இளையராஜாவிற்கு தேசியவிருது: ஆயிரத்திற்கு ஐந்துதானா? | Ilayaraja got national award for tharai thappattai

வெளியிடப்பட்ட நேரம்: 14:11 (29/03/2016)

கடைசி தொடர்பு:19:06 (29/03/2016)

இளையராஜாவிற்கு தேசியவிருது: ஆயிரத்திற்கு ஐந்துதானா?

ந்தாவது முறையாக தனது ஆயிரமாவது படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது பெறுகிறார் இசைஞானி இளையராஜா. தென்னிந்திய நாட்டார் இசைக்கு பெருமை செய்த இந்த மகாகலைஞனின் ஆயிரமாவது படத்திற்கு “தாரை தப்பட்டை” என்று கிராமிய இசைக்கருவிகளின் பெயர் டைட்டிலாய் அமைந்தது தற்செயல்தானா?


வணிக முக்கியத்துவம் வாய்ந்த கலையான சினிமாவிற்கான இசைப் பங்களிப்பு என்பதைத் தாண்டி தமிழர்களின் அன்றாட வாழ்வில்,அவர்களின் சுக துக்கங்களில் மறுக்க இயலாதவாறு கலந்திருக்கிறார் இளையராஜா. ஏன் ஒவ்வொரு தமிழனும் அவருக்கு நன்றிக்கடன்பட்டவனாக தன்னை உணர்கிறான்? தமிழ்ச் சமூகத்திற்கு அப்படி என்னதான் செய்திருக்கிறார் இந்த ஆளுமை? ஏனெனில் தமிழனின் நூற்றாண்டுகால இசைத்தாகத்திற்கு இவர்தான் நியாயமான விருந்தளித்தார். அவரது இசையில்தான் தனது நிலம், வாழ்வு, கோபம், காதல்,கண்ணீர் யாவும் அசலாக பிரதிபலிப்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்தான். இளையராஜாவின் பாடல்களை தனது காதலுக்காகவே உருவாக்கப்பட்ட பின்னணி இசையென ஒவ்வொரு இளைஞனும் நெகிழ்ந்தான். தனது இசையால் மனித நினைவுகளுக்கும் காலத்திற்குமிடையே அவிழ்க்க இயலாத பல ரகசிய முடிச்சுகளை போட்டிருக்கிறார் ராஜா. 80களில் வெளியான ஒரு பாடலை திடீரென நீங்கள் கேட்கநேரும்போது அந்த பாடல், யாரோ ஒரு நபரை, ஏதோ ஒரு நிகழ்வை நினைவூட்டிவிடுகிறதா? தன்னையறியாமல் நீங்கள் பெருமூச்சுவிடுகிறீர்களா? இத்தகைய உணர்வுபூர்வமான பெருமூச்சுக்களால்தான் முக்கியத்துவம் பெறுகிறது இளையராஜாவின் புல்லாங்குழல்.


இவருக்கு முன்பே பல ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் இசைக்கொடிகட்டி பறந்திருக்கிறார்கள். அப்படியானால் எந்த இடத்தில் இவர் வித்தியாசப்படுகிறார்? முன்னவர்கள் கர்நாடக மரபிற்குள்ளாகவே இசையை நிகழ்த்தி வந்தனர். ராஜா அதை மீறினார். சாதாரணமாக கையாள முடியாது என்று கருதப்பட்டுவந்த பல ராகங்களை அவர் அநாயாசமாக கையாண்டதுடன் அவற்றில் தமிழின் நாட்டுப்புற இசைக்கருவிகளையும்,ராகங்களையும், குணங்களையும் கலந்து ஒரு புதிய இசையை அறிமுகம் செய்தார். எழுபதுகளின் உருவான இசை வறட்சியால் இந்திப்பாடல்கள் வலம்வந்துகொண்டிருந்த தமிழகத் தெருக்களில் கட்டாற்று வெள்ளாமாய் பிரவகித்தது பண்ணைபுரத்தானின் பாடல்கள். ‘எங்கோ பார்த்த முகமாய் இருக்கிறதே!’ என்பதுபோல ஒவ்வொருவருக்கும் அந்த ராகங்கள் எங்கோ கேட்டது போலிருந்தது. அங்குதான் அவரது வெற்றி தொடங்கியது.


