“எப்படிண்ணா அடிப்பீங்க?” - விஜய்காந்திடம் கேட்ட சிறுவர்கள்!

ண்பதுகளின் நடுவில் திருப்பூர், பல்லடம் சாலையில் லட்சுமி கல்யாண மண்டபம் கட்டித் திறக்கப்பட்டது. அது பயன்பாட்டுக்கு வந்த காலத்தில் மாவட்டத்தின் பிரம்மாண்டமான மண்டபங்களில் அதுவும் ஒன்று. செல்வந்தர்கள் நடத்தும் மணவிழாக்கள் மட்டுமே அம்மண்டபத்தில் நடைபெறும்.
 

அக்கால கட்டத்தில் அம்மண்டபத்தை அடுத்திருந்த பகுதியில் நாங்கள் குடியிருந்தோம். என் வீட்டுக்கருகில் மண்டபத்தில் காவல் பணியாற்றும் இளைஞர்கள் சிலர் வசித்தனர்.
 

அவர்களோடு நான் நட்பானேன். பணி நேரத்தில்கூட அவர்களைப் பார்க்க மண்டபத்திற்குச் சென்று அவர்களோடு இருப்பேன். விழாக்கள் நடைபெறும் சமயத்தில் அவர்களே என்னை வரும்படி அழைப்பதும் உண்டு. ‘நாளைக்கு ஒரு பட்டிமன்றம் நடக்குதாம்பா. வந்துரு’ என்பார்கள். சாலமன் பாப்பையா, சத்தியசீலன் போன்றோரின் பட்டிமன்றங்களை அவர்கள் அழைத்துச் சென்றதால்தான் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.


கோலாகலமான திருமண நிகழ்ச்சிகளில் தவறாது மெல்லிசைக் கச்சேரிகளும் நடக்கும். இசைக்கச்சேரி என்றால் நான் வலியச் சென்றுவிடுவேன். தீபன் சக்ரவர்த்தி, தேவா போன்றோரின் இசைக்கச்சேரிகளை முதல் பாடலிலிருந்து கடைசிப் பாடல்வரை அங்கிங்கு நகராமல் கேட்டு ரசித்துக்கொண்டிருப்பேன்.
அங்கிங்கு ஆர்கெஸ்ட்ரா என்ற பெயரில்கூட ஓர் இசைக்குழு இருந்தது. அன்றைய மல்லிச்சேரி ஆர்க்கெஸ்ட்ராவில் இடம்பெற்றிருந்த கோவை குணாவின் பல்குரல் நிகழ்ச்சிகளை சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அங்கே நேரில் கண்டு வயிறு வலிக்கச் சிரித்திருக்கிறேன்.
 

ஒருநாள் திரைத்துறையோடு தொடர்புடைய எங்கள் ஊர்த் தொழிலதிபரின் இல்லத் திருமணம் அங்கு நிகழ்ந்தது. இசைக்கச்சேரியும் கூட. அந்த மாலையில் நான் அங்கு சென்றுவிட்டேன். இசைக்கச்சேரியும் திருமண வரவேற்பும் நிகழ்ந்துகொண்டிருக்க திடீரென்று மண்டபமே பரபரப்பானது.
 

எல்லார் மத்தியிலும் ‘விஜயகாந்த் வந்திருக்கிறார்...’ என்ற தகவல் பரவியது. அங்கே வைத்திருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் விஜயகாந்த் தோரண வாயிலுள் நுழைவது தெரிந்தது. உடனே என்போன்ற பத்து+ வயதொத்த சிறுவர்கள் அனைவரும் மண்டபத்தின் உள்ளே ஓடினோம்.
அப்பொழுது விஜயகாந்திற்குச் செந்தூரப்பூவே, உழவன் மகன் போன்ற படங்களால் ஏற்பட்டிருந்த சந்தை மதிப்பு தளர்ந்திருந்தது. பொன்மனச் செல்வன் போன்ற பட்ஜெட் படங்கள் அவர் நடித்து வெளியாகியிருந்தன.
 

