தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ. பிலிம் நியூஸ் ஆனந்தன்- நினைவலைகள்! | Flim News Anandhan Passed Away

வெளியிடப்பட்ட நேரம்: 12:25 (21/03/2016)

கடைசி தொடர்பு:15:20 (21/03/2016)

தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ. பிலிம் நியூஸ் ஆனந்தன்- நினைவலைகள்!

தமிழ் தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்படும் பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் கோடம்பாக்கத்தில் இன்று காலமானார்.அவருக்கு வயது 88.

கடந்த 1954ம் ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட தென் இந்திய திரைப்படங்களின் நடிகர்   நடிகைகள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என்று அனைத்துத் தரப்பு தகவல்களையும் சேகரித்து   வைத்து இருந்த பெருமைக்கு உரியவர்.


அவரின் வாழ்க்கையில் சினிமா ஒன்றிக் கலந்த வரலாற்றை அவரே முன்பு ஒரு பேட்டியில் கூறியது இங்கே சுருக்கமாக....

"எனது பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது வழக்கம். மேலும் சிறுவயது முதல் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் காரணமாக,  எனது யுக்தியால் இரட்டைவேடப் படம் பாக்ஸ் கேமிராவில் எடுத்தேன். இதைக் கண்ட என்.எஸ்.கே.யின் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை எனக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் கூறிய யோசனைப்படி விலையுயர்ந்த ஸ்டில் கேமிராவை வாங்கி படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

1954ல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை பற்றிச் செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டேன். திரைக்கலைஞர்களை கேமராவில் படம் பிடித்தேன். எனது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த பிலிம்நியூஸ் பத்திரிகையில் நான் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் ஆனந்தன், பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறினேன்.

நடிகர் சங்கத்தின் நடிகன் குரல் பத்திரிகையின் போட்டோ - ஜர்னலிஸ்ட் - ஆக மாறினேன். அதன் ஆசிரியர் வித்வான் வே.லட்சுமணன், நடிகன் குரலின் பதிப்பாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆர். அவர்களை தினமும் சந்திப்பார். அவருடன் நானும் செல்வேன்.

1958 எம்.ஜி.ஆர். நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம் அலுவலக மேளாளராக இருந்தவர் திரு. ஆர்.எம்.வீரப்பன் அவர்கள் அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜெண்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது அன்நாளைய வழக்கம் “ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா” - என்று கேட்டேன். “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன? நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர். பாராட்டினார். P.R.O. என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு காரணமானது இந்த சம்பவம் தான்."  என்று கூறியிருக்கிறார் ஆனந்தன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்