இரண்டே படங்களில் தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநர் - கார்த்திக்சுப்புராஜ் பிறந்தநாள் பகிர்வு | Director Karthick subburaj birthday Article

வெளியிடப்பட்ட நேரம்: 11:26 (19/03/2016)

கடைசி தொடர்பு:18:58 (19/03/2016)

இரண்டே படங்களில் தமிழ்சினிமாவின் தவிர்க்கமுடியாத இயக்குநர் - கார்த்திக்சுப்புராஜ் பிறந்தநாள் பகிர்வு

மணிரத்னம், செல்வராகவன் போல யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காமல் இயக்குநராகி வெற்றி பெற்றவர் கார்த்திக்சுப்புராஜ். மதுரைக்காரர்.

பள்ளியில் படிக்கும் போதே நாடகம், கலை விழாக்களில் ஆர்வமாக  இருந்திருக்கிறார். . குறும்படப் பட்டறைகளில் முதல் ஆளாக ஆஜர் ஆவதே அவருடைய முதல்வேலை.  எதார்த்த வாழ்க்கை அவரை, 'மெக்கட் ரானிக்ஸ்’ படிக்க வைத்து அமெரிக்காவுக்கு அனுப்பிவிட்டது.

கைநிறைய சம்பளம் வாங்கினாலும் மனசு மட்டும்  டிராமா, குறும்படம்னு குறுகுறுத்துக் கொண்டே இருந்திருக்கிறது. அமெரிக்காவிலேயே 'லாஸ்ட் ட்ரெய்ன்’ என்ற குறும்படம் எடுத்திருக்கிறார். அதற்கு  நல்ல வரவேற்பு என்றதும் தொடர்ந்து  குறும்படங்களை எடுத்து 'யூ டியூப்’பில் வெளியிட்டிருக்கிறார்.

அப்படி எடுத்த ஒரு குறும்படத்தை 'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சிக்கு அனுப்ப அது  தேர்வாகிவிட்டது.  அப்போது வேலை விஷயமாக   ஃபிரான்சில் இருந்த அவர் வாழ்க்கையில்  'சினிமாவா, வேலையா?’ன்னு முடிவெடுக்க வேண்டிய முக்கியமான கட்டம். யோசிக்கவே இல்லை மூட்டை முடிச்சுகளைக் கட்டிட்டு சென்னைக்கு வந்துட்டேன் என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.  'நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் அவருடைய 'துரு’, 'நீர்’ ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றன. 'நீர்’ இரண்டாம் பரிசு கிடைத்தது. ராமேஸ்வரம் மீனவர் பிரச்னையை மையமா வெச்சு எடுத்த அந்தக் குறும்படத்தின் மூலம் கிடைத்த வாய்ப்புதான் பீட்சா படத்தை இயக்கும் வாய்ப்பு.

2012 இல் வெளியான பீட்சா பெரிய வெற்றியைப் பெற்றதோடு, புதிய சிந்தனைக்காகவும் பேசப்பட்டது. அதற்கடுத்து அவருக்கு ஏராளமான வாய்ப்புகள். அவசரப்படாமல் இயக்கிய ஜிகர்தண்டா 2014 இல் வெளியானது. அதற்கும் பெரிய வரவேற்பு. அடுத்த மணிரத்னம் என்கிற அளவுக்குப் புகழ்ச்சிகள்.

மூன்றாவதாக அவர் எடுத்திருக்கும் இறைவி விரைவில் வெளியாகவிருக்கிறது. இவற்றுக்கிடையே, தனக்குத் திரைவாசலைத் திறந்துவிட்ட குறும்படங்களுக்கு மதிப்பளிக்கவும் குறும்பட இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கவும் அவர் தொடங்கிய நிறுவனம் ஸ்டோன்பெஞ்ச் கிரியேசன்ஸ். அதன்மூலம் பெஞ்ச் டாக்கீஸ் மற்றும் அவியல் ஆகிய இரண்டு படங்களை வெளியிட்டிருக்கிறார்.

'சினிமா ஒரு மேத்தமெடிக்ஸ்’னு, அந்தச் சூத்திரம் தெரிஞ்சா போதும். எதையும், யாரையும் பார்த்து காப்பி அடிக்காம, நம்ம வாழ்க்கையின் இனிப்பான, கசப்பான அனுபவங்களைக் கோர்த்தாலே அழகான திரைக்கதை கிடைக்கும். என்னோட குறும்படங்கள்ல நான் கத்துகிட்ட விஷயங்களை சினிமாவுல பண்ணி இருக்கேன். 14 குறும்படங்கள் எடுத்து இருக்கேன். 'யூ டியூப்’ல் நான் அப்லோட் பண்ணின முதல் குறும்படத்துக்கு 'இதெல்லாம் படமாடா?’ன்னு கமென்ட் வந்தது. ஆனால், கடைசியாக எடுத்த குறும்படம் லட்சக்கணக்கில் ஹிட்ஸ் அள்ளுது என்று பீட்சா வெளியாகிற நேரத்தில் சொன்னார்.  இப்போதுவரை அது நடந்துகொண்டிருக்கிறது.

இன்று கார்த்திக்சுப்புராஜ் பிறந்தநாள்.

வாழ்த்துகள்  கார்த்திக் சுப்புராஜ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்