மண்டபத்தில் விஜயகாந்த் மணமக்களின் அருகில் புகைப்படத்திற்கு நின்றுகொண்டிருந்தார். எங்களைப்போன்ற சிறுவர் குழுவினர் அவரை நெருங்குவதா வேண்டாமா என்று ஆர்வம் பொங்கும் விழிகளோடு அவரையே உற்றுப் பார்த்தபடி மருண்டு நின்றுகொண்டிருந்தோம். வரவேற்பு மேடையிலிருந்து எங்களைப் பார்த்த விஜயகாந்த் கைச்சைகையாலே எல்லாரையும் மேடைக்கு வரும்படி அழைத்தார். ‘ஓ’ என்ற ஆர்வக் கூச்சலுடன் எல்லாரும் சென்று அவரை மொய்த்துக்கொண்டோம்.


எல்லாரையும் தலையைத் தடவி, கன்னத்தைக் கிள்ளியபடி பேசினார். ‘அண்ணா... எப்படிண்ணா  அடிக்கறீங்க ?’ என்று ஒரு குறும்புச் சிறுவன் கேட்க, பாவனையாய் கைச்சைகையில் ‘டிஷ்யூம்’ செய்து காட்டினார். ஐய்’ என்ற சந்தோஷக் கூச்சலில் ஒவ்வொருவராக அவர் கையைக் கட்டித் தொங்கினோம். அவரும் விளையாட்டுக் காட்டுபவர்போல ஒற்றைக் கையால் ஒவ்வொருவரையும் அரையடி தூக்கினார்.
நானும் அவர் கையைப் பிடித்துத் தொங்க அப்படியே செய்தார். பிறகு அவர் மணமேடையை விட்டிறங்கி மண்டபத்தில் உலாத்தினார்.
 

சிறுவர் கூட்டம் இலகுவாகி அவரை விட்டு விலகி நகர, நானும் சில சிறுவர்களும் மட்டுமே அவரோடு நின்றிருந்தோம். அவர் செல்லுமிடமெல்லாம் பின்னாடியே சென்றோம். அவர் நிற்கும் இடத்தில் நின்றோம்.
அவருக்கு வேண்டியவர்கள் வந்து அவரோடு உரையாட ‘ஏமி…’ என்று தொடங்கித் தெலுங்கில் பேசினார். அது எனக்கு அப்போதைய வியப்பு. அவர்களில் சிலர் அவரைச் சாப்பிட அழைத்தனர். அவர் ‘அப்புறமா…’ என்கிற மாதிரியான பதிலைச் சொல்லிபடி இருந்தார். வெள்ளைக் கதர் வேட்டி சட்டை அணிந்திருந்தார். கண்கள் செக்கச் சிவந்து இருந்தன.
 

பிறகு அவர் மண்டபத்தின் மஞ்சள் விளக்கொளி படாத அரையிருளில் ஒரு மரத்தடியில் வந்து நின்றுகொண்டார். புதிதாகக் கடந்துபோகிறவர்கள் அவரை அப்படியொன்றும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இப்போது அவரும் நானும் மட்டுமே நிற்கிறோம்.
 

முக்கியமானவர்கள் அவரைத் தேடி வந்து பேசிக்கொண்டிருந்தனர். நான் கொஞ்சம் இடைவெளிவிட்டு நின்றபடி அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னைப் பார்க்க நேர்ந்தால் சன்னமாக ஒரு புன்னகை சிந்துவார். அந்தப் புன்னகை முடிவதற்குள்ளாக யாராவது ஒருவர் அவரோடு கைகுலுக்கிப் பேச வந்துவிடுவார்கள்.
 

இசைக்கச்சேரியினர் ’கானக் கருங்குயிலே… கச்சேரி வெக்கப்போறேன்’ என்ற பூந்தோட்டக் காவல்காரன் பாடலைப் பாடிக்கொண்டிருந்தனர். சற்று நேரம் இப்படியே சென்றது. கொஞ்ச நேரத்தில் மண்டபம் இன்னும் களேபரமானது. புயல்போல் முப்பதுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அசுர வேகத்தில் வளாகத்திற்குள் நுழைந்தன.


அவற்றில் மேற்கூரையிடப்பட்ட சிறுபாரவுந்துகளும் அடக்கம். அவ்வகைச் சிறிய வண்டிகள் ஒவ்வொன்றிலும் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதீத உற்சாகத்தில் இருந்தனர். தலைகொள்ளாத போதை. அவர்களில் பலர் லுங்கி அணிந்திருந்தனர். ‘வாழ்க வாழ்க’ என்ற முழக்கமும் ஒலித்தது என நினைக்கிறேன்.


