ஹேப்பி பர்த்டே 'செல்லம்'

'இன்று புதிதாய்ப் பிறந்தேன்'னு சொல்வான் பாரதி...  என்னைக் கேட்டால், 'இப்போதான் பிறந்தேன்!' " என்று சொல்லும்  பிரகாஷ்ராஜ் ஒரு முன்னுதாரணக் கலைஞன். திரையைத் தாண்டியும் சிலருக்கு மிகப்பிடித்த சிலருள் பிரகாஷ்ராஜின் பெயர் எப்போதும் இருக்கும்.

"வீழ்வேனென்று நினைத்தாயோ?" எனும் பாரதியின் வரிகளைப் படிக்கும்போது எந்தளவுக்கு உத்வேகம் வருமோ அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாதது பிரகாஷின் தன்னம்பிக்கை வரிகள். வாழ்வு குறித்த அச்சம் ஏற்படும் ஒவ்வொரு கணத்திலும் அதற்கடுத்த நொடிக்கு நம்மைக் கடத்தும் நம்பிக்கை நிறைந்தது அவரது வாழ்க்கை.

மொழி என்பது வாழ்க்கை எனச் சொல்லும் பிரகாஷ்ராஜின் தாய்மொழி கன்னடம். கன்னடம் தவிர்த்து மேலும், ஆறு மொழிகளை சரளமாகப் பேசவும், எழுதவும் தெரியும். பெங்களூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் டிராவிட்டின் சீனியர் பிரகாஷ். இருவரும் பிரபலமாவதற்கு முன்பு  சென்னையில் ஒருமுறை சந்தித்துக் கொண்டபோது இருவரின் லட்சியங்களாக பரிமாறிக்கொள்ளப்பட்டது பிரகாஷ் ஒரு நடிகனாக தேசிய விருது பெறவேண்டும் என்பதும் டிராவிட் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதும். நன்முயற்சி எப்படியாகினும் வெற்றியைத் தருமல்லவா? பின்னாளில் இருவரும் அவரவர் துறையில் சாதித்தது அனைவரும் அறிந்த கதைதான்.

தன் ஆரம்ப காலத்தில் மாதம் முந்நூறு ரூபாய் சம்பளத்திற்கு நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு இன்று கால்ஷீட் கொடுக்கமுடியாத அளவுக்கு பல மொழிப் படங்களில் பிஸி. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீதி நாடகங்களில் நடித்து திரையுலகிற்கு வந்தவர். தமிழில் 'டூயட்' படத்தின் மூலம் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் பிரகாஷ்ராய் 'பிரகாஷ்ராஜ்' ஆக அறிமுகப்படுத்தப்பட்டார். பின்னாளில் பிரகாஷ்ராஜ் தொடங்கிய தயாரிப்பு நிறுவனத்திற்கு 'டூயட் மூவிஸ்' எனப் பெயர் சூட்டியது அதனால்தான். தனது டூயட் மூவிஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக 2002 ல் வெளிவந்தது 'தயா' திரைப்படம். சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இந்தப் படத்திற்காக சிறப்பு விருதைப் பெற்றார். வெற்று வணிகநோக்கில்லாத படங்களைத் தயாரிப்பது டூயட் மூவிஸின் நோக்கம்.

2007 ஆம் ஆண்டு ராதாமோகனின் 'மொழி' திரைப்படத்தை தயாரித்து பலத்த பாராட்டுகளைப் பெற்றார். ஒரு இசையமைப்பாளனுக்கும் ஒரு வாய் பேச முடியாத, காது கேட்காத பெண்ணுக்கும் இடையேயான மென்மையான காதல். அன்புக்கு மொழி அவசியமில்லை. அது உணர்வு.ஒன்றுமே இல்லாத மௌனமொழி பேசும் ஆயிரம் வசனங்களை என ஆழமாய்ச் சொன்ன படம் 'மொழி'. 'மௌனம்தான் பிரபஞ்ச பாஷை' எனப் பிரகாஷ் தன் தொடரில் சொன்னது அத்தனையும் நிஜம்.

அதீத அன்பால் தன் மகளை சிறுகுழந்தையைப் போலவே தாங்கிக் கொண்டிருக்கும் தந்தைக்கும் அவரது மகளுக்குமான உறவை ஒரு கவிதையைப் போல சொன்ன திரைப்படம் 'அபியும் நானும்'. அதில் பாசத்தைக் கொட்டும் அப்பாவாக, மகளின் பிரிவைத் தாங்கமுடியாமல் தவிக்கும் தகப்பனாக வாழ்ந்து பெண்குழந்தை பெற்றவர்கள் தவறாமல் பார்க்கவேண்டிய திரைப்படத்தைத் தயாரித்தது இவரது டூயட் மூவிஸ். ஒரு கமர்சியல் சினிமாவைத் தயாரிக்க நூறு தயாரிப்பாளர்கள் கிடைக்கலாம். யதார்த்தத்தை அழகாக பிரதிபலிக்கிற, யாரும் அவ்வளவாகத் தொடாத பரப்புகளை சினிமாவாக்குவது தான் பிரகாஷ்ராஜ் எனும் தயாரிப்பாளன். 'பொய்' , 'வெள்ளித்திரை' ,  'நாம்', 'கண்ட நாள் முதல்', 'அழகிய தீயே' கல்லூரி மாணவர்களின் அமோக வரவேற்பைப் பெற்ற 'இனிது இனிது',என எளிமையான அதேவேளையில் அழகான பலபடங்களைத் தயாரித்ததும் பிரகாஷ்ராஜ். உண்மையில் எளிமையான படம் எடுப்பதற்குத்தான் அதிக தைரியமும் வேண்டும்.

