வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (26/03/2016)

கடைசி தொடர்பு:15:28 (26/03/2016)

'அம்மா’ன்னா சும்மா இல்ல...!

பொதுவா சினிமா செய்திகள் என்று வந்தால் நடிகைகள் பற்றிய செய்திகளை ஆர்வமோடு படிக்கலாம். அதே நேரத்தில்  சினிமா டிஸ்கஷனில் ஆரம்பித்து ஷூட்டிங் ஸ்பாட், ப்ரமோஷன் என படம் ரிலீஸ் ஆகும் வரை நடிகைகளோடு எப்போதும் உற்ற துணையாகவும் பலமாகவும் இருக்கும் அம்மாக்கள் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே!

ராதாமணி - சாய்பல்லவியின் அம்மா

சாய்பல்லவிக்கு  அம்மான்னு சொல்றது எனக்கு அவ்ளோ சந்தோஷம். ’மலர் டீச்சர்’னு ரசிகர்கள் மத்தியில ரீச் ஆனது ரொம்ப பெருமையா இருக்கு. ஒரு நடிகையோட அம்மான்னு பேசுறத விட ஒரு மகளுக்கு நான் அம்மாவா பேசுறதுதான் சரியா இருக்கும். ஷூட்டிங் நேரத்துல எத்தனை பேர் கூட இருந்தாலும் அம்மா கூட இருக்குறது அவங்களுக்கு தைரியத்தைக் கூட்டும். அதே போல ஏதாவது கேட்கணும்னா தயங்க மாட்டாங்க.

அவ நடிப்புக்கு புதுப்பொண்னு. அதனால எந்த வசனம்னாலும் என்கிட்ட ஒருதரம் சொல்லிக் காட்டி எப்படி இருக்குனு கருத்து கேட்பா. நான் அதுல ஏதாச்சும் பிடிச்சது பிடிக்காததுனு எடுத்து சொல்வேன். அதே போல அவளுக்கு என்ன வருதோ அதை இயல்பா பண்ணணும்னு அட்வைஸ் பண்ணுவேன். சாயோட முகத்துல பிம்பிள்ஸ் நிறைய இருக்கும். மஞ்சள் தயிர் கடலைமாவு இதெல்லாம் அரைச்சு பூசச் சொல்வேன். ஆனாலும் பெருசா குறைஞ்ச மாதிரி இருக்காது. சாய்பல்லவிக்கு பிம்பிள்ஸ் பிரச்னை 12 வயசுல இருந்து இருக்கு. ஆனா அதுக்காக பெருசா வருத்தப்படவேண்டிய அவசியம் இல்ல. இது எல்லாருக்கும் வயசுல வரும் மாற்றம்தான்னு அவளுக்குச் சொல்லுவேன். ஆரம்பத்துல வருத்தப்பட்டவ போகப்போக அப்படி ஒண்ணு இருக்கறதையே பெருசா எடுத்துக்குறது இல்ல. இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனும் நடிகைன்னா வழவழன்னு தான் முகம் இருக்கனும்னு அவசியம் இல்லைனு சொல்வார்.

சாய் பல்லவிக்கு டான்ஸ் மேல ஈடுபாடு அதிகம். அதனால் ஸ்கூல் படிக்கிறப்பவே எந்த போட்டிக்குப் போறதா இருந்தாலும் சப்போர்ட் பண்ணுவேன். நிறைய பழங்கள் சாப்பிடச் சொல்லுவேன். ஹெல்த் நல்லா இருக்கணும்னா நல்ல தூக்கம் இருக்கணும். அதனால மதியம் குறைஞ்சது 2 மணி நேரம் தூங்கச் சொல்லுவேன். ஒரு அம்மாவா இப்ப அவளோட கால்ஷீட் பாத்துக்கிறேன். எந்த விஷயமா இருந்தாலும் சாய் எனக்கு சொல்லிட்டுதான் செய்வாங்க. அதனால தான் நான் நடிகையோட அம்மாவா என்னை உணரலை. என் மகளுக்கு நான் அம்மா.