இந்தப் பரபரப்பால் ஆர்வமுற்று நான் கொஞ்சம் முன்னே வந்திருந்தேன். ‘அச்சச்சோ… விஜய்காந்தைத் தனியாக விட்டுவிட்டோமே’ என்கிற மாதிரியான ஓர் உணர்வில் நான் திரும்பிப் பார்க்க அங்கே விஜயகாந்தைக் காணவில்லை. எங்கோ நகர்ந்திருந்தார்.


சரி’ என்று நான் இந்த வாகன வரிசையை வேடிக்கை பார்க்கத் துவங்கினேன். வரிசையில் வந்தவற்றில் இரண்டு மகிழுந்துகள் மட்டும் வரவேற்பு நிறுத்தப் பகுதியை நோக்கித் திரும்பின. முதல் வண்டியிலிருந்து இறங்கியவரை செய்தித் தாள்களில் பார்த்த மாதிரி இருந்தது. ஆம், நினைவுக்கு வந்துவிட்டது. அவர் முன்னாள் அமைச்சர் குழந்தைவேலு. அவரோடு சேர்ந்து இறங்கிய இன்னொருவர் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு. அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராக திருநாவுக்கரசு தனி அணியாய்த் திரண்டு கட்சிப் பொதுக்குழு பலத்தைக் கூட்டிக்கொண்டிருந்த நேரம். அவை எல்லாம் தினந்தோறும் செய்தியாகியபடி இருந்தன.


இரண்டாவது காரிலிருந்து ஒருவர் இறங்கினார். அவர் விஜயகாந்தைவிடவும் பகட்டான வெள்ளைச் சட்டையும் வேட்டியும் அணிந்திருந்தார். அது நிச்சயம் விலையுயர்ந்த வெண்பட்டாகத்தான் இருந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது. முகத்தில் ராஜகளை. முகம் முழுவதும் இதமான ரோஜாப்பூ நிறத்தில் இருந்தது. அவர் நடிகர் ராமராஜன்.


அந்தச் சமயத்தில் புதுப்பாட்டு என்ற அவருடைய படம் வெளியாகியிருந்தது. இசைக் கச்சேரியினருக்கும் இச்செய்தி எட்ட அவர்கள் ‘மாங்குயிலே… பூங்குயிலே…’ பாடலைப் பாட ஆரம்பித்தனர். அவ்வமயம் கட்சியில் ஏற்பட்ட சலசலப்பால் ராமராஜன் திருநாவுக்கரசு அணிக்கு வந்திருந்தார். கலைந்திருந்த சிறார் கூட்டம் மீண்டும் ராமராஜனைக் கண்டதும் ஒன்று திரண்டது. நானும் அந்தக் கூட்டத்தில் முண்டியடித்து முன் வரிசையில் நின்றேன்.


ஆனால், அவர் பக்கத்தில்கூட நெருங்கமுடியாதபடி உடன் வந்திருந்த தொண்டர்படை எங்களைத் தடுத்துப் பிடித்தது. கொஞ்சம் முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டது. நாங்களும் ‘அண்ணா… அண்ணா…’ என்று அழைத்துப் பார்த்தோம். ராமராஜன் எங்களைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
பிள்ளைகளின் பெற்றோர்கள் - இந்தக் கூட்ட நெரிசலில் தம் பிள்ளைகளுக்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னாவது என்று - ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்துச் சென்றுகொண்டிருந்தனர்.


மணமக்களோடு படம் எடுத்துக்கொண்ட ராமராஜன் நேராக உணவுக் கூடத்திற்குச் சென்று அமர்ந்தார்.
பத்திரிகைப் பேட்டியொன்றில் ராமராஜன் ‘இட்லியைச் சட்னியோடு பிசைந்துதான் சாப்பிடுவேன்’ என்று கூறியிருந்தார். அதைப் படித்த நான் இட்லியைச் சட்னியில் பிசைந்து சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன்.
ராமராஜன் அப்படித்தான் சாப்பிடுகிறாரா என்று பந்திவரை கூட்டத்தோடு கூட்டமாய்ச் சென்று பார்த்தேன். அவர் அப்படியெல்லாம் சாப்பிடவில்லை. இட்லியைக் கிள்ளி சட்னியில் தொட்டுத்தான் சாப்பிட்டார்.
உண்ணும்போது அவர் பார்வை படும்படியாக எதிரிலிருந்த ஒரு கூட்டத்தில் நான் நின்றுகொண்டிருந்தேன். ‘கண் இமைக்காமல் நான் சாப்பிடுவதையே இந்தப் பயல் பார்த்துக்கொண்டிருக்கிறானே’ என்று அவர் எண்ணியிருக்க வேண்டும். ஒருகணம், நொடியின் பின்னத்தளவு – என்னை ஏறிட்டுப் பார்த்தவர் மீண்டும் சாப்பிடத் துவங்கினார். அந்தப் பார்வையின் மதியாமை என்னை ஏதோ செய்தது என்றே உணர்கிறேன்.
 

