“அஜக்குன்னா.. அஜக்குத்தான்” - கவிஞர்களின் ஸ்பெஷல் குறும்புகள்! | Lyrics that are smartly written by lyricists

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (02/04/2016)

கடைசி தொடர்பு:12:07 (05/04/2016)

“அஜக்குன்னா.. அஜக்குத்தான்” - கவிஞர்களின் ஸ்பெஷல் குறும்புகள்!

சினிமா பாடல்களில் கவிஞர்கள், தங்கள் கைவரிசையைக் காட்டுவது ரசிகனைப் பொறுத்தவரை சுவாரஸ்யமான விஷயம். மறைபொருளாக சிலவற்றை வைத்திருப்பார்கள். அதில் வாலி, அடித்து ஆடுகிற கோஹ்லி மாதிரி. இளையராஜாவுக்கு எழுதுகிற பாடல்களில் சாமர்த்தியமாக ராஜாவைப் புகழ்ந்துவிடுவார். ‘சின்னத் தாயவள் தந்த ராசாவே’ என்று நேரடியாகவும் சரி, ‘ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது’ என்று மறைமுகவாகவும் சரி.

இவற்றில் பல செவி வழிச் செய்திகள். சில உறுதிப்படுத்தப்பட்டவை. ஆனாலும் அவை தரும் சுவாரஸ்யமும்,  கவிஞர்களின் இயல்பும், ‘இவங்க நிச்சயம் இப்டி பண்ணீருபாங்க’ என்றே தோன்றுகிறது!


கண்ணதாசன் காங்கிரசிலிருந்து பிரிந்த பிறகு காமராஜரையும் குறிப்பிடுவது போல (காமராஜரின் அன்னை பெயர் சிவகாமி) எழுதிய ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – என்னைச் / சேரும் நாள் பார்க்கச் சொல்லடி / வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி’ என்ற பாடல் உட்பட கண்ணதாசன் செய்தவையெல்லாமும் ‘வேற லெவல்’ வேலைகள்தான்.

எம். எஸ்.வி - கண்ணதாசன்

ண்ணதாசன் பாடல் தரத் தாமதமாகிறது. டென்ஷனான எம். எஸ். வி, தயாரிப்பாளரிடம் ‘வேற ஆள் வெச்சு எழுதிக்கலாம்ணே’ என்றுவிடுகிறார். ஒலிப்பதிவுக்கூடத்துக்கு வந்த கண்ணதாசனுக்கு இந்த சேதி காதில் விழுகிறது. கொஞ்சம் கடும் முகத்துடன், எம். எஸ். வி. முன் அமர்ந்து.. ‘ம்ம்.. மெட்டு என்ன?’ என்கிறார்.
கண்ணதாசனின் முகமாற்றத்தை கவனித்தபடியே, விஸ்வநாதன் மெட்டைச் சொல்கிறார்.

கண்ணதாசன் மனது முழுக்க, ‘எம். எஸ்.வி வேற கவிஞரை வெச்சு எழுதிக்கலாம்’ என்று சொன்னதேதான் ஓடுகிறது. ஓரிரு நிமிடத்தில் விஸ்வநாதனை நேருக்கு நேராய்ப் பார்த்து.. ‘சொன்னது நீதானா.. சொல்.. சொல்.. சொல்’ என்கிறார் பேச்சுவழக்கிலேயே. விஸ்வநாதன் நடுக்கத்துடனே பார்க்க, ‘என்ன பார்க்கற? மெட்டுக்குத்தான் சொன்னேன்’ என்கிறார். அந்த மெட்டில் பொருந்தி உட்கார்ந்தது வார்த்தைகள். ஏன் அந்த வரிகள் என்று புரிந்து, எம்.எஸ்.வி. பேச்சுமூச்சின்றி நின்றாராம்.   
 

ம்.எஸ்.வி எப்போதுமே மெட்டை, தத்தகாரத்தில்தான் சொல்வாராம். அதாவது ‘தந்தனத்தத்தன..  தந்தனத்தத்தன..’ - அப்படி. கண்ணதாசன் ஒரு முறை ‘நீ ஏன் லல்லலான்னு மெட்டு சொல்றதில்ல?’ என்று கேட்டதற்கு எம். எஸ். வி,  ‘அப்டி சொன்னா மட்டும் ‘லலல்லான்னு’ எழுதிடுவீங்க பாருங்க’ என்று கிண்டலாகச் சொல்ல, எழுதறேன்யா என்று சவால் விட்டு கண்ணதாசன் எழுதியதுதான் ‘வான் நிலா நிலா அல்ல..’ வரிகள் எல்லாமே லா-வில் முடியும்.

