Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரசிகர்களுக்குக் கண்ணீரைத் தந்து காலமான கவிஞன்? மனம் ததும்பும் பதிவு

மகிழ்ச்சியோ... துக்கமோ... எழுத்து தான் வடிகால் என்றாகிய பின், எழுதுவதற்கென்று தனி காரணம் வேண்டுமா என்ன...? அதுவும், எளிமையான வரிகளால் மனதினை வருடிய ஒரு கலைஞனைப் பற்றி எழுத என்ன காரணம் வேண்டும்...?, அவன் கலைஞனாக வாழ்ந்து மடிந்தவன் என்பதே போதுமான காரணமாக இருக்கும் போது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் பல பேருக்கு இந்த கட்டுரையின் நாயகன், பாடலாசிரியர் ‘வாசனை’ தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. தொண்ணூறுகளின் பின்பகுதியில் தமிழ்த் திரைப்பட உலகில் கோலாச்சிய கலைஞன். இவர் பாடல் எழுதி இருக்கிறார் என்ற காரணத்துக்காகவே, டப்பிங் படமும் பட்டி தொட்டியெல்லாம் பரவிய காலம் அது. சாமானிய மனிதனும் ரசிக்கும் எளிமையான பாடல்களை எழுதும் மந்திரக்கோல் வாசனுடையது. பல உயரங்களைத் தொட்டு இருக்க வேண்டிய கலைஞன், நம்மைவிட காலனுக்கு இவர் பாடல் பிடித்ததால், நல்ல இசை முடியும் முன்பே அணைத்துவிட்டான்.

அது ஒரு TDK 90 காலம்:

ஆயிரக்கணக்காண பாடல்களைப் பதிந்து வைத்து கொள்ளும், பென் டிரைவ் காலத்தில் கலைத்துறையில் இல்லாமல் போனது, நிச்சயம் வாசனின் பிழை இல்லை. ஆனால், ஒரு வேளை அவர் இருந்திருந்தால், பல இளைஞர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருந்திருப்பார். அவர் பாடல்கள் தாங்கிய வலைப்பக்கங்கள் புக்மார்க் செய்யப்பட்டிருக்கும்... ஆனால், இப்போதும் வரிகள் புரியும் அவர் பாடல்களைக் கேட்பவர்களின் விரல்கள் அனிச்சையாக ரிப்பீட் பட்டனை அழுத்தும். ஆம். ‘காலத்தை வென்ற கலைஞன் ’ என்ற சொல்லாடலுக்கு, கலையுலகம் என்ன அர்த்தம் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. அதிகம் கண்டுகொள்ளாமல், போற்றுதலுக்கு உண்டாகாமல் போனாலும், வாசன் காலத்தை வென்ற கலைஞன் தான்.

அப்போது ஒற்றை பட்டனில் பிடித்த பாடலை திருப்பிக் கேட்கும் வசதிகள் இல்லை. அதுவொரு TDK 90 காலம். அதிகபட்சம் 16 பாடல்களைப் பதிந்து வைத்து கொண்டு கேட்ட காலம். ஒரு பாடலைத் திரும்பக் கேட்க வேண்டுமென்றால், ரிவைண்ட், ஃபார்வர்ட் பட்டனைத் தான் அழுத்த வேண்டும். மீண்டும் மீண்டும் இதைச் செய்தால் ரீல் அறுந்து விடும். இந்த அசவுகரியத்தை தவிர்க்கவே, வாசன் எழுதிய ஒரு பாடலை கேசட் முழுவதும் பதிந்து வைத்து, காதலில் திளைத்த அண்ணன்கள் தொண்ணூறுகளின் பின் பாதியில் இருந்ததை நானறிவேன்.

நீங்கள் தீவிர சினிமா ரசிகனாக இருந்தால், இப்போதும் அவர் எழுதிய ஒரு பாடலையாவது கடந்து வந்திருப்பீர்கள், எளிமையான வரிகளால் காதலைக் காற்றில் பரப்பிய, “முதன் முதலில் பார்த்தேன், காதல் வந்ததே... எனை மறந்து எந்தன், நிழல் போகுதே... என்னில் இன்று நானே இல்லை, காதல் போல ஏதும் இல்லை...” என்று துவங்கும் ‘ஆஹா’ சினிமாவில் வந்த பாடல், கேட்டவுடன் மனதில் பதிய தேவாவின் இசை காரணமாக இருந்தாலும், அதை திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டியது வாசனின் வரிகள் தாம்.