நான் கூட்டத்திலிருந்து என்னை விடுவித்துக்கொண்டு தனியாக வந்தேன். விஜயகாந்த் நின்றுகொண்டிருந்த மரத்தடியை நோக்கி நடந்தேன். அங்கே ஒருவேளை விஜயகாந்த் நின்று கொண்டிருக்கக் கூடும், பிள்ளைகளை எல்லாம் சைகையால் அழைப்பார், தம் புஜம்பற்றித் தொங்கும் பிள்ளைகளிடம் கைவலுகாட்டத் தூக்கி விளையாட்டு காட்டிக்கொண்டிருப்பார் என்ற எண்ணமும் ஏற்பட்டது.
மரத்தடியில் விஜயகாந்த் இல்லை. ‘விஜயகாந்த் வந்துட்டுப் போய்ட்டாரே’ என்று பேசியபடியே இருவர் என்னைக் கடந்து சென்றனர். நான் காவல் அண்ணனிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடந்தேன்.
இவை எல்லாம் நிகழ்ந்து இருபத்தைந்தாண்டுகள் ஓடிவிட்டன.
 

விஜயகாந்த், ராமராஜன், குழந்தைவேலு, திருநாவுக்கரசு, அந்தத் திருமண விழாவை நிகழ்த்திய எங்கள் ஊர்ப் பிரமுகர் என - இவர்களைப் பற்றிய செய்திகளைப் பிற்காலங்களில் ஆர்வத்தோடு தொடர்ந்து வந்திருக்கிறேன்.
 

சிறுவர்களை அள்ளி அணைத்து உடல் தீண்டவிட்டு மகிழ்ந்த விஜயகாந்துக்கு அதற்குப் பிறகு சறுக்கலே இல்லாத ஏறுமுகம்தான். புதுப்பாட்டு படத் தோல்வியிலிருந்து தொற்றிய ராமராஜனின் நட்சத்திர வாழ்க்கைச் சரிவு ‘நான் கடைசியா வயிறார டிபன் சாப்பிட்டது எம்.பி.யா இருந்தபோதுதான்’ என்று பேட்டி கொடுக்குமளவுக்குக் கீழிறங்கியது. இட்லியைச் சட்னியில் பிசைந்துதான் சாப்பிடுவேன் என்ற அவரின் பேட்டி வந்த அதே பத்திரிகையில்தான் இந்தப் பேட்டியும் வந்தது.
 

நூற்றுக்கணக்கான தொண்டர்களோடு மண்டபத்தில் நுழைந்த குழந்தைவேலு சில வருடங்கள் கழித்துத் தனியரானார். அவரே கார் ஓட்டிச் சென்று, உடுமலைப் பேட்டை – கோவை சாலையில் வழியோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி ஸ்தல மரணமடைந்தார். தம் ஊரில் வெல்லவே முடியாதவராக இருந்த திருநாவுக்கரசு இப்போது எந்த ஊரில் இருக்கிறார், எந்தக் கட்சியில் இருக்கிறார் என்று எனக்குத் தெரியாது.
அந்த மணவிழாவை அத்தனை கோலாகலமாக நிகழ்த்திய எங்கள் ஊர்ப்பிரமுகர் அடுத்தடுத்து திரைப்படத் தயாரிப்பில் இறங்கி நஷ்டமடைந்து கஷ்டமடைந்தார்.

-கவிஞர் மகுடேசுவரன்

கவிஞர், தனது முகநூலில், தான் சிறுவயதில் விஜயகாந்தைச் சந்தித்தது குறித்து பதிவிட்டிருந்தார். அந்தக் கலகல பதிவு, இங்கே அப்படியே.. அவரது அனுமதியோடு  நமது வாசகர்களுக்காக!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!