உமாகிருஷ்ணன் - த்ரிஷாவின் அம்மா

த்ரிஷாவும் நானும் இந்தத் துறையில 14 வருஷமா இருக்கோம்னா அதுக்குக் காரணம் திரைத்துறை பத்தின புரிதல்கள் எங்களுக்கு இருக்குறது தான். பொதுவா ஹீரோயின்கள் அம்மாக்கள் எப்பவும் அவங்க கூடவே இருப்பாங்க. ஜூஸ் கேட்டு வாங்கித் தருவாங்க. இப்படி தான் எல்லாருக்கும் தெரியும். ஆனா அம்மாக்களுக்கும் கொஞ்சம் ரோல் இருக்கு.

திரிஷாவுக்கு எந்தப் பட வாய்ப்பு வந்தாலும் அதை முடிவு எடுக்குற உரிமை அவங்களுக்கு தான் உண்டு. அம்மான்னு சொல்லி அடிக்கடி போய் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஒரே நேரத்துல நிறையப் பேர் கதை சொல்ல வந்தால் மெயில் மூலமா ஃபேஸ்புக் மூலமா ஸ்டோரியோட ஒன்லைன் என்னன்னு முதல்ல எனக்கு அனுப்பச் சொல்வேன். அதையெல்லாம் த்ரிஷாகிட்ட சொல்வேன். அவங்களுக்கு எந்தக் கதை பிடிச்சிருக்கோ அந்தக்கதைக்குச் சம்மந்தப்பட்டவங்களைக் கூப்பிட்டு டிஸ்கஷன் நடத்துவாங்க. டிஸ்கஷன் சமயத்துல நான்  கூட இருக்கவே மாட்டேன். ஏன்னா அந்த நேரத்துல அவங்களுக்கு நாம முழு சுதந்திரம் கொடுக்கணும். நம்மோட கருத்தை அவங்க மேல திணிக்கவே கூடாதுனு நினைப்பேன்.

சமயங்கள்ல ஷூட்டிங் போறப்ப 2 நாள் அதிகமாக நடிக்க முடியுமான்னு த்ரிஷாவை கேட்பாங்க. அந்த ரெண்டு நாளும் வேற ஏதாவது படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்தா, த்ரிஷாவுக்கு பதிலா சம்மந்தப்பட்ட மேனேஜர்கிட்ட பேசி அவங்களோட ஒப்புதல் வாங்கிடுவேன். வெளிநாடுகளுக்குப் போகும் போது அங்க உள்ள தட்பவெப்பநிலை ஒத்துக்காம போகலாம். அதனால அதுக்கு தகுந்த மாதிரி முன்னேற்பாடுகளை நான் கவனிச்சிப்பேன்.
த்ரிஷாவோட ஹெல்த் மட்டும் இல்ல அவங்களோட வங்கிக் கணக்கு வழக்கு வரை நான் பாத்துக்குறேன். அவளோட தனிப்பட்ட பிரச்சனைகள் எது வந்தாலும் ஒரு அம்மாவா கூட இருந்து சப்போர்ட் பண்ணுவேன். மனரீதியா சோர்ந்து போன சமயங்கள் த்ரிஷாவுக்கு நிறைய இருக்கு. அப்பெல்லாம் ஒரு தோழியா என்கிட்ட நிறைய பகிர்ந்துக்குவாங்க.

த்ரிஷாவோட ஆரம்ப காலத்துல ஒரு ஆபாச வீடியோ வெளியாகி மனசளவுல பாதிக்கப்பட்டோம். அந்தச் சமயத்துல கூட த்ரிஷா தைரியம் இழக்காம இருக்க சட்ட ரீதியா பல போராட்டங்களைச் சந்திச்சோம். சினிமாதுறைனு இல்ல எந்தத் துறையா இருந்தாலும் வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். அதை எப்படி எதிர்கொள்றோம் அப்படிங்கிறது தான் இங்க முக்கியம். த்ரிஷா அம்மாவா நான் பெருமைப்படுறேன்.

அம்மான்னா சும்மா இல்லைதானே?

- பொன்.விமலா

நீங்க எப்படி பீல் பண்றீங்க