே செல்லம்.."  பாடலின் மூலம் அறிமுகமானார்.
 

"லாலலலாலா லாலாலா.. லாலலலாலா லாலாலா...
லாலலாலாலாலாலா "  என நமக்கு அறிமுகமான அந்தப் பாடலைத் தொடர்ந்து  அவர் கண்ணசைப்பிற்கிணங்கித்  தலையசைக்க வைத்துக்கொண்டேயிருக்கிறது அந்தக் குரல்.

பதினெட்டு ஆண்டுகளாகத் தன் குரலால் பலரது மனதைக் கட்டிப்போட்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்கத்தில் பிறந்தது 1984 ல். தனது நான்கு வயதில் இசையைக் கற்றுக்கொள்ளத் தொடங்கிப் பின்பு கஸல், க்ளாசிக்கல், பாப், பஜன் என அத்தனை பிரிவுகளிலும் அடித்து நொறுக்குகிறார். தனது முதல் ஆல்பமாக "பென்தெக்கி பீனா" வை 1998 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட்டார்.

தனது பதினாறாவது வயதில் அதாவது 2000ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியில் சக்கைப் போடு போட்ட "ச ரி க ம ப"  ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று டைட்டில் வின்னரானார். பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி யின் தாயார் இவரது பாடும் திறனை வியந்து தன் மகனை அழைத்து நிகழ்ச்சியைப் பார்க்கச் சொல்ல, அவரும் குரலில் மயங்கி தன் அடுத்த படத்தில் அவரை அறிமுகப் படுத்தினார்.

"இன்னும் நன்றாக நினைவில் இருக்கிறது. பாடலைப் பதிவு செய்வதற்கு முன்பு ஒருமுறை ஒத்திகை பார்ப்பதற்காகப் பாடச் சொன்னார்கள். நான் மெல்லக் கண்களை மூடி இடைவெளியின்றிப் பாடி முடித்துக் கண்களைத் திறந்தபோது  ரெக்கார்டிங் அறைக்கு வெளியே பரபரப்பான சூழலை உணர்ந்தேன். அதன்பிறகு சஞ்சய்ஜி சொன்னபிறகுதான் தெரிந்தது நான் சிறப்பாகப் பாடிய ஒத்திகையையே பாடலாகப் பதிவுசெய்துவிட்டது."  என நெகிழ்கிறார் அழகாகக் கண்களை சிமிட்டிபடியே..2003 ஆம் ஆண்டில் 'ஜிஸம்'  படத்தின் பாடலுக்காக ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார். 2005 ஆம் ஆண்டு 'பஹேலி' படத்தில் இடம்பெற்ற 'திரே ஜால்னா'  பாடலுக்காக சிறந்த பிண்ணனிப் பாடகிக்கான தேசிய விருதை இரண்டாவது முறையாகப் பெற்றார். 2007 ல் 'ஜப் வீ மெட்' படத்தின் பாடலுக்காக மூன்றாவது தேசிய விருதை தன்வசமாக்கினார். பின்னர் தொடர்ந்து தனது நான்காவது மற்றும் ஐந்தாவது தேசிய விருதுகளை அடுத்த ஆண்டிலேயே கைகளில் ஏந்தினார்.


'ஆஷிக் பானாயா அப்னே'  பாடலில் தனது மயக்கும் குரலால் இந்திய  இசைப்பிரியர்களின் நெஞ்சத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.  'தாவணி போட்ட தீபாவளி' யாக தமிழ் ரசிகர்களுக்கு இசைவிருந்து படைத்தும் பல காதலர்களின் தேர்வாக இன்றும் இருக்கும் ' முன்பே வா.. என் அன்பே வா..'  என சில்லுனு ஒரு காதலை இளைஞர்களிடம் விதைத்துவிட்டு பருத்திவீரனில் ' அய்யய்யோ ..' என அசரடித்துப் பறக்கிறது இந்தக்குயில் இசைச் சிறகுகள் கொண்டு.

இடைப்பட்ட காலமெல்லாம் தன் குரல்கொண்டு உயிர்சுண்டியிழுக்கும் வித்தைகள் புரிந்து இப்போதும் கூட 'மிருதா மிருதா ' என மென்சோகத்தைக் குரலில் தாங்கி நம் காதுகளின் வழியாகக் கடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. 'உன் பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில்..' எனக் கண்மூடிப் பாடி பலரது இரவுகளை உறக்கமின்றித் தின்றுகொண்டிருக்கும் தேவதைக்குப் பிறந்தநாள் இன்று.

பல்வேறு தென் மற்றும் வட இந்திய மொழிப்பாடல்களுக்கு உயிர்கொடுக்கும் ஸ்ரேயாவுக்கு தமிழ் தெரியாது என்பதுதான் நம்பமுடியாத அதிசயம். கடந்த ஆண்டு தன் பால்ய நண்பரான ஷில்ஆதித்யா முக்கோபாத்யாயாவை மணந்த ஸ்ரேயா பிண்ணனிப்பாடகி எனும் அடையாளம் தவிர்த்து ஸ்ரேயா சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் கவர்னரால் கௌரவிக்கப்பட்டு ஜூன் 26 ம் தேதி 'ஸ்ரேயா கோஷல் நாள்' என அறிவிக்கப்பட்டது. உலகின் தலைசிறந்த 'ஃபோர்ப்ஸ்' இதழில்  இந்தியாவின் நூறு சிறந்த பிரபலங்களில் ஒருவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமை பெற்றவர் இந்த இசைதந்த தேவதை. இன்னும் இன்னும் தன் குரல்கொண்டு நம்மைக் கிறங்கடிக்க வாழ்த்துவோம்.

இசைக்கு சற்றுமேலேயே மிதந்தபடியிருக்கும் இவரது குரல் காதலுக்கு மிக அருகாமையானது இப்பொழுதும்.. எப்பொழுதும் !

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஷ்ரேயா!

-விக்னேஷ். சி. செல்வராஜ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?