வாசன் பாடல் விடு தூது:

‘தோழி பிரேமா’ 1998ல், பவன் கல்யாண் நடிப்பில் வந்த சூப்பர் ஹிட் தெலுங்குப் படம். அது ஆனந்த மழை என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் வெளியிடப்பட்டது. அதன் தமிழ்ப் பதிப்பில் அனைத்துப் பாடல்களுமே வாசன் தான். அந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் அப்போது காதலில் திளைத்தவர்களுக்கு தூது பாடலாக இருந்தது. ” “உறவொன்று என்னை உரசியதே... உதடுகள் மௌனம் உளறியதே... முதல் மழையின் ஒரு துளி தீண்டி, உயிர் தரை நனைகிறதே...” (ஆனந்த மழை) என்று காதலின் அவஸ்தையை லயத்துடன் பகிர்ந்த வார்த்தைகள் அவருடையது... அதை படத்தில் வரும், “ஒருநாள் உன்னை விழிகள் பார்க்க, இது யார் என இமைகள் கேட்க, இவள் தான் உந்தன் இதயம் என்றது காதல்” என்னும் இன்னொரு பாடல் இப்போது மட்டும் வந்திருந்தால், நிச்சயம் பல மொபைல்களில் காலர் டியூனாக ஒலித்திருக்கும்.

இசைஞானியே விரும்பிய கலைஞனாக வாசன் இருந்தார், பூந்தோட்டம் திரைப்படத்தில் வரும், “சுட்டும் விழிச் சுடர் பார்த்து மனம் கெட்டதைச் சொல்லட்டுமா... கொட்டும் பனித் துளி கூட என்னைச் சுட்டதைச் சொல்லட்டுமா... கம்பனிடம் கடன் கேட்டுக் கொஞ்சம் கற்பனை வாங்கட்டுமா...” என்று தமிழ் இலக்கண நேர்த்தியுடனும் எழுதத் தெரியும்... “யமஹாவில் பறக்கையிலே உன் நினைப்பு... உன் நினைப்பு, இள வயசு நர்ஸை கண்டா உன் நினைப்பு... உன் நினைப்பு” என்று பேனா முழுவதும் உற்சாகத்தை நிரப்பியும் எழுதத்தெரிந்த அற்புதக் கலைஞன் அவர். “ஏழைகளின் பசியை நீக்க, உலை பொங்குது சந்தோஷமாக...” - சினிமா பாடல்களிலும் சமூக பிரக்ஞை வெளிப்பட்டது.

தமிழ் சினிமாவின் பல பேருக்கு பிதாமகனாக இருந்த கவிஞர் அறிவுமதி தான் இவருக்கும் தாயுமானவர். இவரிடம் ஒரு பாடலுக்கான சூழலை விளக்கிவிட்டால், ஒரு அரை கொயர் புத்தகம் முழுவதும் பாடல்களை எழுதிக் கொண்டு செல்வாராம்.

கண்ணீரோ, புன்னகையோ சம்மதம் நீ தந்தால் என்று பாடலை எழுதிய கலைஞன், தன் ரசிகர்களுக்கு கண்ணிரை மட்டும் தந்துவிட்டு 1998 ஆம் ஆண்டு பாரதியார் பிறந்த தினமான டிசம்பர் 11, இந்த பூவுலகை விட்டுச் சென்றான்.

இன்று வாசன் பிறந்த தினமோ இல்லை நினைவு தினமோ இல்லை. ஆனால், ஒரு கலைஞனைக் கொண்டாட தனிப்பட்ட தினங்கள் தேவையா என்ன...? தமிழ்த் திரை உலகம் மறந்திருக்கலாம், ஆனால் ‘வாசன் பாடல் விடு தூது’ என்று காதலித்த அனைவருக்கும் அவர் எப்போதும் கவிச்சக்கரவர்த்தி தான். வாசன் திரை உலகின் உச்சத்தில் இருந்த போது காதலித்த அனைவருக்கும் நிச்சயம் இப்போது திருமணம் ஆகி இருக்கும், ஏன் இரண்டு குழந்தைகள் கூட இருக்கும். ஆனால், அவர்கள் அனைவரும் தம் காதல் நினைவுகளை அசைபோடும் போதெல்லாம், அங்கு வாசனும் இருப்பார்.

எங்கே சென்றாய் வாசன்...?

- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?