வாழ்க்கை ஒரு அழகான பயணம் என்கிறார் பிரகாஷ். அவரது பயணம் நம்மில் பெரும்பாலானோரின் வாழ்க்கைக்கு மிக அருகாமையானது. நாமெல்லாம் பயணிகள்தான். ஓடிக்கொண்டே இருக்கிறோம் வாழ்வில் எதையோ தேடிக்கொண்டேயிருக்கிறோம். தமக்காக குடும்பத்திற்காக எனப் பணம் பொருள் எனத் தேடிப் பெறும்போது திரும்பிப் பார்த்தால் மகிழ்ச்சி அங்கே காணாமல் போயிருக்கும். சிரித்துப் பலநாட்கள் ஆகியிருக்கும். அதற்கு முன்புவரை பெரிதாய்த் தெரிந்த எதுவும் இப்போது ஒரு மடுவாயிருக்கும். அதை முன்பே அறிந்துகொண்டால் நம் வாழ்க்கை நம்மை விட்டு விலகிச்செல்வதில்லை. பிரகாஷ் கற்றக்கொடுத்தது இதைத்தான். அவரது காதல், பெண்களின் மீதான பார்வை என எல்லாமே அழகானது. "பெண்களை நேசிக்காம ஒரு ஆண் மிகச்சிறந்த படைப்பாளியா ஆகவே முடியாது." என அழுத்தமாகச் சொல்லும் அவரது வாழ்வில் அத்தனை பெண்களை நேசத்தால் கடந்திருக்கிறார்.

வில்லன் நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் திறம்பட நடித்தவருக்கு 1998 ல் மணிரத்தினத்தின்  'இருவர்' படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இந்தத் திரைப்படம் முதுபெரும் அரசியல்வாதிகளான எம்.ஜி.ஆருக்கும், கருணாநிதிக்கும் இடையேயான உறவைச் சொல்லும் கதை என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ல் 'காஞ்சிவரம்' திரைப்படத்தில் ஒரு நெசவாளரின் வலியை தன் நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக மீண்டும் தேசிய விருது என இதுவரை ஐந்து தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

இயக்குநராக முகம் காட்டிய அவரது 'தோனி' திரைப்படம் ஒரு தந்தையின் உணர்வுகளை அழுத்தமாகச் சொன்ன படம். கிரிக்கெட்டின் மீது தீராக்காதல் கொண்ட தன் மகனை எம்.பி.ஏ படிக்க வைக்க நினைக்கும் அப்பா. தேர்வில் தோல்வியடைந்து "எனக்கு மேத்ஸ் வரலைப்பா, எனக்கு கிரிக்கெட் தான் வருது.." என்று தன் இயலாமையை வெளிப்படுத்தும் மகன். நூறு சத தேர்ச்சிக்காக பாடாய்ப்படுத்தும் கல்விக்கூடம். இவர்களுக்கிடையேயான உணர்வுகளை, பெரும் கொந்தளிப்பை எந்தவித சமரசங்களுமின்றி யதார்த்தமாகச் சொன்ன விதத்திலும், கடைசியில் மகனின் கனவைப் புரிந்துகொண்ட தந்தையாகத் தழுதழுக்க வைக்கும் இடத்திலும்  படம் மட்டுமல்ல அது. அனைவருக்குமான பாடம். பொம்மைகளோடு விளையாடிய தன் மகன் சித்தார்த்தின் எதிர்பாராத மரணம் ஏற்படுத்திய வலியை இப்படத்தின் கடைசிக்காட்சிகளில் நாம் உணரலாம்.

மணமாகாத நடுத்தர வயதையொட்டிய ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான ஒத்த அலைவரிசை அவர்களை இணைத்ததா என ரசனையோடு நம்மைக் கடத்தும் திரைப்படம் 'உன் சமையலறையில்'. மலையாளத்தில் ஹிட்டடித்த 'சால்ட் அண்ட் பெப்பர்' படத்தை தமிழுக்கு மாற்றிப் பரிமாறிய பிரகாஷ்ராஜ் தான் ஒரு யதார்த்த சினிமா இயக்குநர் என மீண்டும் நிரூபித்தார். இவை மட்டுமின்றி கன்னடத்திலும், தெலுங்கிலும் படங்களையும் இயக்கியிருக்கிறார்.

கடவுள் நம்பிக்கையைப் பற்றிய அவரது கருத்து என் மனதுக்கு மிக நெருக்கமானது. " நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்துல வேஷம் போடுறதைவிட உண்மையா இருக்குறதைத் தான் கடவுளும் விரும்புவார்.. ஒருவேளை அப்படின்னு ஒருத்தர் இருந்தா! " போகிறபோக்கில் சாதாரணமாகச் சொல்வது போலத் தோன்றினாலும் அதுதான் நிதர்சனம்.

சமூகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பிரகாஷ்ராஜ் தெலுங்கானா மாநிலத்தின் கொண்டாரெட்டிபல்லே எனும் பின்தங்கிய கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சி பெற்ற கிராமமாக்க முயற்சித்து வருகிறார். நாமும் வாழ்த்துவோம். தன் வாழ்வில் சந்தித்த துன்பங்களையெல்லாம் அனுபவங்களாக்கி சாதித்த மக்களின் ரசனைக்குரிய உன்னதக் கலைஞனுக்கு இன்று பிறந்தநாள். இன்னும் பல நல்ல படங்கள் இயக்கவும், மகிழ்ச்சி சூழ வாழவும் வாழ்த்துகள்.

ஹேப்பி பர்த்டே 'செல்லம்' !

-விக்னேஷ் சி. செல்வராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!