ரு பாடலுக்காக அறையில் இருந்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த அறைக்கு தண்ணீரோ, எதுவோ கொண்டு வர சேலையில் ஒரு பெண் வருகிறார். கண்ணதாசன் அவரையே ‘எங்கயோ பார்த்தது போலிருக்கே’ என்று பார்த்துக் கொண்டிருக்க, எம் எஸ் வி, அண்ணே... ‘மொதல்ல வருமே அதே பொண்ணுதாண்ணே.. இப்ப சேலைல வந்ததால பெரிய பொண்ணாட்டம் இருக்கு.. நீங்க பாட்டு சொல்லுங்க’  என்று அவசரப்படுத்தியிருக்கிறார். ‘எழுதிக்கய்யா..  பாவாடை தாவணியில் பார்த்த உருவமா.. இது  பூவாடை வீசி வர பூத்த பருவமா.. ’ என்று வரிகளைக் கொட்டினாராம் கண்ணதாசன்!


ஜாலி வாலி!

கையில் மதுவுடன் கமல் பாடும் ‘வந்தனம் என் வந்தனம்’ பாடலில், ‘நீ மன்மதன் ஓதிடும் மந்தி’ரம்’.. புன்னகை சுந்த’ரம்’ பூமுகம் பொன்னி’றம்’ என்று எழுதியதாகட்டும், அவ்வை ஷண்முகி ‘ருக்கு ருக்கு’ பாடலில் பெண்வேடமிட்டு மீனா முன் பாடும்போது, மீனாவுக்கு ஞாபகம் வரட்டும் என்று கதாநாயகன் பெயரான ‘பாண்டி’ அடிக்கடி வருமாறு ‘தூணுக்குள்ளும் இருப்பாண்டி / துரும்பிலும் இருப்பாண்டி / நம்பியவர் நெஞ்சில் நிற்பாண்டி / குங்குமத்த வெப்பாண்டி / கொஞ்சி கொஞ்சி நிற்பாண்டி’ என்று எழுதியதாகட்டும் வாலி இந்த மாதிரி விஷயத்தில் Always Special! 

எப்படியாவது பட சம்பந்தப்பட்ட ஒன்றை பாடல் வரியில் புகுத்திவிடுவார். சிவராத்திரி தூக்கமேது பாடலில் ‘தேமாங்கனி தேவரூபிணி’ என்று பாடலுக்கு ஆடும் நடிகை பெயரோ, ‘தமிழ்நாட்டு COPதான் தரணியெல்லாம் Topதான்’ என்று படத்தின் டைரக்டர் பெயரோ.. இப்படிப் பலப்பல.
 

இரண்டே இரண்டு மட்டும் இங்கே பகிர்கிறேன்.
 

சாதவதாரம் படத்தின் ‘கல்லை மட்டும் கண்டால்’ பாடல். ‘ ராஜலக்ஷ்மி நாயகன் ஸ்ரீனிவாசன்தான். ஸ்ரீனிவாசன் சேய் – இந்த விஷ்ணுதாசன் நான்’ என்றொரு வரி. கமலஹாசனின் பெற்றோர் பெயர் ராஜலக்‌ஷ்மி - ஸ்ரீனிவாசன். படித்த கமல், ஒருநிமிடம் புருவமுயர்த்தி ‘ஹ!’ என்றிருக்கவேண்டும். அடுத்தவரியிலேயே, ‘நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர்தான் / ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்தான்’ என்று ‘வாலிடா’ என்று சொல்ல வைத்துவிட்டார்.


ரங்கராஜன், வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்!

மெல்லத்திறந்தது கதவு படத்தில் தேடும் கண்பார்வை தவிக்க பாடல். ‘சொன்ன வார்த்தைக் காற்றில் போகுமோ.. வெறும் மாயமானதோ’ - இந்த வரிகளில் என்ன விஷயமிருக்கிறது என்று யூகிக்க முடிகிறதா?


காட்சிப்படி, ஒரு தோப்புக்குள் அமலாவைத் தேடியபடியே மோகன் பாடும் பாடல். அமலா கண்ணுக்குச் சிக்காமல் ஓடிக்கொண்டே இருப்பார். இது இராமாயணத்தில் இராமன், மாயமானைத் தேடி ஓடியதை ஒப்பிட்டு, ‘பார்க்க முடியுமா.. இல்லை அவள் வெறும் மாய மானா?’ என்று மோகனுக்கு சந்தேகம் இருப்பதுபோல ‘வெறும் மாய மான் அதோ?’ அர்த்தம் வரும்படி எழுதியிருக்கிறார் வாலி. பிரிக்காமல் பாடும்போதும், ‘நீ சொன்ன வார்த்தை மாயமானதோ?’ என்றும் பிரித்தால் இப்படியும் பொருள் வரும்!

பிறைசூடன் போட்ட முடிச்சு!