70களில் முற்றிலுமாக வேறு ஒரு தளத்திற்கு மாறிக்கொண்டிருந்த தமிழ்சினிமாவின் முகத்தை தனது பின்னணி இசையால் மேலும் அலங்கரித்தார் ராஜா. இசைக்கோர்ப்புக்கு பிறகு ‘இது தாங்கள் எடுத்தா சினிமா காட்சிதானா?’ என்று இயக்குநர்களை வியக்கும்படிச் செய்தார்.சாதாரணமாக உருவாக்கப்பட்டக் காட்சிகளுக்கும் தனது இசைக்குறிப்புகளால் வேறு பல பரிமானங்களைத் தந்தார். பாடல்களில் பல்லவிக்கும் சரணத்திற்கும் இடையிலான ‘இடையிசையில்’ காலத்தால் அழியாத சிம்பொனிகளை நிகழ்த்திக் காட்டினார். பாடல்களின் துவக்கத்தில்,இடையில், பின்னணியில் ஒலிக்கும் கோரஸ், ஆலாபணைகள், விசேச சப்தங்களைப் போன்று அவரளவிற்கு, அவருக்கு முன்பும் பின்பும் பயன்படுத்தியவர்கள் யாரும் இல்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.


சினிமாவில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு இசைக்கருவியை பிரதானப்படுத்தி இசை வழியாக பாத்திர பண்புருவாக்கம் (Music Characterization) செய்து காட்டினார். ஒரு பாடலில் ஒரு குறிப்பிட்ட இசைக்கருவியை மேஜராக (Major) உபயோகித்து அந்த பாடல் காலகாலத்திற்கும் அந்த இசைக்கருவியை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும்படிச் செய்தார். உதாரணமாக, ‘என் இனிய பொன் நிலாவே’, ‘இளைய நிலா பொழிகிறது’ போன்ற பாடலில் கிடார், ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’, ‘என் வானிலே’ போன்ற பாடலில் பியானோ, ‘ராக்கம்மா கையத்தட்டு’, ‘மெல்ல மெல்ல என்னைத் தொட்டு’ பாடலில் வயலின், ‘முத்துமணி மாலை’, ‘மணியே மணிக்குயிலே’, போன்ற பாடலில் தபேலா, ‘ராஜா... ராஜாதி ராஜனிந்த ராஜா’ பாடலில் டிரம்ஸ் என்று இசைக்கருவிகளை நம் மனதுக்கு நெருக்கமாக்கி தமிழ்ச்சமூகத்தின் இசையறிவை மேம்படுத்தினார். தபேலா எனும் இசைக்கருவிக்கு தமிழ் சினிமா இசையில் இவ்வளவு முக்கியத்துவம் தந்தவர் இளையராஜாவைத் தவிர வேறு யாருமில்லை.


இப்படியாக இளையராஜாவின் இசையாக்கம் குறித்து பேசியோ எழுதியோ முடித்துக்கொள்ளவே இயலாது. தாரை தப்பட்டை படத்தைவிட நூறுமடங்கு சிறந்த பின்னணி இசையை இளையராஜா பல படங்களுக்கு செய்திருக்கிறார். ஹேராம், குணா, தளபதி, மகாநதி, அழகி, சேது, பாரதி, காசி, பிதாமகன், விருமாண்டி, நான்கடவுள், நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என தேசிய விருதுக்கு தகுதியான ராஜாவின் இசைப்பட்டியல் பெரிது. தமி்ழ், மலையளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் இயங்கி ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த கலைஞனுக்கு வெறும் 5 விருதுகள் என்பது மிகக்குறைவே. ஆனாலும் உலகமெங்கும் பரவி வாழும் கோடானகோடி மக்கள் தங்களது இசைக்கலைஞனுக்கு சூட்டியிருக்கும் புகழ் கிரீடத்தில் இந்த ஐந்தாவது தேசியவிருதும் ஒரு நட்சத்திரமாக பதிந்துகொள்ளட்டும். ராஜாவால் விருதுகள் பெருமையடைவதை அவரது ரசிகர்கள் விரும்புவார்கள் !


- மாயன்

 

 

 

.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்