பிறைசூடன் செய்தது வேறொரு குசும்பு. கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பாடல் எழுதச் சொல்லி மெட்டு கொடுத்துவிட்டார்கள். மெட்டு வந்தாச்சு, துட்டு வரவில்லை. செல்ஃபோன் எல்லாம் இல்லை. டைரக்டருக்கு ஃபோன் போட்டால், ‘நாளைக்கு குடுத்தனுப்பறேன்’ என்கிறார். பிறகு கேட்டால் வெளியூரில் இருக்கிறார்.. ஷூட்டிங்கில் இருக்கிறார் நீங்க பாட்டை அனுப்புங்க’ என்று சொல்கிறார்கள். டைரக்டர் போகும் பக்கமெல்லாம் ஃபோன் போட்டு, டைரக்டர் வந்தா தகவல் சொல்லுங்க என்று சொல்கிறார்.  அசிஸ்டெண்டுகள் பாடலுக்கு அவசரப்படுத்த, பிறைசூடன் எழுதி கொடுத்தனுப்புகிறார். டைரக்டரிடம் போகிறது பாடல். வாங்கிப் பார்த்தால் நாலு வரிகளுக்கு மட்டும் அடிக்கோடிட்டு அனுப்பியிருக்கிறார்.

யாருக்கும் தெரியாது நான்போட்ட முடிச்சு
நீ வந்து சுபமாக்கித் தரவேணும் முடிச்சு
நான் உன்னைக் காணாமல் நூலாக இளைச்சு
நீ செல்லும் தடம் பார்த்து வலைபோட்டு வளைச்சு


 - இதுதான் அந்த வரிகள். புரிந்து கொண்டு உடனே பணமனுப்பினார்களாம்.

அஜக்குன்னா.. அஜக்குதான்!

வைரமுத்துவும் சளைத்தவரா என்ன? ‘ரவி வர்மன் எழுதாத கலையோ’ பாடலில்

பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்
- என்று எழுதிவிட்டார். யாரோ, ‘அதெப்படி சேலை கசங்காமல் அணைப்பதாம்? என்று கேள்வி எழுப்ப வைரமுத்து சொன்னாராம்: ‘மனைவியை கணவன் அணைக்கும் வேளையில், சேலைக்கு அங்கே விடுமுறை’.

அதேபோல, ‘ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்’ பாடலின் ‘அஜக்குன்னா அஜக்குதான்.. குமுக்குன்னா குமுக்குதான்’ வரிகளுக்கு, ‘நீங்களே இப்படி அர்த்தமில்லாம எழுதலாமா’ என்று கேட்டதற்கு ‘அதான் அர்த்தம் சொல்லிட்டேனே.. அஜக்குன்னா - அஜக்குதான். குமுக்குன்னா - குமுக்குதான்’ என்றாராம் கிண்டலாக!


 

பஞ்சதந்திரம் திரைப்படம் படப்பிடிப்பில் இருந்த சமயம். கமலையும் சிம்ரனையும் தொடர்புபடுத்தி பத்திரிகைகளில் பலப்பல கிசுகிசுக்கள்.

இருவருக்குமான பாடலை இப்படி எழுதுகிறார் வைரமுத்து.

என்னோடு காதலென்று பேசவைத்தது நீயா இல்லை நானா
ஊரெங்கும் வதந்திக் காற்று வீசவைத்தது நானா இல்லை நீயா
உன்னோடு லவ்வென்று ஊர் சொன்னது
நீ வேறு நான்வேறு யார் சொன்னது’

இதில் ஸ்பெஷல் என்னவென்றால், அந்த ‘நீ வேறு நான் வேறு யார் சொன்னது’ இருபொருள்பட வரும்!

சரி, கமல் சம்பந்தப்பட்ட பாடலைச் சொல்லிவிட்டு ’கவிஞர்’ கமலைப் பற்றிச் சொல்லாவிட்டால் எப்படி?

விருமாண்டி படத்தின், ‘ஒன்னவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல’ பாடல் - கமலஹாசனே எழுதியது. அதில்

வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி

-இந்த வரிகளுக்கு ஒரு நிகழ்ச்சியில் வேறொரு அர்த்தம் சொன்னார் கமல். கமலின் படங்களின் வெற்றிவிழாவிற்கோ, பாராட்டுகளின்போதோ தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள மாட்டாராம் அவரது அண்ணன் சந்திரஹாசன். அதே கமலுக்கோ, அவர் படங்களுக்கோ ஒரு பிரச்சினை என்றால் சந்திரஹாசன்தான் முதலில் வருவாராம். அதைத்தான் ‘சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி’ என்று சொல்லியிருக்கிறேன்’ என்றார்

நல்லாத்தான் இருக்குல்ல?

-பரிசல் கிருஷ்ணா

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்